

எங்கள் ஊரின் சிறப்புகளை நான் பின்னோட்டமாக சொல்கிறேன். முதலில் எங்கள் ஊரின் உடைய கோணங்கித்தனத்தை உங்களுக்கு பகிர்வதில் எனக்கு சந்தோஷமே!
எங்கள் ஊரில் எல்லாம் அழகு. அழகுக்கு அழகு சேர்க்கும் திண்ணைகள். அதில் பேசி தீர்க்கும் பெருசுகள். அந்தக் காலம் போய்விட்டது என்று தானே நினைக்கிறீர்கள்? இல்லை; இல்லவே இல்லை! அதன் சுவடுகள்தான் எங்கள் வாழ்விற்கு சுவாரஸ்யம் கூட்டுகிறது. எங்களுக்கு காரணிகளும், விழுமியங்களும் , தேவையில்லை. காரணங்களை நாங்களே உருவாக்குவோம். விவாதம் செய்வோம். விட்டு விலகியும் விடுவோம். பாதகம் எங்களுக்கு இல்லை. இது சிரிக்க சிந்திக்க மட்டும். 'கதி கலங்கி விடாதீர்கள் அதற்கு நான் பொறுப்பல்ல'.
கதை இங்கே தொடங்குகிறது...
"80 லட்சத்துக்கு எல்லாம் அது போகாது" இப்படியாக குரல் கேட்டு திரும்பினேன். மாலையில் எங்கள் தெருவில் உள்ள சிவகுருநாதன் செந்தமிழ் நூலகத்திற்கு சென்று வருவது என்னுடைய அன்றாட வழக்கம். அப்போது என்னுடைய மாமா மற்றும் ஒன்றுவிட்ட சகோதரர் உடன் இருந்தனர். குரல் வந்த திசையை நோக்கி எல்லோரும் திரும்பினோம்.
எதிரே எங்கள் அண்ணன்- (என்னுடைய பெரியப்பா மகன்) எப்பொழுதுமே சாரம், சங்கீதத்துடன் தான் தன் பேச்சை தொடங்குவார். இந்த உபமானம் (ஒப்புகை) என்னைப் பற்றியது என்பதை நான் சற்று நேரத்தில் புரிந்து கொண்டேன்.
"நம்ம பையன் கிட்ட (என்னிடம்) இந்த வீடு பற்றி விசாரிக்க சொன்னேன்? அதற்காக காலை 5:00 மணிக்கு எனக்கு அலைபேசியில் வந்து என் தூக்கத்தை கெடுத்து விட்டான்" என்று ஆரம்பித்தார்.
'அவருக்கென்ன தூங்கிவிட்டார்! அகப்பட்டவன் நான் அல்லவோ'- என்று நினைத்துக் கொண்டு, என் அண்ணனை சீண்டினேன். இதை நான் உடனே சரி செய்யவில்லை என்றால் என்னுடைய பாட்டு திண்ணாட்டம் என்பதால்!? ... "அண்ணே நான் பேசியது 6.30. இப்போதுதான் காலையிலே வெயில் வந்து விடுகிறதே?" என்று எதிர் விவாதம் செய்தேன்.
அதை புறம் தள்ளிவிட்டு என்னுடன் பேசுவது போல என் மாமாவிடம் ஒரு செய்தி சொன்னார்.... "அத்தான் கேட்டாரு 72 லட்சத்துக்கு. அதற்கு ஒத்துவரவில்லை. அங்க car parking வேற இல்ல....." என்று இழுத்தார். ஏது இங்கே தொடர்ந்து இருந்தால் இடைஞ்சல் என்று மாமா மெதுவாக சாக்குப் போக்கு சொல்லி கிளம்பி விட்டார். உடன் இருந்த என் சகோதரனும் அவசர வேலை என்று சொல்லி நழுவி விட்டான்.
மாட்டிக்கொண்ட நான் என் அண்ணனிடம் சொன்னேன். "எதுவா இருந்தாலும் பரவாயில்லை அண்ணா! பாத்துக்கலாம்! அவன் என்ன 80 லட்சம் சொல்றான். வீடு 2001ல கட்டினது. நீங்க 72 லட்சம் சொல்றீங்க.
கிடைச்சா 8 லட்சம் லாபம்ன்னு தானே எல்லாரும் பாப்பாங்க. இங்க எல்லாம் square feet 2800 ரூபாய்க்கு போகிறது. கிட்டத்தட்ட ஒரு கிரவுண்ட் இருக்கு. அதுல பாதி வீடு கட்டி இருக்கான். மேல்மாடி வேற உண்டு. என்ன செய்யறது அவன் பாடு. பேசிப் பார்க்கலாம்," என்றேன்.
