

கவிதைக் குறியீடுகள் (poetic symbols) குறித்து ஆராய்ந்து முனைவர் பட்டம் பெற்ற கவிக்கோ அப்துல் ரகுமான் அவர்கள் கவிஞர்களின் 'கோ' என அன்போடு அழைக்கப் பட்டவர்.
மரபுக் கவிதைகள் புதுக்கவிதைகள் ஹைக்கூ கவிதைகள்... என எல்லா தளங்களிலும் சொல்லி அடிப்பதில்' கில்லி.'
கவியரங்கங்களில் பேசும்போது உபயோகப்படுத்தும் சிலேடை வார்த்தைகளுக்கு ஒரு பெரும் ரசிகர் கூட்டமே உண்டு.
தமிழின் முதல் சர்ரியலிச கவிதைகளின் தொகுதி என்னும் புதுமையான சிந்தனை.. கவிஞர்களின் கவிஞன் என்ற ஆசனத்தை அப்துல் ரகுமானுக்கு பெற்றுத்தந்தது
கவிதையை நேரடியாக தராமல் உருவகங்கள், படிமங்கள், குறியீடுகள் ஆகியவற்றின் வழி வெளியிட்டு முறையை அமைத்து சோதனை படைப்பாளியாக இனம் காட்டிக் கொண்டவரின் நினைவு தினம் (ஜூன் 2) இன்று.
அவரின் நிறைய கவிதைகள் சொற்பொழிவுகள் கட்டுரைகள் வாழ்க்கையின் நுணுக்கங்களை போகிற போக்கில் கற்றுத் தந்தது.
அவர் எழுதியதில் எனக்குப் பிடித்த கவிதைகளைக் கொண்டு ஒரு நினைவஞ்சலி
இந்த நாட்டில்
நடிப்பவர்கள்தான்
தலைவர்களாகிறார்கள்
அல்லது
தலைவர்களாக
இருப்பவர்கள்
நடிக்கிறார்கள்.
தமிழா
விழித்துக் கொள்
இல்லையென்றால்
வெள்ளி திரைக்கென்று
உன் வேட்டியை
உருவிக் கொண்டு
சென்று விடுவார்கள்..
'கம்பனுக்கும் தோன்றாத கற்பனைகள் ரகுமானுக்கு தோன்றுகின்றன ' என கண்ணதாசன் சொன்னது ... இதைத்தானோ!
ஞானிகள் செய்ய முடியாததை விஞ்ஞானி செய்து விட்டான்.
இதோ
நீயே மழித்துக் கொள்கிறாய்
நீயே துவைத்துக் கொள்கிறாய் கழிப்பறையைக் கூட
நீயே கழுவி விடுகிறாய்..
இனி
யாரைப் பார்த்து
"எட்டிநில்" என்பாய் ?
இல்லை
இன்னும் நான் இந்த ஜாதிதான் என்கிறாயா ?
அப்படியென்றால்
பிரேதமே!
உயிர் உடையவர்கள் மத்தியில் உனக்கென்ன வேலை?
இது 'என்ஜாதி' ' அவன் என் சாதிக்காரன் கிடையாது... இப்படி சாதி வெறிப் பிடித்தவர்களை சம்மட்டிக்கொண்டு அடித்திருப்பார்இந்தக் கவிதையில்!
கண்ணீர்
கண்களின் புன்னகை..
புன்னகை
இதழ்களின் கண்ணீர்
கண்ணீரின் ரகசியத்தை ரகசியமாய் இதைவிட யாராவது சொல்லி விட முடியுமா?!
ஆலாபனைப் பாடல்களின்
இரட்டை
ஆனால் எதிர்ப்பதம்
முரண் தொடை
நாணயத்தின் மறுபக்கம்
அவன்
எதிர்களின் உபாசகன்
நிலவின்
இருண்ட பக்கத்தைப்
பார்ப்பவன்
இருளால்
ஒளிபெறுகிறவன்
பாடகன்
பித்தனால் முழுமை அடைகிறான்... பித்தனைப் பற்றி பிடித்தமாய் சொல்லி இருக்கிறார்.
உனக்கு ஆயிரம் காதலர்கள் கிடைக்கலாம்
ஆனால் என்னை போல்
காதலிப்பவர்கள்
யாரும் கிடைக்க மாட்டார்கள்
நீ காதலிக்காவிட்டால் என்ன
ஒரு பக்கம் பற்றினாலும்
அது நெருப்பு தான்...
இதயம் பறிக்காமல் மனதை கொள்ளைக்கொண்ட கவிதை
இந்த நட்சத்திரங்கள்
யாருடைய
கண்ணீர்த்துளிகள்
இரவினுடையதா
வானத்தினுடையதா...
வித்தியாசமான யோசிப்பு.
கொடுப்பதற்குரியது
பணம் மட்டும் என்று
நினைக்காதே..
உன் வார்த்தையும்
ஒருவனுக்கு தாகம் தணிக்கலாம்
உன் புன்னகையும்
ஒருவன் உள்ளத்தில்
விளக்கேற்றலாம்..
உயர்ந்த சிந்தனை...
(மேன் மக்கள் மேன் மக்களே)
மற்றவர்களுடைய இதயம்தான் உன்னுடைய மிகச்சிறந்த வீடுன்னு போற போக்கில் மனித நேயத்தை கவிதையில் வடித்த விதம் அழகுன்னா... தனது நேயர் விருப்பம் தொகுதியில் 'முதுமை'யைப் பற்றி எழுதியது பேரழகு.
முதுமை
நிமிஷக் கறையான் அரித்த ஏடு
இறந்த காலத்தையே பாடும்
கீறல் விழுந்த இசைத்தட்டு
ஞாபகங்களின் குப்பைக் கூடை வியாதிகளின் மேய்ச்சல் நிலம்
காலத்தின் குறும்பால்
கார்ட்டூன் ஆகிவிட்ட
வர்ண ஓவியம்... இப்படி ஆரம்பித்து.... 'கருப்பை தோய்த்த சாயம்
வெளுக்கிறது
காலச் சலவையில்
இதுதான்
கேசங்களின் அசல் நிறமோ'?
அப்படி என்றால்
முதுமை தான்
மனிதனின் நிஜ வடிவமோ?
இளமை ஒப்பனையோ ?
என்று கேள்வியாய் கேட்டிருப்பார்
நரை-
இந்த நரை
யௌவன வெள்ளம்
வடிந்து போனபின்
நுரையா?
கண்கள்
ஒளி மங்கிய தீபங்கள்
செவிகள்
போரில் கிழிந்த பறைகள்... சுருக்கங்கள்..
இந்தச் சுருக்கங்கள்
உயிர் எழுதி கொண்டிருக்கும்
ராஜினாமா கடித வரிகள்...
என்றெல்லாம் அழகுற
முதுமையை வர்ணித்திருப்பார்.
முதுமையைப்பற்றி
உருவகங்களை...
கவிதை முழுவதும் குழைத்து வண்ணமாய் பூசி இருப்பார்.
இதைப் படித்த பிறகு முதுமையைப் பற்றி யாரருக்காவது அசூசைக் கொள்ளத்தோணும்... நோ நெவர்.
இப்படி அழகழகான புதுமையான எதார்த்தமான சிந்தனையைத் தூண்டும் மொழி நடையில்
புதிய புதிய பரிமாணங்களை
புதிய புதிய தரிசனங்களை
தமிழ்க் கவிதைக்கு தந்த
அப்துல் ரகுமான் அவர்கள் போன பாதையில் மலர் தூவி அஞ்சலி செலுத்துவோம்.