குழந்தைகளுக்குத் தமிழ் மீது ஆர்வம் வர பெற்றோர்கள் செய்ய வேண்டியது என்ன?

குழந்தைகள் மற்றும் இளைய தலைமுறை இடையே தமிழ் மொழி மற்றும் வாசிப்பு ஆர்வத்தை ஊட்டுவதற்கான நடைமுறை வழிகள்.
தமிழ் | Father and daughter read tamil kavithai book
தமிழ் | Father and daughter read tamil kavithai bookImage credit: Chatgpt
முனைவர் மா. அன்பரசு

வேளாண் அறிவியலில் முனைவர் (Ph.D.) மற்றும் முதுமுனைவர் (Post-Doctoral Fellow) பட்டம் பெற்றவர். உழவியல் துறை (Agronomy) உதவிப் பேராசிரியராகப் பணியாற்றி வருகிறார். கற்பித்தல், ஆராய்ச்சி மற்றும் விரிவாக்கப் பணிகளில் ஈடுபட்டு வருவதுடன், சிறுகதை, கவிதை, கட்டுரை மற்றும் நாவல் உள்ளிட்ட படைப்பிலக்கியத் தளங்களிலும் பல வருடங்களாக தடம் பதித்து வருகிறார்.

Updated on: 
Kalki Strip
Kalki Strip

குழந்தைகளுக்குத் தமிழைப் படிக்கச் சொல்வது எளிது; ஆனால் நாம் அதற்கு முன் என்ன செய்கிறோம்? மேடைப் பேச்சுகளையும் அறிவுரைகளையும் தாண்டி, இன்றைய தலைமுறையினரிடம் தமிழ் மீதான பற்றை இயல்பாக வளர்க்க வீடுகளில் என்ன மாற்றங்கள் தேவை? என்பதற்கான எளிய வழிகளை இந்தக் கட்டுரை விவரிக்கிறது. வாசித்துத் தெரிந்து கொள்ளுங்கள்!

இன்றைய இளைய தலைமுறைக்கு தமிழின்மீது ஆர்வம் ஏற்பட என்ன செய்யவேண்டும்?

“சொல்லுதல் யார்க்கும் எளிய அரியவாம் சொல்லிய வண்ணம் செயல்.”

ஒரு செயலைச் செய்வதாகச் சொல்வது எளிது; சொன்னபடியே செய்து முடிப்பதுதான் கடினம் என்கிறார் திருவள்ளுவர். இந்தக் குறள் இன்றைய தலைமுறைக்கு தமிழின் மீது ஆர்வத்தை ஏற்படுத்துவதற்கும் மிகப் பொருத்தமானது.

“படி… புத்தகம் வாசி… தமிழைப் பேசு… தமிழ் இலக்கியத்தைப் படி…” என்று குழந்தைகளிடம் சொல்வது எளிது. ஆனால் நாம் சொல்வதை நாமே செய்கிறோமா என்பதுதான் முக்கியமான கேள்வி.

“கைப்பேசியை அதிக நேரம் பார்க்காதே; புத்தகம் வாசி” என்று ஒரு தந்தை மகனிடம் அறிவுறுத்துகிறார். அதே நேரத்தில் அந்தத் தந்தையின் கையில் கைப்பேசி; சமூக வலைதளங்களில் அவரது கவனம். தொலைக்காட்சித் தொடரிலும் ஆர்வம்.

அந்தக் குழந்தை தந்தையின் வார்த்தையைப் பின்பற்றுமா? வாழ்க்கை முறையைப் பின்பற்றுமா? இன்றைய குழந்தைகள் நாம் சொல்வதைக் காட்டிலும், நாம் செய்வதைத்தான் அதிகமாகக் கற்றுக்கொள்கிறார்கள்.

முதலில் மாற வேண்டியது வீடு:

தமிழின் மீது இளைய தலைமுறைக்கு ஆர்வத்தை ஏற்படுத்துவதற்கான தொடக்கம் பள்ளியில் மட்டுமல்ல; வீட்டில்தான் முதலில் இருக்க வேண்டும். ஒவ்வொரு வீட்டிலும் பெரிய நூலகம் தேவையில்லை. ஒரு சிறிய அலமாரி போதும். குழந்தைகளின் கண்ணில் படும்படி கவிதை, சிறுகதை, வரலாறு, அறிவியல், வாழ்க்கை வரலாறு, இலக்கியம் போன்ற நல்ல நூல்களை வைக்கலாம். பிறந்தநாள் பரிசாக ஒரு புத்தகத்தைக் கொடுக்கலாம்.

