
மகாகவி பாரதியார் தோற்றம்: 11-12-1882 ; மறைவு: 11-9-1921
மகாகவி பாரதியார் வாழ்க்கையில் ஏராளமான சுவையான நிகழ்ச்சிகள் நடந்துள்ளன.
இந்த நிகழ்ச்சிகள், அவரது தனிப்பட்ட வாழ்க்கை, இலக்கிய வாழ்க்கை, தேசீய வாழ்க்கை, மாபெரும் கவிஞனின் வாழ்க்கை ஆகியவை எப்படி துடிப்புள்ளதாக அமைந்திருந்தது என்பதைத் தெரிவிக்கின்றன.
சில நிகழ்வுகளை மட்டும் இங்கு பார்ப்போம்...
1. வள்ளலார் மீது பக்தி:
‘என் தந்தை’ என்ற நூலை எழுதியுள்ள பாரதியாரின் புதல்வி சகுந்தலா பாரதி ஏராளமான தகவல்களைத் தனது நூலில் தருகிறார்.
வள்ளலாரின் பாடல்களில் பாரதியாரின் ஈடுபாடு எந்த அளவு இருந்திருக்கிறது என்பதை சகுந்தலா பாரதியாரின் இந்த வரிகளால் அறியலாம்:
"'நான் படும் பாடு' என்ற ராமலிங்க ஸ்வாமிகளின் பாடலை கேதார கௌள ராகத்தில் அவர் அடிக்கடி பாடுவதைக் கேட்டிருக்கிறேன். குளிக்கும் போதும், சாப்பிடும் போதும் எப்பொழுதும் பாடிக்கொண்டே இருப்பார். அவர் பாடக்கூடிய பாட்டுக்கள் எந்த பாஷையாக இருந்தபோதிலும் அந்த பாஷைக்குரிய, அந்த பாட்டுக்குரிய அர்த்தம், பாவம் இவை ததும்பி நிற்கும்.”
பாரதியார் பாடிய வள்ளலாரின் பாடல் இது தான்:
நான் படும் பாடு சிவனே உலகர் நவிலும் பஞ்சு
தான் படுமோ சொல்லத் தான் படுமோ எண்ணத்தான் படுமோ,
கான்படு கண்ணியில் மான்படுமாறு கலங்கி நின்றேன்
என்படுகின்றனை யென்றிரங்கா யென்னி லென் செய்வனே
இது மட்டுமல்ல வள்ளலார் பாடிய 'களக்கமறப் பொது நடம்' என்ற பாடலை சிறிது மாற்றி வங்கப் பிரிவினையை எற்படுத்திய கர்ஸனை குரங்கு என்று இகழ்ந்த பாடலும் குறிப்பிடத்தகுந்தது.
வள்ளலாரின் பாடல்:
களக்கமறப் பொதுநடம் நான் கண்டு கொண்ட தருணம்
கடைச்சிறியேன் உளம் பூத்துக் காய்த்ததொரு காய் தான்
விளக்கமுறப் பழுத்திடுமோ வெம்பி உதிர்ந்திடுமோ
வெம்பாது பழுக்கிலுமென் கரத்திலகப்படுமோ
கொளக்கருதும் மலமாயைக் குரங்கு கவர்ந்திடுமோ
குரங்கு கவராது எனது குறிப்பிலகப்படினும்
துளக்கமற உண்ணுவேனோ தொண்டை விக்கிக் கொளுமோ
ஜோதி திருவுளமெதுவோ ஏதுமறிந்திலனே
பாரதியாரின் கோகலே சாமியார் பாடல்:
களக்கமுறும் மார்லிநடம் கண்டுகொண்ட தருணம்
கடைச்சிறியேன் உளம்பூத்துக் காய்த்ததொரு காய்தான்
விளக்கமுறப் பழுத்திடுமோ? வெம்பிஉதிர்ந்திடுமோ?
வெம்பாது வீழினுமென்றன் கரத்திலகப் படுமோ?
வளர்த்தபழம் கர்சா னென்ற குரங்குகவர்ந் திடுமோ?
மற்றிங்ஙன் ஆட்சிசெயும் அணில்கடித்து விடுமோ?
துளக்கமற யான்பெற்றிங் குண்ணுவனோ அல்லால்
தொண்டைவிக்குமோ, ஏதும் சொல்லல் அரிதாமோ?
