ஹாலோவீனுக்கும் மயானக் கொள்ளைக்கும் என்ன சம்பந்தம்? தெரிஞ்சா ஆச்சரியப்படுவீங்க!

ஹாலோவீன் கொண்டாட்டமும் நமது பாரம்பரிய மயானக் கொள்ளை திருவிழாவும் எப்படிக் கைகோர்க்கிறது? இதன் பின்னணியை அறியுங்கள்.
 மயானக் கொள்ளை | Halloween and Mayana Kollai
மயானக் கொள்ளை | Halloween and Mayana KollaiImage credit: Gemini AI
ரெ. ஆத்மநாதன்

எழுத்தாளர் ரெ.ஆத்மநாதன் பொருளாதாரத்திலும், இதழியல் மற்றும் மக்கள் தொடர்பியலிலும் முதுகலைப் பட்டங்கள் பெற்றவர். கதை, கவிதை, நாடகம் என்று முத்தமிழுக்கும் பணி செய்பவர். கதை, கவிதைகளை மாத,வார, ஆன்லைன் இதழ்களில் எழுதி வருபவர். இவரின் 4 நாடகங்கள் சென்னை, திருச்சி வானொலி நிலையங்களால் ஒலி பரப்பப் பட்டன. இளங்கலை முதலாண்டு மதுரைத் தமிழ்ச்சங்கத் தேர்வில் (1972-73) மாநில முதன்மை பெற்றவர்.பட்டி மன்றம், கவியரங்கம் ஆகியவற்றில் பங்கேற்பவர். அமெச்சூர் நாடகங்களில் நடித்தவர். தமிழக அரசின் மதிப்பீடு மற்றும் செயல்முறை ஆராய்ச்சித் துறையில் ஆராய்ச்சி முன்னவராகச் சேர்ந்து, அத்துறையின் பொறுப்பு இயக்குனராக ஓய்வு பெற்றவர். “தொடர்கதைகளும் முற்றும்” என்ற சிறுகதைத் தொகுப்பை வெளியிட்டவர்.

Updated on: 
Kalki Strip
Kalki Strip

மேலை நாடுகளின் ஹாலோவீன் திருவிழாவுக்கும், நமது ஊரின் பாரம்பரிய மயானக் கொள்ளைக்கும் என்ன தொடர்பு தெரியுமா? இரண்டும் வெவ்வேறு கலாச்சாரங்களைச் சேர்ந்தவை என்றாலும், ஆவிகளைச் சாந்தப்படுத்துவது மற்றும் அறுவடைத் திருவிழா என்ற தன்மையில் வியக்கத்தக்க வகையில் ஒத்துப் போகின்றன. இனம், மொழி, மதம் கடந்து மனித மனங்களின் ஆழத்தில் புதைந்துள்ள இந்த அசாத்திய ஒற்றுமைகளின் பின்னணியில் உள்ள ரகசியங்களை தெரிந்துகொள்ளுங்கள்!

மேலை நாடுகளில் ஹாலோவீன் கொண்டாட்டங்கள் இப்பொழுதே ஆரம்பமாகிக் களை கட்டத் தொடங்கி விட்டன. ஒவ்வோர் ஆண்டும் அக்டோபர் திங்கள் 31ஆம் நாள் கொண்டாடப்படும் இதனை, மக்கள் மிகுந்த உற்சாகத்துடன் வரவேற்றுத் தங்கள் இல்லங்களை இவ்விழா தொடர்பான எலும்புக் கூடுகள், பேய் உருவங்கள், பறங்கிப் பழத்தின் பல வடிவங்கள் போன்றவற்றால் அலங்கரித்து ஆனந்தம் அடைகிறார்கள்.

