

அறுபதைத் தாண்டும் பாக்கியம் அனைவருக்கும் கிடைப்பதில்லை. ஆனால், அப்படிப்பட்ட பொன்னான வயோதிகக் காலத்தை சோகத்துடன் கழிப்பதா அல்லது மகிழ்ச்சியின் உச்சமாக மாற்றுவதா? மருத்துவ வசதிகள் பெருகியுள்ள இக்காலத்தில், முதியவர்கள் தங்களது முதுமையைச் சுமையாக்காமல், எப்படி உற்சாகமாகவும் ஆரோக்கியமாகவும் வாழலாம் என்பதற்கான எளிய வாழ்க்கை முறை ரகசியங்கள் இதோ உங்களுக்காக!
அறுபது அகவையைக் கடந்த அனைவருமே, சட்ட விதிகளின்படி, முதியோர்கள், வயதானோர் என்று அழைக்கப்படுகின்றனர். நமது பழந்தமிழில் ஆண்டுகள் அறுபதாகவே கருதப்பட்டு, ஒவ்வொன்றுக்கும் ஒரு பெயரும் சூட்டப்பட்டுள்ளது.
அறுபது ஆண்டுகள் ஓடி விட்டால், அடுத்த ரவுண்ட் ஆரம்பமாகி விடுகிறது. அறுபதைத் தாண்டும் பாக்கியம் அனைவருக்கும் கிடைத்து விடுவதில்லை.
’மனிதன் கணக்கும் மகேசன் கணக்கும் எப்பொழுதுமே ஒத்துப் போகும்' என்று எதிர் பார்க்க முடியாதல்லவா?’
தற்போதைய தரவுகளின்படி, நமது இந்திய நாட்டில்,மொத்த ஜனத் தொகையில் முதியோர் சதவீதம் 11% (சுமார் 15-16 கோடி) என்று தெரிய வருகிறது. இதுவே ஏறத்தாழ 15 ஆண்டுகளுக்கு முன்னர் 2011ல் 8.60% விழுக்காடாகக் குறைந்தே இருந்ததாம்.
மருத்துவ வசதி மற்றும் சராசரி வயது கூடுதல் காரணமாக, 2050ல் முதியவர்களின் எண்ணிக்கை சுமார் 34.70 கோடியாக, அதாவது 20% ஆக உயருமென்று, கணிக்கப்பட்டுள்ளது.
வயதானவர்களை மகிழ்விக்கும் விதமாக உலகம் முழுவதும் ஒவ்வோர் ஆண்டும் ஆகஸ்ட் 21 அன்று, ’உலக முதியோர் தினம்’ (World Senior Citizen Day) கொண்டாடப்படுகிறது. உலக முன்னேற்றத்திற்காக முதியோர்களின் பங்களிப்பைப் பாராட்டும் விதமாக இது அமைந்துள்ளது.
அக்டோபர் 1 ல் ‘பன்னாட்டு வயதானோர் தினம்’ (International Day of Older Persons) கொண்டாடப்படுகிறது. முதியோரை ஊக்குவிக்கும் விதமான போட்டிகள், பொழுது போக்குகள், கெட்டுகதர் என்று நிகழ்ச்சிகள் களை கட்டுகின்றன. நமது இந்திய நாட்டில், வார விழாவாகவே அதனைக் கொண்டாடும் வழக்கமும் வளர்ந்து வருகிறது.
வயதானவர்களைப் பாராட்டி வாழ்த்துவதுடன், இத்தருணத்தில் சிலவற்றை அசை போடுவதும் அவசியமாகிறது. ஏனெனில் வயதான அனைவருமே வாழ்க்கையின் பல படிகளை, பல இன்ப துன்பங்களைப் பார்த்து, அனுபவித்து, கடந்து வந்தவர்கள்.
அவர்கள்தான் மற்றவர்களுக்கு வாழ்க்கைப் பாடத்தை, தங்கள் அனுபவங்களிலிருந்து போதிக்க வேண்டும். ஆனால் பலரும், பலவித காரணங்களால், சோர்ந்தே இருக்கிறார்கள்.
அச்சோர்வு தேவையற்றது என்பதை உணர்ந்தாலே இம்மண்ணுலகம் அவர்களுக்கு மகிழ்வானதாக மாறி விடும்.
