

கி.மு. காலம் தொட்டு மனிதனை ஆட்கொண்ட புகையிலை, இன்று சின்டெடிக் போதை வரை விஸ்வரூபமெடுத்துள்ளது! உலகத் தலைவர்கள் முதல் பாட்டாளிகள் வரை விரும்பிப் புகைத்த சுருட்டு வரலாறு என்ன? போதைப் பொருட்களின் பிடியில் சிக்கித் தவிக்கும் நமது சமூகம் மீளுவதற்கான வழிகள் என்ன? மனித குலத்தை உலுக்கும் இந்த அதிர்ச்சித் தகவல்களையும், போதை கலாச்சாரத்தின் அறியப்படாத பக்கங்களையும் தெரிந்து கொள்ள தொடர்ந்து படியுங்கள்!
புகையும் போதையும் இணை பிரியா நண்பர்கள். புகைத்தால் போதை தலைக்குள் ஏறும்; போதையிலோ கண்களைப் புகைச்சல் மறைக்கும்!
மனிதன் அதீத இன்பத்திலும், ஆழ்ந்த துன்பத்திலும் போதையை நாடுவதாகவே நடைமுறையில் தெரிய வருகிறது!
புகை பிடிக்கும் வழக்கம் கி.மு 5000 முதல் கி.மு 3000 வரையிலான கால கட்டத்தில், அதாவது சுமார் 7000 ஆண்டுகளுக்கு முன்னதாகவே மனித சமுதாயத்தில் தொற்றிக் கொண்டதாக வரலாற்று ஆய்வுகளும், அகழ்வாராய்வுகளும் கூறுகின்றன.
தொடக்கத்தில், அமெரிக்கக் கண்டத்தில் வாழ்ந்த பூர்வகுடி மக்கள் ஆன்மிக மற்றும் மதச் சடங்கு விழாக்களின்போது, புகையிலை இலைகளை எரித்து அதனை நுகரும் வழக்கத்தைக் கொண்டிருந்தனர். மாயா மற்றும் ஆஸ்டெக் நாகரீகத்தைச் சேர்ந்தவர்கள் அவர்கள்.
‘உடலில் வலியா? பூச்சி கடித்து விட்டதா? எடு புகையிலையை!’ என்ற நிலை அப்பொழுது வலுத்திருந்தது. நமது இந்திய நாட்டில், சுமார் கி.மு 2000 லேயே கஞ்சாவுடன் பிற மூலிகைகளையும் சேர்த்து, பெரிய அளவில் தீ மூட்டி, அதன் புகையை நுகரும் வழக்கம் இருந்திருக்கிறது.
கி.பி 1492 ல் அமெரிக்காவைச் சென்றடைந்த கிறிஸ்டோபர் கொலம்பஸ், அங்குள்ள பூர்வ குடிகளின் வழக்கத்திலிருந்த புகைப் பழக்கத்தை ஐரோப்பிய நாடுகளுக்குத் திரும்பியதும் அங்கு அதனை அறிமுகப்படுத்துகிறார். அப்புறமென்ன?
இது போன்ற பழக்கங்கள் மனிதர்களை எளிதாக ஒட்டிக் கொள்ளுமே! ஒட்டிக் கொண்டது!
ஐரோப்பாவில் புகைப் பழக்கம் வேகமாகப் பரவக் காரணமாக இருந்தவர் பிரெஞ்சு தூதரான ஜீன் நிகோட் (Jean Nicot) ஆவார். பிரான்ஸ் மற்றும் பிற ஐரோப்பிய நாடுகளில் புகைப் பழக்கம் விரைந்து பரவ, இவரே காரணமாக இருந்தாராம்.1559 ல் தான் இப்பழக்கம் ஐரோப்பா முழுவதும் பரவ ஆரம்பித்ததாம்! எனவே புகையிலையிலுள்ள வேதிப் பொருளுக்கு இவர் பெயரே சூட்டப்பட்டதாம். ஆம்! நிகோடின்!
இந்தியாவில் பேரரசர் அக்பர் ஆட்சிக் காலத்தில் இங்கு வந்த போர்ச்சுக்கீசியர்கள் தங்கள் கூடவே புகையிலைச் செடிகளையும் கொண்டு வந்தார்களாம்.
இது நடந்தது 17 ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் புகை பிடிக்கும் நமது நண்பர்கள் ஜீன் நிகோட் அவர்களுக்கும், போர்ச்சுகீசியர்களுக்கும் நன்றிக் கடன் செலுத்த வேண்டும்.
