

சினிமா பிரபலங்கள் லட்சக்கணக்கில் விலைகொடுத்து அணியும் கருங்காலி மாலை உண்மையில் கோடீஸ்வர யோகத்தைத் தருமா? அல்லது இது வெறும் விளம்பர மாயையா? ஆன்மீக நம்பிக்கைகளின் பின்னால் இருக்கும் சந்தை வணிகத்தை உடைத்தெறியும் ஒரு மிரட்டலான அலசல் இதோ!
கருங்காலி மாலை அணிவது தற்போது டிரெண்டிங் ஆகி வருகிறது. சமீபகாலத்தில் லோகேஷ் கனகராஜ், தனுசு, சிவகார்த்திகேயன் உள்ளிட்டோர் இந்தக் கருங்காலி மரக்கட்டையை உத்திராட்ச மாலை போன்ற உருண்டைகளாகத் தயாரித்ததை, லட்சக்கணக்கில் பணம் கொடுத்து வாங்கி அணிந்த பின்னர் இதைப்பற்றி தெரிந்துகொள்வது அதிகரித்து வருகிறது.
சந்தன மரம், வில்வ மரம், மருதமரம், செம்மரம், தேக்குமரம் போன்ற முக்கிய மரங்களின் வரிசையில் வரக்கூடிய கருங்காலியும் இதில் அடங்கும். இதனை அணிவதால் புகழும் செல்வமும் பெருகி பெரும் கோடீஸ்வரன் ஆகலாம் என்பது தவறு. ஜமுக்களத்தில் வடி கட்டிய பொய்யான மூட நம்பிக்கை.
எப்பவுமே கேரள மரப்பொருள்களுக்கு ஒரு தனி மவுசு உண்டு. பொதிகை மர ஓர தென் மாவட்டக் கிராமங்களில் களக்காடு திருக்குறுங்குடியில் துவங்கி வத்தல குண்டு, கொடைரோடு, பழனி வரை மலைகளில் விறகு பொறுக்க போவோர் வெட்டி வரும் தேக்கு கருங்காலி மரங்களின் வலிமை மகத்துவம் தெரியாமலே பயன்பாட்டில் இருந்து வந்தன.
இது வன இலாகா வனவிலங்குகள் பாதுகாப்பு சரணாலயங்கள் எல்லாம் வருவதற்கு முன்பு உள்ள நிலை. இப்போதும் மேற்குத்தொடர்ச்சி மலை அடிவார கிராம நகரங்களில் சர்வ சாதாரணமாக உலக்கை, உலக்கழுந்து, சிலம்பு கம்பு, மேஜை கசாரி, அதாவது நாற்காலி, பெஞ்சுகள், கட்டில்கள் ஏன் சமையலறையில் உக்கார்ந்து சமைக்கும் பலகை முதல் கொண்டு மேற்படி தேக்கு கருங்காலி மரங்களில் செய்யப்பட்ட மரச்சாமான்களாகத்தான் புழக்கத்தில் இருந்தன.
1980ல் கேரளாவில் பத்தினம்திட்டா அருகில் ஒரு தேயிலைத் தோட்ட வெள்ளைக்கார முதலாளியிடம் பணிபுரிந்து ஓய்வு பெற்ற கங்காணி எனது வீட்டுக்கு அருகில் வசித்து வந்தார்.
வந்த புதிதில் டீக்கடை, மளிகைக்கடை எல்லாம் வைத்து நடத்தி, நொடித்து, கடைசியில் எனது விறகுக்கடையில் வேலை செய்தார். ஒரு பஞ்ச காலத்தில் அவர் தன்னிடமிருந்த கருங்காலி மரக்கட்டில் ஒன்றை 50 ரூபாய்க்கு விற்க முன்வந்தார்.
