

கட்டபொம்மன், கர்ணன் போன்ற பிரம்மாண்ட காவியங்களைத் தயாரித்துவிட்டு கோடிக்கணக்கில் கடனாளி ஆனவர் பிரபல இயக்குநர் பி.ஆர். பந்துலு. அந்தப் பாதாளத்தில் இருந்து அவரை மீட்டெடுத்தது எம்.ஜி.ஆரின் சரித்திரச் சாதனையான 'ஆயிரத்தில் ஒருவன்' திரைப்படம்! சினிமா ரசிகர்களை வியக்க வைக்கும் பல சுவாரஸ்யமான தகவல்களை வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது இந்தத் தொகுப்பு.
ஜனவரி 2014 ல் டிஜிட்டல் வடிவத்தில் சீரமைக்கப்பட்டு ஒலி ஒளி தரம் மேம்படுத்தப்பட்டு, சினிமாஸ்கோப்பில் இரண்டாம் முறை 122 தியேட்டர்களில் வெளியானது ஆயிரத்தில் ஒருவன் எம் ஜி ஆர் படம்.
சென்னை தியேட்டரில் 175 நாட்கள் வெள்ளி விழா கண்டது. அது இரண்டாம் முறை வெற்றி. அது முதலில் 9 ஜூலை 1965ல் ரிலீஸ் ஆகி வெற்றி பெற்ற படம்.
டைரக்டர் பி.ஆர். பந்துலு வீரபாண்டிய கட்டபொம்மன், கர்ணன் கப்பலோட்டிய தமிழன் படங்களை; படம் அல்ல காவியங்களை உருவாக்கியவர்.
தமிழ் சினிமா என்று உள்ளவரை சிவாஜி கணேசன் என்ற பெயர் உள்ள வரை பந்துலுவின் இந்த மூன்று படங்களும் சரித்திரத்தில் பொன்னேட்டில் பொறிக்கப்பட்ட படங்களாகும்.
கட்டபொம்மன் என்றால் இப்படித்தான் இருந்திருப்பார் என இன்றும் சிவாஜி முகத்தைத்தான் மக்கள் நம்புகிறார்கள்…
ஆனால் இந்த படங்கள் பாக்ஸ் ஆபீஸில் வெற்றியா என்றால் அது தான் இல்லை.
காவியங்களைப் படைத்த பி.ஆர். பந்துலு கடனாளி ஆகிவிட்டார். காரணம் கட்டபொம்மன் 1959 ஆம் ஆண்டு, கர்ணன் 1964 ஆம் ஆண்டு இரண்டுமே அதிக பொருட்செலவில் உருவானவை. கர்ணன் படம் ரு 40 லட்சத்தில் உருவானது.
கர்ணன் படம் எடுக்க ரதங்களை சென்னையில் செய்து வடக்கே குருஷேத்திரம் வரை கொண்டு போனார்கள் மகாபாரத யுத்தக் காட்சிகள் எடுக்க. இந்திய ராணுவ சிப்பாய்களை அரசு அனுமதி பெற்று வீரர்களாக நடிக்க வைத்தார்கள் பாண்டவ, கவுரவ சேனை யாக.
80 யானைகள் 400 குதிரைகள் பயன்படுத்தப்பட்டன போர்க்கள காட்சிக்காக.
அப்போது லாபம் ஈட்டாத, பந்துலுவை நஷ்டத்தில் தள்ளிய கர்ணன்.. அதே படம் 2012ல் டிஜிட்டல் தொழில் நுட்பத்தில் வெளியாகி பல இடங்களில் 100 நாட்கள் ஓடி மொத்தம் ரூ 5 கோடி வசூலித்தது. இளைய தலைமுறை விரும்பி பாரதக்கதையை பார்க்க ஆசைப்பட்டதால் நடந்தது.
பி.ஆர். பந்துலு மொத்தம் 57 படங்கள் தயாரித்து இயக்கியவர்.(1957 தங்கமலை ரகசியம், 1958 சபாஷ் மீனா, உட்பட)
பந்துலு தயாரித்த கப்பலோட்டிய தமிழன் 1961 படம் கறுப்பு வெள்ளையில் வெளியாகி ஒரு சுதந்திர போராட்ட வரலாறு டாக்குமெண்ட்டரி ஆகி விட்டது.
