

நண்பர்கள் குப்புசாமி, நாகமுத்து, கர்னல் கந்தசாமி பார்க்கில் பெஞ்சில் அமர்ந்து பேசிக் கொண்டிருந்த போது, நாகமுத்து சொன்னார், ”வள்ளுவர் இந்த உலக வாழ்வில் நிலையாமை பற்றிச் சொல்லும் போது நெருநல் உளன் ஒருவன் இன்றில்லை எனும் பெருமை உடைத்திவ் வுலகு” என்று சொன்னார்..
நேத்து இருந்த ஆள் இன்றில்லை என்பது அந்தக்காலம்.. டெக்னாலஜி டெவெலப் ஆகிட்ட இந்தக்காலத்தில் போன மணி நேரம் இருந்தவன் இப்போ இல்லை என்பது தான் நிஜம். அதுக்கு உதாரணம் இரு விமான விபத்துக்கள்.. ஒன்று மலேஷிய எம். ஹெச் 370 மாயமானது.. இன்னொன்னு அகமதாபாத் விமான விபத்து..
எம். ஹெச் 370 மாயமான மலேசிய விமானம்:
இந்த உலகத்தில் விடுபடாத புதிர்கள் நிறைய இருக்கு அதில் ஒண்ணு மலேஷிய விமானம் எம். ஹெச் 370 மாயமாய்ப் போனது தான்..
08. 03. 2014 ல் கோலாலம்பூரில் இருந்து சீனா பெய்ஜிங்குக்குப் போவது தான் பயணத் திட்டம். ஆனால் பெய்ஜிங் போகலே… வழியில் 227 பயணிகள் + 12 ஸ்டாஃப் மறைந்து விட்டனர்."
நாகமுத்து ஒரு ரிடையர்டு ஆர்க்கியாலஜிஸ்ட். குப்புசாமி – ஓய்வு பெற்ற ஆசிரியர் – “சார் என்ன ஆச்சு எப்படி தான் மாயமாச்சு..?”
நாகமுத்து – “விமானம் புறப்பட்ட டயம் நள்ளிரவு அதாவது அதி காலைன்னு வச்சுக்குங்களேன்.. 12.41-க்கு கிளம்பிச்சு.. 40 நிமிடங்கள் கழித்து செய்தி பரிமாற்றம் இல்லை.. கடைசி செய்தி கேப்டன் சொன்னது குட் நைட்.. டயம் 1.19 காலை. பிறகு டிரான்ஸ்பாண்டர் அணைக்கப்பட்டது.”
குப்புசாமி – “அப்போ சதியா அது..? பிறகு என்ன ஆச்சு?”
நாகமுத்து – “மிலிட்டரி ரேடார் பதிவுகளின் படி அந்த விமானம் பெய்ஜிங் நோக்கி வடக்கே போகாமல், ரிவர்ஸ் மலேஷியா பக்கம் திரும்பி பின் மேற்கே இந்து மகா சமுத்திர கடல் பரப்பில் பறக்க ஆரம்பிச்சுது…”
கர்னல் கந்தசாமி – “விண்வெளியில் சாட்டிலைட் சிக்னல் வச்சு பார்க்கலாமே எங்கே போனதுன்னு…” கர்னல் கந்தசாமி ஓய்வு பெற்ற பிரெஞ்ச் ஆர்மிக்காரர்.
நாகமுத்து – “பார்த்தாங்க…. தெற்கு இந்து மகா சமுத்திரத்தில் அது பல மணி நேரம் பறந்திருக்கு.”
குப்புசாமி – “விபத்து நடந்து கடலில் விழுந்திருந்தால் ஏதேனும் உடைந்த பாகங்கள் கிடைச்சிருக்கணுமே..!”
நாகமுத்து – “சில இறக்கைகளின் துண்டுகள் ரீ யூனியன் மற்றும் ஆப்பிரிக்க கடற்கரை பகுதிகளில் கிடைச்சது. அந்த துண்டுகளின் சீரியல் நம்பர், பெயிண்ட் கலர் வச்சு அது அந்த விமானத்தின் பார்ட் தான் கண்டு பிடிச்சாங்க.. முழுசும் எங்கேன்னு பணத்தைக் கொட்டி செலவு செஞ்சும் கண்டுபிடிக்க முடியலே..!”