நாய்க்கு அழகு அதனுடைய அடங்காத வால். எங்கள் ஊருக்கு அழகு அரட்டைகளும்! அரட்டைகளுக்கு அடங்காத வாக்குவாதங்களும்! ஆனால் நாங்கள் சண்டைகளை சச்சரவுகளாக மாற்ற மாட்டோம். அதற்காக சமரசமும் செய்து கொள்ள மாட்டோம். மேலும் மேலும் புதிய புதிய சமாச்சாரங்கள் வரும்போது பழையன தானாகவே கலைந்து விடும். ஒன்றுமே ஆகாதது போல் ஒட்டி உறவாடிக் கொண்டிருப்பது தான் எங்கள் ஊரின் உடைய மகிமை! இந்த சுவாரஸ்யம் இல்லை என்றால் எங்கள் வாழ்க்கை அலுத்து போய்விடும். இப்போது குடந்தை உடைய உண்மையான அழகை குழந்தைத் தனமாக பார்ப்போம்.
எங்கள் ஊரைப் பற்றி உலகமே அறியும்! ஆம்! கோயில்கள் நிறைந்த கோவில் நகரம். இந்தியாவிலேயே இரண்டாவதாக மனிதர்கள் அதிகமாக கூடும் "மகாமகம்" எங்கள் ஊருக்கு ஒரு அதிசயம்!
எங்கள் ஊர் ராமசாமி கோயிலில் உள்ள பிரகாரங்களில் உலகப் புகழ்பெற்ற ஓவியங்களை காணலாம்! இது ரவிவர்மாவின் ஓவியங்களுக்கு இணையானது. "நாக தோஷம்" கலைய நாகேஸ்வரர் எப்பொழுதுமே அருள் பாளித்துக் கொண்டு இருப்பார். "ராகு தோஷம்" நீங்க வேண்டுமானால் நாகேஸ்வரர் கோவிலுக்கு வாருங்கள்!
காசிக்கு செல்ல முடியவில்லை! வயதாகிவிட்டது என்று கவலைப்படுகிறீர்களா? உங்கள் கவலைக்கு எங்கள் ஊரில் காசி விஸ்வநாதர் இருக்கிறார்.
இப்படியாக ஆயிரம் ஆண்டுகள் பழமையான ஆதி கும்பேஸ்வரர் அவருடன் உடன் உறைந்த மங்களாம்பிகையும் குடந்தையின் பக்தி, கலாச்சார, பண்பாடுகளை காத்துக் கொண்டிருக்கக் கூடிய அவதார புருஷர்கள். அவர்களை காண, கண்டு அருள் பெற, பல ஆயிரம் பக்தர்கள் தினமும் வருகை தந்து கொண்டிருக்கிறார்கள். சைவ வைணவ கோயில்கள் ஏராளம்! ஏராளம்!!
முடிக்க வேண்டும் என்பதற்காக கடைசியாக ஒன்று சொல்கிறேன். கவனமாக கேளுங்கள்!? தாராசுரம் அருகே உள்ள "ஐராதீஸ்வரர் கோயில்" இந்திய தொல்பொருள் ஆராய்ச்சி கழகத்தால் பாதுகாக்கப்பட்டு வருகிறது. இது ஒரு கல் சிற்பங்களின் கலைக்களஞ்சியம். இந்த கோயிலில் உள்ள மணி மண்டபத்தின் உடைய கற்களின் நிறத்தை வைத்து, காலத்தை அளந்து கொள்ளலாம்.
அது எந்த அரசர்களுடைய காலம் என்பதை துல்லிதமாக கணிக்க முடியும்! அந்த அளவிற்கு அங்கே கலாச்சார பதிவுகள் கல்வெட்டுகளாக காணப்படுகின்றன. சோழர்கால தொடங்கி, களப்பிரர் காலம், மராத்தியர் காலம், விஜயநகர காலம் என பல படிமங்கள் இங்கே உள்ளன. "மகாபாரதப் போர்" - விளக்கும் தூண்கள் நம் கலாச்சாரக் கண்ணாடிகள்!!! இவற்றையெல்லாம் பார்த்தால் நாம் உண்மையிலேயே காலங்களின் கரைகளில் கரைந்து விடுவோம்.