ஆப்பிள் நிறுவனர் ஸ்டீவ் ஜாப்ஸுக்கும் இப்போது உத்தர பிரதேசத்தில் துவங்கியிருக்கும் மஹா கும்பமேளாவுக்கும் சம்பந்தம் இருக்கிறது, தெரியுமா?
இந்த நூற்றாண்டின் அற்புத கண்டுபிடிப்பான கையடக்கத் தொலைதொடர்புக் கருவிகளை அறிமுகப்படுத்தியவர் ஸ்டீப் ஜாப்ஸ். இந்த அற்புதப் படைப்பின் பல்வேறு தொடர் கண்டுபிடிப்புகள், இன்னும் பல ஆண்டுகளுக்கு அவருடைய பெயரைச் சொல்லிக் கொண்டிருக்கும்.
அவருக்கும் இந்தியாவுக்கும் சம்பந்தம் இருக்கிறது. அது என்ன?
70களில் மிகுந்த உச்சகட்ட மன உளைச்சலுக்கு ஆளானார், ஸ்டீவ். முயற்சிகள் எல்லாம் தோல்வியையே சந்தித்தன. அதனாலேயே பழிப்பும், அவமானமும் அலைக்கழித்தன. அவரைச் சூழ்ந்திருந்த இருளில், எந்தத் திசையிலிருந்தும் நம்பிக்கை ஒளிக்கீற்றை அவரால் காண இயலவில்லை.
தான் சார்ந்திருந்த மதத்தாலோ, தன்னம்பிக்கை வகுப்புகளாலோ, மனநல மருத்துவர்களாலோ, நண்பர்களாகப் பழகிவந்த தொழிலதிபர்களாலோ, யாராலும் அவருடைய மன வேதனையைத் தீர்க்க முடியவில்லை.
யார் சொன்ன யோசனையோ, அவர் மனசாந்தியைத் தேடி இந்தியாவுக்கு வந்தார். ஹிமாலயத்திலிருந்து திருவண்ணாமலைவரை சுற்றியலைந்தார். நிறைவாக உத்தரகாண்ட் மாநிலம் கைஞ்சியில் உள்ள ஞானி நீம் கரோலி பாபா ஆசிரமத்தில் அடைக்கலம் புகுந்தார். திருவண்ணாமலை மகான் ரமணரைப் போலவே கரோலிபாபாவும் தோற்றத்திலும், மனத்தெளிவு போதனையிலும் வல்லவர் என்று கேள்விப்பட்டிருந்த ஸ்டீவுக்கு இந்த ஆசிரமத்திலும் ஓர் ஏமாற்றம்.
ஆமாம், பாபா, சில மாதங்களுக்கு முன்பாகத்தான் சமாதி அடைந்திருந்தார்! ஆனாலும் ஸ்டீவுக்கு அந்த ஆசிரமத்தில் அலாதியான பிடிப்பு உண்டாயிற்று. அங்கேயே சில நாட்கள் தங்கினார். பளிச்சென்று, கழுவி விட்டாற்போல மனசு புதுப் பொலிவு பெற்றது. கரோலி பாபா அங்கேதான் இருக்கிறார், தன் உள்ளத்தில் புகுந்து அதில் பரிபூரண ஒளி பாய்ச்சுகிறார் என்பதை உணர்ந்து கொண்டார். ஆசிரமத்தில் அவருக்கு பாபாவின் பிரசாதமாகக் கொடுக்கப்பட்ட ஆப்பிள் பழத்தை உடன்எடுத்துச் சென்றார். அந்த ஆப்பிளையே தன் நிறுவனத்தின் அடையாள இலச்சினையாகப் பதிவு செய்தார்.
அவ்வளவுதான் அடுத்த பதினைந்து வருடங்களில் அவர் ராக்கெட் வேகத்தில் உயர்வின் உச்சிக்குப் போனார். கணினித் துறையின் தவிர்க்க முடியாத சக்தியாக விளங்கினார்.
இவருடைய யோசனையின் பேரில் ஃபேஸ்புக் நிறுவனர் மார்க், ட்விட்டர் அதிபர் ஜேக் போன்றோர் உத்தரகாண்டிற்கு வந்து கைஞ்சி ஆசிரமத்தில் கரோலி பாபாவின் சமாதியில் தியானம் மேற்கொண்டு தம் மனம் புதுப்பிக்கப் பட்டார்கள். இதில் வேடிக்கை என்னவென்றால் 2015ம் ஆண்டு, முகநூல், தகவல் ஊடுருவல் செய்கிறது என்ற பழிக்கு ஆளான மார்க், இந்த ஆசிரமத்துக்கு வந்து சென்ற பின் அந்த அபவாதத்திலிருந்து மீண்டதுதான்.
புது வளர்ச்சி கண்ட ஸ்டீவ், அமெரிக்கப் பெண்மணியான லோரன் பாவல் என்பவரைத் திருமணம் புரிந்து கொண்டார். அந்தப் பெண்மணி, தன் கணவர் மேற்கொண்டிருந்த ஹிந்து மத நம்பிக்கையைப் பின்பற்றி, தன் பெயரை கமலா என்று மாற்றிக் கொண்டார். அதுமட்டுமல்ல, கணவர் மறைவுக்குப் பிறகு, உத்தர பிரதேசம் வந்து, கயாவில் தன் கணவருக்காகத் தர்ப்பண சடங்குகளை மேற்கொண்டு, திரிவேணி சங்கமத்தில் நீராடினார்.
நேற்று (14.01.2025) தொடங்கிய மஹா கும்பமேளாவில் பங்கேற்கவும், புனித நீராடவும், கமலா, நாற்பது அமெரிக்கர்கள் கொண்ட குழுவுடன் வந்து ஆன்ம வெளிச்சம் பெற்றார்.
அதுசரி, மஹா கும்பமேளா எப்படி ஆரம்பித்தது? புராணப்படி, பாற்கடலில் கிடைத்த அமிர்தத்தைப் பெறுவதற்காக தேவர்களும், அசுரர்களும் போட்டியிட்டனர். அரக்கர்களின் கைக்கு அமிர்தம் போய்விடக் கூடாதே என்பதற்காக மஹாவிஷ்ணு, மோகினி அவதாரம் எடுத்தார். அப்போது அவர் தேவர்களுக்கு விநியோகித்த அமிர்தத்திலிருந்து நான்கு துளிகள் பூமியில் விழுந்தன அந்த இடங்கள், உஜ்ஜைனில் நர்மதை, நாசிக்கில் கோதாவரி, ஹரித்வாரில் கங்கை, பிரயாக்ராஜில் கங்கை-யமுனை-சரஸ்வதி கூடும் திரிவேணி சங்கமம் ஆகியவை. ஆகவே இந்த நதிகளில் மஹா கும்பமேளா நாட்களில் புனித நீராடுவது மிகச் சிறப்பானது என்று ஆன்மிக அன்பர்களால் போற்றப்படுகிறது.