‘மாண்புமிகு’ வெறும் வார்த்தையா? தொலைந்து போகும் அரசியல் நாகரிகம்!

‘மாண்புமிகு’ வெறும் வார்த்தையா? சட்டமன்ற மரியாதை வெளியே ஏன் நையாண்டியாக மாறுகிறது? அரசியல் மொழியின் மாற்றத்தை ஆராயும் கட்டுரை.
மாண்புமிகு | Political language
மாண்புமிகு | Political languageImage credit: Chatgpt
முனைவர் மா. அன்பரசு

வேளாண் அறிவியலில் முனைவர் (Ph.D.) மற்றும் முதுமுனைவர் (Post-Doctoral Fellow) பட்டம் பெற்றவர். உழவியல் துறை (Agronomy) உதவிப் பேராசிரியராகப் பணியாற்றி வருகிறார். கற்பித்தல், ஆராய்ச்சி மற்றும் விரிவாக்கப் பணிகளில் ஈடுபட்டு வருவதுடன், சிறுகதை, கவிதை, கட்டுரை மற்றும் நாவல் உள்ளிட்ட படைப்பிலக்கியத் தளங்களிலும் பல வருடங்களாக தடம் பதித்து வருகிறார்.

Updated on: 
Kalki Strip
Kalki Strip

சட்டமன்றத்துக்குள் ‘மாண்புமிகு’ என ஒலிக்கும் மரியாதை, கதவைத் தாண்டி கேமரா முன் வரும்போது நையாண்டியாக மாறுவது ஏன்? வைரலாகும் வார்த்தைகளுக்குப் பதிலாகப் பொறுப்பான அரசியல் மொழி எப்போது பிறக்கும்? விமர்சனத்துக்கும் அவமதிப்புக்கும் இடையிலான கோடு எங்கே இருக்கிறது? கொள்கை விவாதங்களையும் மக்கள் பிரச்னைகளையும் தாண்டி, அரசியல் பேச்சுகள் வெறும் ரீல்களாகவும் கலாய்ப்புகளாகவும் சுருங்கி வருவதன் பின்னணியை இந்தக் கட்டுரை அலசுகிறது.

இனி யாரையாவது திட்ட வேண்டுமென்றால், முதலில் 'மாண்புமிகு' என்று சொல்லிவிட்டுத்தான் திட்ட வேண்டும் போலிருக்கிறது! தமிழக சட்டமன்றத்தின் நேரடி ஒளிபரப்பைப் பார்க்கும் எவருக்கும் சமீப காலங்களில் அடிக்கடி காதில் விழும் வார்த்தைகளில் ஒன்று 'மாண்புமிகு'. 'மாண்புமிகு உறுப்பினர் அவர்களே...' என்று தொடங்கும் ஒவ்வொரு உரையும், நமது ஜனநாயகத்தின் மரபையும் சட்டமன்றத்தின் மாண்பையும் நினைவூட்டுகிறது.

'மாண்புமிகு உறுப்பினர்', 'மாண்புமிகு அமைச்சர்', 'மாண்புமிகு முதலமைச்சர்' என்று ஒவ்வொரு பதவிக்கும் முன்னால் அந்த வார்த்தை சேரும்போது, அரசியல் மொழியில் மரியாதை, பண்பு, நாகரிகம் ஆகிய மூன்றும் ஒன்றாக வந்து அமர்ந்துகொள்வது போலத் தோன்றுகிறது.

ஆனால், சட்டமன்றக் கட்டிடத்தின் கதவைத் தாண்டி வெளியே வந்தவுடன் அந்த 'மாண்பு' என்ன ஆகிறது என்பதுதான் நம்முடைய சிறிய சந்தேகம்!

சட்டமன்றத்துக்குள் ஒரு மொழி... வெளியே இன்னொரு மொழி!

