

தமிழ்நாட்டின் சட்டசபை தற்போது புனித ஜார்ஜ் கோட்டை (Fort St. George) வளாகத்தில் இயங்கி வருகிறது. இங்குள்ள கட்டடம் 17ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்டது. கடலின் அருகில் உள்ள இதற்குப் பேரூந்து மற்றும் ரயில் வசதியும் உண்டு.
கடற்கரைச் சாலை வாகனப் போக்குவரத்திற்கு ஏதுவாக உள்ள நிலையில், கோட்டை ரயில் நிலையமும் அருகில் உள்ளதால், வந்து போவோருக்கு ரயில் பயணமும் எளிதாகிறது.
கலைஞர் தன் ஆட்சிக் காலத்தில், அண்ணா சாலையில், ஓமந்தூரார் அரசு தோட்ட வளாகத்தில் புதிய தலைமைச் செயலகத்தைக் கட்டினார். பின்னர் வந்த முதல்வர் ஜெயலலிதா அவர்கள் அதனைப் பல்நோக்கு மருத்துவமனையாக மாற்றினார்.
தற்போது ஆட்சியிலுள்ள தவெக அரசோ, பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமைச் செயலகத்தை நிர்மாணிக்கப்போவதாக அறிவித்துள்ளது. சுமார் 20 லட்சம் சதுர அடி பரப்பில், ரூ.1,200/- கோடி மதிப்பீட்டில், நவீன வசதிகளுடன் அமையவிருப்பதாகச் செய்திகள் தெரிவிக்கின்றன. இதற்கென சற்றேறக்குறைய 26 ஏக்கர் நிலம் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
சாதாரணமாக இடம் போதவில்லை என்றாலோ, நவீன வசதிகளை ஏற்படுத்த முடியாத சூழல் என்றாலோ, கட்டடம் வலுவிழந்து விட்டது என்றாலோ மட்டுமே புதிய கட்டடம் கட்டுவது குறித்து ஆலோசிப்பதுண்டு. இவற்றையெல்லாம் பின்னுக்குத் தள்ளி விட்டு, கையில் அபரிமிதமான பணம் இருந்தால், நன்றாக இருப்பதைக் கூடச் சிலர் மாற்றியமைப்பதுண்டு. ஆனால் தற்போது செயல்பட்டு வரும் கட்டடம் சில நூற்றாண்டுகள் பழைமையானது என்பதைத் தவிர அதன் பலத்தில் எந்தக் குறைபாடும் இருப்பதாகத் தெரியவில்லை.
பிரிட்டிஷார் காலப் பாலங்களும், கட்டடங்களும் மிகப் பலம் வாய்ந்தவை என்பதை நாம் கண்கூடாகக் கண்டு வருகிறோம். நாம் கட்டும் பாலங்களும் கட்டடங்களுந்தான் திறப்பு விழாவிற்கு முன்பாகவே பல்லை இளித்துப் பழுதாகிப் போகின்றன.
தற்போதைய இடத்தில் வசதிகளிலும் பெருங்குறைபாடுகள் ஏதும் இருப்பதாகவும் இதுவரை செய்திகள் எதுவும் பரவவில்லை. அரசின் நிதிநிலையும் சொல்லிக்கொள்ளும் அளவில் இல்லை. தமிழ்நாட்டின் கடன், சுமார் ஒரு டஜன் லட்சம் கோடியைத் தாண்டியுள்ளதாகச் செய்திகள் பயமுறுத்துகின்றன.
இந்த நிலையில் புதிய கட்டடம் வேண்டுமாவென்ற கருத்து தோன்றுவது இயல்பென்றாலும், அரசியலில் இவையெல்லாம் சகஜம் என்று நாம் ஆறுதல் கொள்ளத்தான் வேண்டும்.
ஏனெனில் இன்றைய அரசியலில் மக்களின் தேவைகள் புறந்தள்ளப்பட்டு, ஆள்வோரின் ஆசைகளே நிறைவேற்றப் படுகின்றன. கட்டடங்கள் கட்டுவதன் மூலம் அரசியல்வாதிகள் தங்கள் பெயரை வரலாற்றில் எளிதாகப் பதிவு செய்துவிடுகிறார்கள்.
சரி! நாம் அரசியலுக்குள் போக வேண்டாம்.
- பட்டினப்பாக்கம் ஏற்கெனவே நெரிசல் மிகுந்த பகுதி.
- சாலைகள் குறுகலானவை; அகலப்படுத்துவதும் எளிதானதல்ல.
- ஒரு பக்கம் கடலால் சூழப்பட்டது.
- நேரடி ரயில் போக்குவரத்தும் இல்லை; பறக்கும் ரயில் சேவை 2, 3 கி.மீ., தள்ளியே உள்ளதாகத் தெரிகிறது. லைட் ஹவுஸ், மந்தைவெளி மற்றும் திருமயிலை ரயில்வே ஸ்டேஷன்களே அவ்வாறு உள்ளவையாம்.
- எல்லாவற்றையும் எளிதில் சரியாக்கி விடலாம் என்ற அறிவிப்புகளை வெளியிடுவார்கள்.