குப்புசாமி – “என்ன தான் நடந்துச்சு.. விபத்தா சதியா ?”
நாகமுத்து - “ஓரளவு இப்படித்தான் ஆகி இருக்கும்ன்னு கண்டு பிடிச்ச விஷயங்கள்.. பைலட்டோ இன்னொரு ஆளோ வேண்டுமென்றே தொலை தொடர்புக்கான கருவிகளை ஸ்விட்ச் ஆஃப் செய்திருக்கணும்.. வேண்டுமென்றே திசை மாற்றி பறந்திருக்கணும்.. பைலட் ரூமில் காற்று ஆக்ஸிஜன் இல்லாமல் போய் அவர்கள் மயங்கி இருக்கலாம்.. தொடர்ந்து பயணிகள் இருக்கும் ஏரியாவில் ஆக்ஸிஜன் காற்றில்லாமல் எல்லோரும் மயங்கி இருக்கணும்….
அது நவீன விமானம் ஆகையால் ஆட்டோ பைலட் இயக்கத்தில் பெட்ரோல் தீரும் வரை பறந்து பின் கடலில் விழுந்திருக்கலாம்.”
குப்புசாமி – “பைலட் மீது சந்தேகம் வரலியா..?”
நாகமுத்து – “பைலட் கேப்டன் ஸகாரி அகமது ஷா பற்றி ஆய்வு செய்தார்கள்.. அவர் வேண்டுமென்றே செய்திருக்க வாய்ப்பில்லை என ஒரு கருத்து சொல்கிறது.”
கர்னல் – “ஏதேனும் தீ விபத்தால் கருவிகள் செயல் இழந்திருக்கலாம் இல்லையா..?”
நாகமுத்து – “அப்படியும் ஒரு கருத்து இருக்கு. அதனால் தான் உள் அழுத்தமின்மை ஏற்பட்டு சுவாசிக்க ஆக்ஸிஜன் இன்றி பைலட் குழு உட்பட அனைவரும் இறந்திருக்கலாம் என சொல்கிறார்கள்”.
குப்புசாமி – “காக் பிட் விமானி அறையில் தீ ஏற்பட்டு அதை அணைக்கும் முயற்சியில் தகவல் தொடர்பு சாதனங்கள் அணைக்கப்பட்டு இருக்கலாமே..!”
நாகமுத்து – “உண்மை.. நடந்திருக்க வாய்ப்பு இருக்கு. தீ விபத்துக்குக் காரணம் கார்கோ எனப்படும் சரக்கு இருப்பிடத்தில் கொண்டுசென்ற லித்தியம் அயான் பேட்டரிகள் வெடித்திருக்கலாம்.”
கர்னல் - “சார் இந்த கேஸில் ஒரு திடுக்கிடும் திருப்பம் நான் படிச்சேன்..!”
குப்புசாமி – “என்ன அது..?”
கர்னல் – “பிரயாணிகளில் இருவரது பாஸ்போர்ட் திருட்டுப் போன பாஸ்போர்ட். அவர்கள் விமானத்தைக் கடத்தி தொலை தொடர்பை துண்டித்து இருக்கலாம் என ஒரு சிலர் சொல்கிறார்கள்.”
நாகமுத்து – “அருகில் இருந்த நாடுகள் இந்த விமானத்தை ஒரு வேவு விமானம் என கருதி இருக்கலாம்.. ஏனெனில் இந்த விமானத்துக்கு ஒரு செய்தி அனுப்பி யார் என்ன என்ற விபரத்துக்கு பதில் வராமல் இது பயணிகள் விமான போர்வையில் பறக்கும் உளவு விமானம் என முடிவெடுத்து சுட்டு வீழ்த்தி இருக்கலாம். ஆனால் அருகில் இருந்த வியட்னாம் நாடு இதை மறுத்து விட்டது.”