சட்டமன்றத்தில் ஒருவர் எழுந்து பேசுகிறார். எதிர்க்கட்சியைச் சேர்ந்தவராக இருந்தாலும், ஆளுங்கட்சியைச் சேர்ந்தவராக இருந்தாலும், உரையின் தொடக்கத்தில் “மாண்புமிகு உறுப்பினர் அவர்கள்...” என்ற மரியாதை தவறாமல் வருகிறது. எதிராளியின் கருத்தை எதிர்த்தாலும், சொல்லாட்சியில் ஒரு வரம்பு இருப்பதைப் பார்க்க முடிகிறது. ஆனால், அதே உறுப்பினர் சட்டமன்றத்தை விட்டு வெளியே வந்து செய்தியாளர்களின் மைக்குகளைப் பார்த்தவுடன் காட்சி கொஞ்சம் மாறுகிறது.

“அவர் என்ன பேசுகிறார் என்று அவருக்கே தெரியாது!”

“முதலில் அவருடைய கட்சியைப் பார்த்துக்கொள்ளச் சொல்லுங்கள்!”

“அவருடைய பேச்சை யாரும் சீரியஸாக எடுத்துக்கொள்ள வேண்டாம்!”

என்று நையாண்டிக் கணைகள் பறக்கத் தொடங்குகின்றன.

அடடா! இது சற்று முன்பு சட்டமன்றத்தில் “மாண்புமிகு உறுப்பினர்” என்று அழைக்கப்பட்ட அதே மனிதர்தானே? ஆனால் இடம் மாறிவிட்டது.

சட்டமன்றத்துக்குள் மாண்புமிகு; கேமரா முன் நையாண்டிமிகு!

அரசியல் விவாதமா? நகைச்சுவை நிகழ்ச்சியா?

ஒரு காலத்தில் அரசியல்வாதிகள் எதிராளியை வார்த்தைகளால் தோற்கடித்தார்கள். கொள்கையை எதிர்த்து வாதிட்டார்கள். புள்ளிவிவரங்களைக் கொண்டு கேள்வி எழுப்பினார்கள். அரசின் செயல்பாடுகளை விமர்சித்தார்கள். பதிலுக்கு எதிர்க்கட்சியினரும் தங்கள் தரப்பை விளக்கினார்கள்.

இப்போது காட்சி கொஞ்சம் மாறிவிட்டது.

முன்பு கேள்வி - “உங்கள் கொள்கை என்ன?”

இப்போது கேள்வி - “அவரை எப்படி கலாய்ப்பீர்கள்?”

இதையும் படியுங்கள்:
1857-க்கு முன்பே வெடித்த வேலூர் புரட்சி: சுதந்திரப் போரின் முதல் முழக்கம்!
மாண்புமிகு | Political language

முன்பு அரசியல் விவாதம்.

இப்போது அரசியல் content.

முன்பு அறிக்கை.

இப்போது reel.

முன்பு கொள்கை.

இப்போது punch dialogue.

அரசியல்வாதி என்ன சொன்னார் என்பதைவிட, அதை எப்படிச் சொன்னார் என்பதுதான் முக்கியமாகிவிட்டது. அவர் எதிராளியை எவ்வளவு நன்றாக நையாண்டி செய்தார்? கூட்டம் எவ்வளவு சிரித்தது? அந்தப் பேட்டி சமூக ஊடகங்களில் எவ்வளவு வைரலானது? என்பதுதான் அடுத்த நாள் விவாதமாகிறது. இதற்கிடையில், மக்கள் கேட்ட கேள்வி மட்டும் எங்கோ மூலையில் நின்றுகொண்டிருக்கிறது.

மக்களுக்கு என்ன வேண்டும்?

மக்களுக்கு குடிநீர் வேண்டும். அரசியல்வாதிகள் meme கொடுக்கிறார்கள்.

மக்களுக்கு வேலை வேண்டும். அரசியல்வாதிகள் comedy கொடுக்கிறார்கள்.