பாரதியாரும், சுப்ரமண்ய சிவாவும் உயிருடன் வாழும் பாத்திரங்களாக கண்ணில் தெரிந்தார்கள் (எஸ் வி சுப்பையா, டி கே ஷண்முகம்)…
மகாகவி பாரதியாரின் பாடல்களுக்கு ஜி இராமனாதன் இசை.. தேனாக இனித்தன. பிறகு முரடன் முத்து, 1964 சிவாஜி படம் பந்துலுவுக்கு சரியாகப் போகவில்லை.
அவர் நிதி நிலைமை மோசமாகி கடன் பிரச்சினையில் தவித்தார். அப்போது எம் ஜி ஆர் கை கொடுத்தார். 1965 ல் ஆயிரத்தில் ஒருவன் எடுத்து கரையேறினார் பந்துலு.
கல்கி விமர்சனத்தில் “பழைய கதை ஒன்றை விறுவிறுப்பாக எடுத்துள்ளார்கள்” என்று எழுதினார்கள்.
விகடன் “வில்லன்கள் யாரையும் கொல்லாத எம் ஜி ஆர் என” முனுசாமி மாணிக்கம் மூலம் எழுதினார்கள்.
இந்தப் படத்தில் ஆர் கே ஷண்முகம் வசனங்கள் மிகவும் பிரசித்தி அடைந்தன.
சர்வாதிகாரி மனோகர் “என் அதிகாரம் எங்கும் செல்லுபடியாகும் தெரியுமா” அதற்கு எம் ஜி ஆர் “உங்கள் அதிகாரம் என்ன சிலப்பதிகாரமா” என்பார்.
ஜெயலலிதா, ”அப்படியானால் நான் பொய் சொல்கிறேனா”
எம் ஜி ஆர், ”நீங்கள் சொல்வது உண்மை அல்ல என்று தான் சொல்கிறேன்”
“இந்த மனம் இருக்கிறதே.. அதை ஆரம்பத்திலேயே அடக்கி விட வேண்டும்.. இல்லாவிட்டால் அதற்கு காட்டு யானை பலம் வந்து விடும்.” என்பார் எம் ஜி ஆர் நாகேஷிடம்… கடல் பயணத்தில்.
“உயிரின் மீது உனக்கு ஆசை இல்லையா” என்பார் நம்பியார். “அதையே நானும் கேட்கலாம் இல்லையா” இது எம் ஜி ஆர்.
மதம் கொண்ட யானை என்ன செய்யும் தெரியுமா.. நம்பியார்.
சினம் கொண்ட சிங்கத்திடம் தோற்று ஓடும்.. எம் ஜி ஆர்
தோல்வியையே அறியாதவன் நான்.. நம்பியார்
தோல்வியை எதிரிகளுக்கே பரிசாக அளித்துப் பழகியவன் நான்” எம் ஜி ஆர். இது இணையத்தில் பலரும் பகிரும் வசனம் ஆகும் இன்றும்.
படம் முழுவதும் பஞ்ச் வசனங்கள் தான்.
படத்திற்கு என்ன தலைப்பு வைக்கலாம் என விவாதம் வந்த போது ஆர் கே ஷண்முகம், வசன கர்த்தா, ஆயிரத்தில் ஒருவன் என்றார்.
எம் ஜி ஆர் மகிழ்ந்து உடனே 1001 ரூபாய் அவருக்கு அளித்து மகிழந்தார் என்பார்கள்…
இது தெரிந்திருந்தால் லட்சத்தில் ஒருவன் என சொல்லி இருப்பேனே என்றாராம் ஆர் கே ஷண்முகம்.
ஆர் கே ஷண்முகத்துக்கு எம் ஜி ஆர் ராயப்பேட்டையில் ஒரு வீடு வாங்கித் தந்தார் என்பார்கள் படம் வெளியாகி வெற்றி அடைந்ததும்.
தொடர்ந்து பல எம் ஜி ஆர் படங்களுக்கு வசனம் எழுதினார் அவர்,
சென்னை தூர்தர்ஷன் டிவி ஒளிபரப்பு தொடங்கி முதலில் காட்டிய படம் ஆயிரத்தில் ஒருவன் 1975 ல்.
மெல்லிசை மன்னர்கள் கடைசியாக இருவரும் சேர்ந்து இசை அமைத்த படம் இது.
கண்ணதாசன் இப்படத்தில் 3 பாடல்கள் எழுதி இருந்தார். அதோ அந்த பறவை போல எழுதிய பிண்ணனி ஒரு தனிக் கதை.