ஆரஞ்சு மற்றும் கறுப்பு வண்ணங்களே இவ்விழாவின் முக்கிய வண்ணங்கள் என்பதால், அவற்றுக்கு முக்கியத்துவம் கொடுத்து அலங்கரிக்கிறார்கள் -

  • ஒருவரை ஒருவர் பயமுறுத்தி விளையாடல்;

  • பேய் வடிவிலான மாறு வேடங்கள் புனைதல்;

  • மாறு வேடத்திலேயே விருந்துகளில் பங்கேற்றல்;

  • சொக்கப்பனை கொளுத்தி மகிழ்தல்;

  • பயமுறுத்தும் கதைகளைப் படிப்பது;மற்றும்

  • பயமுறுத்தும் படங்களைப் பார்ப்பது ஆகியவற்றைச் செய்து,

    இவ்விழாவைச் சிறப்பு உடையதாக ஆக்குகிறார்கள்.

அகால மரணம் அடைந்தவர்களை நினைந்து கொண்டாடப்படும் இவ்விழா செல்டிக், சமஹைன் திருவிழாக்களிலிருந்து வந்ததாகக் கூறப்படுகிறது.

இதையும் படியுங்கள்:
மாணவர்கள் அரசு ஸ்காலர்ஷிப் வாங்குவது எப்படி? பலரும் அறியாத சீக்ரெட் ரூல்ஸ்!
 மயானக் கொள்ளை | Halloween and Mayana Kollai

கேல் நாகரீகத்தின் அறுவடைத் திருவிழாவே சமஹைன் என்றும் சொல்லப்படுகிறது. தீய ஆவிகளிலிருந்து தங்களைப் பாதுகாத்துக் கொள்ளலே இவ்விழாவின் முக்கிய நோக்கம். ஒரு விதத்தில் பார்த்தால் நமது சாம, தான, பேத, தண்டம் பிரின்சிபலைக் கொண்டே இது செயல்படுவதாகத் தோன்றுகிறது. சமாதானமாக அவர்களைப் போற்றுவது; தானமாகப் பலவற்றை அளிப்பது; பலவீனத்தைப் பயன்படுத்தி ஒதுக்குவது மற்றும் இறுதியாகத் தண்டனை போன்று தீயிலிடல். மதச் சார்பற்று அனைவரும் கொண்டாடும் விழாவாகவே தற்பொழுது இது வளர்ந்து விட்டது.

அயர்லாந்திலும் ஸ்காட்லாந்திலும் கொண்டாடப்பட்டு வந்த இது, அந் நாட்டினர் அமெரிக்காவில் குடியேறிய பிறகு அமெரிக்காவிலும் பரவியது. 19 ஆம் நூற்றாண்டில் அமெரிக்காவில் பரவிய இது, அடுத்தடுத்த நூற்றாண்டுகளில் பல்வேறு நாடுகளிலும் விரிவடைய ஆரம்பித்தது. ஏறக்குறைய இதே காலத்தில்தான் நாம் தீபாவளியை வெகு விமரிசையாகக் கொண்டாடுகிறோம். நரகாசுரனின் இறப்பை நினைவு கூரும் பண்டிகை அது என்பதை அறிவோம்.

 மயானக் கொள்ளை | Halloween and Mayana Kollai
மயானக் கொள்ளை | Halloween and Mayana KollaiImage credit: Gemini AI

நமது மயானக் கொள்ளை நிகழ்ச்சியும், இந்து சமய வரலாற்றுடன் தொடர்புடைய, ஆவிகளுக்குச் சிறப்பளித்துக் கொண்டாடப்படும் ஒரு விழாவாகும். பிரம்மாவின் ஈகோவுக்குப் பார்வதி தேவி முடிவு கட்டி, தன் கணவர் சிவபெருமானைத் துன்பத்திலிருந்து மீட்டு வந்த வரலாற்றுப் பின்னணியிலேயே மயானக் கொள்ளை சிறப்புப் பெறுகிறது. மகா சிவராத்தியைத் தொடர்ந்து வரும் மாசி மாத அமாவாசை தினத்தன்றுதான் மயானக் கொள்ளை விழா விமரிசையாகக் கொண்டாடப்படுகிறது. பிரம்மனும் ஐந்து தலையுடன் சுற்ற, தேவி தன் கணவன் சிவனே என்றெண்ணி வணங்க, பிரம்மா சிரிக்க, அதனையறிந்த சிவனோ பிரம்மாவின் ஒரு தலையைச் சீவ, வெட்டுப்பட்ட தலை பெருமானின் கையில் கபாலமாக ஒட்டிக் கொண்டு உணவையெல்லாம் விழுங்க, சிவனோ பசியில் உழல்கிறார்.

