சிறுகதை: பாழ் நெற்றி

woman walking on road | tamil short story
woman and man | tamil short story Image credit: AI image
பிரபு சங்கர்

About 55 years of experience in journalism, writing and taking photographs. Contributed to all the Tamil magazines of all periodicities. Developed skill through the guidance of Sri Savi, Editor, Dinamani Kadir. Have written hundreds of articles on various subjects; nearly 300 short stories; 12 novels and published hundreds of photographs. Have brought out 30 books, Worked as 1. Sub Editor in Ambalam, Net magazine under Sri Sujatha and Sri Thiruppur Krishnan; 2. Sub Editor in Kumudam Bhakthi Special and 3.Editor-in-Charge for Dinakaran Aanmigam magazines.

Updated on
Kalki strip
Kalki strip

காலையில் தொழிற்சாலைக்குப் போவதற்காக ஆறே முக்கால் மணி ரயிலைப் பிடிக்கும் அவசரத்தில் ஓட்டமும், நடையுமாக விரைந்த அந்த சூழ்நிலையிலும் வரதன் அவளைக் கவனிக்கத் தவறவில்லை. ஏதோ கடையிலிருந்து பால் பாக்கெட் வாங்கி வந்து கொண்டிருந்தாள்.

பால் பாக்கெட் முனையைப் பிடித்திருந்த, வளையல் அணியாத அந்தக் கையின் செழுமையை வரதனால் கவனிக்க முடிந்தது. ஆனால் பொட்டு இல்லாத அந்த நெற்றி மட்டும் அவன் மனதைப் போட்டுப் பிசைந்தது. அவள் கண்களில் தெரிந்த சோர்வு ஏதேனும் மன வேதனையா அல்லது கலையாத அதிகாலைத் தூக்கமா? அவனால் தீர்மானிக்க முடியவில்லை. தூங்கி எழுந்து வேறு புடவை மாற்றிக் கொள்ளாததால்தானோ என்னவோ கசங்கிய அந்தப் புடவையும் அவளுடைய சோகத்தை அதிகரித்துக் காட்டியது. இளமை பூசிய அந்த உடலுக்கு மட்டும் அவளுடைய துக்கத்தைப் பிரதிபலிக்கத் தெரியவில்லை, அது கம்பீரமாக, கவர்ச்சியாகத் திமிர் கொண்டிருந்தது.

ரயில், ஸ்டேஷனுக்குள் வந்துவிட்ட அவசரத்தில், மேம்பாலத்தில் ஏறிப்போக முடியாத நேரமின்மையில் குறுக்காகத் தண்டவாளத்தைக் கடந்த வேகத்திலும் சரி, ரயில் பெட்டிக்குள் கும்பல், கும்பலாய் உட்கார்ந்தபடி அடுத்தவனுடைய சௌகரியத்தைச் சிறிதும் மதிக்காமல் சீட்டு விளையாடிக் கொண்டிருந்தவர்களோடு ஒண்டிக்கொண்டு நின்றபடி பயணம் செய்த வேதனையிலும் சரி, நெருக்கடியான தொழிற்சாலை வேலைக்கு மத்தியிலும் சரி, அவள் நினைவே அவன் நெஞ்சில் சுழன்று கொண்டிருந்தது.

மாலையில் வீடு திரும்பும்போது அவளை சந்திக்க முடியும் என்றுதான் ஒவ்வொரு நாளும் நினைத்துக் கொள்வான். ஆனால் வாடி உதிர்ந்துவிட்ட போதிலும் அடுத்த நாள் வேறு மலர் கொடுக்கும் செடியாய் அவனுள் அந்த நம்பிக்கை அடுத்த நாள் துளிர்விடும்.

இதையும் படியுங்கள்:
சிறுகதை; மாற மாட்டார்கள்!
woman walking on road | tamil short story

அந்த அதிகாலை அவசரத்தில், நொடிப்பொழுது ஆயுளாக அவளை அவன் பார்த்தது, தினமும் நிகழ்ந்தது. நாளாவட்டத்தில் அவள் பார்வையும் அவன் மீது படிந்ததில் ஒரு மாற்றம் தெரிவதை அவனால் உணர முடிந்தது. வெறுமையான கைகள், நெற்றி, கழுத்து ஆகியவற்றில் மாற்றம் எதுவும் இல்லாவிட்டாலும், அவற்றைத் தன்னால் நிறைக்க முடியும் என்ற உண்மையை அது உணர்த்துவது போலிருந்தது.

