

சிலரது பெருமை மற்றும் அருமை அவர்கள் இருக்கும்போது தெரியாது. அவர்கள் மறைந்துவிட்டால்தான் நமக்கு அவரது அருமை, பெருமை தெரியவரும்.
நான் பேசுவது 1960-70களில் நடந்தவை பற்றிதான். அப்போது எனக்குப் பள்ளிப்பருவம். நான் ஜோதியம்மாளை அத்தை என்றுதான் கூப்பிடுவேன். அவருக்கு 5 குழந்தைகள்: 1. ராஜு, 2. ஜெயராம், 3. வசந்தி, 4. குமார், 5. கிரி. அவரது கணவர் பெயர் தாசப்பா, அமைதி நிறைந்தவர். அவர் விறகு விற்கும் வியாபாரம் செய்தவர். அவர் காலத்தில் கேஸ் இல்லை, எல்லாம் அடுப்புதான்; எனவே, தாசப்பா நிறையவே சம்பாதித்தார். அதிகமாக கருப்பு காபி குடிப்பார், சிகரெட்டும் உண்டு.
எப்படியோ வசந்திக்கு நல்ல இடத்தில் கல்யாணம் செய்து வைத்தார்கள்; பெங்களூருக்கு சென்று விட்டார். ஜோதியம்மாள் கர்நாடகாவைச் சேர்ந்தவர், அவர்கள் பல வருடங்களுக்கு முன்பே ஊட்டி வந்துவிட்டார்கள். அவர்கள் தமிழில்தான் பேசுவார்கள்.
ஜோதியம்மாளுக்கு ஒரு சிறப்பு இருந்தது. யாருக்குச் சுளுக்கு பிடித்தாலும் தேங்காய் எண்ணெய் போட்டு நன்கு நீவி விடுவார்; ஒரு 10…15 நிமிடங்கள்தான் சிகிச்சை, எல்லாம் சரியாகிவிடும். அவருக்கு என் மீது அளவு கடந்த பாசம். பண்டிகை… யுகாதி வந்தால்… ஒரு பெரிய தகர தட்டில் போளியை தட்டி அடுப்பில் சுடுவார்.
அம்மம்மா…அப்பப்பா…என்ன சுவை…!
நான் இரண்டு சாப்பிட்டு விடுவேன். பசி எடுக்கவே எடுக்காது.
லீவ் நாட்களில் குமார், ஜெயராம் மற்றும் கிரி சினிமா செல்வார்கள்; 60 பைசா டிக்கெட். நானும் போவேன். பல முறை பல்வேறு சினிமாவுக்கு காசு கொடுத்து வந்தார். என் அம்மாவை ஜோதியம்மாளுக்கு ரொம்பப் பிடிக்கும். பூங்கா, படகு இல்லம், தொட்டாபெட்டா என்று நன்கு சுற்றி இருக்கிறார்கள்; ஒரு சினிமா விட்டு வைக்க மாட்டார்கள். சிவராத்திரி அன்று ஒரு டிக்கெட்டில் இரவு 3 சினிமா காட்டுவார்கள்; நானும் அவர்களுடன் போவேன்.
நான் இன்னும் விஷயத்திற்கே வரவில்லை...
ஜோதியம்மாள் பசங்க நன்று படிக்கவில்லை. ராஜூ, ஜெயராம், குமார் மற்றும் கிரி யாருமே படிப்பில் கவனம் செலுத்தவில்லை; எப்போதும் விளையாட்டு, சினிமா என்றே பொழுதை போக்கினார்கள். எங்கள் வீட்டில் எல்லோரும் படிப்பில் கவனம் செலுத்தி படித்து வந்தோம். ஜோதியம்மாளுக்கு இது ஒரு பெரிய வருத்தம்.
ராஜூ பள்ளிப்படிப்பைக்கூட முடிக்கவில்லை. ஜெயராம் எலி பிடிப்பதில் சூரர்; அவரும் பள்ளிப்படிப்பை முடிக்கவில்லை. குமார் மட்டும் எஸ்.எஸ்.எல்.சி தேர்வு பெற்றார்; ஆனால், அவரும் தொடர்ந்து கல்லூரி சென்று படிக்கவில்லை. கிரியை கேட்கவே வேண்டாம்; சாப்பாடு மற்றும் சினிமாதான் அவர் ஜோலி.
இப்போது குமார் ஒரு தனியார் கம்பெனியில் பியூனாக வேலை செய்து ஒய்வு பெற்றார்; அவருக்கு மட்டுமே கல்யாணம் நடந்தது. ஆனால், ஊட்டியின் மையப் பகுதியான கிரீன் ஃபில்ட்ஸ் பகுதியை விட்டு, ஊட்டி புறநகர் காந்தல் எனும் சேரிக்குப் போனார். கிரி இப்போது ஊட்டி மார்க்கெட்டில் கூலியாளாக வேலை பார்கிறார். ஜெயராம் எந்த வேலைக்கும் போகவில்லை. ராஜூ இறந்து போயிருக்கலாம், வயது அதிகம். வசந்தி மட்டுமே நன்றாக இருக்கிறார்.
3 ஆண்களும் படாத பாடுபடுகிறார்கள். எப்படி வாழ்ந்த குடும்பம்…? நடுத்தர வர்க்கம் என்று மேல்தட்டு இடத்தை விட்டுவிட்டு, வறுமைக் கோட்டிற்கும் கீழே வந்துவிட்டார்கள்.
காரணம் என்ன…? கல்வியை மறந்ததே…!