ஆரம்பநிலையில், குழாய்கள் (Pipes) மற்றும் சுருட்டுகள் (Cigars) மூலமாகவே புகை பிடிக்கப்பட்டு வந்தது. 1880 களில் ஜேம்ஸ் பான்சாக் என்பவர் பெரிய அளவில் எந்திரங்கள் மூலம் சிகரெட்டுகளைத் தயாரிக்கும் முறையைக் கண்டுபிடித்து, அதை நடைமுறைக்கும் கொண்டு வந்தார். அதன் பிறகே சிகரெட் பிடிக்கும் பழக்கம் உலகமெங்கும் தீயாய்ப் பரவியது!
உலகின் பெரிய தலைவர்களான பலரும் சுருட்டு பிடிப்பதில் ஆர்வங்கொண்டவர்களாகவே இருந்திருக்கின்றனர். பிரிட்டனின் பிரதமராக இருந்த வின்ஸ்டன் சர்ச்சில் எப்பொழுதுமே சுருட்டுடனேயே காட்சியளிப்பாராம். நமது திருச்சியிலுள்ள உறையூரில் தயாரான திருச்சி சுருட்டுகளையே அவர் விரும்பிப் புகைத்ததாக உள்ள வரலாற்றுச் செய்திகள், உறையூர் சுருட்டுக்குப் புகழ் சேர்க்கின்றன.
சுருட்டுக்கும் புரட்சிக்கும் பெயர் பெற்ற கியூபா நாட்டின் தலைவரான பிடல் காஸ்ட்ரோ, முக்கிய ஆலோசனைகளின்போது கூட சுருட்டைப் புகைத்தபடியேதான் பேசுவாராம். உலகப் புகழ் பெற்ற சுருட்டு பிராண்டான கோஹிபா (Cohiba) உருவாக இவரே காரணமாம்.
மார்க்சீய புரட்சித் தலைவரான சே குவாரா அதிகமாகவே சுருட்டு பிடிப்பவராம்.
ஆஸ்துமா நோய் அல்லல்படுத்தியபோதும், அவர் சுருட்டை நிறுத்தவில்லையாம்.
அமெரிக்க உள் நாட்டுப் போரின்போது புகழ் பெற்று விளங்கிய தளபதியும், அந்த நாட்டு 18 வது அதிபருமான யுலிசீஸ் எஸ். கிராண்ட், அமெரிக்காவின் புகைபிடித்த தலைவர்களில் வரலாற்றுச் சிறப்பு கொண்டவராம்.
புகையிலையை வலி நிவாரணியாகவும், பலவித வியாதிகளைத் தீர்க்கும் மருத்துவ மூலிகையாகவுமே உலக மக்கள் போற்றி வந்தனர்.
1950-60 களில்தான் புகையிலையால் புற்றுநோயும், இதய நோய்களும் ஏற்படுவது விஞ்ஞான பூர்வமாக நிரூபிக்கப்பட்டு, அதனைக் குறைத்துப் பயன்படுத்த வேண்டுமென்ற விழிப்புணர்வு தோன்ற ஆரம்பித்தது. அதுகுறித்த ஆய்வுகளும் மேற்கொள்ளப்பட்டன. தரவுகளும் சேகரிக்கப்பட்டன.
வயதானவர்கள் சுருட்டையும், வசதி படைத்தோர் சிகரெட்டையும், சாதாரணமானவர்கள் பீடியையும் பிடித்துத் திருப்தி அடைந்தனர். உடல் உழைப்பை அதிகமாக நல்கும் தொழிலாளச் சகோதரர்கள் உடற்களைப்பைப் போக்கி, மீண்டும் உற்சாகமாக வேலை செய்ய, ஒரு டீ யும் ஒரு பீடியும் போதுமானதாக இருந்தது.
தேநீரை உறிஞ்சினோமா, பீடியை நாலு இழுப்பு இழுத்தோமா, வேலைக்குத் திரும்பினோமா என்ற நிலையில், வேலைகள் நடந்து கொண்டிருந்தன!
ஆனாலும், நமது நாட்டில், ஆண்டுக்குச் சுமார் 13.50 லட்சம் மக்கள் புகையிலை மற்றும் புகை பிடித்தலால் இறக்கின்றனர் என்ற எண்ணிக்கை, ஆளும் அரசுகளை அதிர்ச்சிக்குள்ளாக்கின. புகை பிடித்தலால் மட்டுமே சுமார் 10 லட்சம் பேர் இறப்பதாகவும், புகை பிடிக்காதிருந்தாலும் பக்கத்திலுள்ளவர்கள் புகை பிடிப்பதால் பாதிக்கப்பட்டு மற்றவர்கள் இறப்பதாகவும் ‘தி லான்செட்’ (The Lancet) ஆய்வு கூறுகிறது.
நமது நாட்டில் அதனைத் தடுக்கும் விதமாக, பலவித நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன.
பொதுவிடங்களில் புகை பிடிக்கத் தடை;
புகையிலைப் பொருட்களுக்கு அதிக வரி;
கடைகளில் பீடி,சிகரெட் விற்கக் கட்டுப்பாடுகள் என்று.
