

இந்தியாவில் ஐம்பதுகளில் தொடங்கிய குடும்பக்கட்டுப்பாடு பிரச்சாரங்கள் தொடங்கி, இன்றைய தெருநாய்கள் பெருக்கம் மற்றும் விலங்கு நலச் சட்டங்கள் வரை நமது சமுதாயத்தில் ஏற்பட்டுள்ள வரலாற்று மாற்றங்களை நீங்கள் அறிவீர்களா? நாய்கள் பற்றிய பல சுவாரஸ்யமான தகவல்களை உள்ளடக்கிய இந்தக் கட்டுரையைத் தொடர்ந்து வாசித்து முழுமையாகத் தெரிந்து கொள்ளுங்கள்!
இந்தியாவில் அம்பதுகளில் தொடங்கப்பட்ட குடும்பக்கட்டுப்பாடு திட்டம் அறுபதுகளில் தீவிரமாகப் பிரச்சாரம் செய்யப்பட்டது.
அம்மை நோய் தடுப்புக்கு எப்படி கிராமத்து மக்களை ஓட ஓட விரட்டிப் பிடித்து 'உருக்கு' குத்தினார்களோ அது போலவே துரத்தி துரத்தி ஆண்களை பிடித்து குடும்பக்கட்டுப்பாடு அறுவைச் சிகிச்சை செய்வித்தார்கள்.
இரண்டுக்கு மேல் இப்போது வேண்டாம் மூன்றுக்கு மேல் எப்போதும் வேண்டாம்; நாமிருவர் நமக்கிருவர்; ஒன்று பெற்றால் ஒளிமயம் அதிகம் பெற்றால் அல்லல் மயம்; நாமிருவர் நமக்கெதற்கு இன்னொருவர்; அளவான குடும்பம் வளமான வாழ்வு இப்படியான சுலோகங்களோடு சிவப்பு முக்கோண சிம்பல் போட்டு மக்கள் தொகையைக் கட்டுப்படுத்த அரசு நல் வாழ்வுத்துறை பேரியக்கம் நடத்தியது.
அது போலவே நாட்டில் பெருகிவரும் நாய்களின் இனப்பெருக்கத்தை கட்டுப்படுத்த தெரு நாய்களை ஆரம்ப காலத்தில் பிடித்துக்கொண்டு போய் கொன்றார்கள். அப்புறம் விலங்குகள் பாதுகாப்பு சங்கம் புளூ கிராஸ் அமைப்பு விலங்குகள் வதைத்தடுப்பு சட்டத்தை கையில் எடுத்தது. அதன் விளைவாக மாடுகளுக்கு காயடிப்பது போல மனிதர்களுக்கு கருத்தடை செய்வது போலவே நாய்களுக்கும் செய்யப்பட்டது.
புளூ கிராஸ் அமைப்பு பறவைகள் விலங்குகள் மாடுகள் பாம்புகள் வரை கொல்லப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து சட்டப் பாதுகாப்பு வழங்கியது. இதனால் பெருமளவு வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டவர்கள் குருவிக்காரர்கள் என்றழைக்கப்படும் நரிக்குறவர் சமூக மக்கள்தான்.
அப்புறம் பாம்பு பிடிப்பவர்கள், விலங்குகளை வைத்து சர்க்கஸ் நடத்தியவர்கள், பாம்பாட்டிகள், குரங்காட்டிகள், தேவாங்கு, கரடி, யானை போன்ற விலங்குகளை வைத்துப் பிழைத்த மோடி மஸ்தான்கள் போன்றோரெல்லாம் பிழைப்புக்கு வேறு தொழிலைப் பார்த்து போய் விட அதைக் கலையாக செய்தவர்களெல்லாம் கொஞ்சம் கொஞ்சமாக நலிவடைந்து காணாமல் போய்விட்டனர்.
