

பதின்பருவக் குழந்தைகளின் இந்த ஆபத்தான வதிமுறை மாற்றத்திற்கான உண்மையான காரணங்கள் என்ன? அவர்களைத் சரியான பாதையில் திருப்புவதற்குப் பெற்றோர்களும், ஆசிரியர்களும், அரசும் என்ன செய்ய வேண்டும்? இப்போதே நாம் கவனிக்காவிட்டால் எதிர்காலம் என்னவாகும்? அதற்கான முழுமையான விடையைத் தெரிந்து கொள்ளத் தொடர்ந்து படியுங்கள்!
“டாக்டர்… பள்ளிக்குச் செல்லும் வயதிலேயே சில குழந்தைகள் ஏன் பொது இடங்களில் அத்துமீறி நடக்கிறார்கள்? யாராவது தவறைச் சுட்டிக்காட்டினால் கோபப்படுகிறார்கள். சில நேரங்களில் தாக்கவும் செய்கிறார்கள். பெற்றோர்கள் என்ன செய்ய வேண்டும்? ஆசிரியர்களுக்கும், அரசுக்கும் இதில் பொறுப்பு இருக்கிறதா?” என்று ஒரு தாய் கவலையுடன் கேட்டார்.
இந்தக் கேள்வி இன்று ஒவ்வொரு பெற்றோரும், ஆசிரியரும், சமூகமும் சிந்திக்க வேண்டிய ஒன்று. சமீபத்தில் பள்ளி மாணவர்கள் பேருந்து நடத்துநரைத் தாக்கிய சம்பவம் உள்ளிட்ட நிகழ்வுகள், வழிகாட்டுதல் என்பது குழந்தை வளர்ப்பின் முக்கியமான பகுதியாக இருப்பதை நினைவூட்டுகின்றன.
குழந்தைகள் ஏன் எல்லை மீறுகின்றனர்?
பதின்பருவம் என்பது தன்னம்பிக்கையும் சுதந்திர உணர்வும் வேகமாக வளரும் காலம். நண்பர்களின் தாக்கம், சமூக ஊடகம், குடும்பச் சூழல், ஊடகங்களில் காணப்படும் வன்முறை, தவறான முன்மாதிரிகள் போன்றவை குழந்தையின் நடத்தையைப் பாதிக்கலாம். சிலருக்கு போதைப்பொருள் பழக்கமும் தவறான பாதைக்குத் தள்ளும் காரணியாக அமையலாம்.
பொது இடங்களில் குழந்தைகளின் நடத்தை ஏன் முக்கியம்?
பேருந்து, சாலை, பள்ளி வளாகம், கடை, பூங்கா போன்ற இடங்கள் தனிப்பட்ட இடங்கள் அல்ல. அங்கு பிறரின் பாதுகாப்பையும் உரிமையையும் மதிப்பது குழந்தைகள் கற்றுக்கொள்ள வேண்டிய அடிப்படைப் பண்பு. படிக்கட்டில் தொங்கிப் பயணம் செய்வது போன்ற ஆபத்தான செயல்களைத் தவிர்ப்பதும், அறிவுறுத்துபவரை மரியாதையுடன் அணுகுவதும் நல்ல குடிமகன் உருவாகும் முதல் படிகள்.
தவறைச் சுட்டிக்காட்டினால் கோபப்படாமல் இருப்பது எப்படி?
“என்னை யாரும் கேள்வி கேட்கக்கூடாது” என்ற மனநிலைக்குப் பதிலாக, “என் செயல் சரியா?” என்று தன்னைத்தானே கேட்டுக்கொள்ளும் பழக்கம் வேண்டும். தவறை ஒப்புக்கொள்வது பலவீனம் அல்ல. அதைத் திருத்திக் கொள்வதே உண்மையான தைரியம். கருத்து வேறுபாடு ஏற்பட்டாலும் வார்த்தைகளால் பேசுவதுதான் நாகரிகம். கையால் தீர்வு காண்பது அல்ல.
பெற்றோர் என்ன செய்ய வேண்டும்?
