சிறுகதை; புள்ளிகளாய் ஒரு வானவில்!

Short Story in Tamil
ஓவியம்; சசி
Published on

-தமயந்தி

ராஜசேகர் இருட்டினுள் வந்து நின்றான். லேசாகத் தூறல் வேறு போட்டது. நூல் கோத்த ஊசியாய் உள்ளங்கையில் சாரல் இறங்கிற்று. சாப்பிட்ட சாப்பாடு இன்னும் செரிக்கவில்லை. வெறும் பருப்பு தாளிதமும் தேங்காய்த்துவையலும்தான். ஆனாலும் அமிர்தம். ஃபைவ் ஹோட்டல்களில் கண்டுபிடிக்க முடியாத நயம். மனசு ஒரு சிகரெட்டுக்காக ஏங்கிற்று.

"இப்படி நீங்க சிகரெட் குடிக்கப்போய்தான் புள்ளயில்லை?" சரஸ்வதி சொல்வாள். அதை நினைத்து சிரிப்பு வரும். அப்படியானால் உலகில் பாதி பேருக்கு குழந்தை இருக்காது.

"என்ன சிரிப்பு?"

''சிகரெட் குடிக்கறது நல்லது இல்லனு சொல்லு. ஒத்துக்கறேன். ஆனா பிள்ளை பிறக்காதுனு சொல்லாத. விட்டுடுனு சொல்லு சரஸ்வதி. விட்டுடறேன்."

சரஸ்வதி உடனே அழுதாள். குழந்தையில்லை என்கிற வடு அவளை அடிக்கடி அரிக்கும். காயப்படுத்தும். நடு இரவில் ராஜசேகருக்கு இப்போதெல்லாம் கனவு வருகிறது. மறுபடி மறுபடி அதே கனவுதான். ஒரு குழந்தையின் முகம். அதற்கப்புறம் இரண்டு குதிரைகள் விரைந்து ஓடும். இடையிலே நதி, சுழற்றி சுழற்றிச் சுழி வீசும். சரஸ்வதி சுழிக்குள் தெரிவாள். ராஜசேகர் குதிரை காலில் கட்டப்பட்டிருப்பான்.

"காப்பாத்துங்க. அடிச்சிட்டுப் போகுது" சரஸ்வதி கதறுவாள். அந்தக் குழந்தை முகம் சிரிக்கும். ராஜசேகரனால் எதுவும் செய்ய இயலாது. மனசுக்குள் கவிதை குதிரையாய் ஓடும். நதியாய் அடிக்கும். குழந்தைச் சிரிப்பாய் சிரிக்கும்.

இதையும் படியுங்கள்:
யார் இந்த ஷிவோன் ஜில்லிஸ்? எலான் மஸ்க்குக்கும் இவருக்கும் என்ன தொடர்பு?
Short Story in Tamil

நதிமூலம் ரிஷிமூலம் எல்லாம்
கண்டும் வெட்டிவிழும் விறகென
கேட்கும் உன் குரல்.
நடு இரவு முத்தங்கள்
நினைவாய் சில சேலைகள்
நீ வளர்த்த செடி
வீடெங்கும் உன் நினைவு
விரிந்து கிடக்கும் உலகம்
அதற்குள் நான்
எனக்குள் நீ

அந்தக் கவிதை கேட்டு முகம் சுருங்கும் - கண் மறையும். நாசி, பிறகு உதடு. கடைசியாகத் தேடுகையில் குழந்தையே இருக்காது.

அதற்குப் பிறகு முழிப்பு வந்துவிடும். வந்துவிட்டால் பிறகு உறக்கம் வராது. மறுபடியும் சிகரெட்டுக்காய் ஏங்கும். சரஸ்வதி ஒருக்களித்துப் படுத்திருப்பாள். கைகள் நெற்றியில் பரவியிருக்கும். இப்போது சிகரெட் குடித்தாலென்ன? எழும்பவா போகிறாள்? பாதகி எழும்பினாலும் எழும்புவாள். அவள் கேசத்தை நீவிவிட்டான்.

அவளுக்கு ஒரு குழந்தை இருந்திருந்தால் நன்றாய் இருந்திருக்கும். அவளே ஒரு குழந்தையாய் மாறியிருக்க வேண்டிய அவசியம் வந்திருக்காது. வீடு நிறைய பொம்மைகளும் விளையாட்டு சாமான்களுமாய் வாங்கிப் போட்டிருந்தாள். ஆனால் ஒரு குழந்தைதானில்லை. அம்மா இவளைவிடக் கொஞ்ச வயதில் நாலு குழந்தைகளைப் பெற்றிருந்தாள். இந்தக் கல்யாணமே வயதான பிறகு செய்துகொண்டதுதான். அவள் முப்பதின் ஆரம்பத்திலிருந்தாள். இவன் முப்பதுகளின் நடுவில் இரண்டு வருடம் கவலைப்படவில்லை என்பது நிஜம். பிறகு சரஸ்வதியை 'பிறன் மனை'கள் நோக்கின.