அந்தக்காலத்தில் கோட்டி பிடிச்ச நாய்களால் கடிபட்ட பலர் பச்சிலை வைத்தியம் செய்து கொண்டு பத்தியம் இருந்து பார்வை பார்த்து வீட்டு வீட்டுக்கு புளிச்ச தண்ணி வாங்கிக் குடித்து சிகிச்சை மேற்கொள்வார்கள். கடித்த நாய் உயிரோடு இருக்குதா செத்து விட்டதா என்றும் பார்த்துக் கொள்ள வேண்டும். பாம்பு, நாய் போன்ற விஷ கடிகளுக்கு ஆளானவர்களுக்கு அமாவாசை ஆகாது என்று கேள்வி.
நாய்கள் நாம் சொல்லிக்கொடுப்பதை எளிதாகப் புரிந்து கொண்டு அதே போல செய்யும். பயிற்சி அளிப்பது எளிது. அந்த நாட்களில் தெரு நாய்களின் தொல்லை அதிகமானதும் முனிஸிபாலிட்டி ஊழியர்கள் கண்ணி வைத்து நாய் பிடிக்கும் வண்டிகளில் தெரு நாய்களைப் பிடித்துக்கொண்டு போனார்கள். அதில் வளர்ப்பு நாய்களும் பிடிபட்டன.
அதே போலத்தான் வீட்டு நாய்களுக்கு கழுத்தில் எடவாரு எனப்படும் பெல்ட் கட்டி விட்டால் வீட்டு வளர்ப்பு நாய் என்று அவற்றை பிடித்துக்கொண்டு போகமாட்டார்கள். அதுதான் அவற்றிற்கு லைசென்ஸ். அடுத்து நாய்களுக்கு கருத்தடை செய்வித்தார்கள். அதையும் மீறி இன்று லட்சக்கணக்கான நாய்கள் சென்னை போன்ற பெரு நகரங்களில் மட்டுமல்லாமல் கிராமப்புறங்கள் வரை தெருக்களை ஆக்கிரமித்து அட்டூழியம் செய்கின்றன.
விவசாயிகளின் உற்ற தோழன் நாய், ஆடு, மாடு, கோழிகளைப்போல நாய் இல்லாத சம்சாரி வீடுகளே இருக்காது. வீட்டுக் காவலுக்கு, விளை நிலங்களில் மாசூலை பாதுகாக்க, கிடைக்காவலுக்கு, மற்றும் வேட்டைக்கு நாய்களை பயன்படுத்துவது ஆதி காலம் தொட்டே இருந்து வருகிறது.
தென்னாட்டின் மீது படையெடுத்து வந்த அலாவுதீன் கில்ஜியின் படைத்தளபதி மாலிக்காபூர் ஆயிரக்கணக்கான வேட்டை நாய்களை படைக்கு முன்னால் அனுப்பி எதிரிகளை நிலை குலைய வைத்த பின் தாக்குதலைத் தொடங்கி இருக்கிறான். கிராமத்து சாமிகள் குறிப்பாக கருப்பசாமி நாயோடுதான் தமிழ் நாட்டின் கிராமங்கள் எங்கும் காட்சி அளிக்கிறார்.
பாண்டவர்களில் தர்மனோடு கூடவே சொர்க்கம் சென்ற நாய் தர்ம தேவனாக போற்றப்படுகிறது.
நாய்களின் கண்களுக்கு மட்டுமே பேய்கள் தென்படுமாம். நாய்கள் ஊளையிட்டால் அபசகுனம் என்பார்கள். இரவில் காட்டு வழியே ஒத்தையில் வருவோர்க்கு குல தெய்வங்கள் நாய் வடிவில் கூடவே வீடு வரைக்கும் வந்து பக்தர்களுக்கு பேய்களிடமிருந்து பாதுகாப்புத் தரும் போன்ற நம்பிக்கைகள் இன்றும் கிராமங்களில் இருக்கிறது. சிவனின் அம்சமான பைரவரின் வாகனம் நாய் என்பதால் நாய்க்கு பைரவன் என்ற ஒரு பொதுப்பெயரும் உண்டு. உயிரினங்களில் நன்றியுள்ளது நாய் மட்டுமே.
