குடந்தை ஜோதிடர் வீட்டைத் தேடி!

நாயகன் வந்தியத் தேவன் முதன் முதலில் நாயகி குந்தவையை குடந்தை சோதிடர் இல்லத்தில் தான் சந்திப்பான்.
Ponniyin Selvan Kudanthai astrologer
Ponniyin Selvan Kudanthai astrologer
Published on
Kalki strip
Kalki strip

சோழர்களின் தஞ்சைக்கு முந்தைய தலை நகரம் பழையாறை.

பழையாறைக்கு 5 கி.மீ வடக்கே அமைந்த ஊர் தான் குடந்தை. குடந்தையின் சிறப்புகள் பல. முக்கியமானது, அது சோழ ராஜ்யத்தின் கஜானா.

கருவூலத்துக்கான பொற்காசுகள் கும்பகோணத்தில் தான் வார்க்கப்பட்டன. நாணயக்கார தெரு என ஒரு நீள் வீதி மேற்கே உள்ளது. அங்கு தான் சோழர்களின் மிண்ட் எனப்படும் காசு அச்சிடும் பட்டறைகள் இயங்கின. சோழ தேசத்தின் மொத்த நிதி மையம் குடந்தை. தங்கம் புழங்கும் இடம் என்றால் பாதுகாப்பு அதிகம் இருக்கும் அல்லவா. இயற்கையாக குடந்தைக்கு தெற்கே அரசலாறும், வடக்கே காவிரியும் அமைந்த ஊர்.

இப்போது போல் அப்போ நதிகளின் மேல் பாலம் இல்லை. ஆகையால் யாரும் குடந்தையை சீக்கிரம் நெருங்கி விட முடியாது. இயற்கையாக அமைந்த நீண்ட அரண். படகு, தோணிகள் மூலமே நகரை அடையமுடியும். வடக்கே இன்னும் 10 கி.மீ தொலைவில் கொள்ளிடம். அதுவும் காவிரி தான். அதைக் கடப்பதற்கும் பரிசல் தேவை.

இன்றும் நாணயக் கார தெருவில் கிணறு தோண்டினால், கட்டிட அஸ்தி வாரம் தோண்டினால், சில இடங்களில் தங்கக் காசுகள் கிடைக்கும்!

பொன்னியின் செல்வன் காலத்தில் சுமார் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் குடந்தை நகர் சோழர் வரலாற்றில் முக்கியப் பங்காற்றியது. நாயகன் வந்தியத் தேவன் முதன் முதலில் நாயகி குந்தவையை குடந்தையில் தான் சோதிடர் இல்லத்தில் சந்திப்பான்.

இதையும் படியுங்கள்:
வந்தியத்தேவனும் அவனும்! யார் அந்த ‘அவன்?’
Ponniyin Selvan Kudanthai astrologer

அவர் தான் இளவரசி குந்தவை, அவருக்கு ஓலை தரத்தான் தஞ்சை செல்கிறோம், அவர் தான் தன் வருங்கால மனைவி என்பதை அறியாதவனாய், வாசல் காவலாளியைத் தள்ளிக்கொண்டு சண்டையிட்டபடி உள்ளே வருவான்.

குந்தவை மற்றும் வானதியைப் பார்த்து விட்டு "உள்ளே பெண்கள் இருப்பதை ஏன் சொல்லவில்லை", என்று காவலனிடம் சொல்லி திரும்புவான் வாசலுக்கு. போகு முன் ஒரு முறை அவர்களைப் பார்த்து விட்டுத்தான் போனான் என்பார் கல்கி.

இதில் சுவாரஸ்யம் என்ன வென்றால் சோதிடரிடம் வானதி அப்போது தான் கேட்டிருப்பாள். "அக்காவுடைய மாப்பிள்ளை எங்கே இருக்கார்? எப்போ வருவார்?" என.

"எப்போதும் வரலாம்.. இந்த நொடி கூட வரலாம்", என அவர் சொல்லும்போது தான் வந்தியத் தேவன் திடீர்ப் பிரவேசம் நிகழும்.

நான் சொல்ல வந்த விஷயம் கதையின் ஒரு பகுதியை அல்ல.

