உயிருடன் இருக்கும்போதே இறுதிச் சடங்குக்கு ஆன்லைன் புக்கிங்! டிரெண்டாகும் புதிய சேவை!

உயிருடனிருக்கும்போதே இறுதிச் சடங்கு புக்கிங்! ஆன்லைன் சேவைகளின் வரவேற்பும் விமர்சனமும்
இறுதிச் சடங்கு | funeral function
இறுதிச் சடங்கு | funeral functionImage credit: Chatgpt
கவிதா பக்கிள்

கவிதா பக்கிள், பிரபல நாளிதழில் 14 ஆண்டுகள் Content Writer-ஆகப் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். தற்போது கல்கி ஆன்லைனில் செய்திகள், விளையாட்டு, சினிமா, கலை, ஆன்மிகம், யோகா ஆகிய பிரிவுகளில் வாசகர்களுக்குப் பயனுள்ள கட்டுரைகளை எழுதி வருகிறார்.

Updated on: 
Kalki Strip
Kalki Strip

இந்தியாவில் இறுதிச் சடங்குகளை ஆன்லைனில் முன்பதிவு செய்யும் சேவைகள் (Online Funeral & End-of-Life Care Services) சமீப காலமாக வேகமாக வளர்ந்து வருகின்றன. குறிப்பாக, உயிருடன் இருக்கும்போதே தங்களது இறுதிச் சடங்குகளுக்காக முன்கூட்டியே பணம் செலுத்தி முன்பதிவு செய்யும் (Pre-booked / Pre-paid funeral packages) புதிய நடைமுறையும் தற்போது மக்களிடையே கவனம் பெற்று வருகிறது.

பொதுவாக ஒரு குடும்பத்தில் மரணம் நிகழ்ந்துவிட்டால், அது அந்த குடும்பத்தை பாதிப்பதுடன், அந்த துக்கத்தில் இருந்து மீள்வதற்கே பல நாட்கள் ஆகும். ஒரு குடும்பத்தில் ஏற்படும் இழப்பு என்பது வார்த்தைகளால் விவரிக்க முடியாத மிகப்பெரிய வலி; அதிலிருந்து மீள்வதற்குப் போதிய கால அவகாசம் தேவைப்படுவது மிகவும் இயல்பானது. இப்படிப்பட்ட இக்கட்டான சூழலில் குடும்பத்தினரின் சுமையைக் குறைக்கும் வகையில் வித்தியாசமான தொழில் முயற்சி ஒன்றைத் தொடங்கி அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளார் ஸ்ருதி ரெட்டி (Shruthi Reddy) என்ற இளம்பெண்.

ஒருவர் மறைந்த பிறகு, ஆம்புலன்ஸ் மற்றும் ஆட்களை ஏற்பாடு செய்வது, சடங்குப் பொருட்களை வாங்குவது, புரோகிதரை அழைப்பது எனப் பல வேலைகள் உடனடியாகத் தேவைப்படும். இழப்பின் வலியில் தவிக்கும் ஒரு குடும்பத்திற்கு இந்த ஏற்பாடுகள் அனைத்தையும் செய்வது பெரும் சவாலாகவும், கடைசி நேர அலைச்சலாகவும் மாறுகின்றன. இதற்கு எளிய தீர்வு காண நினைத்த ஸ்ருதி ரெட்டி என்ற இளம்பெண் 'அந்தியேஷ்டி' (Anthyesti) என்று பெயரிடப்பட்ட அவரது நிறுவனத்தின் மூலம், இறுதிச் சடங்கு ஏற்பாடுகள் அனைத்தையும் ஒரே இடத்தில் ஒருங்கிணைத்துத் தரும் ஆன்லைன் சேவையை (Online Funeral Services) நடத்தி வருகிறார்.

இந்தச் சேவையின் சிறப்பம்சமே, இறுதிச் சடங்குகளுக்குத் தேவையான பல்வேறு ஏற்பாடுகளையும் ஒரே நிறுவனத்தின் மூலம் பெற்றுக்கொள்ள முடியும் என்பதுதான்.

இதையும் படியுங்கள்:
பிதாகரஸ் தேற்றம் மற்றும் நியூட்டனின் மூன்றாம் விதி சொல்லும் வாழ்க்கைப் பாடம் என்ன?
இறுதிச் சடங்கு | funeral function

இந்தச் சேவையின் முக்கிய சிறப்பம்சங்கள்:

இறந்தவரின் உடலைச் சுமந்து செல்ல நான்கு நபர்கள் முதல் அமரர் ஊர்தி (Hearse van), குளிர்பதனப் பெட்டி (Freezer box), இறுதிச் சடங்குக்கு தேவையான பூக்கள், பூஜைப் பொருட்கள், புரோகிதர் மற்றும் தகனம் செய்வதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் இவர்களே செய்து தருகின்றனர்.

