ஞாபக மறதி என்பது ஒரு விதத்தில் வரம். என்றாலும், அது அனைத்துக்கும், அனைவருக்கும் எப்போதும் பொருந்துவதில்லை. பலரையும் பல சமயங்களில் பாதிப்பது இந்த ஞாபக மறதியாகும். முக்கியமான செயல்களைக் கூட இந்த ஞாபக மறதி நம்மை செய்ய விடாமல் தடுக்கிறது. நினைவு மறதிக்கு சரியான காரணத்தைக் கண்டறிந்து தீர்வு காணுவதன் மூலம் மறதி பிரச்சனையிலிருந்து விடுபடலாம் என்கின்றனர் உளவியல் நிபுணர்கள்.
மறதி என்பது ஒரு நோய் அல்ல. இதற்குப் பல காரணங்கள் உள்ளன. அதில் ஒன்று நேரத்தை திட்டமிடாமை. காலையில் தாமதமாக எழுவதன் மூலம் அனைத்து வேலைகளையும் பரபரப்புடன் செய்வதால் மனம் நிம்மதியற்றுப் போகிறது. இச்சூழலில் நாம் சாதாரண நிகழ்வுகளைக் கூட எளிதில் மறந்து விட வாய்ப்புள்ளது.
முறையான நேர மேலாண்மையின் மூலம் நாம் இந்த பரபரப்பிலிருந்து வெளி வர முடியும். மனம் அமைதியாக இருக்கும் போது முக்கியமான பணிகளை நம்மால் திரும்பத் திரும்ப நினைவுக்குக் கொண்டு நன்கு செயலாற்ற முடியும். அதன் மூலம் காலை நேரத்தை ஓர் இனிமையான நேரமாக மாற்றலாம்.
அப்படியே மறந்தாலும் ஒரு நிமிடம் நிதானித்து சிந்தித்தால் நினைவுக்கு கொண்டு வர முடியும்.
மறதிக்கு இன்னொரு முக்கியக் காரணம் கவனச் சிதறலாகும். இதனால் நிகழ்வுகள் நம் நினைவில் பதியாமல் போய் விடுகின்றன. ஒரே நேரத்தில் பல வேலைகளைச் செய்வது, நமது எண்ணத்தை வேறு பக்கம் கவனம் செலுத்துவது போன்ற பழக்கங்களை உடனடியாகக் கைவிட வேண்டும்.
நாம் ஒரு நேரத்தில் ஒரு வேலை என்று நம் முழுக்கவனத்தை செலுத்துவதன் மூலம் மறதியைத் தவிர்க்க முடியும். நினைவு மறதியைத் தடுக்க மனப்பயிற்சியே அவசியம். மனதை ஒரு நிலைப்படுத்தி செயலாற்ற பழகும் பொழுது மனம் எந்த செயலைச் செய்கிறோமோ, அதில் நிலைத்து இருக்கும் ஆற்றலைப் பெற்று விடுகிறது.
மூளைக்கு இரத்த ஓட்டத்தை அதிகப்படுத்துவதன் மூலமும் மறதியை விரட்ட முடியும். அதிகாலையில் எழுந்து நல்ல காற்றோட்டமுள்ள இடத்தில் உடற்பயிற்சி செய்யும் பொழுது மூளைக்கு இரத்த ஓட்டம் அதிகரிக்கிறது.
இரத்தம் மூளைக்கு அதிகமாகப் பாயும் பொழுது, அதிலுள்ள ஆக்ஸிஜனை மூளை அதிகமாகப் பெற்றுக் கொள்கிறது.
இதுவே இயற்கை மின்சக்தியாகும். எனவே அதிகாலையில் எழுவது, உடற்பயிற்சிகள் செய்வது, மூச்சுப்பயிற்சி போன்ற பழக்கங்களை தவறாமல் செய்ய வேண்டும். அவ்வாறாயின் அவர்கள் இயல்பாகவே நினைவாற்றல் உடையவர்களாக மாறி விடுவார்கள். மேலும் முதுமையிலும் மறதி என்பது அவர்களுக்கு விரைவாக ஏற்படாது.
மிகப் பெரிய விஞ்ஞானிகள் கூட ஞாபக மறதியால் மிகவும் அவதிப்பட்டு இருக்கிறார்கள். நோபல் பரிசு பெற்ற பிரபல விஞ்ஞானி ஐன்ஸ்டின் ஒரு மறதிக்காரர். ஒரு முறை அவர் இரயிலில் பயணம் செய்து கொண்டு இருந்தார். டிக்கெட் பரிசோதகர் வந்து பயணிகளின் டிக்கெட்டை வாங்கிப் பரிசோதித்துக் கொண்டிருந்தார். இதைக் கண்ட ஐன்ஸ்டின் தன்னுடைய டிக்கெட்டை எடுக்க பைக்குள் கையை விட்டார். அங்கு டிக்கெட் இல்லாமல் போகவே அதிர்ச்சி அடைந்தார். தன் கைப்பையை முழுவதுமாகப் புரட்டிப் போட்டுப் பார்த்தார் டிக்கெட் கிடைக்கவில்லை. டிக்கெட் பரிசோதகரும் ஐன்ஸ்டினிடம் வந்து டிக்கெட்டைக் கேட்டார். அவரோ செய்வது அறியாமல் மலங்க மலங்க விழித்தார். டிக்கெட் பரிசோதகருக்கு அவரின் நிலைமை புரிந்து விட்டது.
எனவே அவர் ‘நீங்கள் ஒரு புகழ் பெற்ற விஞ்ஞானி என்பது எனக்கு மட்டுமல்ல, இந்த இரயிலில் பயணிக்கும் அனைவருக்கும் தெரியும். எனவே நீங்கள் டிக்கெட் எடுக்காமல் பயணிக்க மாட்டீர்கள் என்று நான் மனப்பூர்வமாக நம்புகிறேன். எனவே நீங்கள் கவலைப்படத் தேவையில்லை. நிம்மதியாகப் பயணத்தைத் தொடருங்கள்’ என்றார்.
அப்பொழுது ஐன்ஸ்டின் என்ன சொன்னார் தெரியுமா ?
‘அதுவல்ல என் பிரச்சனை. டிக்கெட் வேண்டும் என்றால் என்னால் இன்னொன்று கூட வாங்கிக் கொள்ள முடியும். ஆனால் எந்த ஊருக்குப் போய்க் கொண்டு இருக்கிறேன் என்பதை அந்த டிக்கெட்டைப் பார்த்தால்தானே எனக்குத் தெரியும்.’ என்றாராம். இப்பொழுது டிக்கெட் பரிசோதகர் திருதிருவென விழித்தாராம்.
நினைவாற்றலை அதிகரிக்க புதிர் விளையாட்டு, வார்த்தை விளையாட்டு ஆகியவற்றில் ஈடுபடலாம். எப்போதும் பரபரப்பாக இருப்பதை விடுத்து, மனதை அமைதியாக வைத்திருக்க முயற்சிக்கலாம். நேரத்தையும், வேலையையும் திட்டமிடுவதன் மூலம் மறதிக்கான வாய்ப்பைக் குறைக்கலாம். முக்கியமாக, மறதிக்காக கவலைப்படக்கூடாது. இதனாலும் பிரச்னை அதிகரிக்க வாய்ப்புள்ளது.