குப்புசாமி – “எனக்கென்னமோ கேப்டன் ஸகாரி அகமது பங்கு இதில் இருக்கலாம்ன்னு தோணுது”நாகமுத்து – “அந்தக் கோணத்திலும் போலீஸ் விசாரிச்சாங்க. கேப்டன் வீட்டில் ஒரு ஸிமுலேட்டர் எனப்படும் ஃப்ளைட் வீடியோ கேம் மாதிரி ஒரு கருவி இருந்தது. அதில் அவர் ஒரு ஒத்திகை பார்த்த விவரம் கிடைத்தாலும் சிலவற்றை அழித்து இருந்தார். ஆனால் பைலட்டுகள் இந்த கருவியில் செயல்படுவது சாதாரண பயிற்சி மாதிரிதான் எனச் சொல்லிவிட்டனர்.
அவர் தற்கொலை முயற்சியாக செய்து இருக்கலாமோ என்ற கோணத்திலும் ஆராய்ந்தார்கள்.. அப்படி ஒரு நிகழ்வைச் செய்ய எந்த முகாந்திரமும் அவர் பக்கம் இல்லை.”
கர்னல் – “அப்படியானால் அவர் நிரபராதி.. ஒன்றும் தெரியாதவரா”
நாகமுத்து – “அப்படியும் சொல்வதற்கில்லை.. விமானம் அப்படி இப்படி என அலைக்கழித்து பறந்த விதம், தொடர்பு ரேடாருக்கு அகப்படாமல் கொஞ்ச நேரம் பறந்த விதம், இதெல்லாம் ஒரு கை தேர்ந்த விமானி இல்லாமல் விமானம் அப்படி பறக்காது என்றும் சொல்கிறார்கள் ஆய்வாளர்கள்.”
கர்னல் – “அந்த திருட்டு பாஸ்போர்ட் வச்சிருந்தவங்க யார்?”
நாகமுத்து - “அவர்கள் தீவிர வாதிகள் அல்ல.. அயல்தேசத்தில் குடியேறி தஞ்சம் கோரி செல்ல அவர்கள் எடுத்த முயற்சி என கண்டுபிடிக்கப்பட்டது.”
குப்புசாமி – “காக்பிட் கேப்டன் விமானி அறையில் தீ விபத்து ஏற்பட்டு விமானிகள் குழு அனைவரும் மயங்கி இருக்கலாம் இல்லையா..?”
நாகமுத்து – “இருக்கலாம் என ஒரு சாரார் சொல்கிறார்கள். ஆனால் திசை திரும்பி பறந்ததே அந்த விமானம்.. அது தற்செயலாய் நடந்திருக்க வாய்ப்பே இல்லை.. திட்டமிட்டு திசை மாற்றி பறக்க விடப்பட்டது என்பதில் சந்தேகமில்லை. அதை உறுதிப்படுத்தி விட்டார்கள்.”
குப்புசாமி – “சிலர் கிளப்பி விட்ட செய்தி என்ன தெரியுமா.. அது டீகோகார்ஷியா அமெரிக்க ராணுவ தளத்தில் பத்திரமாக இறங்கி விட்டது… அல்லது கஜகஸ்தானில் ஒரு ஏர் போர்ட்.. அல்லது வேறு ஒரு அடையாளம் தெரியா நாட்டில்.”
நாகமுத்து – “2015 ல் கிடைத்த உடைந்த துண்டுகளில் அந்த காணாமல் போன விமானத்தினுடையது தான் என உறுதி செய்யப்பட்டதால் அது கடலில் விழுந்திருக்கலாம் என்பதே பெரும்பாலோரின் தீர்க்கமான முடிவு”
குப்புசாமி – “பயணிகளில் எவரும் முக்கியஸ்தர்கள் இருந்தார்களா”
நாகமுத்து – “20 கம்ப்யூட்டர் விஞ்ஞானிகள் அதில் பயணித்தனர். அவர்கள் ராணுவ சம்பந்தப்பட்ட சிப் பற்றி ஆய்வு செய்பவர்கள்.. அவர்களை ஒழிக்க இது நடந்திருக்கலாம்.. ஆனால் அவர்களுக்கு விரோதி போல் யாரும் இருக்க வாய்ப்பு இல்லை என அறிந்தனர்.”
