எம். ஜி. ஆர் - சிவாஜி காலத்துத் தியேட்டர் கலாச்சாரம்: மறக்க முடியாத நினைவுகள்!

எம். ஜி. ஆர் மற்றும் சிவாஜி காலத்தில் தமிழ் சினிமா தியேட்டர்களில் நிலவிய சுவாரஸ்யமான ரசிகர்களின் மோதல்கள் மற்றும் கலாச்சார நினைவுகளை அறிக.
தியேட்டர் கலாச்சாரம் | MGR Sivaji theatre culture
தியேட்டர் கலாச்சாரம் | MGR Sivaji theatre cultureImage credit: Chatgpt
என்.எஸ்.வி.குருமூர்த்தி

என்.எஸ்.வி.குருமூர்த்தி, ஐம்பது ஆண்டுகளுக்கும் மேலான எழுத்து அனுபவம் கொண்டவர். 1970 முதல் கல்கி, குமுதம், விகடன், தினமணி கதிர், இந்து தமிழ் திசை உள்ளிட்ட இதழ்களில் எழுதி வருகிறார். சிறுவர்மணியில் சுமார் 90 நாடகங்கள் வெளியாகியுள்ளன. எழுத்தாளர் சுஜாதா கையால் பரிசு பெற்றவர்.

Updated on: 
Kalki strip
Kalki strip

எம்.ஜி.ஆர் - சிவாஜி பொற்காலத் திரையரங்கு அனுபவங்கள் எப்படிப்பட்டவை தெரியுமா? ரசிகர்களின் வெறித்தனமான மோதல்கள், சாணியடி கலாச்சாரம், திரைக்குப் பின்னால் நடந்த சுவாரஸ்யமான விவாதங்கள் மற்றும் பழைய பாணி சினிமா தியேட்டர் நினைவுகளின் அசல் பக்கங்கள் இதோ! அன்றைய ரசிகர்களின் கொண்டாட்டங்களை நேரில் பார்த்தது போன்ற ஒரு சிலிர்ப்பூட்டும் நினைவூட்டல் இந்தத் தொகுப்பு.

16.05.1959 ல் வெளியானது வீரபாண்டிய கட்டபொம்மன்.

31.12.1959ல் வெளியானது எம். ஜி. ஆரின் தாய் மகளுக்கு கட்டிய தாலி என்ற படம்.

அந்தக் காலத்தில் சினிமா ரசிகர்கள் பெரும்பான்மையாக சிவாஜி, எம். ஜி. ஆர் என இரு பிரிவுகளாக இருந்தார்கள்.

சிவாஜி ரசிகர்கள் எம். ஜி. ஆர் படம் பார்க்க மாட்டார்கள்.. எம். ஜி. ஆர் ரசிகர்கள் சிவாஜி படம் பக்கமே போக மாட்டார்கள்.

பட ரிலீஸுக்கு முதல் வாரம் வருகிறது என போஸ்ட்டர்கள் ஒட்டுவார்கள்…

ரிலீஸுக்கு முதல் நாள் நாளை முதல் என தியேட்டர்கள் பெயர் குறித்து பெரிய முழு சைஸ் போஸ்ட்டர்கள் ஒட்டுவார்கள் வினியோகஸ்தர்கள்…

ரசிகர்களில் சில தீவிரவாதிகளும் உண்டு. அந்த ரசிகர்கள் கட் அவுட் வைத்து போஸ்ட்டரில் ஆணி அடித்து மாலை போட்டு விடுவார்கள்.

இரவில் சில வில்லங்கமான எதிர் அணி தீவிரவாதி ரசிகர்கள் ஆணிக்கு மேல் சாணி அடித்து விடுவார்கள்…

இவர்கள் அவர் போஸ்ட்டரிலும்… அவர்கள் இவர் போஸ்ட்டரிலும்.

இந்த உறியடி போன்ற சாணியடி கலாச்சாரம் எம். கே. டி பாகவதர், பி. யு. சின்னப்பா காலத்தில் கிடையாது.. எம் ஜி ஆர் சிவாஜி காலகட்டத்தில் ஆரம்பம் ஆகி சூப்பர் ஸ்டார், உலக நாயகன் பட ரிலீஸ் காலம் வரை இருந்தது.

தல தளபதி காலத்தில் மறைந்து விட்டது… முக்கிய காரணம்.. இங்கும் ரசிக தீவிரவாதிகள் இருந்தார்கள்… ஆனால் சாணி கிடைக்கவில்லை… ஏனென்றால் மாடுகள் வளர்ப்பது குறைந்து விட்டது.