இதன் மூலம் துக்கத்தில் இருப்பவர்களுக்கு ஒவ்வொரு காரியத்திற்கும் தனித்தனியாக ஆட்களைத் தேடி அலைய வேண்டிய அவசியம் குறைவதுடன், மனஉளைச்சலும் இருக்காது.

அஸ்தி கரைப்பது, 10 முதல் 13-ம் நாள் காரியங்கள் (Shraddh ceremonies) மற்றும் இறப்புச் சான்றிதழ் பெறுவதற்கான வழிகாட்டுதல்களும் இதில் அடங்கும்.

ஒருவர் உயிரோடு இருக்கும்போதே தனது இறுதிச் சடங்கு எப்படி நடக்க வேண்டும் என்பதைத் தீர்மானித்து முன்பதிவு செய்யும் வசதியையும் சில நிறுவனங்கள் அறிமுகப்படுத்தியுள்ளன.

இறுதிச் சடங்கு | funeral function
இறுதிச் சடங்கு | funeral functionImage credit: Chatgpt

பொதுவாக இறப்பு மற்றும் இறுதிச் சடங்குகள் தொடர்பான விஷயங்களைத் தொழிலாக முன்னெடுப்பதற்குப் பலரும் தயக்கம் காட்டுவார்கள். ஆனால், மக்களின் நிஜத் தேவையைக் கூர்ந்து கவனித்த ஸ்ருதி ரெட்டி, அந்தத் தயக்கத்தைக் கடந்து அதையே ஓர் அர்த்தமுள்ள சேவையாக மாற்றியமைத்துள்ளார்.

இவர் எடுத்துள்ள இந்த முயற்சி இழப்பின் வலியில் வாடும் குடும்பங்களுக்கு ஆறுதல் அளிப்பதோடு, பிரிந்தவர்களுக்கு உரிய கண்ணியத்துடன் இறுதிச் சடங்குகளைச் செய்யும் பணிகளையும் எளிதாக்குகிறது.

குடும்பத்தில் ஒருவர் உயிரிழக்கும் துயரமான நேரத்தில், வெளியாட்களிடம் பேரம் பேசுவதையும், சடங்குகளுக்கான பொருட்களைத் தேடி அலைவதையும் இந்தச் சேவை தவிர்க்கிறது.

குறிப்பாக, தனியாக வசிக்கும் முதியவர்களுக்கும், வெளியூரில் இருக்கும் வாரிசுகளுக்கும் இது மிகப்பெரிய உதவியாக இருப்பதாகப் பலரும் பாராட்டுகின்றனர்.

மாறுபட்ட சிந்தனையுடன் தொடங்கப்பட்டுள்ள இந்த ஸ்டார்ட்-அப், சமூக வலைதளங்களிலும் தொழில்முனைவோர் வட்டத்திலும் கவனம் பெற்றுள்ளது.

பொதுவாக உற்றார் உறவினர்கள் வெளிநாடுகளிலோ அல்லது வெளியூர்களிலோ இருக்கும் சூழலில், குடும்பத்தில் ஒருவர் இறந்துவிட்டால் துக்கத்தில் இருக்கும் குடும்பத்தினரால் உடனடியாக அனைத்து ஏற்பாடுகளையும் செய்வது மிகவும் சவாலானது. அத்தகைய இக்கட்டான நேரத்தில், ஒரு குடும்ப உறுப்பினரைப் போல உடனிருந்து அனைத்துப் பொறுப்புகளையும் ஏற்றுக்கொள்ளும் இந்தச் சேவைக்குப் பலரும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.

அதேசமயம், இக்கட்டான சூழலுக்குத் தொழில்நுட்பத் தீர்வு தந்த ஸ்ருதி ரெட்டியின் முயற்சிக்குப் பலரிடமிருந்தும் பாராட்டுகள் குவிந்து வருகின்றன.

‘மறைவு என்பது வாழ்க்கையின் ஒரு தவிர்க்க முடியாத பகுதி. அதை மிகுந்த தொழில்முறைத் திறனுடனும், நிதானத்துடனும், கண்ணியத்துடனும் கையாள வேண்டும்’ என்று கூறுகிறார் ஸ்ருதி. ‘நாங்களும் எங்கள் குழுவினரும் அமைதியாகவும், உணர்வுப்பூர்வமாகவும், மற்றவர்களின் துயரத்தைப் புரிந்துகொள்ளும் மனப்பான்மையுடனும் செயல்படுவதற்கே முன்னுரிமை அளிக்கிறோம்’ என்றார்.

