

- ஆங்கிலத்தில் சாய் விட்டேகர்
- தமிழாக்கம்: பிரியங்கா R
செங்கல்பட்டு மாவட்டத்தில், மிகுந்த சர்ச்சைக்குள்ளாகி வரும் மாமல்லன் நீர்த்தேக்கத்திட்டமானது, சென்னையின் புறநகர்ப் பகுதியிலுள்ள மக்களின் குடிநீர்த்தேவையை நிவர்த்தி செய்யும் நோக்கில் தொடங்கப்பட்டது. ஆனால், இத்திட்டம் செயல்படுத்தப்பட்டால், கோவளம் முதல் மாமல்லபுரம் வரையுள்ள கடலோர நிலப்பரப்புகள் மிகுந்த பாதிப்பிற்குள்ளாகும். அதுமட்டுமின்றி, பழைய மாமல்லபுரம் சாலை (OMR) மற்றும் கிழக்கு கடற்கரை சாலைகளை (ECR) ஒட்டி வசித்துவரும் குடும்பங்களும் பெரும் சிக்கல்களை சந்திக்க நேரிடும்.
மாமல்லன் திட்டம் செயல்படுத்த தேர்வு செய்யப்பட்ட இடமானது, நன்னீர் மற்றும் உவர்நீர் சதுப்புநிலங்கள், உப்பளங்கள், கழிமுகங்கள் மற்றும் காயல்வெளிகள் என பல்வேறு சூழலியல் அமைப்புகள் அனைத்தையும் ஒன்றுடன் ஒன்று பிணைக்கக்கூடிய நீர்நிலைப் பகுதியாகும்.
இது, கடற்கரையை ஒட்டி வாழ்ந்து வரும் மக்களின் பாதுகாப்பிற்கும் மிகவும் இன்றியமையாததாகும். ஒருவேளை மாமல்லன் நீர்த்தேக்கத்திட்டம் நிறைவேற்றப்பட்டால், கிட்டத்தட்ட 18 சதுர கிலோமீட்டர் பரப்பளவிலான நீர்வாழ் சுற்றுச்சூழல் அமைப்பு முற்றிலுமாக அழிந்துவிடும் அபாயம் உள்ளது.
அதுமட்டுமின்றி, இதனைச் சார்ந்துள்ள பல்வேறு உயிரினங்கள், மீனவக்குடும்பங்கள், கடற்சிப்பிகள் மற்றும் சங்குகளை சேகரித்து வாழ்வாதாரம் ஈட்டுபவர்களும் மிகுந்த பாதிப்பிற்குள்ளாவார்கள்.
மலைப்பிரதேசங்களில் வளரும் தாவரங்கள் மற்றும் மரங்கள், மழைநீரை தன் வேர்கள்மூலம் உள்ளிழுத்து, மலையடிவாரத்தில் உள்ள மக்களையும் அவர்களின் வாழ்விடப் பகுதிகளையும், வெள்ளப்பெருக்கு மற்றும் மண்சரிவுகள் போன்ற இயற்கைச் சீற்றங்களிலிருந்து பாதுகாக்கும். அதைப்போலவே, கடற்சீற்றங்களிலிருந்து நம்மைப் பாதுகாப்பதற்கு, கடற்கரையை ஒட்டியுள்ள இத்தகைய சூழலியல் அமைப்புகள் பெரிதும் உதவுகின்றன.
சமீபத்தில், சென்னையின் பல்லுயிர் டிரஸ்ட் (Palluyir Trust) நடத்திய விழிப்புணர்வு நிகழ்ச்சியொன்றில், இருளர் சமூகத்தைச் சேர்ந்த மீனவப்பெண்மணி ஒருவர், இத்திட்டத்தினால் தங்களது வாழ்வாதாரம் மற்றும் குடியிருப்புகள் எவ்வாறு பாதிக்கப்படக்கூடும் என்பதை எடுத்துரைக்கும்போது, அவர் மனமுடைந்து, கண்ணீர்விட்டு வருந்தினார்.
இத்திட்டத்தினால் பாதிக்கப்படுவது, ஏழை எளிய மக்கள் மட்டுமல்ல, OMR மற்றும் ECR சாலைகளில் உள்ள வில்லாக்கள், தங்கும் விடுதிகள் மற்றும் மளிகைக்கடைகள் என அனைத்தும்தான்.
சில மாதங்களுக்கு முன்பு, ஒரு முக்கியமான நபரை சந்திப்பதற்காக, சேப்பாக்கத்தில் உள்ள பழங்குடியினர் நலத்துறை அலுவலகத்திற்கு சென்றிருந்தேன். அங்கிருந்த அலுவலர் ஒருவருடன், மாமல்லன் நீர்த்தேக்கம் குறித்து பேசிக்கொண்டிருந்தபோது, அதன் சுற்றுச்சூழல் பாதிப்புகள் பற்றி நான் குறிப்பிட்டேன்.