"என்ன சரஸ்வதி விசேஷம் ஏதும் உண்டா?"

"என்ன மாப்ளே பயங்கர ப்ளானிங்கா?''

பின் மண்டையில் சுரீரென உறைத்தது. சரஸ்வதி தலைகுனிந்து நின்றாள். வீட்டுக்கு வந்து கண்கலங்கி படுத்துக்கொண்டாள். அன்று ஆரம்பித்தது. வாழ்க்கையில் எல்லாம் இருக்கிறது. பணம், வசதி, தேவையான அளவு பக்தி... ஆனால் குழந்தை இல்லை.

"சரஸ்வதி..."

''இன்னிக்கு ஹாஸ்பிட்டல் போணும். பீரியட்ஸ் தள்ளிப் போயிருக்கு." கண் மின்ன சொன்னாள். ராஜசேகருக்குக்கூட சந்தோஷம் அலை அடித்தது. எல்லாம் டாக்டரைப் பார்க்கும் வரைதான்.

"ஸி சரஸ்வதி. நிறைய குழப்பிக்கற அதனாலேயே பீரியட்ஸ் லேட்டாகும். திஸ் இஸ் ஜஸ்ட் லேட் பீரியட்ஸ் மிஸ்டர் ராஜசேகர்."

அங்கேயே சரஸ்வதி விம்மினாள். ராத்திரி திடீரென முழித்துப் பார்க்கும்போது பக்கத்தில் இல்லை. சமையலறை நடுவில் கிடந்தாள். பக்கத்தில் தூக்க மாத்திரை புட்டி. கடவுளே! அவசரமாய் ஆஸ்பத்திரியில் சேர்த்தான். எனிமா, ட்ரிப், டெட்டால், பினாயில், டெட்ராஸைக்ளின், அமாக்ஸலின்... மீண்டும் சரஸ்வதி.

"இனிமே இத மாதிரி பண்ணாத சரஸ்வதி. உனக்கு குழந்தை வேணுமா? வா தத்தெடுப்போம்."

வெறித்தபடி உட்கார்ந்திருந்தாள். "திருப்பதிக்குப் போய் காணிக்கை போடுங்க. என் வயத்துல உங்க பிள்ளை வேணும்னு வேண்டுங்க..."

"சரஸ்வதி..."

நகையைக் கழற்றி கையில் தந்தாள். "வித்துருங்க. வித்துட்டு அவ்ளோவும் உண்டியல்ல போடுங்க."

"சரஸ்வதி..." அள்ளிக் கோதிக்கொண்டான் ராஜசேகர். மனசுக்குள் ஒரு குரல், எனக்குள் நான். உனக்குள் நீ. நமக்குள் அது.

இதையும் படியுங்கள்:
சிறுகதை; டீக்கடை ஞானம்!
Short Story in Tamil

திருப்பதியில் இறங்கினதும் வெங்கடேசன் நின்றிருந்தான். ஐந்து வருடங்களுக்கு முன்பு பார்த்தது. மெலிந்திருந்தான். பையை ஸ்நேகமாய் வாங்கிக்கொண்டான். தோளைத் தழுவினபடி அணைத்து ஆட்டோவில் ஏற்றினான். ராஜசேகர் பையில் பணத்தை ஒரு முறை தொட்டுப் பார்த்துக்கொண்டான். வெங்கடேசன் இந்தப் பணத்தின் கதையைக் கேட்டு சிரிக்கக்கூடும். நகையை காணிக்கை யாக்கினால் எல்லாம் சரியாகிவிடுமா? தெரியவில்லை. தற்கொலை வரை சென்ற சரஸ்வதியின் நம்பிக்கையை ஏமாற்ற முடியவில்லை.

"எத்தனை குழந்தைங்க சேகர்?"

"இல்லை."

எல்லோரும் பார்த்ததுமே கேட்கிற கேள்விதான். ஆனால் பதில் வந்ததும் கவலைப்படுவார்கள். வெங்கடேசன் அவனை ஆதரவாய் பற்றினான்.

"எனக்கு ஒண்ணு. ஆறு மாசமாச்சு."

"லதா எப்படிருக்கா?''

"இருக்கா. அப்பா அம்மா கல்யாணத்துக்கு சம்மதிக்கலை சேகர். லதா வேலைக்குப் போறதயும் நா விரும்பல. சின்ன வீடு. இரண்டு ரூம்தான். ஒரு குழந்தை. சந்தோஷம்தானே?"