மக்களுக்கு விலைவாசி குறைய வேண்டும். அரசியல்வாதிகள் எதிர்க்கட்சியின் மதிப்பைக் குறைத்து மதிப்பிடுகிறார்கள்! மக்களின் பிரச்னைகளுக்கு தீர்வு காண்பதற்கான அரசியல் விவாதம், சில நேரங்களில் யார் யாரை நன்றாகக் கலாய்த்தார்கள் என்ற போட்டியாக மாறிவிடுகிறது.

ஒரு நகைச்சுவை மக்களைச் சிரிக்க வைக்கலாம். ஒரு நையாண்டி எதிராளியைச் சங்கடப்படுத்தலாம். ஒரு punch dialogue சமூக ஊடகங்களில் வைரலாகலாம். ஆனால், அந்த நகைச்சுவை நாளை ஒரு விவசாயியின் பிரச்னையைத் தீர்க்குமா? ஒரு இளைஞருக்கு வேலை கொடுக்குமா? ஒரு கிராமத்தின் குடிநீர் பிரச்னையைத் தீர்க்குமா?

இல்லை. அதனால்தான் அரசியல் நகைச்சுவைக்கும் அரசியல் பொறுப்புக்கும் இடையே ஒரு கோடு இருக்க வேண்டும்.

விமர்சனம் வேறு; அவமதிப்பு வேறு

'மாண்புமிகு' என்ற வார்த்தைக்கு ஒரு பெரிய வேலை இருக்கிறது. அது ஒவ்வொரு மக்கள் பிரதிநிதிக்கும் ஒரு விஷயத்தை நினைவூட்ட வேண்டும்.

“எதிரில் இருப்பவர் உன் எதிரி அல்ல; மக்கள் தேர்ந்தெடுத்த பிரதிநிதி.”

அவரை விமர்சிக்கலாம். அவருடைய அரசியலைத் தோலுரிக்கலாம். அவருடைய திட்டத்தைத் தூள்தூளாக்கலாம். அவர் எடுத்த முடிவு தவறு என்றால் அதை வெளிப்படையாகச் சொல்லலாம். ஆனால், மனிதரைத் தூளாக்க வேண்டிய அவசியம் இல்லை.

கருத்தை எதிர்ப்பது ஜனநாயகம்.

தவறைச் சுட்டிக்காட்டுவது ஜனநாயகம்.

கொள்கையை விமர்சிப்பது ஜனநாயகம்.

மாண்புமிகு | political speech
மாண்புமிகு | political speechImage credit: Gemini AI

ஆனால், தனிநபரை அவமதிப்பது ஜனநாயக விவாதத்தைத் தரம் தாழ்த்துகிறது. தனிநபரைத் தாக்குவது எளிது; கருத்தைத் தாக்குவது கடினம். அரசியலில் அந்தக் கடினமான பாதையைத்தான் தேர்ந்தெடுக்க வேண்டும். நையாண்டிக்கும் ஒரு அளவு வேண்டும்

நையாண்டி நல்லதுதான். அதில் சந்தேகமில்லை.

தமிழ் அரசியல் பேச்சில் நையாண்டிக்கும், நகைச்சுவைக்கும் நீண்ட பாரம்பரியம் இருக்கிறது. ஒரு கூர்மையான உவமை, ஒரு நகைச்சுவையான பதில், ஒரு சிறிய நையாண்டி. சில நேரங்களில் நீண்ட உரையைவிட மக்களிடம் ஆழமாகப் பதிந்துவிடும்.

ஆனால், நையாண்டி என்பது உப்பு போன்றது. சிறிதளவு இருந்தால் உணவுக்கு சுவை. அதிகமாக இருந்தால் உணவே குப்பை.

அதேபோல் அரசியலிலும் சிறிதளவு நகைச்சுவை ரசனை. சிறிதளவு நையாண்டி சுவை தேவை. ஆனால் அளவுக்கு மீறிய கேலி அவமதிப்பாகிவிடுகிறது. அதற்கு மக்கள் சிரிக்கலாம். ஆனால் ஜனநாயகம் சிரிக்காது.

வைரலாகும் பேச்சா? பயனுள்ள பேச்சா?