இருபத்தைந்து வயது இருக்கும். அதற்குள் இப்படி ஒரு துக்ககரமான சோதனையா? அவளுடைய எழிலனைத்தும் வீணாகிப் போவதாகிய கற்பனை அவனுக்கு. அந்த இளமை எழிலுக்குள்ளே உருகி, மறுகிப் போகும் உணர்வு மரத்த உள்ளமும் இருக்குமே, அது குறித்தும் அவன் வருத்தப்பட்டான்.

ஒரு தீர்மானத்துக்கு வந்தான். அவளிடமே நேரில் சொல்லிவிட முடிவு செய்தான். ஒருநாள் அதிகாலையில் அதே தொழிலக அவசரம் இருந்தாலும் சற்று நிதானித்தான். அன்று அவன் ரயிலைப் பிடிக்கப் போவதில்லை. அவளைப் பின் தொடரப் போகிறான். எதிர்பார்த்ததுபோலவே அவள் பால் பாக்கெட்டை வாங்கிக்கொண்டு நடந்தாள். அவளறியாமல் பின் தொடர்ந்தான். சற்றே குறுகலான ஒரு சந்துக்குள் நுழைந்த அவள், அதிலிருந்து பிரிந்த பெரிய சாலை ஒன்றில் வலது பக்கமாகச் சென்றாள்.

பிறகு அங்கே பிளாட்பாரத்தை ஒட்டினாற்போலவே இருந்த வீட்டுக் கதவைத் தட்டினாள். உள்ளிருந்து யாரோ வந்து கதவைத் திறந்தார்கள். வரதன் அவர்கள் பார்வையில் படாமல், தெருவைப் பார்த்தபடி இருந்த அந்த வீட்டு ஜன்னல் அருகே நின்றுகொண்டான்.

உள்ளிருந்து ஒரு ஆணின் கடுமையான குரல்: ‘‘ஏம்மா, இது என்ன பொட்டலம்?’’

‘‘அது, அது வந்து… என் தோழி ஒருத்தி நேற்று ஏதோ கோவிலுக்குப் போனாளாம். வழியில பார்த்து பிரசாதம்னு கொடுத்தா, அவ முன்னாலேயே அதைத் தூக்கி எறிய மனம் வராம, வீட்டுக்கு வந்து குப்பைத் தொட்டியில் போட்டுடலாம்ன்னு வெச்சிருந்தேன், மறந்திட்டேன்பா…’’ இது அவளுடைய பதில் குரல்தான்.

‘‘நான் உனக்கு எத்தனை வாட்டி சொல்லியிருக்கேன், இந்த மாதிரியெல்லாம் பண்ணாதேன்னு. நான் சுயமரியாதைக்காரன்னு தெரியும்தானே?‘’

இதையும் படியுங்கள்:
சிறுகதை: சொல்லாத முடிவுகள்!
woman walking on road | tamil short story

‘‘ஆமா, நானும் சுயமரியாதைக்காரிங்கறதாலதானே உன்னைப் பதிவுத் திருமணம் செய்துகிட்டேன்! நம்ம கொள்கைப்படிதான் நான் வளையல் போடறதில்லை, நெற்றியில் குங்குமம் வைக்கறதில்லை, கழுத்தில் மஞ்சள் கயிறுகூட கட்டறதில்லே….’’

வரதனுக்கு அதற்கு மேல் அங்கே நிற்கவோ, அவளிடம் பேசவோ பைத்தியமா பிடித்திருக்கிறது? "விடு ஜூட், வேலைக்கு லேட்டானாலும் போய்ச் சேரலாம், அரை நாள் விடுப்பு சொல்லிக்கொள்ளலாம்", என்று அங்கிருந்து நகர்ந்தான்.

logo
Kalki Online
kalkionline.com