
-உதாதிபன்
பாறையின் நிழலில் நான் படுத்துக்கிடந்த நிலம் மட்டுமல்ல... எனது உள்ளமும் வறண்டுகிடந்தது. இன்று காலை அப்பா சொன்ன வார்த்தைகள் உள்ளத்து ஈரத்தை உறிஞ்சி விட்டிருந்தன.
'வேலை வெட்டியில்லாம தண்டச்சோறு தின்னுக்கிட்டு, பூமிக்குப் பாரமா இருக்கிறதைத் தவிர வேறென்னத்தை சாதிச்சிருக்கே?'
இருபது வயதில் தமிழ் இலக்கியம் முடித்தேன். இப்பொழுது வயது இருபத்தாறாகிறது. தமது மகன் ஆறு வருடமாக வேலையின்றி வெற்றுமனேயிருப்பது எந்தத் தந்தைக்குமே சலிப்பைத்தான் ஏற்படுத்தும். அந்தச் சலிப்பில் அவ்வப்பொழுது வார்த்தைகள் நெருப்பாய் வந்துவிழும். இன்றைக்கு நெருப்பின் அனல் சற்று அதிகமாகவே சுட்டுவிட்டது.
சுயநலமில்லாத பாசம் என்பதெல்லாம் ஒரு கால கட்டம் வரைதானா? அதன்பின் அது நிறம் மாறிவிடுமா?
தந்தை தாய் தமர் தார மகவென்னும் இவையெலாம்
சந்தையிற் கூட்டம் இதிலோ சந்தேகமில்லை.
கல்லூரியில் படித்த தாயுமானவரின் வரிகள் நினைவில் மோதியது. உண்மையிலேயே உறவுகளுக்குள் நிலவுவது கொடுத்து வாங்கும் வியாபார பாசம்தானோ. தாயின் அன்பில்கூட பாதுகாப்பு சார்ந்த எதிர்பார்ப்பு நிறைந்திருக்கிறதோ...
இரண்டு நாட்களுக்கு முன் அம்மா உடுத்தியிருந்த கிழிந்த சேலையை கவனித்துவிட்டு 'ஏம்மா... கிழிஞ்சதைக் கட்டியிருக்கே. வேற இல்லையா?' என்று கேட்டதற்கு 'ஆமா நீ சம்பாதிச்சி வாங்கிட்டு வந்து தந்ததை பிரோவில அடுக்கி வைச்சிருக்கேன். தினத்துக்கு ஒண்ணா புதுசா கட்டிக்கிறேன். உள்ளதெல்லாம் கிழிஞ்சி கிடக்கு' என்றாளே...
நான் வெறுமனேயிருப்பது தாயிடம்கூட ஆற்றாமையைத் தோற்றுவித்து விட்டது.
நொந்து சுமந்து பெற்று நோவாமல் ஏந்தி முலைதந்து
வளர்த்து எடுத்து தாழாமே - அந்திபகல் கையிலே
கொண்டு என்னைக் காப்பாற்றும் தாய்.
பட்டினத்தார் பாடிய தாயின் அரவணைப்பு இப்பொழுது எனக்குக் கிடைக்காதா?
நான் பிடிவாதமாகத் தமிழ் இலக்கியத்தில் சேர்ந்ததில் அப்பாவுக்கும் அம்மாவுக்கும் விருப்பமில்லை. படிக்கப் படிக்க மூன்று வருடம் தேனாய்த்தான் இனித்தது. முடித்து விட்டு வெளியே வந்ததும்தான் யதார்த்தம் புரிந்தது.
'பாலிமர் சயின்ஸ்' படித்திருக்கிறாயா... 'கம்ப்யூட்டர்' தெரியுமா என்றுதான் தேடுகிறார்களே தவிர, தமிழ் யாருக்கும் தேவைப்படவில்லை.
'வேற பாடம் எடுத்துப் படின்னு அப்பவே நான் சொன்னேனே... கேட்டியாடா?'
