ஒரு ராணுவ வீரர், ஒரு டிக்கெட் பரிசோதகர், ஒரு ஏழை பெண் - நெகிழ வைக்கும் உண்மை சம்பவம்!

ஒரு ராணுவ வீரர், ஒரு டிக்கெட் பரிசோதகர், ஒரு ஏழை பெண் - ரயில் பயணத்தில் நடந்த உண்மை சம்பவம்.
மனிதாபிமானம் | A soldier and a poor woman
மனிதாபிமானம் | A soldier and a poor womanAI Image
Updated on
Kalki Strip
Kalki Strip

ஒருமுறை சென்னையிலிருந்து நீலகிரி எக்ஸ்பிரஸில் கோவைக்கு திரும்பிக் கொண்டிருந்தபோது, ஒரு வயதான பெண்மணி வேகமாக ஓடிவந்து எங்கள் பெட்டியில் ஏறி மூச்சு வாங்க நின்றாள். ஆன்லைனில் புக்கிங் செய்த அவருக்கு வெயிட்டிங் லிஸ்ட்டில் தான் டிக்கெட் இருந்தது. கன்ஃபர்ம் ஆகவில்லை. அவரது புக்கிங் ஏஜன்ட், "வெயிட்டிங் லிஸ்டை டிடிஇ-க்கு காண்பி.. அவர் ஏதாவது டிக்கெட் அட்ஜஸ்ட் செய்து தருவார்" என்று கூறி விட்டாராம்.

ரயில் கிளம்பியதும் டிக்கெட் பரிசோதகர் சோதனை செய்து கொண்டு வந்தார்.

அன்று சனிக்கிழமை. ஆதலால், நீலகிரி எக்ஸ்பிரஸ் முழுதும் நிரம்பி வழிய பரிசோதகர் அந்தப் பெண்ணிடம், "உங்கள் டிக்கட் கன்ஃபர்ம் ஆகவில்லை. ₹600 அபராதம் தந்தால் தான் ஆயிற்று; இல்லை என்றால் அரக்கோணம் சந்திப்பு ஸ்டேஷனில் ஒப்படைத்து விடுவேன்" என்று கூறிவிட்டார்.

அந்த பெண்மணியின் கையில் நூறோ நூற்று ஐம்பதோ தான் வைத்திருக்கிறார். "கையில் காசு இல்லை என்றால் ஜீ-பே செய்யுங்கள்" என்று கூறினார்.

அந்த பெண்மணியிடம் இருந்ததோ சாதாரண மொபைல் போன். அதனால், அவர் "எனக்கு ஜி-பே வசதி எல்லாம் கிடையாது; என் மகனுக்கு ஆக்ஸிடெண்ட் நடந்து யாருமில்லாமல் திருப்பூர் ஆஸ்பித்திரியில் சுயநினைவின்றி இருக்கிறான். அவசரமா கிளம்பி வந்துவிட்டேன். அடுத்த ஸ்டேஷனில் இறக்கி விட்டுவிடாதீர்கள்" என்று கெஞ்சினாள்.

"நான் இங்கு பாத்ரூம் அருகே ஓரமாக தரையில் உட்கார்ந்து கொள்கிறேன்" என்று டிக்கெட் பரிசோதகரிடம் பேசியும் பலன் இல்லை.

மனிதாபிமானம் | A ticket inspector and a poor woman
மனிதாபிமானம் | A ticket inspector and a poor womanAI Image

"ஸ்குவாட் யாராவது வந்தால் நானும் மாட்டிக் கொள்வேன்" என்கிறார் பரிசோதகர். அந்தப் பெண்மணி மிகவும் பயந்து போய் அழுது கொண்டே இருக்கிறார். இதைப் பார்த்த அருகில் இருந்த ஒருவர் ₹600 ரூபாயை எடுத்து அந்த பெண்ணிடம் நீட்டுகிறார். "இதைக் கட்டி விட்டு ஊர் போய் சேருங்கள் அழ வேண்டாம்" என்கிறார்.

அந்த பெண்மணி அவர் கால் பிடிக்காத குறையாக நன்றி சொல்லி விட்டு டிக்கெட் பரிசோதகரை நோக்கி ஓடுகிறார் அபராதம் செலுத்த..

