சிறுகதை: மன நிறைவு!

life lesson kindness story
life lesson kindness story
Updated on
Kalki strip
Kalki strip

நவீனுக்குப் பலரையும் போலவே தானும் அடிக்கடி சொமோட்டோ மூலம் விருப்பமான சாப்பாட்டு அயிட்டங்களை வாங்கிச் சாப்பிட ஆசைதான். ஆனால் தன் தந்தை ரவியின் வருமானத்தில் பெரும்பகுதி தாத்தா-பாட்டியின் மருத்துவச் செலவுக்கே போய் விடுவதால், விபரம் தெரிந்த அவனால் அப்பா, அம்மாவைச் சிரமப்படுத்த முடியவில்லை. அவன் ஆசையை அறிந்த ரவி, அன்று ஞாயிறு விடுமுறை என்பதால், அவனுக்குப் பிடித்த சில்லி பரோட்டோவையும், சிக்கன் நக்கெட்சையும், நவீனுக்குத் தெரியாமலே ஆர்டர் செய்திருந்தார். சர்ப்ரைசாக அது வந்த பிறகே மகனிடம் சொல்ல வேண்டுமென்று ரவியும், அவர் மனைவியும் முன்பே திட்டமிட்டுத் தயாராக இருந்தனர்.

அரசு அலுவலகத்தில் ரவிக்கு வேலையென்றாலும், அலுவலக உதவியாளர் பணிதான்! முன்பெல்லாம் ‘பியூன்’ என்று அழைத்து வந்ததை இப்பொழுது இப்படி அழைக்கிறார்கள். அலுவலர்களுக்கு உதவி செய்வது, கோப்புகளை ஒருவர் சீட்டிலிருந்து மற்ற உயர் அலுவலர் சீட்டுகளுக்குக் கொண்டு செல்வது போன்ற சின்னச் சின்ன வேலைகள்தான். சில அலுவலர்கள் எரிந்து விழுவார்கள். சிலர் எதையும் கண்டு கொள்ள மாட்டார்கள். சிலரோ இறங்கி வந்து பழகுவார்கள். அவரின் 15 வருட சர்வீசில் எல்லோரையும் பார்த்து விட்டார். ஆனால் அவர் மட்டும் எவரிடமும் கெட்ட பெயர் வாங்கியதில்லை. அவரவர்க்குத் தகுந்தாற்போல் நடக்கப் பழகிக் கொண்டதால் எந்த வம்பு, தும்பிலும் மாட்டுவதில்லை.

அவர் அனுபவத்தில், புதிதாக ஒரு மாதம் முன்பாக வந்து பதவியேற்ற இயக்குனர் அருண் மட்டும் உயர்வாகவே தெரிந்தார். எப்பொழுதும் சிரித்த முகம்; எவ்வளவு அழுத்தங்கள் உயரதிகாரிகளிடம் இருந்து வந்தாலும்,பொறுப்பைத் தான் ஏற்று நடக்கும் குணம்; அழுத்தங்களை அடுத்தவர்கள் மீது திணிக்காத பண்பாடு; வயதானவர்களிடம் வாஞ்சை காட்டி மதித்திடும் இங்கிதம்; இப்படி எப்படிப் பார்த்தாலும் உயர்வாகவே தெரிந்தார். தன் மகன் நவீனையும் அவர் போலவே ஆக்க வேண்டுமென்ற எண்ணமும் அடிக்கடி ரவிக்குத் தோன்றுவதுண்டு.