'எனக்கு தமிழ்லதான் ஆர்வமிருந்தது!'
'அந்த ஆர்வந்தான் இப்ப வயித்தை நிரப்பப் போவுதா?'
பசுமாடுகளின் கழுத்து மணியோசை கேட்டது. அவற்றை மேய்த்துவிட்டு சோமன் திரும்பிக்கொண்டிருந்தான். கிராமத்திலிருக்கும் அனைத்து வீட்டு மாடுகளையும் சேர்த்து ஓட்டிக்கொண்டு போய் விட்டு விடுவான். தினத்திற்கு ஒரு வீட்டில் சாப்பாடு.
"காலையில நான் மாடுகளை ஓட்டிட்டு போறப்பவே படுத்திருந்தீக, அப்பலேயிருந்து இங்கயேதா இருந்தீகளா?" என்றான்.
"ஆமா"
'மதிய சோறுகூட சாப்பிடலையா?'
அப்பொழுதுதான் எனக்கே உறைத்தது. பசியும் உணர்வுகளோடு மறத்து விட்டது போலும்.
மணியோசை தேய்ந்ததும் எழுந்து பொடிநடையாய் வீட்டையடைந்தேன். அம்மா வாசலிலேயே நின்றிருந்தாள்.
"எங்க போய்ட்டே?”
"கரட்டாம்பாறைக்கு.''
"உன்னோட வழக்கமான குட்டிச்சுவருக்குப் போயிருந்தியோ?” அப்பா உள்ளேயிருந்து கேட்டார்.
"அங்க போய் வீணா படுத்துக்கிடந்ததுக்கு நம்ம வயல்ல போய் கரும்புத் தோட்டத்துக்குக் காவல் காத்திருக்கலாமில்ல?"
நான் ஏதும் பேசவில்லை.
அம்மா தட்டை எடுத்து வைத்தாள். சாப்பிட விருப்பமில்லை. வெறுமனே கை அளைந்துவிட்டு கை கழுவி எழுந்தேன்.
''நாளைக்குக் காலையில் நீ சீக்கிரமே எழுந்து வயலுக்குப் போய் தண்ணி பாய்ச்சிட்டு வரணும்.''
"ம்...." என்றேன் பிடிக்காத தன்மையுடன்.
"என்ன ஐயா சலிப்போட சொல்றீக? படிச்ச படிப்புக்கு மண்வெட்டியைப் பிடிக்கறது கௌரவ குறைச்சலா நினைக்கறீகளா?"
"நான்தான் சரின்னு சொல்லிட்டேன்ல? அப்புறம் எதுக்கு இந்த வியாக்கியானம்?”
''கோபத்துக்கு ஒண்ணும் குறைச்சலில்ல. என்னைக்காவது ஒருநாள் செய்யச் சொன்னா அப்படித்தான் இருக்கும். தினம் போட்டு வாட்டினா சரிப்படும்."
"அதான் பேச்சிலேயே போட்டு வாட்டறீங்களே... இது பத்தாதா?''
கொல்லைப்புறத்தை அடைந்தேன். மனம் படபடத்தது. துவைக்கும் கல்லில் அமர்ந்தேன். வேப்பமரக் காற்று சில்லென்று வீசியது. வெள்ளி நிறப் பூக்கள் மணத்துடன் சிதறிக் கிடந்தன. உள்ளுக்குள் நன்றாக மூச்சை இழுத்துவிட்டுக் கண்மூடி புருவ நடுவே நிலைத்தேன்.
சஞ்சலப்பட்ட' மனம் மெல்ல ஒருநிலை பெற்று அமைதியானது.
மறுநாள் விடியற்காலை ஐந்து மணிக்கே எழுந்து மார்கழி குளிருக்கு இதமாகப் போர்வையைப் போர்த்திக்கொண்டேன். அப்பாவும் குளித்து உடுத்தி முதல் பஸ்ஸுக்கே தயாரானார். வேதாரண்யம் வெல்ல மண்டிக்கு போகிறார்.