ஏனோ சந்தோஷமில்லாமல் அவன் சொன்ன மாதிரி இருந்தது. லதாவைக் கிட்டத்தட்ட ஆறேழு வருடங்களாய் வெங்கடேசன் காதலித்தது தெரியும். வெங்கடேசன் பணத்தில் புரண்டவன். இரண்டு ரூம் அவனை நிச்சயம் கஷ்டப்படுத்தும். அந்த முகச்சுளிப்பு பேச்சில் தெரிந்திருக்கும்.

வீடு என்று கூட அதைச் சொல்ல முடியாதென்பதை அதைப் பார்த்த பிறகுதான் ராஜசேகர் தெரிந்து கொண்டான். தட்டி போட்ட தாழ்வாரம் ஒன்றும் சமையலறை ஒன்றும். லதா முன்னை பார்த்ததற்கு ஏகத்துக் கறுத்திருந்தாள். உள்ளறையிலேயே தொட்டில் ஒன்று இருந்தது. உள்ளே வெங்கடேசன் ஜாடையில் குழந்தை. சரஸ்வதி ஞாபகம் சட்டென வந்தது.

"வாங்க," லதா கை கூப்பினாள்.

"நல்லாயிருக்கீங்களா?"

"ம். முதல்ல குளிக்கறீங்களா? காப்பி தரட்டுமா?"

"தாங்க. மெள்ள குளிக்கேன்."

"காமன் பாத்ரூம்தான். ஒன்பது மணிக்குள்ள குளிச்சிரணும்."

ராஜசேகர் காப்பி குடித்துவிட்டு உடனே குளித்தான். சளபுளவென ஒரு பாத்ரூம். வெங்கடேசனுக்கா இந்த நிலைமை? மனசில் ஏதோ ஒரு முள் உறுத்தியது. ஒருநாள் யமஹா, ஒருநாள் சியலோ என்று வந்த வெங்கடேசன் எங்கே? ஒண்டுக்குடித்தன அழுக்கு பாத்ரூமில் குளிக்கும் இவன் எங்கே?

"சுடச்சுட இட்லியும் சட்னியும் செஞ்சிடறேன்."

'எதுக்கு சிரமம்? ஹோட்டல்ல பாத்துப்பேனே."

"சாப்பிடுங்க. நம்ம வீட்ல இருந்துட்டு அதென்ன வெளிய சாப்புடறது.”

குழந்தை அழுதது. லதா தூக்கி வந்தாள். "மாமா பாரு" அது இவனைப் பார்த்து கை போட்டது.

"சாப்பிட்டுட்டு வர்றேன். இரு பேரு என்ன?"

"பிரசவமெல்லாம். இங்கதானா?''

''ம். லதாவுக்கு ஜன்னி வந்து பிழைக்க முடியாம போயிடுவாளோன்னு தோணிச்சு சேகர். கொஞ்சம் கஷ்டப்பட்டுட்டா."

அந்தக் குழந்தை இன்னும் இவனையே பார்த்துக்கொண்டிருந்தது. இதையே தத்தெடுத்துக் கொண்டால் என்ன? மனசில் பொறி தட்டியது. இந்த கஷ்டத்தில் வெங்கடேசன் சம்மதிக்காமல் இருப்பானா? மனசு கணக்குப் போட ஆரம்பித்தது. ஊருக்குப் போய் சரஸ்வதியையும் கூட்டி வரலாம்.

"கோவிலுக்குப் போணும்னு லெட்டால எழுதிருந்தியே. நேர்த்தியா?"

"சரஸ்வதிக்கு வேண்டுதல்."

''நல்லாருக்காங்களா?"

''ம். குழந்தை இல்லைன்னு குறை தவிர."

"கூட்டிட்டு வந்திருக்கக்கூடாதா?" லதா கேட்டாள்.

"வரணும். கட்டாயம் வரவேண்டியிருக்கும்னு நினைக்கிறேன்."

ராத்திரி வெங்கடேசனிடம் தனியாய் பேசிவிட வேண்டுமென நினைத்துக்கொண்டான்.

இதையும் படியுங்கள்:
சிறப்பு சிறுகதை - முத்துவும் வள்ளியும்
Short Story in Tamil

ராஜசேகர் இருட்டினுள் வந்து நின்றான். லேசாகத் தூறல் வேறு போட்டது. நூல் கோத்த ஊசியாய் உள்ளங்கையில் சாரல் இறங்கிற்று. சாப்பிட்ட சாப்பாடு செரிக்கவில்லை. சரஸ்வதி இல்லாத சுதந்தரத்தில் சிகரெட்டைப் பற்றவைத்துக் கொண்டான்.

வெங்கடேசன் நாற்காலி கொணர்ந்து போட்டான். கிறீச் என்று அது மடங்கி உட்கார்ந்தது.

