அரசு சேவைகள் ஆன்லைனில் வந்துவிட்டன.! மக்கள் வாழ்க்கை எளிதாகிவிட்டதா?

ஆன்லைனில் விண்ணப்பித்த பிறகும் அரசு சேவைகள் பெற அரசு அலுவலகங்களுக்கு மக்கள் அலைவது ஏன்? துறைகளின் ஒருங்கிணைப்பும் தீர்வும் குறித்த விரிவான அலசல்.
அரசு சேவைகள் | online Government Services
அரசு சேவைகள் | online Government ServicesImage credit: Chatgpt
வை. கோபி சுவாமிநாதன்

புதுச்சேரியைச் சேர்ந்த ஓய்வு பெற்ற அரசு தலைமை தகவல் தொழில்நுட்ப அதிகாரி. முப்பது ஆண்டுகளுக்கும் மேலான அரசு சேவைக்குப் பிறகு, தற்போது எழுத்து, தொழில்நுட்பம், சமூகப் பார்வை ஆகியவற்றில் ஆர்வத்துடன் இயங்கி வருகிறார். தொழில்நுட்பம், சமூக மாற்றங்கள், புதிய இயல்பு நிலை (new normal), மனித உறவுகளின் உணர்வுகள் போன்ற பல தலைப்புகளில் கதை, கட்டுரைகள் எழுத ஆர்வமாக உள்ள கோபி சுவாமிநாதன், வாசகர்களுடன் நெருக்கமாகப் பேசும் எளிய நடையில் எழுத வல்லவர்.

Updated on: 
Kalki Strip
Kalki Strip

“ஆன்லைனில் விண்ணப்பித்துவிட்டீர்களே! அப்புறம் ஏன் அலுவலகத்திற்கு வந்திருக்கிறீர்கள்?”

“அதுதான் சார்... விண்ணப்பம் என்ன ஆனது என்று தெரிந்துகொள்ள!”

இந்த உரையாடல் கற்பனையாக இருக்கலாம். ஆனால் இதன் பின்னாலுள்ள பிரச்சினை நிஜமானது. அரசு சேவைகள் இணையத்திற்கு வந்துவிட்டன; மக்களின் அலைச்சலும் அதே வேகத்தில் குறைந்திருக்கிறதா?

பட்டா, குடும்ப அட்டை, சாதி, வருமானம், இருப்பிடச் சான்றிதழ்கள், கடை உரிமங்கள், தொழில் தொடங்குவதற்கான அனுமதிகள், மின்சாரம் மற்றும் குடிநீர்க் கட்டணம் எனப் பல சேவைகளை இன்று இணையத்தில் அணுக முடிகிறது. இணையதளம், கைப்பேசிச் செயலி, பொதுச் சேவை மையம் என வாய்ப்புகளும் அதிகரித்திருக்கின்றன. இது நிச்சயமாகப் பாராட்டத்தக்க முன்னேற்றம்.

முன்பு மின்கட்டணம் செலுத்தவே நேரத்தை ஒதுக்க வேண்டியிருந்தது; இன்று சில நிமிடங்களில் முடிக்கிறோம். நில விவரங்களை எங்கிருந்தும் பார்க்க முடிகிறது. இத்தகைய மாற்றங்களைக் குறைத்து மதிப்பிட முடியாது. அதே நேரத்தில், இணையத்தில் இருப்பது ஒரு சேவை முழுமையாக எளிமையாகிவிட்டதற்கான உத்தரவாதமல்ல.

பழைய நடைமுறையை அப்படியே கணினிக்குள் கொண்டுவந்தால் மட்டும் போதுமா? தேவையற்ற ஆவணங்களையும், ஒப்புதல்களையும், தனித்தனி விண்ணப்பங்களையும் குறைப்பதுதான் நிர்வாக நடைமுறை மறுசீரமைப்பு (Business Process Re-engineering).

இதை ஒரு குடும்பத்தின் இரண்டு நிகழ்வுகள் வழியாகப் புரிந்துகொள்ளலாம்.

பொதுமக்களுக்கு எந்தத் துறை எந்தப் படிவத்தைப் பயன்படுத்துகிறது என்பது அவசியமில்லை. தேவையான சான்றிதழோ அட்டையோ சரியான நேரத்தில் கிடைத்தால் போதும். கணினி வேகமாக வேலை செய்வதைவிட, அரசின் பல பிரிவுகள் ஒன்றோடொன்று இணைந்து வேலை செய்வதுதான் இங்கு முக்கியம்.

