

வீட்டு வேலை மற்றும் அலுவலகப் பிரச்சினைகளால் மன அழுத்தம் அதிகரித்துவிட்டதா? மருந்து மாத்திரைகளை விட ஒரு பூனை உங்களை மன அழுத்தத்திலிருந்து முழுமையாக விடுவிக்க வல்லது. ஜப்பானில் உள்ள ஒரு முன்னணி மென்பொருள் நிறுவனம், தனது அலுவலகத்திலேயே 11 பூனைகளை முழுநேர ஊழியர்களாக நியமித்து வியக்க வைத்துள்ளது. அப்படி என்ன அங்கு நடக்கிறது? முழு விவரங்களை படித்து தெரிந்து கொள்ளுங்கள்.
நம்மில் பலருக்கு பூனைகள் என்றாலே ஒரு விதமான தயக்கம் உண்டு. நாய், பசு, ஆடு போன்ற கால்நடைகளை தான் அதிகமாக வளர்ப்பதுண்டு. அதிலும் நாயை வளர்ப்பவர் தான் மிக அதிகமாக இருக்கிறார்கள். ஆனால் பூனையை வெகுசிலரே வீட்டில் வளர்க்கிறார்கள். பூனையின் ரோமம் வீட்டில் விழுந்தால் தரித்திரம் என்று சில சாஸ்திரங்கள் கூறுவதாக நம்புகிறார்கள். ஆகவே, பூனையை மிகக் குறைவாகத்தான் வளர்க்கிறார்கள்.
ஆனால், அறிவியல் பூர்வமாக பார்த்தால், பூனைகள் வெறும் செல்லப்பிராணிகள் மட்டுமல்லாமல், அவை நம் ஆரோக்கியத்தை காப்பதாகவும் ஆய்வுகள் கூறுகின்றன.
இன்றைய காலகட்டத்தில் வீட்டு வேலை, அலுவலக வேலை, பொருளாதாரப் பிரச்சினை என பலவிதமான பிரச்சினைகளோடு வாழும் நமக்கு மன அழுத்தமும், இதய நோய்களும் அதிகரித்து வருகின்றன.
இத்தகைய சூழ்நிலையில், ஒரு பூனையுடன் நேரத்தை செலவிடும்போது மருந்து மாத்திரைகளை விட சிறந்த பலனை தருவதாக ஆய்வுகள் கூறுகின்றன.
ஒரு பூனை நம்முடைய மடியில் அமர்ந்து மெல்லிய ஒலியை (Purring) எழுப்பும் போது, நம்முடைய உடலிலும் மனதிலும் நேர்மறையான மாற்றங்கள் ஏற்படலாம் என்றும் ஆய்வுகள் கூறுகின்றன.
பூனையை தடவிக் கொடுக்கும்போது நம் உடலில் 'ஆக்ஸிடோசின்' (Oxytocin) என்ற ஹார்மோன் சுரக்கிறது. இது ரத்த அழுத்தத்தை குறைத்து, இதய துடிப்பை சீராக்குகிறது.
மேலும், பூனைகள் ஒரு விதமான மெல்லிய அதிர்வு ஒலியை எழுப்புகின்றன. இது 25 முதல் 150 ஹெர்ட்ஸ் (Hertz) வரையிலான அதிர்வெண்ணை கொண்டிருக்கிறது. மருத்துவ ரீதியாக இந்த அதிர்வெண் எலும்புகளை குணப்படுத்தவும், திசுக்களைப் புதுப்பிக்கவும் பயன்படுத்தப்படுகிறது.
இதைத் தவிர, நாய்களைப் போல பூனைகளை வெளியில் அழைத்துச் செல்ல வேண்டிய அவசியமுமில்லை.
இதையெல்லாம் கருத்தில் கொண்டு தங்களுடைய நிறுவனத்தில் பணிபுரிபவர்களின் மன அழுத்தத்தை குறைப்பதற்காக ஒரு ஜப்பானிய நிறுவனம் 11 அலுவலகப் பூனைகளை பணியில் வைத்திருக்கிறது என்று சொன்னால் உங்களால் நம்ப முடிகிறதா??
ஆம்!! டோக்கியோவைச் சேர்ந்த மென்பொருள் நிறுவனமான க்யூநோட் இன்க்-இல் தான் இந்த அதிசயம் நடந்திருக்கிறது. இந்த நிறுவனமானது தனது அலுவலகத்தை மனிதர்களுக்கும் பூனைகளுக்கும் பொதுவான ஒரு பணியிடமாக மாற்றியுள்ளது.