ஆனால், அனுபவமோ வேறு விதமாக இருக்கும். மிகச் சமீபத்திய அனுபவம், கிளாம்பாக்கம் பேரூந்து நிலையம். அடிப்படை வசதிகளை ஏற்படுத்தாமல், அவசரம், அவசரமாகத் திறப்பு விழாவை முடித்ததனால், எத்தனை ஆயிரம் பயணியர் இரவு பகலாக அல்லல்பட்டனர்! ரயில்வே ஸ்டேஷனும், அங்கிருந்து ஜிஎஸ்டியைத் தாண்டும் மேம்பாலமும் இன்னுங்கூட முடிந்ததாகத் தெரியவில்லை.
இந்தித் திணிப்பை எதிர்க்கும் நம் அரசுகள், சென்னையின் நெரிசல்களுக்கு நடுவே கண்டதையும் திணித்து வருவதை நாம் எப்படி ஏற்றுக்கொள்வது?
தமிழ்நாடு என்பது சென்னையோடு மட்டுந்தானா என்ற எண்ணம் இந்தத் திணிப்பால்தான் ஏற்படுகிறது. கன்னியாகுமரி வரை விரிந்து கிடக்கும் நம் தமிழ்நாட்டில், எல்லாவற்றுக்கும் சென்னையை மட்டுமே நம்பியிருப்பது ஏன்?
நாங்கள் படித்த காலத்தில் சென்னை பல்கலைக் கழகம், அண்ணாமலை பல்கலைக் கழகம் என்று சிலவே இருந்தன. இன்றைக்கோ நம் தமிழ்நாட்டில் 59 பல்கலைக் கழகங்கள் செயல்பட்டு வருவதாக விபரங்கள் கூறுகின்றன. அவற்றின் தலைமையிடங்களும் வெவ்வேறு நகரங்களில் உள்ளன.
வளர்ந்து விட்ட விஞ்ஞான முன்னேற்றங்களைப் பயன்படுத்தி இப்பொழுது எவ்வளவோ செய்திடலாம். வினாடிகளில் செய்திகளைத் தொலை தூரங்களுக்கும் அனுப்புதல், வீடியோ கான்பரன்சிங், விரைவான போக்குவரத்து என்று வசதிகள் பெருகிவிட்டன.
எனவே, சென்னையை மட்டும் திக்குமுக்காடச் செய்வது இனி தேவையில்லை. ஒவ்வொரு துறையையும், அதன் செயல்பாடுகள் மிகுதியாக உள்ள இடங்களுக்கு மாற்றினால், பரவலாக்கல் (Decentralisation) தானாகவே ஏற்படும்.
வேளாண் துறையின் தலைமையிடத்தை டெல்டா மாவட்டங்களில் ஒன்றுக்கோ, திருச்சிக்கோ மாற்றலாம். மீன் வளத்துறையை கன்னியாகுமரி, நாகை, தூத்துக்குடி போன்ற மீனவர்கள் அதிகமுள்ள மாவட்டங்களில் அமைக்கலாம். கால் நடை வளர்ப்புத் துறை, காங்கேயம் போன்ற இடங்களிலும், எஞ்சினீரிங் சம்பந்தமானவை கோவையிலும் செயல்படுத்தப்படலாம்.
இப்படி பரவலாக்கலைப் பற்றிய முழுதானகலந்துரையாடல்கள், ஆய்வுகளை மேற்கொண்டு, அவைகளை அதிகம் பயன்படுத்தும் நகரங்களில் அமைத்தால், சென்னையின் நெரிசல் குறையும். ஏரி, குளங்களைத் தூர்த்துக் கட்டடமாக்கி விட்டு, வெயில் காலத்தில் நீருக்காகவும், மழைக் காலத்தில் நீராலும் கஷ்டப்பட வேண்டிய தருணங்களைத் தவிர்க்கலாம். நாட்டின் அனைத்துப் பகுதிகளும் வளர்ச்சியடையவும் இதன் மூலம் வழியேற்படும்.
செங்கல்பட்டு மாவட்டத்தில் மட்டும் மூவாயிரம் ஏரிகளுக்கு மேல் இருந்ததாகவும், அது ஏரி மாவட்டம் என்றே அக்காலத்தில் அழைக்கப்பட்டதாகவும் படித்திருக்கிறோம்.
சென்னையில் 1980களில் ‘ரெட்டை ஏரி’ வட சென்னையில் இருந்தது. புதிதாகச் சென்னை வருவோர் அதையே கடலாக நினைத்ததும் உண்டு. அவ்வளவு பரந்து விரிந்தது அது. மெல்ல அது மறைந்தேவிட்டது.
தற்போது சட்டசபை நடைபெற்று வரும் புனித ஜார்ஜ் கோட்டை வளாகம் ராணுவத்திற்குச் சொந்தமானதென்றும் எனவே அரசு தன் சொந்த இடத்தில் சட்டசபையை அமைத்திடலே முறை என்ற வாதமும் முன் வைக்கப்படுகிறது.
இதை ஏற்றாலுங்கூட, பட்டினப்பாக்கம் சரியான தேர்வாகத் தெரியவில்லை. நெரிசல் அதிகம் இல்லாத, பேருந்து மற்றும் ரயில் போக்குவரத்தும் நெருக்கமாகவுள்ள இன்னும் வசதியான இடத்தைத் தேர்ந்தெடுத்தாலே எந்த நோக்கத்திற்காகப் புதுக் கட்டடம் கட்டுகிறோமோ அது முழுதாக நிறைவேறும்!