குழந்தை பிறந்தால் இன்னொரு விண்ணப்பமா?

குழந்தை பிறக்கிறது. நகராட்சியிலோ உரிய பதிவாளர் அலுவலகத்திலோ பிறப்பு பதிவு செய்யப்படுகிறது. பிறப்புச் சான்றிதழும் கிடைக்கிறது. ஆனால் குழந்தையை குடும்ப அட்டையில் சேர்க்கப் பெற்றோர் மீண்டும் விண்ணப்பித்து, ஏற்கெனவே அரசு வழங்கிய சான்றிதழைச் சமர்ப்பிக்க வேண்டியிருக்கலாம்.

பிறப்பைப் பதிவு செய்யும்போதே, “குழந்தையை குடும்ப அட்டையில் சேர்க்க விரும்புகிறீர்களா?” என்று கேட்கலாமே! பெற்றோர் சம்மதித்தால் குடும்ப அட்டை எண்ணைப் பெற்று, பிறப்புப் பதிவிலிருந்து தேவையான விவரங்களைப் பாதுகாப்பாகப் பகிரலாம். முன்நிரப்பப்பட்ட விண்ணப்பத்தை உறுதிப்படுத்தியதும், தகுதிச் சரிபார்ப்புக்குப் பிறகு உறுப்பினர் சேர்க்கையை முடிக்கலாம்.

2023-ஆம் ஆண்டின் பிறப்பு–இறப்புப் பதிவுச் சட்டத் திருத்தம், உரிய அனுமதியுடன் அந்தப் பதிவுத்தகவல்களை குடும்ப அட்டைத் தரவுத்தள அதிகாரிகளுக்குப் பகிர வழிவகுக்கிறது. சட்டத்தில் உள்ள வாய்ப்பை மக்கள் உணரும் வசதியாக மாற்ற வேண்டியதுதான் மீதமுள்ள பணி.

அரசு சேவைகள் | online Government Services
அரசு சேவைகள் | online Government ServicesImage credit: Chatgpt

இதில் குழந்தையின் பெயர் இன்னும் சூட்டப்படாதிருந்தாலோ, பெற்றோரின் குடும்ப அட்டை விவரங்களில் வேறுபாடு இருந்தாலோ, திருத்தம் செய்யும் வாய்ப்பு வேண்டும். அதேபோல் பிறப்பைப் பதிவு செய்த உடனே பெற்றோரின் விருப்பமின்றி உறுப்பினரைத் தானாகச் சேர்ப்பது சரியான நடைமுறையல்ல. ஒருங்கிணைப்புக்கு இணையாக உரிமைகளையும் பாதுகாக்க வேண்டும்.

திருமணம் முடிந்ததும் விண்ணப்பம்?

திருமணப் பதிவின்போதே மணமக்களின் பெயர், முகவரி உள்ளிட்ட விவரங்கள் பெறப்படுகின்றன. அங்கேயே, “புதிய குடும்ப அட்டை வேண்டுமா? இருக்கும் அட்டையில் உறுப்பினர் மாற்றமா?” என்று விருப்பம் கேட்கலாம்.

தனிக்குடித்தனம் தொடங்கும் தம்பதியர், தங்களது பழைய குடும்ப அட்டைகளிலிருந்து பெயர்களை நீக்கி, புதிய அட்டைக்குத் தனியாக விண்ணப்பிக்க வேண்டியிருக்கலாம். கூட்டுக்குடும்பத்தில் சேர்ந்தால் ஓர் அட்டையிலிருந்து மற்றொன்றுக்கு உறுப்பினரை மாற்ற வேண்டும். அட்டைகள் வெவ்வேறு மாவட்டங்களிலோ மாநிலங்களிலோ இருந்தால் வேலை மேலும் சிக்கலாகலாம்.

திருமணப் பதிவில் ஏற்கெனவே பெறப்படும் தகவல்களைப் பயன்படுத்தி குடும்ப அட்டைச் சேவைக்கான வரைவு விண்ணப்பத்தை உருவாக்கலாம். தனிக்குடித்தனமா, கூட்டுக்குடும்பமா என்று தம்பதியரே தேர்ந்தெடுக்கலாம். இது திருமணமான எல்லோருக்கும் தானாகப் புதிய அட்டை வழங்குவது அல்ல; உரிய தகுதியைச் சரிபார்த்த பின்பே சேவை நிறைவேற வேண்டும்.