கர்னல் - “பாம் வெடிக்கலே.. எரிந்து விழவில்லை. .ஹூம் என்ன தான் ஆச்சோ?”
நாகமுத்து – “ஒரு கப்பல் பயணி லேடி கேத்தரின் டீ என்பவர் கொச்சினில் இருந்து தாய்லாந்து கடற்பயணம் செய்தார். அப்போது ஆரஞ்சு கலரில் எரிந்து புகை வர ஒரு விமானம் போல வானில் தெரிந்ததாகச் சொன்னார்.
ஆனால் அது காணாமல் போன எம். ஹெச் 370 விமானம் தானா என்பது உறுதி செய்யப்படலே. அந்தப் பெண்மணி சாட்சியத்தை ஆஸ்திரேலிய ஆய்வாளர்கள் பதிவு செய்தனர். ஏனெனில் அவர் சொன்ன நேரம் காலம் ஒத்துப் போனது. கிடைத்த தரவுகளை ஏ. ஐ மூலம் ஆய்வு செஞ்சதில் அது துல்லியமாக ஆராய்ந்து இது மனித தவறு தான் எனச் சொல்லி விட்டது”
குப்பு சாமி – “12 வருஷம் ஒரு மாமாங்கமாச்சு.. ஒண்ணும் பிடிபடலே.. பயணிகளில் கோலேக்கர் குடும்ப உறுப்பினர்கள் மூவர், சந்திரிகா சர்மா என்ற சமூக சேவகி, முகேஷ் ஆக மொத்தம் 5 பேர் இந்தியர்கள் அதில் பயணித்தனர்.. என்ன ஆனார்களோ..
இந்த மாதிரி கூட்டமான மரணத்துக்கு யாரோ ஒருவர் ஜாதகத்தில் லக்னாதிபதி 8 ஆம் வீட்டிலோ, அல்லது 8 ஆம் அதிபதி லக்னத்திலோ இருந்து ராகு, கேது, செவ்வாய் தொடர்பு இருந்தால் கூட்டமான மரணம் என ஜோதிடம் சொல்கிறது.
நல்லார் ஒருவர் உளரேல் அவர் பொருட்டு எல்லார்க்கும் பெய்யும் மழை போல மோசமான ஜாதக நிலை இருக்கும் ஒரு ஆளால் பலர் போய்ச் சேர்வதும் நடக்கும் போல் இருக்கு.
இந்த விபத்தில் சிக்குமுன் அவர்கள் என்னவெல்லாம் திட்டம் வச்சிருந்தார்களோ.. வாழ்க்கையில் விமானப் பயணம் செய்யும் அளவுக்கு முன்னேற அவர்கள் எத்தனை பாடுகள், எத்தனை படிகளைக் கடந்து முன்னேறியவர்கள்..
நொடியில் முடிச்சிட்டார் கடவுள்.. ஊழிற் பெருவலி யாவுள மற்றொன்று சூழினும் தான் முந்துறும் ன்னு வள்ளுவர் விதியின் வலிமையைச் சொல்றார்.. 239 பேருக்குமா ஒரே விதி விதிச்சார் கடவுள்..!
அகமதாபாத் விமான விபத்து:
அடுத்து 12. 06. 2025 மதியம் 1. 39 க்கு லண்டனுக்குப் போன அகமதாபாத் பிளேன் கீழே விழுந்ததும் ஒரே மர்மமா இருக்கு. 32 வினாடிகள் தான் அது வானில் பறந்திருக்கு.. சீட் நம்பர் 11 ஏ வில் இருந்த விஷ்வாஸ் குமார் ரமேஷ் என்பவர் மட்டும் குதித்து தப்பித்து செல்போன் கையில் இருக்க வெளியே வந்தார்.. 230 பயணிகள், +12 ஊழியர்கள் மொத்தம் 242 பேரில் அவர் மட்டும் மிஞ்சினார்..
