சிறுகதை: எங்கிருந்தோ வந்தார்!

தந்தையை துறந்த மகன், திண்ணையில் தங்கிய தந்தை: தலைமுறைகளுக்கிடையிலான பாச இடைவெளியின் வேதனைக் கதை
life lessons - aging parents' care
life lessons -short story in tamilImage credit: AI
Updated on
Kalki Strip
Kalki Strip

ஒரு நாள் காலை, எங்கள் தெருவில் உள்ள ஒரு வீட்டுக்கு முன் இருந்த திண்ணையில் ஒரு வயதானவர் அமர்ந்திருந்தார். வயது இருக்கும் எழுபத்தி ஐந்து. மொட்டை தலை, இடுப்பில் பழுப்பாகிப் போன வெள்ளை வேட்டி. சட்டை கிடையாது; தோளிலிருந்து தொங்கியது ஓர் கட்டம் போட்ட துண்டு. குளித்து, நெற்றியில் விபூதி அணிந்து சுத்தமாக காட்சி தந்தார். அணிந்திருந்த ஆடைகளை தவிர, ஒரு வேட்டியையும் துண்டையும் மாறு துணியாக ஒரு மஞ்சள் பையில் வைத்திருந்தார். அவ்வளவுதான். இப்படித்தான் அவர் அறிமுகம்.

அந்த வீட்டிலிருந்த 80 வயது கணவனை இழந்த மாமிக்கு அவர்மேல் வந்தது பச்சாதாபம். ஊர், பேர் எதுவும் கேட்காமல், "நீங்கள் திண்ணையில் தங்கி கொள்ளலாம்," என்றார் பரிவுடன். அதோடு நிற்கவில்லை; ஒரு பாயும், போர்வையும், ஒரு சின்ன தலைகாணியும் கொடுத்தார். பெரியவர் பதில் ஒன்றும் கூறவில்லை; கைகளை மட்டும் கூப்பினார். நாங்கள் இருந்த 48 வது தெருவில் தொடங்கியது அவரது அந்திம அத்தியாயம்.

இதையும் படியுங்கள்:
சிறுகதை: காதல் காட்டாறு!
life lessons - aging parents' care

மாமிக்கு மட்டுமில்லாமல், அந்த தெருவில் இருந்த பலருக்கு கடைக்கு போவது, பால், தயிர், காய்கறி வாங்குவது போன்றவைக்கு ஒத்தாசை செய்ய ஆரம்பித்தார். காலை ஐந்து மணிக்கே எழுந்து வீட்டை சுற்றி பெருக்கி விட்டு, தோட்ட குழாயில் ஸ்நானம் செய்வார். இருந்த இரண்டு வேட்டிகளில் ஒன்றை கட்டுவார், ஒன்றை பிழிந்து போடுவார். அங்குமிங்கும் அவரை அக்கம் பக்கத்தினர் அனுப்புவர்; முகம் சுளிக்காமல் போய் வருவார். அஞ்சோ, பத்தோ கிடைக்கும். அவரை பார்க்கும் போதெல்லாம் "யார் இவர்? திண்ணையில் வாழ்கிறார். யாரும் இல்லையா இவருக்கு? எங்கிருந்து வந்தார்?" என்று கேள்விகள் எழும். ஆனால், அவர் யாரிடமும் பேசி பார்க்கவில்லை.

கோடை வந்தது; கத்திரி வெயில் கொளுத்தியது. தாங்க முடியாமல் உஷ்ணம், அருகில் உள்ள மருந்து கடையில் அடைந்தார் தஞ்சம். கடைக்காரர் பெயரும் தங்கம், மனமும் தங்கம். அவர் முதியவரிடம் சொன்னார், "நீங்கள் எங்கேயும் போக வேண்டாம், இங்கேயே மத்தியானத்தில் தங்கிக்கோங்க."

நான் மருந்து வாங்க போகும் போதெல்லாம் ஒரு ஸ்டூலில், மூலையில் அமர்ந்திருப்பார். அவரிடம் ஒரு பழைய மொபைல் வைத்து கொண்டிருப்பார். அப்போதைக்கப்போது அந்த தெருவில் உள்ளவர் அவரை அழைப்பார்கள், வேலை கொடுப்பார்கள். இரண்டு வேளை தான் சாப்பிடுவார். காலை மாமி வீட்டில் தோசையோ, இட்லியோ கிடைக்கும். மதியம் தட்டு கடையில் கை நனைப்பார். டீ கடை நாயர் தரும் பண்ணும் டீயும் தான் டின்னர்.