இந்தத் தொடர்புடைய செயல்களை ஏன் ஒரே கோரிக்கையாக மாற்றக்கூடாது? தம்பதியர் விவரங்களை ஒருமுறை அளிக்கட்டும்; உரிய சம்மதம், முகவரி, தகுதி, மாநில விதிமுறைகளைத் துறைகள் ஒருங்கிணைந்து சரிபார்க்கட்டும். பழைய அட்டையிலிருந்து பெயர் நீக்கப்பட்டு, புதிய அட்டையில் சேர்க்கப்படாமல் யாருடைய உணவுரிமையும் பாதிக்காத பாதுகாப்பும் இருக்க வேண்டும்.

மக்களுக்கு ஒரே விண்ணப்பம்; அதன் பின்னால் அரசுத் துறைகள் ஒருங்கிணைந்து செயல்படட்டும்!

இது சாத்தியமற்ற யோசனையல்ல. தமிழ்நாட்டில் குறிப்பிட்ட தகுதியான நிலப் பரிவர்த்தனைகளில் பத்திரப் பதிவும் பட்டா மாற்றமும் ஏற்கெனவே இணைக்கப்பட்டுள்ளன. அதேபோல் அரசு வழங்கிய செல்லுபடியாகும் சான்றிதழை இன்னொரு துறை மின்னணு முறையில் சரிபார்த்தால், மக்கள் மீண்டும் மீண்டும் பதிவேற்ற வேண்டியதில்லை.

நிலம் வாங்கியவரின் பெயர் பத்திரத்தில் மாறியவுடன், தேவைக்கேற்ப வருவாய்ப் பதிவிலும் உள்ளாட்சி வரிப் பதிவிலும் மாற்றம் செய்யும் முயற்சிகளை விரிவுபடுத்தலாம். அதேநேரத்தில் நில உட்பிரிவு, உரிமைத் தகராறு போன்ற சிக்கலான வழக்குகளுக்கு மனிதச் சரிபார்ப்பு தேவை. எளிய வழக்கை விரைவாக முடிப்பதும் சிக்கலான வழக்கில் நியாயத்தைப் பாதுகாப்பதும் ஒரே அளவு முக்கியம்.

இதையும் படியுங்கள்:
தினசரி பார்க்கும் ₹ குறியீட்டை வடிவமைத்த தமிழர் யார் தெரியுமா?
அரசு சேவைகள் | online Government Services

உலகம் எந்தத் திசையில்?

சிங்கப்பூரின் LifeSG தளத்தில் குழந்தைப் பிறப்புப் பதிவுடன் தகுதியான குடும்பங்களுக்கான Baby Bonus விண்ணப்பத்தையும் இணைக்கலாம். அதன் OneService வசதி WhatsApp வழியாக நகராட்சிப் புகார்களைப் பெறுகிறது. எஸ்டோனியா வாழ்க்கை நிகழ்வுகளை அடிப்படையாகக் கொண்ட சேவைகளை முன்னெடுக்கிறது. நாமும் பிறப்பு, திருமணம், முகவரி மாற்றம், தொழில் தொடங்குதல் போன்றவற்றை மையமாகக் கொண்டு சேவைகளை ஒருங்கிணைக்கலாம்.

ஐரோப்பிய நாடுகள் வலியுறுத்தும் ‘ஒரே தகவலை மீண்டும் கேட்காத’ அணுகுமுறையும் கவனிக்கத்தக்கது. ஒரு துறையிடம் இருக்கும் நம்பகமான தகவலை மற்றொரு துறை சட்டப்படி பயன்படுத்த முடிந்தால், சான்றிதழ்களைச் சுமந்துகொண்டு அலுவலகம் அலுவலகமாகச் செல்ல வேண்டியதில்லை. தொழில்நுட்பத்துக்கு அடுத்ததாகத் தேவைப்படுவது துறைகளுக்கிடையேயான நம்பிக்கையும் பொறுப்பும்தான்.

தமிழில் கேள்வி கேட்டு வழிகாட்டல் பெறும் AI உதவியாளர்களும், புகாரின் நிலையை WhatsApp-இல் அறியும் வசதிகளும் பயனளிக்கலாம். ஆனால் தனியுரிமை, தகவல் பாதுகாப்பு, தவறுகளைத் திருத்துவதற்கான மனித உதவி ஆகியவை கட்டாயம்.

