

உயிர் தந்து வளர்த்த பெற்றோர்களை முதிய வயதில் கைவிடுவது நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. பெற்றோரைக் கவனிக்கத் தவறினால் பிள்ளைகளுக்குச் சட்டப்படி தண்டனை கிடைக்குமா? முதியோர்கள் தங்களின் அடிப்படைத் தேவைகளுக்கும் பாதுகாப்புக்கும் சட்டத்தை எப்படி அணுக வேண்டும்? இதோ, அவர்களைக் காப்பாற்ற உதவும் சட்ட விதிகள் மற்றும் புகார் அளிக்கும் எளிய வழிமுறைகளின் முழு விவரங்கள்!
உலகின் முதல் தெய்வம் பெற்றோர் என்று ஆராதித்தாலும் சிலர் அவர்களின் முதிய வயதில் நோய் அல்லது பொருளாதாரம் சிக்கலில் அவர்களை புறக்கணித்து கைவிடுவது தற்போது அதிகமாகி வருகிறது. அன்று எங்கோ ஓரிடத்தில் இருந்த முதியோர் இல்லங்கள் இன்று ஊருக்கு 4 - 5 ஆக பெருகி விட்டது. உயிர் தந்து வளர்த்து ஆளாக்கிய பெற்றோர்களை கவனிக்காமல் விடுவது குற்றமில்லையா ?
குறிப்பாக பெற்றோரைப் பராமரிக்காமல் கைவிடும் பிள்ளைகள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க முடியுமா? பெற்றோருக்குச் சாப்பாடு, மருத்துவச் செலவு, தங்குமிடம் போன்ற அடிப்படைத் தேவைகளை வழங்க மறுத்தால் எங்கே புகார் அளிக்க வேண்டும்? என்பது போன்ற கேள்விகள் அனைவருக்கும் உண்டு. இதோ இங்கு சிறு விளக்கம்.
பெற்றோரைக் கைவிடும் பிள்ளைகளை எச்சரிக்கும் விதமாக இந்தியாவில் கொண்டு வரப்பட்டது தான் பெற்றோர் மற்றும் மூத்த குடிமக்கள் பராமரிப்பு மற்றும் நலச் சட்டம் (Maintenance and Welfare of Parents and Senior Citizens Act, 2007) . இந்த சட்டம் குறித்து அனைவரும் அறிந்து கொள்ள வேண்டும். இந்தச் சட்டத்தின்படி, பெற்றோர்கள் தங்களுடைய பிள்ளைகளிடம் பராமரிப்புத் தொகை கோரவும், உரிய அதிகாரிகளிடம் புகார் அளிக்கவும் முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழ்நாட்டில் இதற்கான நடைமுறைகள் குறித்து திரட்டிய தகவல்கள் இங்கு.
மூத்த குடிமக்கள் சட்டத்தின் நோக்கம் என்ன?
2007ஆம் ஆண்டு இந்தியாவில் இயற்றப்பட்ட இந்தச் சட்டம், வயதான பெற்றோர்கள் மற்றும் மூத்த குடிமக்களின் பராமரிப்பு, நலன் மற்றும் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதை நோக்கமாகக் கொண்டது.
பிள்ளைகளிடம் பெற்றோர் என்ன உரிமைகளைக் கோரலாம்?
உண்ண உணவு, உடுக்க உடை, தங்குமிடம், மருத்துவப் பராமரிப்பு உள்ளிட்ட அடிப்படைத் தேவைகளுக்குப் பராமரிப்புத் தொகை கோரலாம்
யாரிடம் பராமரிப்புப் பொறுப்பு அதிகம் உள்ளது?
மகன் அல்லது மகள் இருவரிடமும் சமமாக, திருமணமான மகள் அல்லது மகன் மற்றும் குழந்தைகள் இல்லாத மூத்த குடிமக்களின் சொத்தைப் பெறும் தகுதியுள்ள உறவினர்களுக்கு சட்டத்தில் குறிப்பிடப்பட்ட நிபந்தனைகளுக்கு உட்பட்டு பராமரிப்பு பொறுப்பு அதிகமுள்ளதாக அறியப்படுகிறது.
எந்த நிலையில் பெற்றோர் சட்டத்தின் உதவி பெறலாம்?
பிள்ளைகள் பராமரிக்க மறுத்தால் பராமரிப்பு தீர்ப்பாயத்தை அணுகலாம்.
தங்களுடைய வாழ்க்கை மற்றும் சொத்துக்குப் பாதுகாப்பு கோரலாம்.
இவை அனைத்தும் சட்டத்தின் நிபந்தனைகளுக்கும் சம்பந்தப்பட்ட சூழ்நிலைகளுக்கும் உட்பட்டவையாக இருக்கும் பட்சத்தில் சட்டம் தன் கடமையை செய்யும்.