மலமாயைக் குரங்கு என்பதை கர்ஸான் என்ற குரங்கு என்று மாற்றிப் பாடி அனைவரையும் மகிழ்வித்தார் பாரதியார்.
2 . இலக்கிய சங்கமம்:
பாரதியார் புதுவைக்குச் சென்ற பின்னர் அங்கு மண்டயம் ஶ்ரீநிவாஸாசாரியாருடனான அவரது தொடர்பு நெருக்கமானது. வ.வே.சு ஐயரும் அங்கு பின்னர் வந்து சேர்ந்தார். அரவிந்தரும் புதுவைக்கு வந்து விடவே ஒரு அற்புதமான மேதைகளின் சங்கமம் ஏற்பட்டது.
வ.வே.சு. ஐயரின் மனைவி பாக்கியலக்ஷ்மி அம்மாள், ஐயர் குடும்பம், பாரதி குடும்பம், ஶ்ரீநிவாஸாசாரியார் குடும்பம் ஆகிய மூன்று குடும்பங்களும் ஒன்றாக வாழ்ந்ததாகக் குறிப்பிடுகிறார்.
ஶ்ரீநிவாஸாசாரியாரின் முத்த புதல்வி திருமதி யதுகிரி அம்மாள் 'பாரதி நினைவுகள்' என்ற தனது புத்தகத்தில் ஏராளமான சம்பவங்களைக் குறிப்பிடுகிறார்.
"ஒரு நாள், ‘எங்ஙனம் சென்றிருந்தீர்’ என்ற பாடலைப் பாரதியார் பாடிக் காண்பித்தார். உடனே வ.வேசு. ஐயர், “மிகவும் நன்றாக இருக்கிறது. நாலைந்து மாத விஷயங்களையும் ஐந்து அடிகளில் அடக்கியிருக்கிறார்” என்று பாராட்டினார்.
உடனே உடன் அமர்ந்திருந்த ஶ்ரீநிவாஸாசாரியார், “ஒரு பதத்தில் நூறு பொருள்களை அடக்கும் சக்தி பாரதி தவிர யாருக்கும் வராது” என்றார்.
உடனே பாரதியார் கூறினார்: “ நம் நால்வருக்குள் நம் குண விசேஷங்கள் அடங்கி விட்டன. நான் நன்றாகப் பாடுகிறேன் என்கிறீர் நீர். உம்மைப் போன்ற எழுத்தாளர் இல்லை என்று சொல்கிறேன் நான். ஐயரைப் போன்று மொழிபெயர்ப்பு நிபுணர் கிடையாது என்று நாம் சொல்கிறோம். பாபுவைப் போல (அரவிந்த்ரைப் போல்) பழைய வேதங்களை இங்கிலீஷில் மொழிபெயர்த்து அடுக்குபவர் கிடையாது என்கிறோம். நாலு பேர் நாலு பக்கத்திற்கு!
பாரதியாரின் பொருள் பொதிந்த வார்த்தைகளில் இலக்கிய மேதைகள் ஒன்று கூடி புதுவையில் தமிழையும், தேசீயத்தையும், வேதக் கருத்துக்களையும் போற்றி வளர்த்ததைக் காண்கிறோம்.
இதை யதுகிரி அம்மாள் 'எங்ஙனம் சென்றிருந்தீர்' என்ற தலைப்பில் விரிவாக எடுத்துரைக்கிறார்.
3. நானா சாஹேபும் பாரதியாரும்:
பண்டிட் எஸ். நாராயண ஐயங்கார் தமிழ், சம்ஸ்கிருதம் ஆகிய இரு மொழிகளில் வல்லவர். ஆயுர்வேத நிபுணர். அவர் பாரதியாரின் நெருங்கிய நண்பர். பாரதி புதையல் மூன்றாம் பாகத்தில் அவரது நினைவுகள் பதிவு செய்யப்பட்டதைக் காணலாம்.
நானா சாகிப் (பிறப்பு 19-5-1824) பிரிட்டிஷாரின் ஆட்சிக்கு எதிராக இந்திய சிப்பாய் கிளர்ச்சி நடத்தி அதற்குத் தலைமை தாங்கியவர். அவர் பித்தூரை தலைமை இடமாகக் கொண்டு மரத்திய அரசை நடத்தியவர். 1857 ஜூன் 6ம் நாள் 15 ஆயிரம் வீரர்கள் கொண்ட ஒரு பெரும் படையுடன் கான்பூர் சென்று அங்கிருந்த கிழக்கிந்திய ராணுவத்தின் ஒரு பெரும் படையை முற்றுகை இட்டார்.