இன்னும் அலுவலகங்களில் கூட்டம் ஏன்?

விண்ணப்பம் ஆன்லைனில் இருந்தாலும், உள்ளே பழைய ஒப்புதல் நடைமுறை தொடரலாம். 'Under Process' என்ற இரண்டு வார்த்தைகள் மட்டும் தாமதத்திற்குப் பதிலாகாது. எந்த நிலையில் உள்ளது, குறை என்ன, எப்போது முடியும் என்பதையும் தெரிவிக்க வேண்டும்.

கட்டணம் செலுத்தியும் ரசீது வராதது, பெயரில் சிறிய பிழை இருந்ததால் விண்ணப்பம் நின்றுவிடுவது, மீண்டும் அதே ஆவணத்தை கேட்பது போன்ற சிக்கல்களும் நேரடி வருகைக்கு வழிவகுக்கின்றன. ஆனாலும் அலுவலகத்தில் கூட்டம் இருப்பதாலேயே எல்லா இணையச் சேவைகளும் தோல்வி என்று கூற முடியாது. சட்டப்பூர்வ விசாரணைகளுக்கும் நேரடி உதவிக்கும் இடமுண்டு.

அனைவராலும் இணையத்தைத் தனியாகப் பயன்படுத்த முடியாது. ஆகவே சேவை மையங்களும் நேரடி உதவியும் தொடர வேண்டும். மக்களும் சரியான விவரங்களை அளித்து, அதிகாரப்பூர்வ வழிகளைப் பயன்படுத்தி, OTP போன்ற தகவல்களைப் பாதுகாக்க வேண்டும்.

சேவை மையங்கள் வெறும் படிவங்களை நிரப்பித் தருவதோடு நிற்கக் கூடாது. நிர்ணயிக்கப்பட்ட கட்டணத்தை மட்டுமே வசூலித்து, ரசீது வழங்கி, விண்ணப்பத்தின் நிலையை அறிய உதவ வேண்டும். இணையத்தில் தொடங்கிய விண்ணப்பத்தைச் சேவை மையத்திலோ அலுவலகத்திலோ மீண்டும் ஆரம்பிக்காமல் தொடரும் வசதியும் இருக்க வேண்டும். இல்லாவிட்டால் டிஜிட்டல் சேவையும் இன்னொரு வரிசையாகிவிடும்.

இந்திய அரசின் NeSDA மதிப்பீடு இணையச் சேவைகளின் அணுகல், எளிமை, ஒருங்கிணைப்பு, நிலைக் கண்காணிப்பு போன்றவற்றைப் பார்க்கிறது. அவற்றுடன் மக்கள் செலவிட்ட நேரம், அலுவலக வருகைகள், சேவை முடியும் காலம், குறைதீர்ப்பு ஆகியவற்றையும் கவனிக்க வேண்டும்.

துறைவாரியாக இத்தகவல்களை வெளியிட்டால் எந்தச் சேவை சிறப்பாக இயங்குகிறது, எந்த இடத்தில் தாமதம் அதிகம் என்பது தெளிவாகும். மக்களின் கருத்துகளைக் கேட்டுத் தொடர்ந்து நடைமுறைகளைத் திருத்தினால்தான் தொழில்நுட்பச் செலவுக்கான உண்மையான பலன் கிடைக்கும்.

இதையும் படியுங்கள்:
பிதாகரஸ் தேற்றம் மற்றும் நியூட்டனின் மூன்றாம் விதி சொல்லும் வாழ்க்கைப் பாடம் என்ன?
அரசு சேவைகள் | online Government Services

எத்தனை சேவைகள் ஆன்லைனில் உள்ளன என்பது முன்னேற்றத்தின் கணக்கு. அவற்றைப் பெற மக்கள் எவ்வளவு குறைவாக அலைகிறார்கள் என்பதே அதன் உண்மையான மதிப்பு.

நேற்று மக்கள் அரசு அலுவலகங்களைத் தேடிச் சென்றார்கள். இன்று இணையத்தில் சேவைகளைத் தேடுகிறார்கள். நாளை, அவர்களது விருப்பத்துடன், தேவையான அரசுச் சேவைகளே அவர்களைச் சென்றடைய வேண்டும்.

அதுதான் மின்னாளுமையின் அடுத்த வெற்றி!