முதியோர்கள், தங்கள் வாழ்வை மேலும் முகிழச் செய்ய இவ்வாறு முயலலாம்.
சாப்பிட வேண்டுபவை:
காய்கறிகள்
பருப்புகள்
கொட்டைகள் மற்றும் பயறுகள்
உலர் பழங்கள்
ஆலிவ்,தேங்காய் எண்ணைகள்
பழங்கள்
இயற்கையாகவே துவர்ப்பும் கசப்பும் கொண்ட உணவுகள்
சாப்பிடுகையில் நிம்மதியான மன நிலை
குறைக்க வேண்டுபவை:
உப்பு
சர்க்கரை
மாவுப் பொருட்கள்
பால் பொருட்கள்
பதப்படுத்தப்பட்ட உணவுகள்
சாப்பிடுகையில் விவாதங்கள், சண்டைகள்
மறக்க வேண்டியவை:
உங்கள் வயது
கடந்த காலம்
இழைத்த குற்றங்கள்
உறவினர் தொல்லைகள்
சிறப்பு ஈடுபாடு காட்ட வேண்டியவை:
உங்கள் குடும்பம்
நெருங்கிய நண்பர்கள்
உங்கள் சிறந்த சிந்தனைகள்
சுத்தமான, மகிழ்வான உங்கள் வீடு
அவசரத் தேவைகளுக்கான போதுமான பணம்
கடைப் பிடிக்க வேண்டிய பழக்கங்கள்:
எப்பொழுதும் முகம் நிறைந்த புன்முறுவல்
தினமும் உடற்பயிற்சி
ஆரோக்கியமான உடல் எடை
இனிமையாகப் பேசுதல்
அடுத்தவர்களின் பேச்சை அமைதியாகக் கேட்டல்
அட்லீஸ்ட் ஆறு வாழ்க்கை முறைகளையாவது (Life Style) கடைப் பிடித்தல்
தாகம் எடுக்கும் வரை காத்திராமல், போதுமான நீர் அருந்தல்
களைப்பு வரும்வரை உழைக்காமல், போதுமான ஓய்வெடுத்தல்
நோய்வாய்ப்படும் முன்னரே ரெகுலர் செக்-அப் மூலம் நலம் காத்தல்
தன்னம்பிக்கையை அதிகப்படுத்திக் கொள்ளல்
நேர் மறையாகச் சிந்தித்து நிம்மதியான எதிர்காலத்தில் நம்பிக்கை கொள்ளல்
நீண்ட நேரம் ஒரே இடத்தில் அமர்ந்திருத்தலைத் தவிர்த்தல்
இவற்றை மேற்கொள்வதால், முதியோர்கள் உடல் உபாதைகளிலிருந்து ஓரளவுக் காத்துக் கொள்வதுடன், உற்றார் உறவினரை நாம் சிரமப்படுத்துவதையும் குறைத்துக் கொள்ளலாம். நம்மால் நம் குடும்பத்தினர் சலிப்பு அடைந்து விடக் கூடாது என்பதை முதியோர்கள் எப்பொழுதும் மனதில் இறுத்த வேண்டும்.
அப்புறமென்ன! அன்பான வயோதிக நண்பர்களே! வாழ்க்கையை அனுபவித்து வாழுங்கள்! உங்கள் ஆசீர்வாதங்களை அளவில்லாமல் பலருக்கும் வழங்குங்கள்!
இவ்வளவு விஞ்ஞான முன்னேற்றங்களை அனுபவிக்கும் வாய்ப்பை ஆண்டவன் அளித்ததற்காக ஆனந்தப்பட்டு ஆண்டவனுக்கும் நன்றி சொல்லுங்கள்!
வாழ்க்கை மேலும் செழிக்கட்டும்! வளங்கள் மேலும் பெருகட்டும்!
இந்த வழிகாட்டியைப் பின்பற்றுவதன் மூலம், முதியோர்கள் தங்கள் வயதான காலத்தில் ஏற்படும் உடல் உபாதைகளைத் தவிர்த்து, குடும்பத்தினருக்குச் சுமையாக இல்லாமல் தற்சார்புடனும் மனநிறைவுடனும் மகிழ்ச்சியான பொற்காலத்தை உறுதி செய்ய முடியும்.