மேல்மலையனூர் அங்காள பரமேஸ்வரி ஆலயத்திற்குச் சிவன் வர, தாயோ உணவிடுகிறாள். கபாலமே அதனை இருமுறை உண்ண, மூன்றாவது முறையாக கை தவறியது போல தாய் கீழே உணவைச் சிந்த, உணவின் மீது ஆசைப்பட்ட கபாலம் சிவனை விட்டு அகன்றதாக வரலாறு.

பிரம்மாவின் தலை கொய்யப்பட பார்வதி தேவியே காரணமென்று எண்ணிய சரஸ்வதிதேவி, ”கொடிய உருவத்துடன் தங்க இடமின்றி நீ புற்றையே இருப்பிடமாகக் கொண்டு வாழ்வாய்” என்று சாபமிட, பல இடங்களிலும் அலைந்த பார்வதி மலையரசனின் நந்தவனத்திற்கு வருகிறாள்.

இதையும் படியுங்கள்:
60 வயதைத் தாண்டியவர்கள் மகிழ்ச்சியாக வாழ இந்த 6 பழக்கங்கள் போதும்!
 மயானக் கொள்ளை | Halloween and Mayana Kollai

காவலுக்கு இருந்த மீனவர் தடுத்தும் கேட்காமல் புற்றில் வாசம் செய்ய, மன்னனோ புற்றை இடிக்க முயல, அவன் தன் சக்தியை இழக்கிறான். உடனடியாக அம்மனின் அருளை உணர்ந்து அனைவரும் கொண்டாட ஆரம்பிக்கின்றனர். மீனவ சமூகத்தினரே மலையனூரில் இன்றைக்கும் சேவகம் செய்து வருகின்றனர். ஈகோவைக் கொன்ற பார்வதிதேவியே அங்காளம்மனாக உருமாறி அநியாயங்களைத் தவிடு பொடியாக்குகிறார் என்றும் கூறுவாருண்டு.

உணவைச் சமைத்து மயானத்தில் தெளிப்பது கபாலத்தை சிவனின் கைகளிலிருந்து அகற்றவே என்ற சரித்திர நிகழ்வை அடிப்படையாகக் கொண்டே!

ஹாலோவீனும், மயானக் கொள்ளையும் இணையானவைதான். இரண்டுமே அறுவடைத் திருவிழா. இரண்டிலும் ஆவிகளைச் சாந்தப்படுத்துவதே முக்கியமாகக் கருதப்படுகிறது. பூமிப் பந்தில் வாழும் மனிதர்களெல்லாம், இனம், மொழி, மதம், நாடு ஆகியவற்றால் வேறுபட்டாலும், பலவிதங்களிலும் ஒன்று பட்ட மன நிலை உள்ளவர்களே! அன்பைக் காட்டுவதிலும், ஆவிகளைத் திருப்திப்படுத்துவதிலும்கூட அவர்களின் வழி ஒன்று பட்டதே!ஹாலோவீனும் மயானக் கொள்ளையுமே மகத்தான சான்றுகள்!

புவியின் வெவ்வேறு முனைகளில் இருக்கும் நாகரிகங்கள் எப்படி ஒரே மாதிரியான ஆன்மிக நம்பிக்கைகளையும் அறுவடைத் திருவிழாக்களையும் கொண்டுள்ளன என்பதைப் புரிந்து கொண்டு, உலகளாவிய கலாச்சார இணைப்பின் மீதான உங்கள் பார்வையை விரிவுபடுத்திக் கொள்ளுங்கள்.

logo
Kalki Online
kalkionline.com