வாலி இந்த ட்யூனுக்கு பல பல்லவிகள் எழுதினார்… எம் ஜி ஆருக்குத் திருப்தி இல்லை. இசை என்று வந்து விட்டால் எம் ஜி ஆரைத் திருப்திப் படுத்துவது கஷ்டம்… ட்யூன் நன்றாக இருக்க வேண்டும்.. பாடல் காந்தம் போல கவர்ந்து இழுக்க வேண்டும். பாடல் வரிகளில் அர்த்தம், கருத்து, புதுமை இருக்க வேண்டும்.
அப்போது எம் ஜி ஆருக்கும் கண்ணதாசனுக்கும் கொஞ்சம் அரசியல் காரணங்களால் மன வருத்தம்.
லடாய். வாலிக்கே பாடல்கள் எழுத வாய்ப்புக்கள் அளித்தார் எம் ஜி ஆர்.
இந்த நேரத்தில் எம் ஜி ஆர், “சரி அவரையே வரச் சொல்லுங்கள்.. எழுதிவிடுவார்.” எனப் பெயரைச் சொல்லாமல் சொல்ல கண்ணதாசன் அதோ அந்த பறவை போல எழுதினார். இன்னும் இரண்டு பாடல்களையும் எழுதினார். (நாணமோ, ஓடும் மேகங்களே)
எம் ஜி ஆரின் முதல் இரண்டு ஆல் டைம் சூப்பர் ஹிட் பாடல்கள் எது என்றால் நான் ஆணையிட்டால், அதோ அந்த பறவை போல என்பார்கள்.
எம் ஜி ஆருக்கு ஜோடியாக நடித்த ஜெ அவர்களுக்கு இது எம் ஜி ஆருடன் முதல் படம்… சினிமாவில் இரண்டாவது படம் வெண்ணிற ஆடைக்குப் பின். பிறகு 28 படங்களில் அவருடன் நடித்தார்.
ஆயிரத்தில் ஒருவன் ஷூட்டிங்கில் ஜெ அவர்கள் எம் ஜி ஆர் என்ற எந்த டென்ஷன் பரபரப்பு பயம் இல்லாமல் எதேச்சையாக நடித்தது எம் ஜி ஆரைக் கவர்ந்தது.
“பானுமதி அவர்களுக்குப் பிறகு இப்படி துணிச்சல் மிக்கவர் இந்தப் பொண்ணு தான்” என்று பாராட்டினார்.
ஜெ அவர்கள் “நான் அரசியலுக்கு அடி எடுத்து வைக்க உதவிய படம் அது” என்றார் தன் வாழ்த்துச்செய்தியில்… இரண்டாம் முறை டிஜிடல் வெளியீட்டின் போது.
ஆயிரத்தில் ஒருவன் ஷூட்டிங் கர்னாடகாவில் கார்வார் பகுதிகளில் நடந்தது. அப்போது ஜனவரி 1965ல் தமிழ் நாட்டில் மொழி போராட்டம் நடந்த காலகட்டம்.
எம் ஜி ஆர் தவிர அனைவரும் கைதானார்கள். அண்ணா அவருக்கு விலக்கு அளித்திருந்தார்.
ஆனால் பின்னாளில் எம் ஜி ஆரை விமர்சித்தவர்கள், “இங்கு நாங்கள் போராடியபோது அவர் கோவா, காரவாரில் டூயட் பாடிக் கொண்டிருந்தார்”, என்றார்கள்.
அவரும் வந்து போராட்டத்தில் கலந்து கைதாகி இருந்தால் பந்துலு கதை அவ்வளவு தான்… முடிந்தது.
இந்தப் படத்துக்கு எம் ஜி ஆர் முதலில் பந்துலுவிடம் சம்பளம் பேசவுமில்லை.. முன்னதாக அட்வான்ஸ் பெறவுமில்லை.. படம் வெளியாகி வெற்றி பெற்ற பின் பெற்றுக் கொண்டார்.
இந்த ஒரே படத்தில் பந்துலு பொருளாதார நெருக்கடியில் இருந்து மீண்டுவிட்டார்…
தொடர்ந்து எம் ஜி ஆரை வைத்து 1966 ல் நாடோடி, பறக்கும் பாவை, ரகசிய போலீஸ் 115, 1970ல் தேடி வந்த மாப்பிள்ளை எடுத்தார்.. அனைத்தும் வெற்றி.
இது போல் பலரையும் நிதி நெருக்கடி என்னும் பாதாளத்தில் இருந்து மீட்டவர் எம் ஜி ஆர்.
கல்யாணம் பண்ணிப்பார், வீட்டைக்கட்டிப் பார் என்பார்கள்.. இதில் அடுத்து ஒன்று வரும்.. சினிமா எடுத்து ரிலீஸ் பண்ணிப்பார்..!