"நீ பாட்டுக்கு ஏதோ நினைப்பிலே இருந்துடாதே. ஒரு பாத்தி நிறைஞ்சதும் அடுத்ததுக்குத் திருப்பி விடு...."
"சரி... "
"பம்பு எடுக்கலேன்னா ரெண்டு வாளி தண்ணி கொண்டு பைப்ல முதல்ல ஊத்து."
"எனக்குத் தெரியாதா இதெல்லாம்..."
"ஆமாமா... படிச்சவங்க, தெரியாம இருக்குமா?"
அப்பாவின் குரலில் குத்தல் தொனித்தது. அந்நேரத்தில் விவாதம் வேண்டாம் என மௌனமாய் இருந்தேன்.
அப்பா முதலில் கிளம்பிப் போய்விட்டார். நானும் செருப்பணிந்து புறப்பட்டேன்.
"சாப்பாட்டுக்கு நேரத்தோட வந்துடு. எங்கயாவது படுத்துக்கிடக்காத..." அம்மா சொன்னாள்.
''சரி…''
நடந்தேன். ஊர்க்கோடியிலிருந்த விநாயகர் கோவிலைக் கடக்கையில் அரசமர நிழலில் யாரோ ஒரு அன்னியன் தென்பட்டான்.
கை தட்டினேன். அவன் என்னை நோக்கி வந்தான். கிட்டத்தட்ட என் வயது மதிக்கலாம். மெலிந்த தேகம். கையில் பெட்டி. முற்றிலும் விலகாத இருளிலும் அவனது கண்ணில் சோகம் தெரிந்தது.
''யார் நீ?''
''நான் சிலோனுங்க, அங்கேயிருந்து நேத்தைக்கு கோடிக்கரைக்கு வந்தேன். ஏற்கெனவே அங்க நெறைய அகதிகள் இருக்காங்க. அதனால கால்போன போக்கில் இந்த ஊருக்கு வந்து சேர்ந்தேன். ராத்திரியிலே அப்படியே படுத்துத் தூங்கிட்டேன்."
"சிலோனை விட்டுட்டு தமிழ்நாட்டுக்கு எதுக்கு வந்தே?"
அவனது கண்கள் அனிச்சையாகக் கலங்கின.
"எங்கப்பாம்மா செத்துப்போய் பல வருஷமாச்சிங்க. சமீபமா எனக்குக் கல்யாணமாச்சு. போனமாசம் ஒருநாள் மிருகவெறி பிடிச்ச ஒரு கும்பல் எங்க கிராமத்துக்குள்ள நுழைஞ்சி, ஊரையே கொள்ளையடிச்சாங்க. அந்த பாவிங்க, கர்ப்பமாயிருந்த என் மனைவியையும் சிதைச்சி சூறையாடி... நான் வேலைக்குப் போய்ட்டு திரும்பி வந்து பார்த்தப்ப அவ தூக்கில தொங்கிக்கிட்டிருந்தா. அதுக்குப் பிறகு அங்க இருக்க பிடிக்கல. கள்ளத்தோணி ஏறி வந்துட்டேன். இங்கயே ஏதாவது வேலை தேடி பிழைச்சுக்கலாம்னு...”
''உங்களுக்கெல்லாம் அடைக்கலம் தர தமிழ்நாடு என்ன தர்மசத்திரமா? நாங்களே இங்க வேலை கிடைக்காம அவதிப்படறோம்.. ''
"எங்களுக்கு தமிழ்நாட்டைத் தவிர வேற போக்கிடம் ஏது? நீங்களெல்லாம் எங்களோட சகோதரர்கள் இல்லையா?"
"தமிழ் பேசினா உடனே ஒண்ணாகிவிட முடியுமா... நீங்க யாரோ நாங்க யாரோ!"