பொன்னியின் செல்வன் காவியத்தை தீர உள் வாங்கி வாசித்ததன் விளைவு நம் ஊரில் எங்கே எந்த இடத்தில் இது நடந்திருக்கும் என என மனம் ஆராயத் தொடங்கியது. அறுபது வருடத்துக்கு மேல் இங்கு வசிக்கிறோமே!

கதையில் குடந்தை சோதிடர் (Ponniyin Selvan Kudanthai astrologer) ஒரு முக்கிய பாத்திரம். அடிக்கடி குந்தவை அவரைச் சந்தித்து நாட்டு நடப்பு மற்றும் ராஜாங்க விஷயங்களை விவாதித்துச் செல்வார். ஏனெனில் சோதிடர், அனிருத்தர் அமைச்சரின் ஆள். ஒற்றர் போல.

இதையும் படியுங்கள்:
'கல்கி'யின் 'பொன்னியின் செல்வன்' நாவலில் எத்தனை சொற்கள் இடம்பெற்றுள்ளன தெரியுமா?
Ponniyin Selvan Kudanthai astrologer

வில்லன் ரவிதாசன் தன் சகாக்களிடம் எச்சரிக்கை விடுப்பான். அந்த சோதிடன் கிட்டே நம் ஆட்கள் போகாதீங்க. வாயைப் பிடுங்கி சேதியைக் கறந்து விடுவான் என்று.

இந்த சோதிடர் வீடு இருக்கும் இடத்தைக் கல்கி அரசலாற்றங்கரை வடக்கே காளி கோவில் அருகில் என்று சொல்வார்.

விவரம் தெரிந்த நாள் முதல் வசிக்கும் நமக்கு, குடந்தையில் அது எங்கே எனத் தெரிந்து கொள்ள முடியாதா என என் மனதில் ஒரு ஆராய்ச்சி தொடங்கியது.

கல்கி குறிப்பிடும் காளி கோவில்... காளியம்மன் கோவில் தெரு தான். அப்படியாகத்தான் இருக்கும்.

1980 வரை, அது பழைய பஸ் ஸ்டாண்டில் இருந்து பஸ்கள் வெளியே வரும் குறுகலான சிறிய தெரு. காளி சன்னதி அமைந்த அந்த சிறிய கோவில் ஒரு சிவன் கோவிலாகும். காமாட்சி அம்மன் கோவில் என்பார்கள்.

அங்கே தான் வடக்கு பிரகாரத்தில் காளி சன்னதி. காளிக்கு தனி சன்னதி. ராகு கால காளி என மக்களால் அழைக்கப்படுபவர். ராகு காலத்தில் காளியை வழிபட்டால் பெண்களுக்கு சீக்கிரம் கல்யாணமாகும் என்பது நம்பிக்கை. நிறைய பெண்கள் படித்து முடித்தவர்கள் பிரகாரம் சுற்றுவார்கள். ஞாயிறு மாலை நாலரை முதல் ஆறு வரை ராகு காலத்தில் விசேஷ பூஜைகள் நடக்கும். கூட்டம் அதிகம் இருக்கும். கல்யாணம் ஆகாத சில வாலிபர்களும் வழிபடுவதுண்டு. இங்கு தான் குடந்தை சோதிடர் எங்கோ வசித்திருக்க வேண்டும் என அலச ஆரம்பித்தேன்.

கோவிலைச் சுற்றி வாழ்ந்தவர்கள் யார் என்றால் இசைக் கலைஞர்கள். நடன நட்டுவனார்கள்.. பொற்கொல்லர்கள், இரும்பு வேலை செய்யும் கருமார், தச்சர்கள் இப்படி.

காளி கோவில் சன்னதி தெரு நாகேஸ்வர சுவாமி தெற்கு வீதி ஆகும். அங்கு அக்காலத்தில் 1965 வாக்கில் காலை மாலை வேளைகளில் வீட்டுக்கு வீடு புல்லாங்குழல், நாதஸ்வரம், தவில் மிருதங்கம், அப்பியாசம் நடக்கும்.