அவரோட ஜாதகத்தில் குரு லக்கினத்தைப் பார்த்திருப்பார் போலிருக்கு.. மிருத்யுஞ்சய பலன்.. செத்துப் பிழைக்கும் மறுபிறவி ஜாதகம்.. அதனால் தான் தப்பி இருக்கார்..
இரு எஞ்சின்களுக்கும் பெட்ரோல் போகும் பாதை ஸ்விட்ச்கள் லாக்கிங் சிஸ்டம் இருந்தும் மூடப்பட்டிருக்கு.. கேப்டன் சக பைலட்டிடம், 'யார் ஃப்யூயல் ஸ்விட்சை ஆஃப் செய்ததுன்னு' கேட்கிறார்.
'நான் இல்லை' என பதில் சொல்றார் சக பைலட்.. இது தான் கறுப்புப் பெட்டியில் குரல் பதிவா கிடைச்சுது.. விசாரணை கமிஷன் அறிக்கை வரப் போவுது..”
நாகமுத்து – “ஒரு வேளை இரவு ஹால்ட் பண்ணும் போது எரிபொருள் ஸ்விட்ச்சை மூடி வச்சு புறப்படும் சமயம் திறக்க மறந்து விட்டார்களா…
நாம டூ வீலரை இரவு நிப்பாட்டும் போது பெட்ரோல் வால்வை குளோஸ் பண்ணி வைப்போமே..
திறக்காமல் விட்டு கொஞ்சம் பாதையில் இருந்த பெட்ரோல் மூலம் பறந்து விழுந்திருக்கலாமே… நாம டூ வீலரை மறு நாள் திறக்க மறந்து வண்டி கொஞ்ச தூரம் ஓடி எஞ்சின் ஆஃப் ஆகிற மாதிரி.. ஏன் கர்னல்.. உங்க மிலிட்டரி சர்வீஸில் இந்த மாதிரி விமான மாயங்கள் பற்றி தெரிஞ்சிருக்குமே..”
கர்னல் – “சொல்றேன்.. ஆப்பிரிக்காவில் ஒரு சாமியார் தேங்காய்த் துண்டு ஜோஸ்யம் சொல்லித் தந்திருக்கார்.. அதன் படி சாமியார் தந்த தாயத்து தேங்காய்த் துண்டில் சுற்றி, அதன் முன் கண் மூடி தியானம் செய்யணும்.. அப்போ சினிமா மாதிரி காட்சிகள் தெரியும்.. இது ஒரு வித யோகம்.. ஞான திருஷ்டி.. இன்னிக்கு ராத்திரி தியானம் முடிச்சு என்ன பார்த்தேன்னு சொல்றேன்.. நாளைக்கி சந்திப்போம் இல்லியா அப்போ என் மனக் கண்ணில் என்ன காட்சி தோணுச்சின்னு சொல்றேன்.”
மறு நாள் கர்னல் அமைதியாக இருந்தார்.
குப்புசாமி கேட்டார் – “என்ன கர்னல் எதுவும் மானசீகக் காட்சி படலியா..?”
கர்னல் மூச்சை இழுத்து ஒரு நீண்ட பெருமூச்சுடன் சொன்னார்.
“மாயமானது பிளேன் மட்டுமில்லை.. மந்திரிச்ச தாயத்தும் தான்.. தேங்காய்த் துண்டோடு காணவில்லை.. என்ன சோதனை பாருங்க.. மாயமான ஃபிளைட்டைத் தேட செய்த முயற்சியில் மந்திரிச்ச தாயத்து மாயமாயிட்டு”
உண்மையில் தேங்காய்த் துண்டு மேல் சுற்றிய தாயத்து கயிறோடு மாயம் ஆனது. .கர்னல் கந்தசாமி கண் மூடி தியானித்த போது, ஓசையின்றி ஒரு எலி அதைக் கவ்விச் சென்றதே காரணம் ஆகும்.