இதையும் படியுங்கள்:
சிறுகதை: காணவில்லை!
life lesson kindness story

மதியம் மணி ஒன்று ஆயிற்று. நவீன் உள்ளே ஏதோ செய்து கொண்டிருக்க, சொமோட்டோ டூ வீலர் வீட்டை நெருங்கியதும் அவனைக் கூப்பிடும் ஆவலில் ரவி வாசலிலேயே வந்து உட்கார்ந்து விட்டார். நிமிடங்கள் கரைந்தன. ஆனால் சொமோட்டோ டூ வீலர் மட்டும் கண்களில் படவில்லை. பல வண்டிகள் இரு புறமும் பறக்க, சிறு பிள்ளையாய் அவர் வழிமேல் விழி வைத்துக்காத்திருக்க… அப்பாடா! கடைசியாக டூ வீலர் தெரிய, அவசரமாக நவீனைக் கூப்பிட்டார் ரவி.

“ஒடியா…ஒடியா…ஒடியா நவீன்!” அவர் சப்தம் வேகமாகக் கேட்கவே, நவீனும், ரவி மனைவியும் அவசரமாக வாசலுக்கு ஓடி வந்தனர். அவர்கள் வந்து நின்ற பிறகுதான் டூ வீலரும் வேகம் குறைத்து மெல்ல வந்து நின்றது! அதற்குள் ரவியும், நவீனும் டூ வீலரை நெருங்கி விட்டனர். வண்டியை நிறுத்திய சொமோட்டோ டிரைவர் ஹெல்மட்டைக் கழற்றி விட்டு,பெட்டியிலிருந்து உணவுப் பொட்டலத்தை எடுத்தார்.

“சார்! நீங்களா? நீங்க போயி…” ரவிக்கு அதற்கு மேல் வார்த்தைகள் வரவில்லை!

ஆமாம்! இயக்குனர் அருண்தான் அது. தன் அலுவலக பியூன் ரவி வீட்டிற்கு டெலிவரி செய்யப் போவதை அருணும்தான் முன் கூட்டியே அறியவில்லை!

“இதுதான் ஒங்க வீடா? ரொம்ப சந்தோஷம்! சர்ப்ரைஸ் விசிட்டா அமைஞ்சிடுச்சி. சாரி சார்! கொஞ்சம் லேட் ஆயிடிச்சி! ஒங்க சன் இவர்தானா?” என்று கேட்டபடியே நவீனின் கைகளைக் குலுக்கிய இயக்குனர் அருண், ரவியின் மனைவியைப் பார்த்துக் கும்பிட்டார்!

“ஒண்ணுமில்ல ரவி சார்! நான் கல்லூரியில படிக்கையில என் செலவுக்கு ரொம்பவும் உதவியா இருந்தது இந்த சொமோட்டோதான்! என் நண்பன் தன் பைக்கை எனக்குக் கொடுத்து உதவுவான்! நானும் நெறைய இடங்களுக்கு டெலிவரி செய்வேன். நான் படிக்க உதவி செஞ்ச இதை என்னால விட முடியல. நண்பன் ஒருத்தனுக்குப் பதிலா இன்னைக்கு நானே வந்தேன். அதிலும் ஒங்க வீட்டிற்கு டெலிவரி செஞ்சதில உண்மையிலேயே எனக்கு முழுத்திருப்தி. மன நிறைவு. ஏற்கெனவே லேட்டாத்தான் சாப்பாட்டைக் கொண்டு வந்தேன்.

இதையும் படியுங்கள்:
சிறுகதை: நிம்மதியில்லாத உதவி..!
life lesson kindness story

நீங்க உள்ள போயி சாப்பிடுங்க. உங்க வீடுன்னு தெரியாததால பையனுக்கு ஒண்ணும் வாங்கிக்கிட்டு வர முடியல. அதனாலே இந்த உணவுக்கான காசை நானே செலுத்த நீங்க தயவு செஞ்சு அனுமதிக்கணும். உங்க பையனுக்கு என்னோட ஸ்மால் ட்ரீட். வரேன்.” என்று சொல்லி விட்டு அருண் கையாட்டிப் புறப்பட, அவன் பைக் சென்று மறையும் வரை பார்த்துக் கொண்டே நின்றார் ரவி.

logo
Kalki Online
kalkionline.com