அதற்கு அவர், "ஆனால் மேடம், இத்திட்டம் குறித்து விரிவான சாத்தியக்கூறு அறிக்கையெல்லாம் (Feasibility studies) ஏற்கனவே சமர்ப்பித்தாயிற்று. ஆய்வுக்குழுக்களும் இதற்கு ஒப்புதல் அளித்து, தக்க பரிந்துரைகள் வழங்கியுள்ளன" என்று கூறினார்.
என்னதான் ஐஐடி மெட்ராஸ் மற்றும் அண்ணா பல்கலைக்கழகம் ஆகியவை தங்கள் ஆய்வறிக்கைகளை சமர்ப்பித்திருப்பினும், அவற்றின் பரிந்துரைகள்/ஆலோசனைகள் மேம்போக்கானதாகவே உள்ளன.
மேலும், அவற்றில் "கட்டாயமாக பின்பற்றக்கூடிய நிபந்தனைகள்" என்று எதுவும் வலியுறுத்தப்படவில்லை. தேசிய பசுமைத் தீர்ப்பாயம் (National Green Tribunal), இதுகுறித்து தனது அதிருப்தியை வெளிப்படுத்தி யிருந்தாலும், ஒரு தீர்க்கமான முடிவு ஏதும் எடுத்ததற்கான அறிகுறிகள் இல்லை.
எது எப்படியிருப்பினும், சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீடுகள் மீது எனக்கு பெரிதும் நம்பிக்கை இல்லை. பல ஆண்டுகளுக்கு முன்பு, பேராசிரியர் மாதவ் காட்கில் அவர்களுடன், எனது தந்தை மேற்குத் தொடர்ச்சி மலைகளுக்கான சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டுக் குழுவில் பணியாற்றிக் கொண்டிருந்தார்.
இது குறித்தும், சூழலியல்சார்ந்து அவர் நடத்திய பிறமதிப்பீடுகள் குறித்தும், விரிவாக தனது “Song of the Magpie Robin” புத்தகத்தில் எழுதியுள்ளார். அரசாங்கம் உட்பட பலதரப்பினரிடம் இருந்தும், அரசாங்கத்திற்கு சாதகமான அறிக்கைகளை வழங்கிடவேண்டுமென்று, இக்குழுக்கள் கடுமையான நெருக்கடிகளை சந்தித்தன.
கிட்டத்தட்ட 200-க்கும் மேற்பட்ட உள்ளூர் மற்றும் வலசைவரும் பறவைகள், எண்ணிலடங்கா மீன்கள், நன்னீர் மற்றும் கடல்வாழ் உயிரினங்களுக்கு, இந்த உவர்நீர் சதுப்புநிலங்கள் இன்றியமையாத பகுதியாகும். இவை அனைத்தும் எவ்வாறு பாதிக்கப்படும் என்பது குறித்தான தகவல்கள் இணையதளத்தில் கொட்டிக்கிடக்கின்றன.
ஆனால், நம்மை பாதுகாக்கக்கூடிய சூழலியல் அமைப்புகளை நாமே அழித்துக்கொள்ளும் இந்த தற்கொலை மனப்பான்மை குறித்து நாம் ஆழ்ந்து சிந்தித்துப்பார்க்க வேண்டும்.
சமீபகாலமாக, நேபாளத்தில் தொடர்ந்து நிகழ்ந்து கொண்டிருக்கும், இயற்கைப் பேரிடர்கள் குறித்து, சூழலியல் ஆராய்ச்சியாளரான சுனிதா நரேன் கூறும் கருத்தினை, அரசியல்வாதிகளும் அரசுஅதிகாரிகளும் சற்றேனும் செவிசாய்க்கவேண்டும்.
"நேபாளத்தில் நடைபெற்றது ஒரு தனிப்பட்ட நிகழ்வு அல்ல. பல ஆண்டுகளாக, நமது ஆறுகளையும் மலைகளையும் மனிதனின் தேவைக்கேற்ப மறுவடிவமைத்துக் கொள்ளலாம் என்கிற மனப்பான்மையின் விளைவே இது. அதிகரித்துவரும் இத்தகு சூழலியல் நெருக்கடிகளை, நாம் எதிர்கொள்வதற்கு, நீண்ட அறிக்கைகளோ, வெறும் பெயரளவிலான, மேலோட்டமான நடவடிக்கைகளோ ஒருபோதும் தீர்வாக அமையாது."
மாமல்லன் அணை கட்டப்பட்டால், பாதிக்கப் பட்டவர்களை வேறு இடத்திற்கு மாற்றுவதற்கு ஏதேனும் திட்டம் உள்ளதா? அவ்வாறு ஏதும் இருப்பின், சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு ஓர் சிறு வேண்டுகோள். தயவுசெய்து முதலைப் பண்ணையில் இருக்கும் 800க்கும் மேற்பட்ட ஊர்வன விலங்குகளையும் கணக்கில் சேர்த்துக்கொள்ளுங்கள்.