ராஜபாளையம், கன்னி, சிப்பிப்பாறை மற்றும் கோம்பை. போன்றவை தமிழ்நாட்டின் பாரம்பரிய நாட்டு நாய் இனங்களாகும். காவலுக்கும் வேட்டைக்கும் இந்த நாய்கள் பெரிதும் பயன்பட்டன. மனிதர்களின் படுக்கை அறையிலும் ஒன்றாக படுத்துத்தூங்கும் அளவுக்கு செல்லப்பிராணிகளாக உலகெங்கும் நாய்கள் விரும்பி வளர்க்கப்படுகின்றன.
அல்சேஷியன், பொமரேனியன், ஜெர்மன் ஷெப்பர்ட், லேப்ரடார் ரிட்ரீவர், கோல்டன் ரிட்ரீவர், டால்மேஷியன், பூடில், பெர்னீஸ் மவுண்டன் டாக், ரோட்வீலர், சைபீரியன் ஹஸ்கி,இவையெல்லாம் காஸ்ட்லியான வெளிநாட்டு நாய் வகைகள்.
நாட்டு நாய்கள் ஒரே பிரசவத்தில் 12 குட்டிகள் வரை பிரசவிக்கும். கிராமங்களில் அந்தக்காலத்திலேயே ஒரு ஆண் நாய்க்குட்டியை மட்டும் வைத்துக் கொண்டு மீதியை ஊருக்கு வெளியில் இருக்கும் பாழும் கிணற்றுக்குள் போட்டு கொன்று விடுவார்கள்.
யானைகளுக்கு மதம் பிடிப்பது போல இந்த நாய் இனத்திற்கும் வெறி (கோட்டி) பிடித்தால் அவை கண்ணில் கண்டோரை எல்லாம் கடித்துக்குதறி விடும். அவற்றிற்கு முதியவர்கள் குழந்தைகள் என்று பேதமில்லை. ஒரு நாய் இன்னொரு நாயையோ பிராணியையோ குழந்தையையோ தாக்க ஆரம்பித்தால் என்ன ஏது என்று புரியாமலே அதோடு மற்ற நாய்களும் ஒன்று சேர்ந்து தாக்கி கடித்துக் குதறி விடும்.
இது நாய்களின் பொதுப் புத்தி. மோப்ப சக்தி அதிகமுள்ள உயிரினங்களில் பன்றிக்கு அடுத்து முக்கியமான உயிரினம் நாய். காவல் துறை குற்றப் புலனாய்வுகளில் குற்றவாளிகளைக் கண்டு பிடிக்க முக்கிய பங்காற்றுவது மோப்ப நாய்களே. ஜொள்ளு வடிக்கும் நாய்கள் அபாயகரமானவை. அதன் மூலம் பரவும் மோசமான ரேபிஸ் நோய் பயங்கரமானது; வெறி பிடித்த நாய்கள் கடித்து விட்டால் உடனே மருத்துவமனை சென்று தகுந்த தடுப்பு ஊசிகள் சிகிச்சைகள் எடுத்துக்கொள்ள வேண்டும். இல்லையெனில் அதன் விளைவுகள் மிக மிக மோசமானவையாக இருக்கும். நாய்கள் போலவே குரைத்து உயிரிழக்கவும் நேரிடும்.
இந்தக் கட்டுரையை வாசிப்பதன் மூலம், பொதுமக்களும் விலங்கு ஆர்வலர்களும் தெரு நாய்களின் பெருக்கம் மற்றும் அவற்றுக்கான கருத்தடை முறைகளின் வரலாற்றுப் பின்னணியைப் புரிந்து கொண்டு சமுதாயத்தில் விழிப்புணர்வுடன் செயல்பட முடியும்.