2004-ல் ஒரு தெருப் பூனையை இந்த நினவனம் தத்தெடுத்தது. இப்போதோ, 11 முழுநேர அலுவலகப் பூனைகள் ஊழியர்களாக உருவெடுத்துள்ளன. ஒவ்வொன்றிற்கும் ஒரு அதிகாரப்பூர்வப் பதவிப் பெயரும் உண்டு. அதாவது மேனேஜர், எழுத்தாளர், மேலாளர் என பெயர்கள் வைக்கப்பட்டிருக்கின்றன. ஊழியர்கள் நாள் முழுவதும் அவற்றுடன் பழக ஊக்குவிக்கப்படுகிறார்கள்.
மேலும், புதிய வேலைக்கு விண்ணப்பிப்பவர்கள் கூட பூனைப் பிரியர்களாக இருக்க வேண்டும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. இதன் விளைவாக, அமைதியான, மகிழ்ச்சியான மற்றும் ஒருவரோடு ஒருவர் அதிகம் இணைந்த பணியிடமாக உருவாகியுள்ளது என்று அந்த நிறுவனம் கூறுகிறது.
க்யூநோட்டின் இந்த பூனைக் கதை 2004-ல் தொடங்கியது. அந்த நிறுவனத்தின் நிறுவனர்களில் ஒருவர் தெருவில் அலைந்து திரிந்த ஒரு பூனைக் குட்டியை மீட்டு அலுவலகத்திற்குக் கொண்டு வந்தார்.
அது ஒரு தற்காலிக விருந்தாளியாக இல்லாமல், விரைவாக அன்றாட அலுவலக வாழ்க்கையுடன் ஒன்றிப் போனது. ஊழியர்கள் உண்மையாகவே விரும்பிய ஒரு நிம்மதியான சூழலை உருவாக்க அது உதவியது.
அடுத்த இருபது ஆண்டுகளில் தொடர்ந்து மீட்கப்பட்ட பூனைகளும் அலுவலகத்தில் இணைந்து, கடைசியாக மனிதர்களும் பூனைகளும் தினமும் ஒரே சூழலைப் பகிர்ந்து கொள்ளும் வகையில் ஒரு தனித்துவமான பணியிடத்தை இந்த நிறுவனம் உருவாக்கியது.
இப்போது, டோக்கியோவில் உள்ள இந்த நிறுவனத்தின் தலைமையகத்தில் 11 பூனைகள் நிரந்தரமாக வசித்து வருகின்றன. அவை செல்லப் பிராணிகளாக மட்டுமில்லாமல் நிறுவனத்தின் அங்கீகரிக்கப்பட்ட உறுப்பினர்களாக மாறி, நாள் முழுவதும் பணியிடங்கள், சந்திப்பு அறைகள் மற்றும் பொது இடங்களுக்கு இடையே இங்கும் அங்குமாக சுதந்திரமாக சுற்றித் திரிகின்றன.
பூனைக் கழிப்பறைகள், உயர்த்தப்பட்ட நடைபாதைகள், ஏறும் அலமாரிகள், பிரத்யேக ஓய்விடங்கள் மற்றும் பூனைகளின் அன்றாடச் செயல்பாடுகளைத் தாங்கும் வகையில் வடிவமைக்கப்பட்ட கீறல் - எதிர்ப்பு சுவர்கள் ஆகியவை இந்த நிறுவனத்தில் இடம்பெற்றுள்ளன. இந்த மாற்றங்கள், பூனைகள் உபகரணங்களை சேதப்படுத்தாமலும் ஊழியர்களுக்கு இடையூறு செய்யாமலும் கட்டிடம் முழுவதும் சுதந்திரமாக நடமாட அனுமதிக்கின்றன.
விலங்குகளை ஊழியர்களிடமிருந்து பிரிப்பதற்குப் பதிலாக, இயற்கையான சூழலை ஊக்குவிக்கும் வகையில் இந்த அலுவலகம் வடிவமைக்கப்பட்டுள்ளது.
உண்மையிலேயே, இது பாராட்டப்பட வேண்டிய விஷயம் தான். மனிதர்களுக்கே வேலை கிடைக்காத இந்த காலத்தில் பூனைகளுக்கும் ஒரு பதவியையும் புகலிடத்தையும் கொடுத்து அதை வளர்க்கிறார்கள் என்றால் மிகவும் போற்றப்பட விஷயம் தான்... இதனால் பூனைகளும் பயன் பெறுகின்றன.. அதே சமயத்தில் அங்கு வேலை செய்யும் ஊழியர்களும் ஆரோக்கியமாக வாழ்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது..
இந்தக் கட்டுரையை வாசிப்பதன் மூலம், பணியிடத்தில் நிலவும் தீவிர மன அழுத்தத்தில் இருந்து விடுபட்டு, புத்துணர்ச்சியுடனும் நிம்மதியாகவும் பணியாற்றுவதற்கான நடைமுறை சாத்தியமான புதிய வழிகளை நீங்கள் கற்றுக்கொள்வீர்கள்.