குழந்தை எங்கு செல்கிறது, யாருடன் பழகுகிறது, இணையத்தில் எதைப் பார்க்கிறது என்பதில் அக்கறையுடன் இருக்க வேண்டும். வீட்டில் பெரியவர்கள் வன்முறையை ரசிப்பது அல்லது கோபத்தை அடிதடி மூலம் வெளிப்படுத்துவது குழந்தைகளுக்கு தவறான முன்மாதிரியாக அமையலாம். கட்டுப்பாட்டுடன் கூடிய அன்பும், தினசரி ஒழுக்கம் பற்றிய உரையாடலும் அவசியம்.
ஆசிரியர்களின் பங்கு என்ன?
பள்ளி என்பது பாடங்களை மட்டும் கற்றுத்தரும் இடமல்ல, சமூகப் பொறுப்பையும் கற்றுத்தரும் இடம். மாணவர்களின் நடத்தை மாற்றங்களை ஆசிரியர்கள் ஆரம்பத்திலேயே கவனித்து, தேவையானபோது பெற்றோருடன் இணைந்து ஆலோசனை வழங்க வேண்டும். பிரச்சினை தீவிரமானால் உளவியல் ரீதியான ஆலோசனை பெறச் செய்வது முக்கியம்.
சமூக ஊடகங்களையும் திரைப்படங்களையும் எப்படி அணுக வேண்டும்?
திரையில் காட்டப்படும் வன்முறையை நிஜ வாழ்க்கையின் வீரச் செயலாகக் குழந்தைகள் புரிந்துகொள்ளக்கூடாது. ஒரு காட்சியைப் பார்த்த பிறகு, “இது உண்மையில் நடந்தால் யாருக்கு என்ன பாதிப்பு ஏற்படும்?” என்று பெற்றோர் பேச வேண்டும். இணையத்தில் உருவாகும் கருத்து மோதல்களும் நேரடி சண்டையாக மாறாமல், பொறுப்புடன் கையாளப்பட வேண்டும்.
அரசின் பொறுப்பு என்ன?
பள்ளிக் கல்வித் துறை, பள்ளி நிர்வாகம், காவல்துறை மற்றும் சமூக நல அமைப்புகள் இணைந்து செயல்பட வேண்டும். பள்ளிகளில் உளவியல் ஆலோசனை, போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு, இணையப் பாதுகாப்பு, பொது ஒழுக்கம், சட்ட விழிப்புணர்வு போன்றவற்றை தொடர்ந்து வழங்குவது பயனுள்ளதாக இருக்கும். சம்பவம் நிகழ்ந்த பிறகு நடவடிக்கை எடுப்பதுடன், முன்கூட்டியே தடுப்பதே முக்கியம்.
இன்றைய மாணவர்களுக்கு நாம் சொல்ல வேண்டிய பாடம் என்ன?
சுதந்திரம் என்பது எதை வேண்டுமானாலும் செய்வது அல்ல, நமது செயலால் பிறருக்கு பாதிப்பு ஏற்படாதபடி நடப்பதே உண்மையான சுதந்திரம். பேருந்தில் பாதுகாப்பாகப் பயணம் செய்வது முதல், கருத்து வேறுபாட்டை அமைதியாக அலசி ஆராய்வது வரை ஒவ்வொரு சிறிய பழக்கமும் எதிர்கால மனிதரை உருவாக்குகிறது.
ஒரு குழந்தை தவறு செய்தால் அதை மட்டும் கண்டிப்பது தீர்வல்ல, அந்தத் தவறு ஏன் ஏற்பட்டது என்பதைப் புரிந்து, சரியான பாதையைக் காட்ட வேண்டும்.
பெற்றோர் வழிகாட்ட வேண்டும். ஆசிரியர்கள் கவனிக்க வேண்டும். சமூகம் பொறுப்புடன் செயல்பட வேண்டும். அரசு பாதுகாப்பான சூழலை உருவாக்க வேண்டும். அப்போதுதான் இன்றைய மாணவன் நாளைய பொறுப்புள்ள குடிமகனாக வளர்வான்.
தேசம் பாதுகாப்பான, அமைதியான, மகிழ்வான வாழ்விடமாகத் திகழும்.