

உலக அளவில், ‘உலகத் தொழிலாளர் நாள்’ என்ற சிறப்பு நாளாக ஆண்டு தோறும் மே முதலாம் நாளன்று (மே 1) மே நாள் அல்லது மே தினம் (May Day) என்ற பெயரில் கொண்டாடுவது அனைவரும் அறிந்ததுதான். ‘மேடே’ (Mayday) எனும் பெயரில் ‘ஆபத்துக் காலக் குறியீட்டு வார்த்தை’ ஒன்று இருப்பது உங்களுக்குத் தெரியுமா?
வானூர்தி (Aircraft), கப்பல் (Ship) மற்றும் பிற போக்குவரத்தில் பன்னாட்டு அளவில் அங்கீகரிக்கப்பட்ட ஆபத்துக் காலக் குறியீட்டு வார்த்தையாக, 'மேடே' (Mayday) என்கிற வார்த்தை பயன்படுத்தப்பட்டு வருகிறது.
இந்த 'Mayday' என்கிற வார்த்தை 'm'aider' என்கிற பிரெஞ்சு வார்த்தையிலிருந்தே பிறந்தது. இதற்கு 'உதவி செய்யுங்கள்' (Help Me) என்று பொருள். இயந்திரக் கோளாறு, தீ விபத்து, வானூர்தியானது வானூர்தி ஓட்டிகளின் கட்டுப்பாட்டை இழக்கும் நிலை போன்ற அவசரச் சூழல்களில் வானூர்தி ஓட்டிகள் கட்டுப்பாட்டு அறைக்கு “மேடே, மேடே, மேடே” ('Mayday, Mayday, Mayday') என்று மூன்று முறை தகவல் சொல்வார்கள்.
இந்தத் தகவல் கிடைக்கப் பெற்றவுடன் கட்டுப்பாட்டு அறையிலிருந்து ஒட்டு மொத்தக் கவனமும் அந்த வானூர்தியின் மீது குவிக்கப்படும். அவசரக் காலங்களில் என்னென்ன முன்னேற்பாடுகளைச் செய்ய வேண்டுமோ, அதையெல்லாம் கட்டுப்பாட்டு அறையிலிருந்து செய்து விடுவார்கள். மருத்துவக்குழுவினர், மீட்புப்படையினர் என எல்லாருமே தயார் நிலையிலிருப்பார்கள்.
தொலைபேசியில் அல்லது வானொலியில் படகு / வானூர்தியின் பெயர், அதன் தற்போதைய இடம், என்ன குறைபாடு? எத்தனை பேர் இருக்கிறார்கள்? என்ன உதவி தேவை? என்பது போன்ற தகவல்கள் கூறப்பட வேண்டும். தவறாகப் பயன்படுத்தினால் அது குற்றம். சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும். சிறைத் தண்டனையுடன், அபராதத் தொகையும் விதிக்கப்படும்.
வாய்மொழி முறையில் எளிதாகப் புரிந்து கொள்வதற்காகவே 'மேடே' என்ற வார்த்தை உருவாக்கப்பட்டிருக்கிறது. இங்கிலாந்தில் உள்ள க்ராய்டன் விமான நிலையத்தில் வானொலி தொடர்புகளுக்குப் பொறுப்பாக இருந்த பிரடெரிக் ஸ்டான்லி மாக்ஃபோர்ட் என்பவரிடம் 1920 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் அவசர சமிக்ஞை (signal) வார்த்தையாக, ஏதாவதொரு ஒரு வார்த்தையை உருவாக்கும் பணி அளிக்கப்பட்டது. அவர், வானூர்தி ஓட்டிகள், தரைப் பணியாளர்கள் உள்ளிட்ட அனைத்துப் பணியாளர்களும் எளிதில் புரிந்து கொள்ளும்படியான சிறப்பு வார்த்தை ஒன்றை உருவாக்க முயற்சித்தார்.
அப்போது, பெரும்பாலான விமான போக்குவரத்து க்ராய்டனுக்கும் பாரிசின் லே பூர்ஜெட் விமான நிலையத்துக்கும் இடையில் இருந்ததால், பிரெஞ்சு மொழியில் ‘வந்து எனக்கு உதவி செய்யுங்கள்’ என்பதன் சுருக்கமான "m’aider" எனும் வார்த்தைக்கு ஒத்த ஒலியாக mayday என்ற வார்த்தையை அவர் தேர்ந்தெடுத்தார்.
அதன் பிறகு, இந்த வார்த்தையைக் கொண்டு, சில சோதனைகள் நடைபெற்றன. அதனைத் தொடர்ந்து, 1923 ஆம் ஆண்டின் பிப்ரவரியில், குரல்வழி (Voice/vocal) தொடர்புக்கு இந்த வார்த்தை அதிகாரபூர்வமாகப் பயன்படுத்தலாம் என்று முடிவு செய்யப்பட்டுத் தொடங்கப்பட்டது.
முந்தைய அவசர சமிக்ஞை “எஸ்ஓஎஸ்” என்ற மோர்ஸ் குறியீட்டை வார்த்தையாகப் பயன்படுத்தலாமென்று முயற்சித்தனர். ஆனால், தொலைபேசி வழியே "S" என்ற எழுத்தைச் சரியாக கேட்க இயலாமல் இருப்பதால், அதைக் குரல் மூலம் பயன்படுத்த முடியாது எனக் கருதப்பட்டது.
1927ஆம் ஆண்டு, வாஷிங்டன் டிசி நகரில் நடைபெற்ற சர்வதேச வானொலி ஒப்பந்தம் (International Radiotelegraph Convention) "எஸ்ஓஎஸ்" மோர்ஸ் குறியீடுடன் சேர்த்து, "மேடே"(Mayday) என்ற குரல் மூல அவசர அழைப்பையும் அதிகாரபூர்வமாக ஏற்றுக்கொண்டது. அதனைத் தொடர்ந்து, மேடே (Mayday) என்கிற வார்த்தை பயன்படுத்தப்பட்டு வருகிறது.
இந்தியாவில் 2025 ஆம் ஆண்டு, ஜூன் 12 ஆம் நாளில், அகமதாபாத்திலிருந்து லண்டனுக்குப் புறப்பட்ட ஏர் இந்தியா விமானம், அகமதாபாத் அருகே வானூர்தி சேதமடைந்த போது, விமான ஓட்டிகளிடமிருந்து ‘மேடே’ சமிக்ஞை அழைப்பு அனுப்பப்பட்டிருந்தது என்பது இங்கு கவனிக்கத்தக்கது.