

தமிழின் பெருமைக்குரிய நூலான திருக்குறள் சொல்லும் விஷயங்களை அந்தக் காலத்து பரிமேலழகர் தொடங்கிப் பலரும் பலவிதங்களில் விளக்கிச் சொல்லி இருக்கிறார்கள். ஆனால், திருக்குறளில் வள்ளுவர் சொல்லி இருக்கும் மேலாண்மை தத்துவங்களை மட்டும் அகழ்ந்தெடுத்து விளக்கிச் சொல்லி இருக்கிறார் தேவக்கோட்டைக்காரரான சோம வீரப்பன். ஈரடி குறளில் உள்ள நிர்வாக மேலாண்மை குறித்த சாரத்தை எளிமையான நடையில் சாறு பிழிந்துக் கொடுத்திருக்கிறார் “குறள் இனிது” என்ற தன் புத்தகத்தில்.
இவர் பஞ்சப் நேஷனல் வங்கியில் பொது மேலாளராகப் பணியாற்றியவர். இவரது 37 ஆண்டு கால வங்கிப் பணியில் ஐந்து ஆண்டு காலம் வங்கிப் பயிற்சிக் கல்லூரியில் மேலாண்மை பயிற்றுவித்தவர்.
மனிதர்களின் தலைமைப் பண்பையும், ஆளுமையையும் வளர்க்க குறள் காட்டும் வழிகளைத் திரட்டி, இந்து தமிழ்திசையின் இணைப்பிதழில் 125 வாரங்கள் எழுதிய கட்டுரைகளின் தொகுப்புதான் “குறள் இனிது” என்ற புத்தகம்.
“திருக்குறளில் மேலாண்மைக் கருத்துகள் ஏராளமாக உள்ளன. திருக்குறளின் பொருட்பாலில் வள்ளுவர் அரசனுக்குச் சொல்லும் அறிவுரைகள், தற்கால உலகில் நிறுவனத் தலைவர்களுக்கு மிக அழகாகப் பொருந்துகின்றன. அமைச்சர்களுக்குச் சொல்பவையோ, இக்கால அதிகாரிகளுக்கும் பணியாளர்களுக்குமே கூறியது போல அமைந்து உள்ளன!
இதேபோல், இடம் அறிதல், காலம் அறிதல், தெரிந்து தெளிதல் என மற்ற அதிகாரங்களையும் சொல்லிக்கொண்டே போகலாம்! இந்த அதிகாரங்களில் குறட்பாக்களைப் படிக்கும்பொழுது உலகின் மூத்த மேலாண்மைப் பேராசிரியர் நம் வள்ளுவரே எனத் தோன்றுகிறது” என்று கூறும் சோம. வீரப்பன் அடுத்து ஒரு உதாரணம் சொல்கிறார்.
“இதனை இதனால் இவன்முடிக்கும் என்றாய்ந்து அதனை அவன்கண் விடல்” என்று ஒரு திருக்குறள். ஆங்கிலத்தில் “டெலிகேஷன்” என்று சொல்லப்படும் பணி ஒப்படைப்பை இதைவிட அழகாகவும், சுருக்கமாகவும் யாராலும் சொல்ல முடியுமா?
“வினைவலியுந் தன்வலியும் மாற்றான் வலியும் துணைவலியுந் தூக்கிச் செயல்” என்பது இன்னொரு குறள்.
முடிவெடுத்தல் என்பதுதான் மேலாண்மையின் சாரம் என்பார்கள். அதற்கான அடிப்படை அணுகுமுறையை இந்தக் குறளின் மூலமாக வள்ளுவர் வரையறுக்கிறார்!
மன்னரைச் சேர்ந்தொழுகல் எனும் அதிகாரத்தில் அரசனிடம் அமைச்சர் முதலானோர் எப்படி நடந்துகொள்ள வேண்டுமெனச் சொல்கிறார் வள்ளுவர். அமைச்சர் அரசனிடம், நெருப்பில் குளிர் காய்வதுபோல அதிகம் நெருங்காமலும், அதிகம் விலகிச்சென்று விடாமலும் இருக்கவேண்டுமாம்.
உயரதிகாரிகளிடம் பழகுவது என்பதும் அரசரிடம் நடந்து கொள்வதைப் போலத்தானே? அதிகம் நெருங்கவும் கூடாது, விலகவும் கூடாதில்லையா? நெருப்பு, அருகில் போனால் சுட்டுவிடும். விலகிப் போனாலோ, வெப்பத்தின் பலன் கிடைக்காது! அதேபோல், அதிகாரியிடம் அதிகம் நெருக்கம் வைத்துக்கொள்வது ஆபத்தானது. அதே சமயம் ரொம்பவும் தள்ளிப்போய் விட்டாலும் நம்மை அவர் மறந்து விடுவார்! சரியான தூரத்தில் இருந்தால்தானே பலன் கிடைக்கும்? சிங்கத்துடன் நடப்பது என்பது கஷ்டம்தான். ஆனால், தேவையானால் அதையும் பழகிக் கொள்ளத்தானே வேண்டும்?” என்று கேட்கிறார்.“
இவ்வாஅறாக, ஆழமான, அழுத்தமான மேலாண்மைத் தத்துவங்களையும் மிக எளிமையாக எடுத்துச்சொல்லி, புரியவைக்கிறார் சோம. வீரப்பன்.
இந்தப் புத்தகத்துக்கு இன்னும் ஒரு சிறப்பு உண்டு. தமிழில் சோம.வீரப்பன் எழுதி இருக்கும் “குறள் இனிது” நூல் இந்தி, பஞ்சாபி, ஒடியா, மலையாளம் ஆகிய இந்திய மொழிகளிலும், ஆங்கிலம் மற்றும் பிரெஞ்சு மொழிகளிலும் மொழி பெயர்க்கப்பட்டு, அனைத்து பதிப்புக்களும் மகத்தான வரவேற்பினைப் பெற்றுள்ளன. உருது உள்ளிட்ட இன்னும் சில மொழிகளிலும் மொழிபெயர்க்க ஏற்பாடுகள் நடந்து வருகின்றன. மேலும் இந்தப் புத்தகம் ஒலிப் புத்தகமாகவும், மென் புத்தகமாகவும் கிடைக்கிறது.
“உங்களுக்குத் திருக்குறளில் எப்படி ஆர்வம் ஏற்பட்டது?” என்று கேட்டால், “சென்னை விவேகானந்தா கல்லூரியில் எனக்கு பேராசிரியராக இருந்த ஜெகன்நாதாச்சாரியார் ஊட்டிய தமிழ் ஆர்வம்தான் என்னைத் திருக்குறள் பால் ஈர்த்தது” என்று சொல்கிறார்.
புத்தகத் தலைப்பு: “குறள் இனிது:
ஆசிரியர் “ சோம. வீரப்பன்
வெளியீடு: தமிழ் திசை, சென்னை 600002
விலை: ரூ.225/-