ஆனால் இப்பொழுதோ… போதைப் பொருட்கள் பயன்பாடு பன்மடங்கு உயர்ந்து விட்டதாகவும், தடுப்பு நடவடிக்கைகள் எவ்வளவு எடுத்தாலும், அவற்றின் நடமாட்டத்தைக் கட்டுப்படுத்த முடியவில்லையென்றும் செய்திகள் வந்த வண்ணம் உள்ளன. அவற்றின் மதிப்பும், கோடிக்கணக்கான ரூபாய் என்றும் கூறப்பட்டு வருகிறது.
ஒரு வேளை, பீடி, சிகரெட்டிற்குத் தடைகளைக் கொண்டு வரும் முன்னால், ஹெராயின், கோகோயின், எல்.எஸ்.டி, மெத்தம் பேட்டமைன் போன்றவற்றைத் தடுப்பதற்கான மிக வலுவான கட்டமைப்பை ஏற்படுத்தி விட்டு, அதன் பின்னர் அவற்றைத் தடை செய்திருந்தால், இந்த நிலை வந்திருக்காதோ!
உள்ளூர்க் கோயிலின் கும்பாபிஷேகத்தை அவ்வூர்க் குருகுல மாணவர்கள் சிறப்பாகச் செய்ய ஏற்பாடாம். அவசரமாகக் குருவிடம் வந்த தலைமைச் சீடர், “குருவே! மிகச் சிறப்பாகத் தயாரிக்கப்பட்ட லட்டுகளை எங்கு வைத்தாலும், எறும்பு படையெடுத்து வந்து விடுகிறது. அவற்றிடமிருந்து லட்டைப் பாதுகாக்க நீங்கள்தான் உபாயம் கூற வேண்டும்!” என்று வேண்டினாராம்.
குரு மிக அமைதியாகத் தன் சீடரைப் பார்த்துச் சொன்னாராம். ”ரொம்ப சிம்பிள் வேலா! லட்டு வைக்கும் பாத்திரத்தைச் சுற்றி, சாதாரண சர்க்கரையைத் தூவி விட்டால், அதனோடு அது திருப்தி அடைந்து, போய் விடும்! லட்டைத் தேடி முன்னேறாது!” என்றாராம். சீடரும் அது போலவே செய்து லட்டைக் காப்பாற்றினாராம்.
இது போன்ற கதைகள் விளையாட்டுக்காகச் சொல்லப்பட்டவை அல்ல. நமது மனிதர்களும் எறும்பு குணம் கொண்டவர்கள்தான். இங்கு லட்டு என்பது, ஹெராயின் போன்ற காஸ்ட்லியர் அயிட்டங்கள்! சாதாரண சர்க்கரையோ, பீடி, சிகரெட் போன்றவை.
நமது பார்வையில், இவற்றின் கட்டுப்பாட்டை மெல்ல ஏற்படுத்தியவாறே, அவற்றுக்கு மிகக் கடினமான வேலி அமைக்கப்பட்டிருந்தால், போதையால் நாடு சீரழிவதை நிச்சயமாகத் தடுத்திருக்கலாம்.
அரசியல் என்பது சாதாரணமானதல்ல. ஒரு குடும்பத்திலுள்ள ஐந்தாறு பேரைத் திருப்திப்படுத்தவே, குடும்பத் தலைவனும், தலைவியும் போராட வேண்டியுள்ள நிலையில், பல தரப்பட்ட மக்களையும் திருப்திப்படுத்தி வழி நடத்திச் செல்வதென்பது மிகப் பெரிய காரியம்! சாம, தான, பேத, தண்டங்கள் என்ற நான்கினையும் உரிய விதத்தில், உரிய நேரத்தில் பயன்படுத்தும் கலை அதற்கு அவசியம். சட்டம் இயற்றும் அரசுகளும், அதனை நிறைவேற்றப் பாடுபடும் அதிகாரிகளும் இதனை உணர்ந்து செயல்பட்டாலே சமூகத்தைச் சீர் திருத்த இயலும்!
திருந்திய சமூகமே திருப்தி அளித்து, அமைதிக்கு வித்திடும்!
அமைதிதானே அனைவரின் அல்டிமேட் இலக்கு!
இந்தக் கட்டுரையை வாசிப்பதன் மூலம், மனித சமுதாயத்தில் போதை மற்றும் புகையிலையின் நீண்ட கால வரலாற்றைப் புரிந்துகொள்வதன் மூலம், தற்கால சமூகத்தை அச்சுறுத்தும் போதைப்பொருட்களின் ஆபத்துக்களைத் தெளிவாக அறிந்து விழிப்புணர்வுடன் செயல்பட முடியும்.