வானம் கறுத்தாலே வயிற்றில் புளி கரைகிறதா? மழையை ரசிக்க முடியாத நம் துயரங்கள்!

மழை என்றாலே உற்சாகம் பொங்க வேண்டியவர்கள், வீட்டுக்குள் நீர் புகுவதாலும் சாலைத் தாழ்வாலும் படும் அவஸ்தைகள் குறித்த அலசல்.
மழை | Rainy season
மழை | Rainy seasonImage credit: Gemini AI
ரெ. ஆத்மநாதன்

ரெ.ஆத்மநாதன், பொருளாதாரம், இதழியல்-மக்கள் தொடர்பியலில் முதுகலைப் பட்டங்கள் பெற்றவர். இவரது 4 நாடகங்கள் வானொலியில் ஒலிபரப்பாகியுள்ளன. அனுபவம் மிக்க எழுத்தாளர்.ஆக்கபூர்வமான கட்டுரைகள், சிந்திக்க வைக்கும் சிறுகதைகள், கவிதைகள் என்று இவரது எழுத்துகள் பல பரிமாணங்களைக் கொண்டவை. கடந்த பல வருடங்களாக கல்கி ஆன்லைனில் எழுதி வருகிறார்.

Updated on: 
Kalki Strip
Kalki Strip

ரசிக்க வேண்டிய மழையை நாம் ஏன் இன்று வெறுக்கத் தொடங்கினோம் என்பதற்கான நிதர்சனமான காரணங்களையும், அதற்கான சிறந்த தீர்வுகளையும் முழுமையாக அறிந்துகொள்ளத் தொடர்ந்து படியுங்கள்!

இயற்கையின் மிக அற்புதப் படைப்புகளில் மழையே முதன்மையானது என்பதே உண்மை. ஓரறிவு தொடங்கி ஆறறிவு உயிர்கள் வரை, அத்தனையையும் வாழ்விப்பதும், வளரச் செய்வதும் மழையே! முன்பெல்லாம் அந்த மழை நாடு முழவதும் பரவலாக மாதத்திற்கு மூன்று முறை போதுமான அளவு பொழிந்து, பசுமையையும் செழுமையையும் வளர்த்து வந்தது. அதனால்தான் இன்றைக்கும் நமது வரலாற்று நாடகங்களில், அரசசபை கூடியதும், மந்திரியைப் பார்த்து மன்னர் கேட்கும் முதல் கேள்வியாக, ”அமைச்சரே! நாட்டில் மும்மாரி குறைவின்றிப் பெய்கிறதா?” என்பது உள்ளது.

    “மழையே மழையே வருவாயே!

      வளரும் பயிரைத் தருவாயே!”

என்று பிஞ்சு உள்ளங்களிலும், மழையின் பெருமையைப் போற்றிப் பாதுகாக்கும் எண்ணங்களை விதைக்கப் பாடல்கள் இயற்றினார்கள்.

மக்கள் விரும்பிப் பார்க்கும் திரைப்படங்களிலும் மழைப் பாடல்களை நிறையவே வைத்து, ரசனையைக் கூட்டினார்கள். பனியோ, பனி சறுக்கு விளையாடல்களோ இல்லாத நம் தமிழ் நாட்டில், முன்பெல்லாம் மழையில் நனைந்தே அந்த உற்சாகத்தைச் சிறுவர்கள் அடைந்தார்கள்.

ஐப்பசி, கார்த்திகை மாத அடைமழைக் காலங்களில் வெளியே மழையில் நனைந்தபடி விளையாடத் துடிக்கும் பாலகர்களை, வீட்டிற்குள்ளேயே இருக்க வைக்கப் பெற்றோர்கள் படாதபாடு பட்டார்கள். இப்பொழுதும் குழந்தைகள் மழையை முழுதாக ரசிக்கவே ஆசைப்படுகிறார்கள். பாவம் அவர்கள்!

இதையும் படியுங்கள்:
மனிதனும் நாயும்: ஆதி காலம் முதல் இன்று வரை - நாய்கள் பற்றிய சுவாரஸ்யமான வரலாறு!
மழை | Rainy season

முன்பெல்லாம் டெஸ்ட் கிரிக்கெட் போல பல நாட்களுக்கு நீண்டு பெய்த மழை, பின்னர் 50 ஓவர் ஒரு நாள் கிரிக்கெட் போல மாறி, ஒரே நாளில் கொட்டித் தீர்க்கும் பழக்கத்திற்கு வந்தது. இப்பொழுதோ, அதுவும் மாறி 20 ஓவர் கிரிக்கெட்போல சில மணி நேரங்களிலேயே தன் பணியை முடித்துக் கொண்டு ரெஸ்ட் எடுக்கப் போய் விடுகிறது.

அது இன்னும் சுருங்கி 10 ஓவர் கிரிக்கெட்டாக மாறினாலும், ஆச்சரியப் படுவதற்கில்லை. மழையை ரசிக்கும் மனம் எல்லா வயதினருக்கும், குழந்தையைப் போல் இருந்தாலும், அதனை முழுமையாக அனுபவிக்க முடியாமல் போவதற்குப் பல காரணங்கள் உண்டு.

அவற்றுள் முதன்மை பெறுவது சாலையோரம் இருக்கும் வீடுகளில் உள்ளே புகும் மழை நீர். சொந்த வீட்டில் வாழ வேண்டுமென்பது அனைவரின் நியாயமான ஆசை. அதனை ஈடேற்ற ஒவ்வொருவரும் படும் கஷ்டங்கள் கொஞ்ச நஞ்சமல்ல. கடனை ஒடனை வாங்கி அவர்கள் வீடு கட்டுகையில், ரோட்டை விடச் சற்றே உயரத்தில் தளங்களை அமைத்தே கட்டுகிறார்கள்.