பெற்றோரைப் பராமரிக்காத பிள்ளைகள் மீது யாரிடம் புகார் தருவது? புகார் அளிக்கும் வழிமுறை என்ன? பெற்றோர் அறிந்து கொள்ள உதவும் தகவல்கள்..
தமிழ்நாட்டில் கீழ்க்கண்ட அதிகாரிகளை அணுகி உதவி கேட்கலாம். அவர்களிடம் படிப்படியாக புகார் அளிக்கும் முறைகள் இங்கு..
தமிழ்நாட்டில் இச்சட்டத்தின் கீழ் வருவாய்க் கோட்டாட்சியர் மற்றும் மாவட்ட சமூக நல அலுவலர் ஆகியோர் தொடர்புடைய அதிகாரிகளாகக் குறிப்பிடப்பட்டுள்ளனர்.
முதலில் நீங்கள் வசிக்கும் பகுதியில் உள்ள வருவாய்க் கோட்டாட்சியரை (RDO) அணுகுங்கள். வசிக்கும் பகுதியின் வருவாய்க் கோட்டாட்சியர் அலுவலகத்தில் புகார் அளித்து, பராமரிப்புத் தொகை கோரி மனு சமர்ப்பிக்கலாம்.
மாவட்ட சமூக நல அலுவலரையும் அணுகலாம். மாவட்ட சமூக நல அலுவலகத்திலும் வழிகாட்டுதல் மற்றும் உரிய நடவடிக்கைக்காக விண்ணப்பிக்கலாம்.
உங்கள் மனுவுக்கு அல்லது புகார் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்றால் மாவட்ட ஆட்சியரிடம் முறையிடலாம்.
புகார் அளிக்க ஆவணங்கள் தேவையா? எனில் என்னென்ன ஆவணங்கள் சேகரிக்க வேண்டும்?
ஆம் நிச்சயமாக. நீங்கள் தரப்போகும் ஆவணங்கள் தான் சாட்சி. புகார் அளிக்கும்போது பின்வரும் ஆவணங்களைத் தயாராக வைத்திருப்பது உதவும்.
ஆதார் அட்டை அல்லது வயதுக்கான சான்று. முகவரிச் சான்று. பிள்ளைகளின் பெயர் மற்றும் முகவரி போன்ற விவரங்கள். பராமரிக்க மறுப்பது தொடர்பான கடிதங்கள், குறுஞ்செய்திகள் அல்லது பிற ஆதாரங்கள் இருந்தால் அவற்றைத் தயாராக வையுங்கள்.
மருத்துவச் செலவுகள் மற்றும் மாதாந்திரத் தேவைகளுக்கான ரசீதுகள் அல்லது விவரங்கள்.
பராமரிப்புத் தொகை கோரும் மனு.
இவையனைத்தும் இல்லை எனினும் புகார் தரமுடியாதோ எனும் கவலை வேண்டாம். தேவையான ஆவணங்கள் மற்றும் நடைமுறைகளை சம்பந்தப்பட்ட அலுவலகத்தில் தெளிவாக கேட்டு உறுதிப்படுத்திக்கொள்ளுங்கள்.
பிள்ளைகளிடம் எவ்வளவு பராமரிப்புத் தொகை கோர சட்டம் இடம் தருகிறது?
சட்டத்தின் பிரிவு 9-ன்படி, பெற்றோரின் தேவைகள் மற்றும் பிள்ளைகளின் பொருளாதார வசதிகளைக் கருத்தில் கொண்டு தீர்ப்பாயம் மாதாந்திரப் பராமரிப்புத் தொகையை நிர்ணயிக்கலாம். அதன் அடிப்படையில் பெற்றோர் தங்களுக்குத் தேவையான பராமரிப்புத் தொகையைக் கோரி மனு அளிக்கலாம். மேலும், வழக்கு நிலுவையில் இருக்கும்போதே இடைக்காலப் பராமரிப்புத் தொகை வழங்கவும் தீர்ப்பாயம் உத்தரவிடலாம் என்பது குறிப்பிடத்தக்கது.
பொதுவாக, மனு தொடர்பான அறிவிப்பு வழங்கப்பட்ட நாளிலிருந்து 90 நாட்களுக்குள் விசாரணையை முடிக்கச் சட்டம் காலவரம்பு நிர்ணயித்துள்ளது. விதிவிலக்கான சூழ்நிலைகளில் காரணங்களைப் பதிவு செய்து மேலும் 30 நாட்கள் நீட்டிக்கலாம். அத்துடன்
பராமரிப்புத் தொகை எவ்வளவு என்பது ஒவ்வொரு வழக்கின் சூழ்நிலையையும் பொறுத்தது என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.