இதையும் படியுங்கள்:
எல்லாப் புகழும் 'கல்கி'கே! - Director Maniratnam "Ponniyin Selvan" Interview Tamil!
Ponniyin Selvan Kudanthai astrologer

அந்த சங்கீத ஒலி போகிறவர்கள் காதில் ஒலிக்கும். இதை இயக்குனர் ஷங்கரும் சொல்லி இருக்கார். அந்த ஏரியாவில் வளர்ந்தார் அவர். இதெல்லாம் ஒரு அறுபது வருஷங்களுக்கு முன்.

மாலையில் நட்டுவனார் பலகையில் குச்சியால் தட்டி தா தை என நடனம் பயில்வது கேட்கும்.

பித்தளை பாத்திரங்கள் உருவாகும் சுத்தியல் அடி சத்தம் கேட்கும். ஸ்ரீரங்கம் ராஜ கோபுர கலசங்கள் அங்கு தான் உருவாகின. ஒரு டிராக்டர் டிரெய்லரில் ஒரு கலசமாக 13 டிரெய்லர்களில் சென்றது. அங்கு தான் ஒரு வீட்டில் பல வருடங்கள் வசித்தோம்.

நாகேஸ்வரன் கோவிலைச் சுற்றி மற்றும் சன்னதி தெரு கலை உலகம் தான். சன்னதி தெரு முதல் வீடு நடிகர் சாரங்கபாணி இல்லம். சற்று தூரத்தில் வடக்கு வீதியில் பிடில் ராஜமாணிக்கம் பிள்ளை ஜாகை. அப்படியே நேராகப் போய் வலது புறம் சாரங்கபாணி கோவில். அதன் சன்னதி தெருவில் இரு இடங்கள் முக்கியமானவை.

ஒன்று கணித மேதை இராமானுஜன் வீடு. பள்ளி, கல்லூரி நாட்கள் வரை வாழ்ந்து படித்த வீடு. அதைப் பழமை மாறாமல் சாஸ்த்ரா பல்கலைக்கழக நிர்வாகம் பராமரிக்கிறது ம்யூசியம் போல்.

அதற்கு கிழக்கே அதே சரகில் பத்து வீடுகள் தள்ளி ஒரு முனிசிபல் தொடக்கப்பள்ளி. அங்கே தான் எம்.ஜி.ஆர் மூன்றாம் வகுப்பு வரை படித்தார். ஜாகையும் அருகில் தான். ஒண்டு குடித்தனம். அம்மா, அக்கா, அண்ணனுடன்.

இதையும் படியுங்கள்:
கல்கியின் மூன்று நாவல்கள்... அவை உணர்த்தும் உண்மைகள்!
Ponniyin Selvan Kudanthai astrologer

நான் சொல்லும் மொத்த ஏரியாவும் ஒரு கோவிலின் மொத்த பரப்பு தான்.

ஆயிரம் வருஷம் முன் வாழ்ந்த குடந்தை சோதிடர் இங்கே எந்த இடத்தில் இருந்திருப்பார்.

இப்போது இந்தப் பகுதி முழுதும் வியாபார ஸ்தலமாகிவிட்டது. பெரிய ஜவுளிக் கடைகள், நகைக் கடைகள், ஆஸ்பத்திரி கிளினிக், டிவி ஷோ ரூம்கள் இப்படியாக.

உண்மையில் குடந்தை சோதிடர் ஒரு கற்பனைப் பாத்திரமே... ஆனாலும் மனம் நம்ப மறுத்து அவர் இருந்தார் வாழ்ந்தார் என ஏன் சொல்கிறது..? எழுத்தின் வலிமை.

பொன்னியின் செல்வன் சினிமாவில் இயக்குனர் மொத்தமாக குடந்தை சோதிடரை விட்டு விட்டார். ஒரு வேளை சோதிட நம்பிக்கை இல்லாதவரோ...!

"ஆனானப்பட்ட குடந்தை ஜோதிடரே இப்போ வந்தால் கூட. அவர் வாழ்ந்த வீட்டைக் கண்டு பிடிக்க முடியாது", என்றார் நண்பர்.

"இல்லை எத்தனை ஆயிரம் வருஷம் ஆனாலும் காளி கோவில் இருக்கும். மாறாது. அருகில் தானே அவர் வீடு.,"என்றேன் நான்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com