இரண்டு, மூன்று மாதங்கள் வெளியூரில் இருந்து விட்டு வந்தவன், வழக்கம் போல மருந்து கடைக்கு மாத்திரைகள் வாங்க சென்றேன். கடையின் மூலையில் இருந்த ஸ்டூல் காலியாக, வெறிச்சோடிருந்தது. "எப்படி இருக்கார் பெரியவர்?" என்றேன்.

"அவர் போய் ஒரு மாதம் ஆயிடுச்சு. அதுவும் நம்ம கடையில் தான், அந்த ஸ்டூலில் உட்கார்ந்தபடி போய் விட்டார். அவருக்கு யார், எங்கு இருக்காங்க என்று புரியாத நாங்க, அவர் இடுப்பில் செருகியிருந்த அந்தக் கால பொக்கை வாய் மணி பர்சை திறந்து பார்த்தோம். அதில் கிடைத்தது ஒரு பிளாக் அண்ட் வொயிட் புகைப்படம்; அதில் அவரோடு புடவையை இழுத்து போர்த்தியவாறு இருந்தது அவர் மனைவியாகத்தான் இருக்கணும். ஒரு நைந்த காகிதமும் இருந்தது. அதில் எழுதியிருந்தது ஒரு மொபைல் எண். அந்த எண்ணுக்கு கால் செய்த போது ஒருவர் எடுத்தார்.

இதையும் படியுங்கள்:
சிறுகதை: ஜோதியம்மாள் குடும்பம்!
life lessons - aging parents' care

நிலைமையை எடுத்துச் சொன்னோம். சிறிது நேர மவுனத்திற்கு பின்னே எதிர் முனையில் இருந்தவர் பேசினார்: 'சார், நான் மணிகண்டன். டெல்லியில் இருக்கிறேன். தயவு செய்து அவர் உடலை நீங்களே தகனம் செய்ய ஏற்பாடு செய்யுங்கள். என்ன செலவாகிறதோ அதை அனுப்பி விடுகிறேன்.'

'முதலில் சொல்லுங்கள் அவர் யார்? எந்தவூர்? என்ன பெயர்? என்னவாக இருந்தார் உங்களுக்கு? என்ன ஆகணும் அவர்?' என்றேன் எரிச்சலுடன். பதில் எதுவும் வரவில்லை, போனை கட் செய்துவிட்டார். நானே பெரியவருக்கு செய்ய வேண்டியதை எல்லாம் செய்தேன்," சொல்லி முடித்தார் மருந்து கடை ஓனர் முத்துகிருஷ்ணன்.

நான் விஷயத்தை அப்படியே விடவில்லை. பெரியவர் சீட்டில் இருந்த எண்ணை வாங்கி, விடாமல் போன் செய்தேன். முதலில் ஒத்துழைக்க வில்லை.

"அவர் மகன் தந்தையை கை விட்டதற்காக புகார் செய்வேன்," என்று சொன்ன பிறகு தான் இறங்கி வந்தான்; கக்கினான் முழு விவரம்.

பெரியவர் பெயர் ராமச்சந்திர அய்யர். டிபன் கடை வைத்து, பையனை படிக்க வைத்து, நல்ல வேலையில் அமர்த்தினார். கல்யாணமாச்சு, மாட்டுப்பெண் வந்தா. மாமியாரையும் மாமனாரையும் முட்டோ முட்டுன்னு முட்டி, வீட்டை விட்டே துரத்தினா. தனியாக இருந்தாங்க வயதான தம்பதிகள்.

இதையும் படியுங்கள்:
சிறுகதை : காத்திருப்பு : ஒரு வீரவணக்கம்!
life lessons - aging parents' care

ஜோடியில் ஒரு புறா விண்ணுலகுக்கு பறந்து விட்டது. ஒரு புறா எல்லாவற்றையும் விட்டு விட்டு குடந்தையிலிருந்து சென்னை வந்துவிட்டது. அவர் ஏன் யாரிடமும் பேசவில்லை என எனக்கு புரிந்தது. தியாகத்திற்கு பரிசாக சொந்த மகனிடமிருந்து துரோகம் கிடைத்தால் பேச்சு எப்படி வரும்?

பெரியவர் போனதில் எனக்கு வருத்தம் இல்லை; என்னுடைய வருத்தமெல்லாம் தலைமுறைகளுக்கிடையே இடைவெளி இருக்கலாம், ஆனால் அதுவே பாவ படு குழி ஆகிவிடக்கூடாது என்பதுதான்.

logo
Kalki Online
kalkionline.com