ஏற்கனவே பெற்றோரிடம் வளமான சொத்து இருந்தால் பிள்ளைகளிடம் பராமரிப்புக் கோர முடியாதா?
பெற்றோருக்கு வீடு அல்லது சொத்து இருக்கிறது என்பதற்காக மட்டும் அவர்களின் பராமரிப்புக் கோரிக்கை தானாகவே நிராகரிக்கப்படாது.
பெற்றோரின் வருமானம், தேவைகள், உடல்நிலை மற்றும் பிள்ளைகளின் பொருளாதார வசதிகள் உள்ளிட்ட அம்சங்கள் பரிசீலிக்கப்படலாம்.
அதேபோல், சொத்தைப் பிள்ளைகளுக்கு எழுதிக்கொடுத்த பிறகு, அவர்கள் அடிப்படைத் தேவைகளைப் பூர்த்தி செய்யவில்லை என்றால், குறிப்பிட்ட சட்ட நிபந்தனைகளின் கீழ் அந்தச் சொத்துப் பரிமாற்றத்தை ரத்து செய்யக் கோரும் வாய்ப்பும் சட்டத்தின் பிரிவு 23 ன் தொடர்புடையதாக உள்ளது.
சரி.. புகார் அளித்தும் பிள்ளைகள் பராமரிக்க மறுத்தால் அடுத்து என்ன நிகழும்?
மனுவின் கீழ் விசாரித்து தீர்ப்பாயம் பராமரிப்புத் தொகை வழங்க உத்தரவிட்ட பிறகும், போதிய காரணமின்றி அதைச் செலுத்தத் தவறினால், சட்டத்தில் குறிப்பிடப்பட்ட அமலாக்க நடவடிக்கைகள் எடுக்கப்படலாம். சட்டத்தின் பிரிவு 5(8)-ன்படி, நிலுவைத் தொகையை வசூலிப்பதற்கான நடவடிக்கைகளும், குறிப்பிட்ட நிபந்தனைகளுக்கு உட்பட்டு சிறைத்தண்டனை கூட விதிக்கப்படும் வாய்ப்பும் இருக்கிறது.
சிலர் கோபத்தில் பெற்றோரை அடித்தாலோ அல்லது வீட்டைவிட்டு அடாவடியாக வெளியேற்றினாலோ பயப்படாமல் அருகிலுள்ள காவல்துறையை அணுகவும். ஏனெனில் இந்த செயல் பராமரிப்புப் பிரச்சினையைத் தாண்டி, உடனடிப் பாதுகாப்பு தேவைப்படும் சூழ்நிலையைத் தரலாம். அப்படி உடனடி ஆபத்து ஏற்படும் சூழல் இருந்தால் காவல்துறையை அணுகலாம் அல்லது இந்திய அவசர உதவி எண் 112 ஐ அழைத்து உதவி கோரலாம். முதியோர் உதவிக்காக தேசிய முதியோர் உதவி எண் 14567-ஐ அணுகலாம்.
சமூக சேவகர் உதவியுடன் மாவட்ட சமூக நல அலுவலர் அல்லது மாவட்ட ஆட்சியரிடம் புகார் அளிக்கலாம்.
தேவைக்கேற்ப இலவச சட்ட உதவிக்காக மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக்குழுவை அணுகலாம்.
மேலும் பெற்றோரைப் பராமரிக்காதது, உடல் ரீதியாகத் துன்புறுத்துவது, சொத்தைக் கைப்பற்றுவது ஆகியவை வெவ்வேறு வகையான சட்டப் பிரச்சினைகளாக இருக்கலாம் என்பதால் சம்பவத்தின் தன்மைக்கு ஏற்ப எடுக்கப்படும் நடவடிக்கை மாறுபடும் வாய்ப்பும் உள்ளது.
ஆகவே வயதான பெற்றோர்கள் தங்களைக் கவனிக்க யாரும் இல்லை என்பதற்காக உரிமைகளை விட்டுக்கொடுக்க வேண்டியதில்லை. பராமரிப்புத் தொகை கோருவதற்கும், பாதுகாப்பு பெறுவதற்கும் சட்டத்தில் வழிகள் உள்ளதை தெரிந்து வைத்திருப்பது அவர்கள் பாதுகாப்புக்கு அவசியம்.
இனி உங்கள் அருகாமையில் உள்ள கல் நெஞ்சம் கொண்ட பிள்ளைகளால் புறக்கணிக்கப்படும் பெற்றோருக்கு இந்த சட்டம் வாயிலாக நீங்களும் உதவலாம்.