
மகா ஜனங்களே, உங்களிடம் அன்புடன் ஒரு விண்ணப்பம். சொல்றேன் கேளுங்க... என்னோட வாழ்க்கையே ரோட்ல தாங்க. அப்பப்போ இந்த ஊரு சனங்க என் வாயை திறந்து ஏதாவது போட்டுக்கிட்டே இருப்பாங்க. அதனால, என் வயிறு காலியாக இருந்த நாள் இல்லைன்னே சொல்லலாம். சில சமயம் தொண்டை வரைக்கும் நிறைஞ்சு, மேல மேல திணிக்கிற பாசக்கார மக்களை நா மறக்கவே மாட்டேன்.
நா சுமந்த பாரங்கள் ரொம்பவே. அன்பு, ஆனந்தம், சோகம், கவலை, வலி, சோதனை, சாதனைன்னு எக்கச்சக்கமான சுமைகள். ஒரு நாளும் நான் அலுத்துக்கிட்டதும் இல்லை. துள்ளிக் குதித்ததும் கிடையாது. அமைதியாகவே இருப்பேன்.
பட்டாளாத்துல இருக்கிற புருஷனுக்கு வீட்டு நடப்புகளை விமலா எம்மூலமாத்தான் சொல்லிவிடுவா. நானும், ராணுவ ரகசியம்போல் மூச்சு விட மாட்டேனே. அஞ்சாவது தெரு அஞ்சலிக்கு முதல் தடவையாக நாள் தள்ளிப்போக மாமியாருக்குத் தெரியாம அம்மாட்ட சொல்லணும்ன்னு ஆசைப்பட்டா. பாட்டியாகப் போகும் விஷயம் அவ அம்மாவுக்கு முன்னாடி, எனக்குத்தான் தெரிஞ்சது. ஏன்னா, அப்போ அதுக்கு நாந்தான் ஹெல்ப் பண்ணினேன்.
மேலத்தெரு மீனாவோட மாப்பிள்ளை குடிச்சிட்டு வந்து அவளை அடிக்க, அதுக்கு மாமியாரும் உடந்தை. அடியின் வலி பொறுக்க முடியாம, அப்பாவை வந்து அழைத்து போகச் சொல்வதற்காக தகவல் சொல்ல என்னைத்தான் தேடிவந்தாள். அழுது வீங்கிய முகத்தைப் பார்த்த பின் வாய் இருந்தும் ஆறுதல் சொல்ல முடியாத பாவியாகிவிட்டதை நினைத்து பலநாள் வருத்தப் பட்டிருக்கிறேன்.
அதற்கடுத்த வாரம், பிறந்த வீட்டில் சொன்னபடி நகைகள் போடாததால் பிரச்னையாகியதில், புக்ககம் பிரிந்து, தலை குனிந்தவாறு, பிறந்தகம் செல்லும் மீனாவை வீதியிலுள்ளவர்கள் வேடிக்கைதான் பார்த்தார்கள். அதைப் பார்த்து நான் விட்ட பெருமூச்சில் வேப்பமர இலைகள் உதிர்ந்தன.
அது மட்டுமா… கல்யாணமாகி ஒரு மாசமாகியும் வேலை வேலைன்னு கண்டுக்காம விட்ட மூர்த்திட்ட கோவிச்சுட்டு அம்மா வீட்டுக்குப் போன தனத்தை வரச்சொல்லி மூர்த்தி கேட்ட மன்னிப்பு எனக்கு மட்டுமே தெரியும். மூர்த்தி வீட்ல இப்ப வரைக்கும் யாருக்கும் தெரியாது.
பானு கல்யாணத்தின்போது, உற்றம் சுற்றத்தை அழைத்ததில் ராமர் பாலத்திற்கு கல் சுமந்த அணில்போல் என் பங்கும் உண்டு. குண்டும், குழியுமாய் இருந்த வீதியை சரி செய்யவும், குடிநீர்க் குழாயில் தண்ணீர் வருவதற்கும் கிராமத்து பெண்கள்,
கலெக்டருக்கு விண்ணப்பித்ததும் என் மூலமாகத்தான். பத்து தினங்களில் ரோட்டை கருப்பு கம்பளம் விரிச்சதுபோல சரி செய்தது என் முன்னால்தான். குழாயில் முன்னை விட அதிகமாக குடிநீர் வருவதாக ராசமக்கா, பேராச்சியிடம் சொல்லிக் கொண்டு செல்வது காற்றில் பரவ, பரவசமானேன்.
இப்பிடி, குவளைக்குளத்துக்காக எவ்வளவு நல்லது பண்ணியிருக்கேன். இப்ப டெக்னாலஜி முன்னேறிட்டதால, என்னோட தேவை தேவையில்லையாம். வேப்ப மரத்தில இருந்து என்ன பிரிச்சுடப் போறாங்களாம். பேப்பரில் போட்ருக்குன்னு சுப்பையா அண்ணாச்சி, என்னை கையை காண்பித்து மயிலு மதினியிடம் சொல்லும்போது எனக்கு எப்படி இருந்திருக்கும் நீங்களே சொல்லுங்க…
நாம் பாட்டுக்கு ரோட்டோரமா இருந்து போற, வர்றவங்களைப் பார்த்துட்டுக்கிட்டு இருப்பேனே… எதுக்கு இந்த முடிவு... இப்பிடி புலம்ப வச்ச இந்த தபால்பெட்டியின் கோரிக்கையை, மனசுல வச்சுஎடுக்க வேண்டாம்ன்னு சொல்லுங்களேன் மக்களே...ப்ளீஸ்..!