திரும்பினவனை வெங்கடேசன் அழுந்தப் பிடித்துக்கொண்டான்.

"எவ்ளோ நாளாச்சு பேசி.''

"குழந்தை தூங்கிருச்சா வெங்கி?"

''ம். அது பிறந்திருக்கவே கூடாதானு இருக்கு சேகர்." அநேகமாக தான் நினைத்ததைத்தான் அவன் சொல்வான் போலும். காரியம் இத்தனை லேசாக முடியுமானால் திருப்தி. ஆண்டவனே, நன்றி.

"என்ன சொல்ற?"

"அதுக்கு ஹார்ட்ல - ஹோல்டா. ரொம்ப நேரம் அழுதுச்சுனா ப்ளுவாயிடும். என்னன்னு செக் பண்ணா டாக்டர் இப்படி சொல்றாங்கடா. ஆபரேஷனுக்கு ஒரு லட்சம் செலவாகும்னு சொல்றாங்க, ப்ரைவட் நர்சிங் ஹோம்ல. கவர்மெண்ட் ஹாஸ்பிட்டல்னாலும் சில ஆயிரம் ஆகும். லதா அது மேல உயிரையே வச்சிருக்கா. வெங்கடேசன் குரல் கம்மிற்று. இது போனா தாங்கமாட்டா சேகர். அன்னன்னைக்கு பாட்ட ஓட்டவே பெரிய கஷ்டமாருக்கு சேகர். இன்னைக்கு நீ வந்தியேன்னுதான் மூணு வேளை டிபனும், சாப்பாடும். மத்தப்படி கஞ்சி, கோதுமை, ராகி, அரிசி கஞ்சி... வறுமைகூட பரவால்ல சேகர், குழந்தை..."

"நா ஏதாவது செய்ய முடியுமா வெங்கி?"

"முடியாதுடா. மனசு திறந்து கேட்டுக்க. அது போறும். ஆறுதலாருக்கும். லதா போயிருவானு பிரசவத்தோட சொன்னப்ப கொஞ்சம் பணம் வேற தேவைப்பட்டது. யார்ட்ட கேட்டும் இல்ல சேகர். ஜி.ஹெச்ல கூப்பிட்டாங்க. குடும்பக் கட்டுப்பாடு, ரூவா தந்தாங்க. ஹார்லிக்ஸ் தந்தாங்க. லதாவுக்குத் தெரியாது... தெரியாது..." மொட்டை மாடி சுவரில் மடிந்து உட்கார்ந்து சரிந்தான்.

இவனிடம்.. இவனிடம் போயா குழந்தையைத் தத்தெடுக்கக் கேட்க நினைத்தேன்? மனசு கசிந்தது. ராஜசேகர் கீழிறங்கிப் போய் பணத்தை எடுத்து வந்தான். சுவரோரமாய் மடிந்து கிடந்த வெங்கடேசன் கையில் திணித்தான்.

''வச்சிக்கோடா. குழந்தைக்கு ஆபரேஷன் பண்ணு. ஒன்றரை லட்சம் இருக்கு.''

''வேணாம் சேகர். நா பணம் கேக்கலை என் துக்கத்தை..."

''வச்சுக்கோ.வட்டி இல்லை. கடன் இல்லை நேர்த்தி. உன் குழந்தை நல்லாகணும் வெங்கி. நல்லாயிரும்."

அன்று கனவிலும் குழந்தை வந்தது குதிரை வந்தது. விரைந்து ஓடிற்று. இடையிலே நதி. சுழற்றி வீசும் சுழி. உள்ளிறங்கும் சரஸ்வதி குதிரை காலில் கட்டப்பட்ட ராஜசேகர். காப்பாற்றக் கதறும் சரஸ்வதி. மனதில் குதிரையாய ஓடும் கவிதை. சிரிப்பாய் சிரிக்கும் குழந்தை

ஆனால் இன்றேனோ குழந்தை மறையவில்லை. கரையில் முழுசாய் நின்றிருந்தது அதன் கையைப் பிடித்தபடி யாரது?

சரஸ்வதி.

பின்குறிப்பு:-

கல்கி 22 டிசம்பர் 1996 இதழில் வெளியானது இச்சிறுகதை. இங்கு கல்கி ஆன்லைன் களஞ்சியத்திலிருந்து மீண்டும் வெளியிடப்பட்டுள்ளது. சில விஷயங்கள் நமக்கு நன்கு அறிமுகமாகி யிருந்தாலும், தெரிந்திருந்தாலும்... அவற்றை நாம் மீண்டும் மீண்டும் படித்து பயனடையக்கூடிய தகவல்களாக... எவர்க்ரீன் செய்திகளாக நினைவுபடுத்திக் கொள்வது நல்லதுதானே!

- ஆசிரியர், கல்கி ஆன்லைன்

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com