ஒரு மாதிரியான விரோதம் நிலவும் பனிப் போர் போல. சிவாஜி எம். ஜி. ஆர் ரசிகர்களிடம் இருக்கும், அப்போது.

சிவாஜி படங்களில் தேசம் தேசீயம், கதர், காமராஜர் புகழ் பாடுவார்…கண்ணதாசன் எழுதி.

எம். ஜி. ஆர் படங்களில் திராவிடம், கழகம், கடமை, கண்ணியம் அண்ணா இதெல்லாம் பாடுவார்.. வாலி எழுதி.

இருவருக்கும் பாடுவது டி எம். எஸ் தான்… அவர் பாடு தான் திண்டாட்டம். வெகுநாள் வரை இருவரைப் பற்றியும் மீடியாவில் ஒரு சின்ன கருத்து கூட சொல்லவில்லை டி. எம். எஸ்.

ஒரு முறை தவறி ஒரு எம். ஜி. ஆர் ரசிகர் வீர பாண்டிய கட்டபொம்மனைப் பார்த்து விட்டார். குடும்பத்துடன் போக வேண்டிய சூழ்நிலை.

தியேட்டர் கலாச்சாரம் | MGR Sivaji theatre culture
தியேட்டர் கலாச்சாரம் | MGR Sivaji theatre cultureImage credit: Chatgpt

வந்து தன் நண்பர்களுடன் விவாதித்தார் படத்தைப் பற்றி.

“என்னாடா படம்.. கடைசியில் கட்ட பொம்மனை தூக்கில் போடறாங்க… இதே எம். ஜி. ஆரா இருந்தால் பானர்மேனை பந்தாடி தூக்கில் மாட்டி விட்டு, ஜக்கம்மாளுடன் குதிரையில் பாட்டு பாடிக்கிட்டு போய்க்கிட்டே இருப்பார்.. படம் எடுக்கத் தெரியாதவனுங்க.”

வரலாற்றுப் படத்தை எல்லாம் இஷ்டத்துக்கு எடுக்க முடியாது முடிவை மாற்றி, என்றெல்லாம் கவலைப் பட மாட்டார் அந்த ரசிகர்.

எம். ஜி. ஆர் எப்போதும் இறுதியில் வெல்ல வேண்டும் அவருக்கு.

பாசம், மதுரை வீரன் போன்ற படங்களில் எம். ஜி. ஆர் இறந்து போவதாக முடிவு வைத்து விட்டார்கள் தெரியாத்தனமாய்.

மதுரை வீரனாவது ஓடியது… பாசம் சோகம்.. மோசமாகிவிட்டது., வசூலில். ரசிகர்கள் ஒப்புக் கொள்ளவில்லை. சோக முடிவை.

வசந்தமாளிகை படத்தில் யாருக்காக எனப் பாட்டு பாடி சால்வையை போர்த்திக் கொண்டு விஷம் குடித்து சிவாஜி இறப்பதாகத்தான் எடுத்தார்கள்…

ஆனால் விவரமான வினியோகஸ்தர்கள் வேண்டாம் இந்த விஷப் பரிட்சை எனச் சொல்லிவிட்டார்கள். முடிவு மாற்றப்பட்டது.. தக்க சமயத்தில் வாணிஸ்ரீ காரில் வந்து காப்பாற்றிவிட்டார்.. கடைசியில் அவர்கள் சில வரிகள டூயட் பாடுவதாக.. முடித்தார் இயக்குனர். படம் சக்கை போடு போட்டது.

காவியங்கள் எடுக்க ஆசைப்படலாம் டைரக்டர்.. கதைக்கு ஆகாது அந்தக் அமர காவியக் கதை.

வினியோகஸ்தர்களுக்கு தான் தெரியும் ரசிகன் எந்த மூடில் படம் பார்ப்பான் என்று.

இதையும் படியுங்கள்:
உலகமே ஒரு நாடகம்: பாரம்பரிய தமிழ் நாடகங்களின் சுவாரஸ்யமான பக்கங்கள்.
தியேட்டர் கலாச்சாரம் | MGR Sivaji theatre culture

சிவாஜி பாசமலர், கர்ணன், கப்பலோட்டிய தமிழன் போன்ற படங்களில் கிளைமாக்ஸில் அரை மணி நேரமாவது இறந்து.. ஆடியன்ஸை அழவிட்டு, குழந்தைகள் அம்மா மடியில் முகத்தை மூடி அவைகளும் அம்மா அழுவதைப் பார்த்து அழுது..

அம்மா தேற்றுவார்… அழுவாதே.. இது சினிமா தான் என்று.

ஒரு எம். ஜி. ஆர் படம்.. கணவன்.