அதை நான் 40 ரூபாய்க்கு வாங்கிக்கொண்டேன். மூங்கில் நரம்பால் பின்னப்பட்ட அழகிய வேலைப்பாடுடன் கூடிய அந்தக் கட்டிலை விறகுக்கடையில் பயன்படுத்தி வந்தேன்.
ஒருமுறை திருடர்கள் இரவில் வந்து கல்லாப்பெட்டியை உடைத்து அன்றைய யாவாரத்தைக் களவாண்டு கொண்டு போய்விட்டார்கள்.
இன்னொரு நாள் 'ராலே' சைக்கிளைத் தள்ளிக்கொண்டு போய்விட்டார்கள். ஏனெனில் அது பஞ்சராகிக் கிடந்தது. கொஞ்ச நாளில் அந்த கங்காணி இறந்துபோனார். நான் சுற்றுலா வளர்ச்சி வாரியத்தில் வேலை கிடைத்து, கொடைக்கானல் சென்று விட்டேன். கொஞ்சநாள் அந்தக் கடையைத் தம்பி நடத்தி, அப்புறம் மூடிவிட்டான். திருமணமாகி இரண்டு குழந்தைகளை விட்டுவிட்டு இறந்தும் போனான். அந்தக் கட்டில் என்னவானது என்று இன்று வரை மர்மமாகவே உள்ளது.
கருங்காலி மரம் ராசியானது எனில் அந்த வெள்ளைக்காரருக்கு அந்தக் கண்காணிக்கு எனக்கும் என் தம்பிக்கு யாருக்கும் அதை உபயோகித்தபோது அதிர்ஷ்டத்தை அள்ளித் தரவில்லையே...
ஏன் இதைக்கூட நான் இத்தனை வருடம் யோசிக்கவே இல்லை. சமீபகாலமாக நன்றாக முற்றிய இந்தக் கருங்காலி மர வைரம் பாய்ந்த நடு கட்டையில் செய்யப்படும் உருண்டைகளை உத்திராட்ச மாலைபோல தயாரித்து கழுத்தில் அணிந்துகொண்டால் அதிர்ஷ்டம் வருமென்று செய்திச் சேனல்களில் அரை மணி நேர விளம்பரங்கள் தொடர்களைப்போல ஒளிபரப்பாகிறது.
இவற்றைக் கண்ட பிறகுதான், அடடே... நம்மகிட்ட கூட ஒரு கருங்காலி மரக்கட்டில், கருங்காலி மரக்கணை போட்ட அதாவது கணை என்றால் கைப்பிடி (மம்பட்டிக்கணை கோடாலிக்கணை) இருந்ததே கருங்காலிகளுக்கு இவ்வளவு மகத்துவமா? "இது தெரியாம ஃபிளைட்டுல நாலஞ்சு தடவ டிக்கெட்டு எடுத்துட்டேனப்பா" என்று வடிவேலு சொல்வதுபோல யோசிக்க ஆரம்பித்தேன்.
உண்மையில் மூலிகை மகத்துவம் வாய்ந்த வாஸ்து நிறைந்த மரம், செடி, கொடிகள் நன்மை தருமெனில் அதிர்ஷ்டத்தை வாரி வழங்குமெனில் அதை அது என்னவென்று அறியாமலே பயன்படுத்தி மலைக்காடுகளில் வாழும் ஆதிவாசிகளும் தோட்டத் தொழிலாளர்களும் மலையடிவாரங்களில் வசிக்கும் மக்களும் ஏன் அடிப்படை வசதிகள்கூட இல்லாமல் நோய் நொடிகளிலும் வறுமையிலும் வாடி வதங்கணும்...?
இந்தக் கட்டுரையை வாசிப்பதன் மூலம், வாசகர்கள் ஆன்மீகப் பொருட்களின் வணிகமயமாக்கலைத் தாண்டி, மரபு மற்றும் நவீன விளம்பரங்களுக்கு இடையேயான உண்மையான வித்தியாசத்தைப் புரிந்து கொள்ள முடியும்.