ஆனால்,சாலைகள் மீண்டும், மீண்டும் செப்பனிடப்படுகிறபோது, விதிகளை மீறி உயர்த்தப் படுவதால், சில ஆண்டுகளிலேயே சாலைகள் உயரத்திலும், வீடுகள் தாழ்விலுமாக ஆகி விடுகின்றன.

சிறிதாகப் பெய்யும் மழையில் கூட, நீர் உள்ளே புகுந்து அவர்களின் அமைதியைக் குலைத்து விடுகிறது.

மழை | Rainy season
மழை | Rainy seasonImage credit: Chatgpt

யாம் கண்டவரை, மேலை நாடுகளில் எத்தனை முறை செப்பனிடப்பட்டாலும் சாலைகளின் உயரம் கூடுவதே இல்லை.சாலைச் சீரமைப்பின்போது, முந்தைய லேயரைப் பெயர்த்து எடுத்து விட்டே, புது லேயரைப் பாவுகின்றனர். எனவே அங்கெல்லாம் சாலைகளின் உயரம் எப்பொழுதும் ஒரே நிரந்தரமானதுதான்.

நம் நாட்டிலும் அவ்வாறுதான் செய்ய வேண்டும். ஆனால் பொதுப் பணித்துறை கண்டிப்பு காட்டாததாலோ என்னவோ, பெயர்த்தெடுக்கும் முறையே இன்றி, மேலே மேலே பொருட்களைப் பாவி சாலையை உயரமாக்கி விடுகிறார்கள் நம்மூர் ஒப்பந்ததாரர்கள்.

இதன் மூலம் செலவைக் குறைத்து அதிக லாபம் ஈட்டுகிறார்கள் என்று கூறப்படுகிறது. சிறு குழந்தைகளையும், வயதான பெற்றோர்களையும் வீட்டில் வைத்திருக்கும் ஒருவருக்கு, வானம் கறுத்தாலே வயிற்றில் புளி கரைக்கும் உணர்வு இதனால் தோன்றிட, அவரால் மழையை எப்படி ரசிக்க முடியும் சொல்லுங்கள்!

அடுத்து, மேன் ஹோல்களில் காணப்படும் மேடு, பள்ளங்கள். சிறு மழைக்கே நமது சாலைகள் மூழ்கி விடுகின்றன. பழக்கமான ரோடுகளில் செல்பவர்களுக்கு, ஓரளவுக்கு மேடு, பள்ளங்கள் மனதில் பதிந்திருக்கும்.

நீரோடும் போதும், உஷாராக உள்ளவர்கள் அவற்றைத் தவிர்த்து விடுவார்கள். வெளியிலிருந்து புதிதாக வருபவர்கள் பாடுதான் சிரமம்! மழை நேரங்களில் கொழுநனையும், குழந்தைகளையும் வெளியில் அனுப்பி விட்டு, வீட்டிலிருக்கும் இல்லத்தரசிகள், அவர்கள் வீடு திரும்பும் வரை உயிரைக் கையில் பிடித்துத் தவித்துக் கொண்டிருப்பதை நாமெல்லாம் உணரத்தானே செய்கிறோம். அவர்களால் எப்படி மழையை அனுபவித்து ரசிக்க முடியும்?

ஏழைகளுக்கோ!… இன்னும் ஏகப்பட்ட சிரமங்கள். ஒழுகும் கூரைகள்.

மழையில் நனைந்து, கரைந்து எப்பொழுது வேண்டுமானாலும் விழுவேன் என்று அடம் பிடிக்கும் மண்சுவர்கள். இந்தக் கூத்தில் அவர்களால் மழையை எப்படி அனுபவித்து ரசிக்க முடியும்?

இதையும் படியுங்கள்:
புதிய சட்டத்தின்படி கடுமையான தண்டனை பெற்றுத்தரும் டிராஃபிக் விதிகள் தெரியுமா?
மழை | Rainy season

புதிய அரசாவது இந்தக் குறைகளைக் களைந்திட வழியேற்படுத்தினால் அனைத்து அகவையினரும் மனதில் உற்சாகம் எழுப்பும் மழையை ரசித்திடுவர்.

பெய்யும் மழையை எல்லோரும் ரசிக்கும் நிலையை உருவாக்கினாலே நாட்டில் சுபிட்சம் பெருகி விடும்!

  • எத்தனை முறை செப்பனிட்டாலும் சாலைகளின் உயரம் கூடக்கூடாது.

  • எந்த இடத்திலும் மேன்ஹோல்கள் உயரமாகவோ, தாழ்வாகவோ இருக்கக் கூடாது.

  • குடிசை வீடுகளில் உள்ளோருக்கு, ஒழுகலைத் தடுக்க, தின் பாலிதீன் ஷீட்டுகளை மழைக்கு முன்னர் வழங்கலாம்.

  • பாதாள சாக்கடைகளை மழைக்கு முன்னதாகவே க்ளீன் செய்து, மழை நீர் தேங்காதவாறு பார்த்துக் கொள்ள வேண்டும்.

வசதி, வாய்ப்பு உள்ளவர்கள் எல்லாவற்றிற்கும் அரசு உதவியை எதிர்பார்த்துக் காத்திருக்காது; தங்கள் வீட்டுச் சுவர்களை, கூரையை மழையைத் தாங்கும் விதமாகத் தயார் செய்து கொள்ளல் வேண்டும்.

“ரசிக்க வேண்டிய மழையை வெறுப்புக்கு உரியதாக ஆக்காமல், ரசித்திடும்படிச் செய்யுங்கள்! ப்ளீஸ்!