பெரும் வீரரான அவர் இமயமலைக் காடுகளுக்குச் சென்று ஒளிந்து கொண்டார் என்ற தகவல் பெரிதாகப் பரவியது.
ஆனால் உண்மையில் அவரை 1906-1907இல் சென்னையில் தான் சந்தித்ததை நினைவு கூர்கிறார் நாராயண ஐயங்கார். அவர் கூறும் சம்பவம் பாரதியாருடன் தொடர்பு கொண்டது. ரகசியமானது.
ஒரு நாள் ஹிந்து பத்திரிகையில் வந்த விளம்பரத்தைப் பார்த்த அவர் மயிலாப்பூரில் ஒரு குறிப்பிட்ட வீட்டில் இலவசமாக சோப்பு, மெழுகுவர்த்தி போன்ற கைத்தொழில்களைக் கற்றுக் கொள்ள அந்த வீட்டிற்குச் சென்றார். ஒரு வயோதிகர் வந்தார். தலையில் மஹாராஷ்டிரரர் அணிவது போல ஒரு முண்டாசு கட்டியிருந்தார். சாதாரணமாஜ நிஜாரும் வெளுப்பான சட்டையும் அணைந்திருந்தார். கால்களில் சடா போட்டிருந்தார். ஆங்கிலத்தில் பேசிய அவர் சோப்பு, மெழுகுவர்த்தி தயாரிப்பைப் பற்றிப் பேசினார். ஆனால் அவர் நிஜமாக அந்தத் தொழிலைச் சொல்லிக் கொடுக்கக்கூடியவர் இல்லை என்று தீர்மானித்த ஐயங்கார் வீட்டிற்குத் திரும்பி விட்டார்.
பின்னர் பாரதியாரைச் சந்தித்த ஐயங்கார் இந்த மைலாப்பூர் விளம்பரத்தைக் குறிப்பிட்டுத் தான் சந்தித்தவரைப் பற்றிச் சொன்னார்.
உடனே பாரதியார், “என்னிடம் சொல்லாமல் ஏன் மயிலாப்பூர் சென்றீர்? அந்த கனவான் யார் தெரியுமா? அவர் சோப்பும் மெழுகுவர்த்தியும் கற்றுக் கொடுக்கவா வந்தார்? அவருக்கு அவைகளைப் பற்றி என்ன தெரியும்? வெடிகுண்டைப் பற்றிக் கேட்டிருந்தால் அவர் விவரமாகச் சொல்வார்” என்றார்.
வியப்படைந்த ஐயங்கார் அவர் யார் என்று கேட்க பாரதியார், “அவர் தான் நானா சாஹெப். சர்க்காரிடமிருந்து பிடிபடாமல் இருக்க தலை மறைவாக இருக்கிறார்” என்றார். அவரைப் பார்க்க இன்னொரு நாள் கூட்டிச் செல்கிறேன்" என்றார். ஆனால்
அவர் அங்கு இல்லை. சென்னையை விட்டு வெளியேறி விட்டார்.
நானா சாஹெபுடன் பாரதியார் நல்ல தொடர்பை அப்போது கொண்டிருந்தார் என்பதை இந்தச் சம்பவம் விளக்குகிறது.
தேச விடுதலையில் ஈடுபட்டோர் அந்தக் காலத்தில் ரகசிய சங்கங்களை நடத்தியதையும் அதில் பாரதியார் மனம் விட்டுப் பேசியதையும் ஐயங்காரின் பதிவுகளில் காண்கிறோம்.
பாரதியாரின் வாழ்க்கை அற்புதமான ஒரு வாழ்க்கை. தனிப்பட்ட வாழ்க்கையில் தூய்மை, இலக்கிய வாழ்வில் மேன்மை, தேசீய வாழ்க்கையில் தியாகம், கவிஞனின் வாழ்க்கையில் இமயமலை சிகரம் போன்ற ஏற்றம் ஆகியவற்றை அவர் வாழ்க்கையில் காணலாம். நேரம் கிடைத்த போதெல்லாம் அவரது கவிதைகளைப் படித்தால் நமது வாழ்வு சிறக்கும்; நமது தேசமும் சிறக்கும் என்பதில் ஐயமில்லை.