
ஓங்க லிடைவந் துயர்ந்தோர் தொழவிளங்கி
ஏங்கொலிநீர் ஞாலத் திருள்கடியு – மாங்கவற்றுள்
மின்னேர் தனியாழி வெங்கதிரோன் றேனையது
தன்னே ரிலாத தமிழ்.
என்பது பழம் பெரும் தமிழ்ப் பாடல்.
உலகில் இருளை அகற்றுவது இரண்டே தான். ஒன்று சூரியன். இன்னொன்று தன் நேர் இல்லாத தமிழ்.
ஒன்று புற இருளை அகற்றுகிறது. இன்னொன்று அக இருளை அகற்றுகிறது.
இந்தத் தமிழின் பெருமையைக் காலம் தோறும் புதிய சுவையுடன் புதிய நடையில் பொலிவுடன் தந்தவர்கள் ஏராளம். அவற்றுள் காலத்திற்கேற்றபடி தமிழன்னை அருளால் தமிழுக்கு புதிய நடையைத் தர உதித்தவர் பேராசிரியர் ரா. கிருஷ்ணமூர்த்தி என்னும் கல்கி அவர்கள்.
உலக மொழிகளின் போக்கில் ஒரு மாறுதல் உருவாகி புனைகதைகள் நாவல் என்ற பெயரில் புது மறுமலர்ச்சியைத் தந்த காலத்தில் தமிழின் ஆற்றலை உலகுக்குக் காட்டியவர் கல்கி.
பன்முகப் பரிமாணம் கொண்ட இவரை எந்தக் கோணத்தில் பார்த்தாலும் நாம் அடைவது வியப்பைத் தான்.
தேசபக்தர், சுதந்திரப் போராட்டத்தில் சிறை சென்ற தியாகி, தமிழ் வல்லுநர், கீதம் புனைந்த கவிஞர், திரைப்பட பாடலாசிரியர், வசனகர்த்தா, நாவலாசிரியர், பத்திரிகை ஆசிரியர், நகைச்சுவை மன்னர், விமரிசகர், கட்டுரை ஆசிரியர், பேச்சாளர், பாரதிக்கு மணி மண்டபம் அமைத்தவர், தெய்வத்தைப் போற்றித் துதிக்கும் தூய பக்தர்... இப்படி சொல்லிக் கொண்டே போகலாம்.
தேசபக்தியை மூச்சாகக் கொண்ட கல்கி, வாழ்க்கையின் அனைத்து அம்சங்களிலும் அதைப் பிரதானமாகக் கொண்டு திகழ்ந்தார்.
காலத்திற்கேற்றபடி எழுச்சியைத் தர வேண்டும் என்று நினைத்து அவர் முன் வந்தது இரண்டு அம்சங்கள்: ஒன்று தமிழ் எழுச்சி இன்னொன்று தேசீய எழுச்சி.
இந்த இரண்டையும் கலந்து அள்ளி அள்ளி மக்களுக்குப் பல்வேறு விதமாக உதவியது அவரது தமிழ் ஆற்றல்.
பார்த்திபன் கனவு, சிவகாமியின் சபதம், பொன்னியின் செல்வன் ஆகிய மூன்று சரித்திர நாவல்களின் பின்னணியாக ஊடுருவும் ஒரு அம்சம் தேச எழுச்சியைச் சித்தரிப்பதாகும்.
ஜிலுஜிலு என்ற தமிழ் நடையில் தொட்டால் முடிக்கும் வரை கீழே வைக்க விடாமல் படிக்கத் தூண்டும் அவரது சிலிர்ப்பான தமிழ் நடை தனி நடையாகத் திகழ்வதைக் காணலாம். அருள்மொழிவர்மன், வந்தியத்தேவன், குந்தவை, பூங்குழலி என அவர் வடித்த பாத்திரங்களை யாராலும் மறக்கவே முடியாது.
அலை ஓசையில் தேசபக்தர்களின் தியாகத்தை வடிவமைத்துக் காட்டினார்.
பிருந்தாவனத்தில் கண்ணன் வளர்ந்த அந்த நாளும் வந்திடாதோ என்று தமிழ் உலகம் முழுவதையும் ஏங்க வைத்தார் அவர்.
விமோசனம், ஆனந்த விகடன், கல்கி ஆகிய பத்திரிகைகளின் ஆசிரியராகத் திகழ்ந்த அவர் அவற்றில் செய்த ஜாலங்கள் எத்தனையோ!
இளம் வயதிலேயே தேசபக்தியால் உந்தப்பட்டு சிறை சென்றார். வாழ்க்கையில் மும்முறை சிறை சென்றார்.
இசை விமரிசகராக கர்நாடகம் என்ற பெயரில் மிளிர்ந்தார். எழுத்தாளர் சங்கத்தின் முதல் தலைவராக ஒளிர்ந்தார். மூதறிஞர் ராஜாஜியின் அணுக்கத் தொண்டராகி அவரது ஆசியையும் அன்பையும் நிரந்தரமாகப் பெற்றார்.
பயணக் கட்டுரைகள், சிறுகதைகள், சமூக நாவல்கள், அரசியல் கட்டுரைகள் என பல்வேறு படைப்புகளை வாரந்தோறும் அவர் வழங்கியதைத் தமிழ் உலகம் வியப்புடன் பார்த்தது.
வாழ்நாளில் அவர் எதிர்ப்புகளையும் சந்திக்காமல் இல்லை. அதைத் தெளிந்த மனதுடன் காழ்ப்புணர்ச்சி இன்றி ஏற்று அவற்றைத் தூள் தூளாக்கினார்.
1899ம் ஆண்டு செப்டம்பர் 9ம் நாளன்று அவர் தோன்றினார். 1954ம் ஆண்டு டிசம்பர் 5ம் நாளன்று அவர் மறைந்தார். இந்திய அரசு 1999ம் ஆண்டு அவரது நினைவாக அவரை கௌரவித்துத் தபால்தலை ஒன்றை வெளியிட்டது.
தமிழர்களுக்கு ஒரு கடமை உண்டு!
அது இது தான்– தமிழ் ஆர்வலர்களும், தமிழகப் பல்கலைக் கழகங்களும், தமிழக அரசும் ஒருங்கிணைந்து அவர் நினைவைப் போற்றும் வகையில் ஒரு அமைப்பை நிறுவி முன் நோக்கி நடக்க வேண்டியது தான்!