"தனதன்னை ஈன்றவர்களை சகோதரர்களேன்போம்
ஏனெனில் அவளது புதல்வர்களின் மூலம் ஒன்றாம்
தமிழன்னை ஈன்றவர்களை அன்னியனென்போம்
ஏனெனில் அவளது புதல்வர்களின்மூலம் வெவ்வேறாம்
தனதன்னையின் கற்பு பரிசுத்தம் என்கிறாய்... ஐயகோ
தமிழன்னையின் கற்புக்கோ களங்கம் சேர்க்கிறாய்!"
எனக்குச் சுளீரென்றது.
“இது?”
"என்னோட கவிதைதான். அதுவும் இப்ப யோசிச்சி சொன்னது''
அவனிடமிருந்து கவித்திறனை சற்றும் எதிர்பார்த்திராத நான் அதிர்ந்தேன். கவிதையில் பொதிந்திருந்த காட்டமும், சாட்டையும் என்னைத் தாக்கின.
"உங்களுக்குக் கவிதை எழுதத் தெரியுமா? என்னிடம் தானாகவே மரியாதை தட்டிகொண்டது.
"ம்.... எம்.ஏ தமிழ் இலக்கியம் படிச்சிருக்கேன்."
"அங்க என்ன வேலை செய்துக்கிட்டிருந்தீங்க?"
"எஸ்டேட்ல தேயிலை பறிச்சிக்கிட்டிருந்தேன்.''
"இவ்வளவு படிச்சிட்டு..."
''தமிழை நான் வேலைக்கான நோக்கத்தில வாசிக்கல. சம்பாதிக்கவும், வயிறை நிரப்பிக்கவும் மூலதனமா உபயோகப்படுத்தி அதனோட தரத்தையும், மதிப்பையும் குலைக்க எனக்கு விருப்பமில்லை! ஆத்ம பசிக்குத் தமிழ். வயிற்றுப் பசிக்குக் கூலி வேலை."
என் உடல் சிலிர்த்தது. கண் மூடினேன் அவனது கவிதை வரிகளும், வெளிப்பட்ட வார்த்தைகளும் தீயாய் என்னுள் பாய்ந்து உருக்கிப் புடம் போட்டது. கசடுகள் வழிந்து மனம் சுத்தமாகி, கண்ணீர் சுரக்க இமை திறந்தேன். அதற்குள் அவன் என்னிடமிருந்து விலகி நீண்டதூரம் சென்று விட்டான்.
யாரவன்?
என்னைத் தீயிலிட்டுப் புடம் போட்டு ஞானம் கற்பித்து, நான் புதுமனிதனாய் பிறப்பெடுக்க உதவ வந்தவனோ!
அவனது பெயரைக்கூட கேட்கவில்லையே... சிறிதுநேரம் திக்பிரமையுடன் நின்றிருந்துவிட்டு வயல்காட்டை நோக்கி நடந்தேன் இப்பொழுது எனது நடையில் உற்சாகமும் தீர்க்கமான நம்பிக்கையும் மிளிர்ந்தது!
கையிலிருந்த மண்வெட்டி அமுத சுரபியாய்த் தோன்றியது.
பின்குறிப்பு:-
கல்கி 03 நவம்பர் 1996 இதழில் வெளியானது இச்சிறுகதை. இங்கு கல்கி ஆன்லைன் களஞ்சியத்திலிருந்து மீண்டும் வெளியிடப்பட்டுள்ளது. சில விஷயங்கள் நமக்கு நன்கு அறிமுகமாகி யிருந்தாலும், தெரிந்திருந்தாலும்... அவற்றை நாம் மீண்டும் மீண்டும் படித்து பயனடையக்கூடிய தகவல்களாக... எவர்க்ரீன் செய்திகளாக நினைவுபடுத்திக் கொள்வது நல்லதுதானே தோழிகளே!
- ஆசிரியர், கல்கி ஆன்லைன்