இதையும் படியுங்கள்:
உயிரைக் காக்கும் ஒரு பிஸ்கட்: உண்மையான தலைமைப் பண்பு என்றால் என்ன?
தமிழ் | Father and daughter read tamil kavithai book

வாரத்தில் ஒருநாள் குடும்பமாக ஒரு கதையை வாசித்துவிட்டு, அதன் கதாபாத்திரங்களைப் பற்றிப் பேசலாம்.

“இந்தக் கதையில் உனக்குப் பிடித்தவர் யார்?” என்ற ஒரு கேள்வியே குழந்தைக்குள் சிந்தனையைத் தொடங்கிவைக்கலாம்.

புத்தகம் வீட்டில் இருக்கும் பொருளாக மட்டும் இல்லாமல், வீட்டின் உரையாடலாக மாற வேண்டும்.

படிப்பு வேறு; வாசிப்பு வேறு:

பள்ளி, கல்லூரிப் பாடங்களைப் படித்து தேர்வில் வெற்றி பெறுவது கல்வியின் ஒரு பகுதி. ஆனால் வாசிப்பு அதைக் கடந்தது.

கவிதை, சிறுகதை, நாவல், கட்டுரை, வாழ்க்கை வரலாறு, வரலாறு, இலக்கியம் என தனக்குப் பிடித்தவற்றைத் தேடிச் செல்வதுதான் வாசிப்பின் அழகு.

வாசிப்புக்கு தேர்வு இல்லை. மதிப்பெண் இல்லை. தேர்ச்சி–தோல்வி இல்லை.

ஆனால் அது நமக்கு அனுபவத்தையும் பக்குவத்தையும் தருகிறது. நாம் சந்திக்காத மனிதர்களை அறிமுகப்படுத்துகிறது. பிறரின் துயரத்தைப் புரிந்துகொள்ளவும், மனிதர்களையும் உயிர்களையும் நேசிக்கவும் கற்றுக்கொடுக்கிறது. வாசிப்பு என்பது அறிவைப் பெறுவது மட்டுமல்ல; வாழ்க்கையைப் புரிந்துகொள்வதும் ஆகும்.

அவர்களின் ஆர்வத்திலிருந்து தமிழை நோக்கி:

“தமிழ் இலக்கியத்தைப் படி” என்று சொன்னவுடன் எல்லா இளைஞர்களும் இலக்கிய நூலை எடுத்துவிடுவார்கள் என்று எதிர்பார்க்க முடியாது.

கிரிக்கெட் பிடிக்கும் இளைஞருக்கு விளையாட்டு பற்றிய தமிழ் நூலை அறிமுகப்படுத்தலாம். அறிவியலில் ஆர்வமுள்ளவருக்கு அறிவியல் தமிழை அறிமுகப்படுத்தலாம். வேளாண்மையில் விருப்பமுள்ளவருக்கு விவசாயிகளின் வாழ்க்கை, பாரம்பரிய வேளாண்மை பற்றிய நூல்களைத் தரலாம். திரைப்படம் பிடித்தவருக்கு திரைக்கதை, திரைப்படக் கட்டுரைகளை அறிமுகப்படுத்தலாம். அவர்களின் விருப்பத்திலிருந்து தமிழை நோக்கி அழைத்துச் செல்ல வேண்டும். தமிழ் என்பது தேர்வுக்கான பாடம் மட்டுமல்ல; அவர்களின் கனவுகளையும் ஆர்வங்களையும் வெளிப்படுத்தும் மொழி என்பதை உணர்த்த வேண்டும்.

கைப்பேசியும் தமிழுக்கான கருவிதான்:

இன்றைய இளைஞர்களை கைப்பேசியிலிருந்து முழுமையாக விலக்குவது சாத்தியமற்றது. அதனால் கைப்பேசியை எதிரியாகப் பார்ப்பதைவிட, அதைத் தமிழுக்கான கருவியாக மாற்றலாம்.

சிறுகதைகள், கவிதைகள், ஒலிப்புத்தகங்கள், இலக்கிய உரைகள், நல்ல தமிழ் காணொளிகள் எனத் தரமான உள்ளடக்கங்களை அவர்களுக்கு அறிமுகப்படுத்தலாம். தொழில்நுட்பம் தமிழுக்கு எதிரி அல்ல; அதை நாம் எப்படிப் பயன்படுத்துகிறோம் என்பதுதான் முக்கியம்.

கட்டாயத்தால் அன்பு வராது:

தமிழை நேசிக்க வேண்டும் என்று கட்டாயப்படுத்தினால், தமிழ் இன்னொரு பாடமாகத் தோன்றிவிடும்.

தமிழ் | father gives book to son
தமிழ் | father gives book to sonImage credit: Gemini AI

“இந்தக் கதையைப் படித்துப் பாரு; உனக்குப் பிடிக்கும்.”