இன்று ஒரு அரசியல்வாதி செய்தியாளர்களிடம் பேசும்போது, அவர் கூறும் ஒவ்வொரு வார்த்தையும் கேமராவில் பதிவாகிறது.

சில நொடிகளில் அது சமூக ஊடகங்களுக்குச் செல்கிறது. அங்கே அது வெட்டப்பட்டு, சுருக்கப்பட்டு, reel ஆகி, ஆயிரக்கணக்கான பார்வைகளைப் பெறுகிறது.

அந்தச்சூழலில் அரசியல்வாதிகளின் வார்த்தைகளுக்கு முன்பைவிட அதிகமான பொறுப்பு இருக்கிறது. ஒரு நையாண்டிப் பேச்சு சில மணி நேரம் சிரிப்பைத் தரலாம். ஆனால், ஒரு பொறுப்பான கருத்து பல ஆண்டுகளுக்கு வழிகாட்டியாக இருக்கலாம். அதனால் அடுத்த முறை கேமரா முன் நிற்கும்போது ஒரு சிறிய பரிசோதனை செய்து பார்க்கலாம்.

எதிராளியைப் பற்றி சொல்லப் போகும் நையாண்டியை ஒரு நிமிடம் ஒதுக்கிவிட்டு, அவர் முன்வைத்த பிரச்னைக்கு பதில் சொல்லிப் பாருங்கள்.

அது கொஞ்சம் கடினமாக இருக்கும்.

ஆனால்... அதுதான் அரசியல்.

'மாண்புமிகு' ஒரு சொல் அல்ல; ஒரு பொறுப்பு.

'மாண்புமிகு' என்பது மைக்கின் முன் சொல்ல வேண்டிய ஒரு சம்பிரதாய வார்த்தை மட்டுமல்ல. அது மனதுக்குள் இருக்க வேண்டிய ஒரு அளவுகோல்.

எதிராளி பேசும்போது கேட்பது. கருத்தை எதிர்ப்பது. தவறைச் சுட்டிக்காட்டுவது. கொள்கையை விமர்சிப்பது. ஆனால் மனிதரை மதிப்பது. இதுதான் அரசியல் நாகரிகம்.

இல்லையென்றால், சட்டமன்றத்தில் 'மாண்புமிகு'; செய்தியாளர் சந்திப்பில் 'கலாய்ப்புமிகு; சமூக ஊடகத்தில் 'வைரல்மிகு' என்று நமது அரசியல் மொழி மூன்று வேறு முகங்களைப் பெற்றுவிடும்.

ஒரு நாள் மக்கள் திரும்பிக் கேட்கக்கூடும்:

“அய்யா... மாண்புமிகு என்று அழைக்க வேண்டாம். முதலில் மாண்பாக நடந்து கொள்ளுங்கள்!” அந்த நாள் வராமல் இருப்பதே நல்லது. ஏனென்றால் அரசியலில் பதவிகள் மாறிக்கொண்டே இருக்கும். ஆட்சிகள் மாறிக்கொண்டே இருக்கும். கட்சிகள் மாறிக்கொண்டே இருக்கும். இன்று எதிரில் இருப்பவர் நாளை அருகில் இருக்கலாம்; இன்று அருகில் இருப்பவர் நாளை எதிரில் இருக்கலாம்.

இதையும் படியுங்கள்:
4F நெருக்கடி: வயலில் தொடங்கும் விலை உயர்வு சமையலறையில் முடிவது எப்படி?
மாண்புமிகு | Political language

ஆனால்...

மக்கள் மட்டும் மாறாமல் பார்த்துக்கொண்டிருக்கிறார்கள். அவர்கள் அனைத்தையும் கவனித்துக்கொண்டிருக்கிறார்கள். யார் எப்போது என்ன சொன்னார்கள் என்பதையும் நினைவில் வைத்திருக்கிறார்கள். அவர்களுக்கு நன்றாகத் தெரியும்.

யார் உண்மையான 'மாண்புமிகு'...

யார் வெறும் 'மிகு'! என்று.