எனக்கு மிகவும் ஆச்சர்யமாகி விட்டது. நான் ₹500 ரூபாய் தரலாமா என யோசித்துக் கொண்டிருக்கும் போதே அவர் எடுத்துத் தந்து விட்டார்.

நான் அவரிடம் சென்று அவர் கை பிடித்து பாராட்டினேன். விசாரித்த போது அவர் ஒரு ராணுவ வீரர் என்றும் விடுமுறைக்கு சேலம் பக்கம் சொந்த ஊருக்கு வந்ததாகவும் கூறினார்.

அவருக்கு ஒரு சல்யூட் அடித்து விட்டு ஒரு செல்பி எடுக்கலாமா எனக்கேட்டேன். ஆனால் அவர் மறுத்து விட்டார். மீண்டும் ஒரு முறை அவரைப் பாராட்டினேன். அதற்குள் அவரது சக நண்பர்கள் அவரை சூழ்ந்து கொள்ள நான் சீட்டிற்கு வந்து விட்டேன்.

இதையும் படியுங்கள்:
நெதர்லாந்தில் மனிதர்களை விட சைக்கிள்கள் அதிகம் ஏன் தெரியுமா?
மனிதாபிமானம் | A soldier and a poor woman

சற்று நேரம் கழித்து வந்த அந்த பெண்மணி அவரிடம் அந்த ₹600 ரூபாயை திருப்பிக் கொடுத்தார். அவர், "ஏன் அபராதம் கட்டவில்லையா?" என்று விசாரிக்க, அந்தப் பெண்மணி, "இப்ப எப்படிக் காசு வந்தது என்று கேட்டார். இதுமாதிரி தினமும் எத்தனை பேர் ஏமாத்துறராங்க தெரியுமா? இப்படி என்னை ஏமாத்துறீங்கனு" கேட்டார் டிக்கெட் பரிசோதகர். நான், உடனே நீங்க ₹600 ரூபாய் எனக்கு கொடுத்து ஹெல்ப் பண்ணதை சொன்னேன். உண்மையை புரிந்துகொண்ட அவர், "சாரிம்மா, நான் அந்த அபராதத்தை நானே கட்டிடுரேன்.

என் பெர்தல போய் படுத்துக்கொள்ளுங்க. திருப்பூர் வந்ததும் நானே எழுப்புரென்னு சொல்லி ₹600 ரூபாயை திருப்பி கொடுத்துட்டார். அதனால நீங்க உதவி செஞ்ச உங்க பணத்தை உங்ககிட்ட திருப்பி கொடுக்க வந்தேன்னு" சொன்னார்.

இதையும் படியுங்கள்:
குளோப் உருவாக்கத்திற்கு உயிர் கொடுத்த ரிச்சர்ட் ஹக்குல்யட்டின் வியக்கத்தக்க வரலாறு..!
மனிதாபிமானம் | A soldier and a poor woman

எங்கும் ஏமாற்றுபவர்கள் நிறைந்த இந்த காலத்தில் ₹600 ரூபாய் யோசிக்காமல் எடுத்துத் தந்த அந்த ராணுவ வீரர் ஒரு புறம், அந்த பெண்மணியின் பரிதாப நிலை கண்டு அபராதம் கட்டிய டிக்கெட் பரிசோதகர் ஒருபுறம், அபராதம் நாம் கட்டவில்லை என்றவுடன் அந்த பணத்தைத் தானே வைத்துக் கொள்ளாமல் திரும்ப வந்து அழுகையுடன் நன்றி கூறி திரும்ப தந்த அந்த பெண் ஒருபுறம்...

உண்மையோடும், நேர்மையோடும் வாழும் மனிதர்கள் இன்னும் இருக்கிறார்கள் என்று என்னை நெகிழ வைத்த தருணங்கள்.

இந்தக் கட்டுரையை வாசிப்பதன் மூலம், இயந்திரத்தனமான இன்றைய உலகில் மறைந்து வரும் மனிதநேயம் மற்றும் அதன் மதிப்பை உணர்ந்து, உங்களது அன்றாட வாழ்விலும் சிறிய உதவிகளைச் செய்யத் தூண்டும் நேர்மறையான மனநிலையைப் பெறுவீர்கள்.

logo
Kalki Online
kalkionline.com