ஆறாயிரம் வருடங்களாக மனித குலம் பயன்படுத்தி வரும் ஒரு அபூர்வ ரத்தினக் கல் லாபிஸ் லசூலி! (LAPIS LAZULI).
லாபிஸ் லசுலஸ் என்ற லத்தீன் வார்த்தையிலிருந்து உருவான சொல் இது. லஸ்வார்ட் என்ற அராபிய வார்த்தையிலிருந்தும் இது பிறந்தது.
ஒளி என்பது இதன் பொருள். நீல வர்ணத்தில் ஒளிரும் இந்தக் கல்லை பிரபல அறிவாளியும் பேரரசனுமான சாலமன் அணிந்திருந்தான். தீய சக்திகளை அடக்க அவன் இதைப் பயன்படுத்தினான். பிரபல அழகிகளான நெபர்டரி, கிளியோபாட்ரா, ஷீபா ஆகியோர் இதை அணிந்து புகழ் பெற்றனர்.
அரச போகத்தையும் சொகுசு வாழ்க்கையையும் தருவது இது. அறிவைப் பெருக்கும் இந்தக் கல்லை அறிவாளிகளும், எழுத்தாளர்களும் தவறாது அணிந்து வந்தனர்.
கண்ணுக்குப் புலனாகாத சக்திகள், தத்துவ ஆராய்ச்சி, புதிர்கள், விளங்காத மர்மங்கள் ஆகியவற்றைப் பற்றி அறிய உதவும் கல் இது.
மனிதனின் உள்ளார்ந்த அழுக்குகளை நீக்கி, சிந்தனைத் தெளிவைத் தந்து கடைசியில் சச்சிதானந்த நிலையை இது தரும்.
லசூரைட் என்ற தாதுக் கலவையிலிருந்து இது உருவாகிறது. சோடோலைட் என்ற ரத்தினக் கல் வகையைச் சேர்ந்தது இது. இதில் சோடியம், அலுமினியம், சில்கேட், சல்பர், கால்சியம் ஆகியவை உள்ளன.
ஆப்கானிஸ்தானில் உள்ள படகஸ்தானிலும், சிலியிலும் இது மிக அதிகமாகக் கிடைக்கிறது. கனடா, காஷ்மீர், பர்மா, அங்கோலா, சைபீரியா, இலங்கை உள்ளிட்ட இடங்களிலும் இது கிடைக்கிறது.
இதன் கடினத் தன்மை 5-லிருந்து 5.5 வரை இருக்கிறது. பெரிய பாறைகளாகக் கிடைப்பதாலும், கடினத்தன்மை குறைவாக இருப்பதாலும் இதை வைத்து அழகிய சிலைகளும் அழகு சாதனங்களும் செய்யப்படுகின்றன. விலையும் சற்று மலிவு தான்!
குண்டலினி யோகத்தில் விசுத்தி சக்கரத்தையும் ஆக்ஞா சக்கரத்தையும் இது எழுப்பிவிடும். தொண்டை, குரல் நாண் ஆகியவற்றை இது நன்கு ஊக்குவிக்கும். மூளையுடன் தொடர்பு கொண்ட இந்தக் கல்லை ADD எனப்படும் Attention Deficit Disorder குணப்படுத்தவும் உபயோகிக்கிறார்கள்.
எகிப்தியர்கள் ஜுரம், காலரா உள்ளிட்ட வியாதிகளைக் குணமாக்க உபயோகப்படுத்தினர். நீலத்தின் பல்வேறு நிறக்கூறுகளில் இது கிடைத்தாலும் அழகிய நீலமாக மட்டுமே இருக்கும் கல்லே மிகச் சிறந்தது என்று கருதப்படுகிறது. இதன் அடர்த்தி எண் 2.38லிருந்து 2.45 g/cm^2. இதனுடைய ஒளிவிலகல் எண் 1.50 டாரட் கார்டுகளை வைத்துக் குறி சொல்பவர்கள் ஒரு லாபிஸ் லசூலி கல்லை தங்கள் கார்டுகளின் மீது வைத்து விட்டே குறி சொல்வார்கள். அப்போது தங்கள் குறி சொல்லுதல் பலிக்கும் என்பது அவர்களது நம்பிக்கை.
வெவ்வேறு குணநலன்களை இது கொண்டிருப்பதால் ஆன்மீக சிகிச்சை நிலையங்களிலும் Spa -க்களிலும் இது பயன்படுத்தப்படுகிறது. இதன் விலையைக் கருதி, ஏழைகளின் நீலம் (Poor Man’s Sapphire) என்று இது அழைக்கப்படுகிறது. பல்வேறு பிரபலங்களின் ஃபேவரைட் ரத்தினக் கல் இது!
பிரபல ஹாலிவுட் நடிகையான ஜென்னா டீவான் (Jenna Dewan) இந்தக் கல்லைப் பெரிதும் விரும்பி அணிபவர். இது ‘என்னை பூமி, பிரபஞ்சம், இயற்கை அனைத்துடனும் இணைக்கிறது’ என்கிறார் அவர்.
நமது நலனில் அக்கறை கொண்ட நல்ல நண்பர்களின் உதவியைக் கொண்டு தெரிந்த வணிகர்களிடம் இதை வாங்குவது சிறந்தது.
போலிகளிடம் அதிக விலை கொடுத்து ஏமாறக் கூடாது. பிடித்த வகையில் ஆபரணத்தில் இதைப் பதித்து ஆண்களும், பெண்களும் அணியலாம்.