அதில் டிக்கெட் எடுக்கும் கூட்ட நெரிசலில் மதுரையில் 4 பேர் இறந்து விட்டார்கள்.

பட விமர்சனத்தில் ஒரு வாரப்பத்திரிக்கை இப்படி விமர்சனம் செய்தது.. “இந்தப் படத்துக்கா 4 பேர் செத்தார்கள்”

7 நவம்பர் 1969 ல் ரிலீஸ் ஆன படங்கள் எம். ஜி. ஆரின் நம் நாடு, சிவாஜியின் சிவந்தமண். போட்டா போட்டி.

இதில் தீவிர வாத ரசிகர்கள் செய்த வேலை 4, 5 வாரம் கழித்து டிக்கெட்டுகளை மொத்தமாக வாங்கி கிழித்துப் போடுவது..

இப்படியாக 50 நாட்கள் ஓடின அப்படங்கள் ஹவுஸ் ஃபுல் ஆக.. சிறிய ஊர்களில்…

ரசிகர் மன்றங்கள் செய்ய வேண்டிய வேலைகளில் அதுவும் ஒன்று.

பொதுவாக அப்பா என்பவர் இந்தப் படங்களைப் பார்ப்பதில்லை.. இங்கே வீட்டில் தான் சோகமோ சோகம்.

பிரச்சினைகள்... வெளியே ஆபீஸில்தான் பல நம்பியார்கள், எம் ஆர் ராதாக்கள்… தியேட்டரிலுமா.

இதில் இது போதாது என்று இடையில் குடும்பக் குழப்பங்களை மையமாக வைத்து கே. எஸ் கோபாலகிருஷ்ணன், பாலச்சந்தர் போன்றோர் ஒரு தனி ரூட்டில் போவார்கள்… அவர்களுக்கு ஹீரோ பெரும்பாலும் ஜெமினிதான்.

அங்கு பெண்கள் கூட்டம் அதிகம் இருக்கும். சாவித்திரியோ, சௌகார் ஜானகியோ எதற்காகவோ அழுது, அதைப் பார்க்க விரும்பாத குழந்தைகள் சினிமா ப்ரொஜக்டர் ஒளி வரும் பொந்தை வேடிக்கை பார்க்கும்.

மொஃபஸல் தியேட்டர்களில் எம். ஜி. ஆர் படங்களில் முதலில் டிக்கெட் ஃபுல் ஆவது தரை டிக்கெட்டும் பேக் பெஞ்சும் தான்… பால்கனி ஃபுல் ஆகாது.

பாமர மக்கள்… திரும்பத் திரும்ப பார்ப்பார்கள்.. பாட்டுக்கு என்று ஒரு முறை.. சண்டைக்கு ஒரு தரம்.. காமெடிக்கு ஒரு தரம் என்று.

ஆனால் சிவாஜி படங்களுக்கு முதலில் ஃபுல் ஆவது பால்கனியும், முதல் வகுப்பும் தான். தரை டிக்கெட் நிரம்பாது.

இதையும் படியுங்கள்:
ஹாலிவுட்டில் பொன்னியின் செல்வன்!?
தியேட்டர் கலாச்சாரம் | MGR Sivaji theatre culture

தாத்தா பாட்டிகள் இப்போது எல்லாம் தியேட்டருக்குப் போவதில்லை.

டால்பி, அட்மாஸ், 4 கே தரத்தில் தியேட்டர் மேலே கீழே சைடில் ஸ்பீக்கர்களில் டமால் திடும் படார் டுமீல் சத்தங்கள் தாங்காது…

தாத்தா காதில் சத்தம் விழாது… கொஞ்சம் கேட்கும் திறன் குறைவு. ஆனால் பாட்டிக்கு விழும்.

தவிர பாட்டியின் கருத்து இப்போது வரும் பாதி படங்களில் முதல் பாதி எடுத்துவிடுகிறார்கள் ஓரளவு.. முடிப்பதற்கு தெரியவில்லை என்பார் பாட்டி…

அது தெரிந்தால் டைரக்டர் எடுத்துவிடமாட்டாரா.. தெரியாமல் தானே எப்படியோ இட்டு நிரப்புகிறார்கள் சொச்ச படத்தை.

தமிழ் சினிமாவின் பொற்காலமான எம்ஜிஆர் மற்றும் சிவாஜி காலகட்டத்துத் தியேட்டர் அனுபவங்களையும், ரசிகர்களின் சுவாரஸ்யமான சண்டை கலாச்சாரங்களையும் முழுமையாகத் தெரிந்துகொண்டு, உங்களது பழைய நினைவுகளைப் புதுப்பித்துக் கொள்ளலாம்.