32 வயதான ஸ்ருதி ரெட்டியின் 'அந்தியேஷ்டி' (Anthyesti) என்று பெயரிடப்பட்ட அவரது நிறுவனம், தொடங்கப்பட்ட ஓராண்டு காலத்திற்குள்ளேயே 16 லட்சம் ரூபாய் வருவாயை ஈட்டியுள்ளது. கொல்கத்தாவில் இத்தகைய சேவையை வழங்கும் முதல் நிறுவனம் இதுவே ஆகும்.

இதையும் படியுங்கள்:
டெல்டா முதல் டாஸ்மாக் வரை: எங்கே செல்கிறது நம் நாடு?
இறுதிச் சடங்கு | funeral function

டெல்லி, மும்பை, பெங்களூரு மற்றும் சென்னை போன்ற பெருநகரங்களில் பல நிறுவனங்கள் இச்சேவையை வழங்குகின்றன. உதாரணமாக, டெல்லியைச் சேர்ந்த Moksha Voyage, Last Journey போன்ற நிறுவனங்களும், சென்னையில் Pitru Karma, Sorga Vasal மற்றும் Last Ride Funeral போன்ற அமைப்புகளும் 24 மணி நேர ஆன்லைன் மற்றும் தொலைபேசி சேவைகளை வழங்குகின்றன. அடிப்படைத் தேவைகளைப் பொறுத்து சுமார் ரூ.6,000 முதல் ரூ.1.50 லட்சம் வரை பல்வேறு தொகுப்புகள் (Packages) அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.

பெருநகரங்களில் தனிக் குடும்பங்கள் அதிகரித்து வருவதாலும், வெளிநாடுகளில் வசிப்பவர்கள் தங்கள் உறவினர்களின் இறுதிச் சடங்குகளைச் சிரமமின்றி நடத்த விரும்புவதாலும், இந்தத் துறை தற்போது ஒரு ஒழுங்கமைக்கப்பட்ட சேவைத் துறையாக (Organized Sector) வளர்ந்து வருகிறது.

இந்தப் புதிய மாற்றம் குறித்துச் சமூகத்தில் இருவேறு கருத்துகள் நிலவுகின்றன:

ஒருபுறம் நகரமயமாக்கல் மற்றும் அவசர உலகில், தனிமையில் வாடும் முதியவர்களுக்கும் வெளிநாட்டில் உள்ள பிள்ளைகளுக்கும் இது ஒரு நடைமுறைத் தீர்வாகவும் கண்ணியமான வழியனுப்பலாகவும் பார்க்கப்படுகிறது.

மறுபுறம், உறவுகளின் உணர்வுப்பூர்வமான கடமையையும் மதச் சடங்குகளையும் கூட கார்ப்பரேட் நிறுவனங்கள் வணிகமயமாக்குவது சரியா என்ற விமர்சனமும் ஒரு தரப்பினரால் முன்வைக்கப்படுகிறது.

தொழில்நுட்பம் வளர்ந்து வரும் இன்றைய உலகில், அனைத்தும் நம் விரல் நுனியில் வந்துவிட்டன. ஆனால், அதே வேகத்தில் மனித உறவுகளுக்கு இடையிலான பாசமும், பொறுப்புணர்வும் மெல்ல மெல்ல விலகிச் செல்வது வேதனையான உண்மை.

இன்றைய அவசர உலகில், வயதான பெற்றோரை வீட்டில் வைத்துப் பராமரிப்பதைப் பலரும் ஒரு சுமையாகப் பார்க்கத் தொடங்கிவிட்டனர். "நேரமில்லை", "வசதியில்லை" என்ற காரணங்களுடன் முதியோர் இல்லங்களில் சேர்த்துவிட்டு, தங்களின் கடமை முடிந்துவிட்டதாக எண்ணும் மனநிலை அதிகரித்து வருகிறது.

இன்றைய நிலை இப்படியே தொடர்ந்தால், நாளை பெற்றோரின் இறுதிச் சடங்குகளையும், கடமைகளையும் கூட ஆன்லைன் சேவைகள் மூலமாகவோ அல்லது பிறர் மூலமாகவோ முடித்துக்கொள்ளும் ஒரு இயந்திரத்தனமான காலம் உருவாகிவிடுமோ என்ற அச்சம் எழுகிறது.