“இந்தக் கவிதையைப் படித்திருக்கிறாயா?”

“இந்த எழுத்தாளர் எழுதிய கதை உனக்குப் பிடிக்கும் என்று நினைக்கிறேன்.”

என்று ஆர்வத்தைத் தூண்டலாம். ஒரு நல்ல கதை குழந்தையை அடுத்த கதைக்குக் கூட்டிச் செல்லும். ஒரு நல்ல கவிதை மொழியின் அழகை உணரச் செய்யும். அங்கிருந்து இலக்கியத்தின் மீதான ஆர்வம் இயல்பாக வளரலாம்.

“தமிழைத் திணிக்க வேண்டாம்; தமிழை ரசிக்கச் செய்ய வேண்டும்.”

தமிழ் வீட்டில் வாழ வேண்டும்:

தமிழின் எதிர்காலம் பாடப்புத்தகங்களில் மட்டும் இல்லை. அது வீட்டில் பேசப்படும் மொழியிலும், பாட்டி சொல்லும் கதையிலும், தாத்தா கூறும் பழமொழியிலும், குழந்தையின் கையில் இருக்கும் புத்தகத்திலும் இருக்கிறது. ஒரு பாட்டி தனது பேரனுக்குத் தூங்குவதற்கு முன் ஒரு நாட்டுப்புறக் கதையைச் சொல்கிறாள் என்று வைத்துக்கொள்வோம்.

அந்தக் குழந்தை அன்றிரவு ஒரு கதையை மட்டும் கேட்கவில்லை. அது ஒரு மொழியையும், ஒரு பண்பாட்டையும், ஒரு தலைமுறையின் நினைவையும் பெற்றுக்கொள்கிறது. அதனால்தான் தமிழைக் காப்பாற்ற வேண்டும் என்று மேடைகளில் பேசுவதைக் காட்டிலும், தமிழை வீட்டில் வாழ வைப்பது முக்கியம்.

நாம் வாழ்ந்து காட்டுவோம்.

இன்றைய இளைய தலைமுறைக்கு தமிழின் மீது ஆர்வம் இல்லை என்று குறை கூறுவது எளிது. ஆனால் அதற்கு முன் நாம் நம்மிடம் சில கேள்விகளைக் கேட்க வேண்டும்.

இதையும் படியுங்கள்:
மதுரை மீனாட்சியம்மன் கோயில் மறைக்கப்பட்ட வரலாறும் ஆலயப் பிரவேசப் புரட்சியும்!
தமிழ் | Father and daughter read tamil kavithai book

நம் வீட்டில் புத்தகங்களுக்கு இடம் இருக்கிறதா?

குழந்தைகளுடன் தமிழில் உரையாடுகிறோமா?

புத்தகத்தை ஒரு பரிசாகக் கொடுக்கிறோமா?

நம் வாழ்க்கையில் தமிழுக்கு ஒரு இயல்பான இடம் இருக்கிறதா?

இந்தக் கேள்விகளுக்கான பதில்களில்தான் அடுத்த தலைமுறையின் தமிழ் இருக்கிறது. ஒரு நாள் நாம் ஒரு புத்தகத்தைப் புரட்டிக்கொண்டிருக்கும்போது, நம் குழந்தை, “அப்பா… நீங்கள் படிக்கும் அந்தப் புத்தகத்தை நானும் படிக்கலாமா?” என்று கேட்கலாம்.

அந்தக் கேள்வி வருவதற்காகப் பெரிய அறிவுரைகள் தேவையில்லை. திருவள்ளுவர் சொன்னதுபோல், சொன்னதைச் செயலாக்கிக் காட்டினால் போதும்.

தமிழை நேசிக்கச் சொல்லாதீர்கள். தமிழை நேசிப்பதை அவர்கள் பார்க்கட்டும். அப்போது தமிழ் ஒரு பாடமாக மட்டும் இல்லாமல்,

ஒரு மொழியாக, ஒரு பண்பாடாக, ஒரு உணர்வாக, ஒரு வாழ்க்கை முறையாக அடுத்த தலைமுறைக்குக் கடந்து செல்லும்; செல்லட்டும்.

இந்தக் கட்டுரையை வாசிப்பதன் மூலம், குழந்தைகளின் பழக்கவழக்கங்களில் பெற்றோரின் நேரடித் தாக்கத்தைப் புரிந்து கொண்டு, திணிப்பு இல்லாமல் அவர்களின் விருப்பத்திற்கு ஏற்ப தமிழ் மொழியையும் வாசிப்பையும் இயற்கையாகவே வாழ்க்கையின் ஒரு பகுதியாக மாற்றும் செயல்முறை உத்திகளைப் பெறலாம்.

logo
Kalki Online
kalkionline.com