வசந்த கால நதிகளும்... சித்திரச் செவ்வானமும்... பி. ஜெயச்சந்திரனின் பாடல்கள் சொல்லும் கதைகள்!


Jayachandran's songs
Jayachandran's songsImage-crfedit: www.ndtv.com
Published on
Kalki Strip
Kalki Strip

ழுபதுகளின் தொடக்கத்தில் தமிழ் திரை இசையில் சத்தமே இல்லாமல் ஒரு மாறுதல் நிகழ ஆரம்பித்தது. 70களில் புதிய தலைமுறை நடிகர்களான கமல், ரஜினி, விஜயகாந்த் போன்றவர்களின் வருகையால் ஏற்கனவே கனமான குரல் வளம் கொண்ட பாடல்களை முன்னிலைப்படுத்தி இயங்கி வந்த திரையிசை... மென்மையான குரல் வளம் நிறைந்த பாடகர்களின் வசம் வந்தது.

இளைய தலைமுறையின் துள்ளல் துடிப்பு ,உற்சாகத்தை பிரதிபலிக்க எஸ் பி பி... அமைதியான நதியூட்டமாக மனதை வருட ஏசுதாஸ்... இப்படி இந்த இருவரின் ஆளுமையை திரையிசை வசப்படுத்திக் கொண்ட நேரத்தில், மலையாள தேசத்திலிருந்து மற்றுமொரு மயக்கும் குரலால் தமிழ் ரசிகர்களை கட்டி போட வந்தவர்தான் பளியத்து ஜெயச்சந்திர குட்டன் என்ற பி ஜெயச்சந்திரன்.

1973ல்சத்யா மூவிஸின்' மணிப்பயல்' படத்தில் , "தங்கசிமிழ் போல் இதழே" பாடலின் மூலம் தமிழ் ரசிகர்களுக்கு இவரின் குரலை அறிமுகப்படுத்தினார் எம் எஸ் வி.

துல்லியமான உச்சரிப்பு பொருள் உணர்ந்து பாவ பாவனையோடு பாடலைக் குரலால் மெருகூட்டுவது ஆகியவற்றில் தனித்தன்மையோடு பிரகாசித்தார். இசைஞானி இசையில் இவர் பாடிய அனைத்து பாடல்களும் ராஜகீதங்கள்.

மார்ச் 3 அன்றுபிறந்த ஜெயச்சந்திரன் அவர்களுக்கு அவர் பாடிய பாடல்களைக்கொண்டு ஒரு சின்ன நினைவஞ்சலி.

பி.ஜெயச்சந்திரன் பாடியதில் முதல் முதலாக நான் ரொம்ப ரசித்து கேட்டது... "டிசம்பர் பூக்கள்" படத்தில் வரும்,

"அழகாக சிரித்தது அந்த நிலவு

அதுதான் இதுவோ

அனலாக கொதித்தது

இந்த மனது

இதுதான் வயதோ..மழை காலத்தில் நிழல் மேகங்கள்" என்ற பாடல் தான். இந்தப் பாடலை கேட்ட பிறகுதான் இவரின் பாடல்கள் மீது தீராத காதல் ஏற்பட்டு, அவர் பாடிய பாடல்களை எல்லாம் தேடித்தேடி கேட்க ஆரம்பித்தேன் (இன்று வரை கேட்டுக்கொண்டும் இருக்கிறேன்)

"நதியே நீராடத்தான்

உன்னை அழைத்தேன்"... என்ன ஒரு அழகான வரிகள். பாடல் முழுவதும் கற்பனைக்கு எட்டாத உவமேயங்கள். பாடலோடு இசையும் பொருந்தி ஜாலம் புரிந்த பாடலை வித்தியாசமான அதே சமயம் மனதை மயக்கும் குரலால் மிக அருமையாக பாடி இருப்பார் .காதல் வானில் பறந்திட வைக்கும் இவரின் இந்த பாடல். சரணத்தில் வரும் அந்த எலக்ட்ரிக் கிடாரின் இசை மாயாஜாலம் செய்யும் எத்தனை முறை கேட்டாலும் திகட்டாத பாடலிது.

'அலைகள்' படத்தில் வரும்

"பொன்னென்ன பூவென்ன கண்ணே

உன் கண்ணாடி உள்ளத்தின் முன்னே

ஒரு கல்யாண பெண்ணாக உன்னை

புவி காணாமல் போகாது பெண்ணே..."கவிதை போன்ற உரையாடலுக்கு பின்வரும் பாடலை அசாத்தியமான குரலுக்கும், பாடும் திறமைக்கும் சொந்தக்காரரான பி ஜெயச்சந்திரன் மிக அழகாக பாடியிருப்பார். (பாடியமுதல் தமிழ் பாடல்)

பி ஜெயச்சந்திரனின் அருமையான குரலில் வார்த்தெடுக்கப்பட்ட வைர வரிகள் கேட்பதற்கு இள(னி)மையாகவும் இருக்கும். அழகான வர்ணனை கொண்ட இந்த பாடல் இலங்கை வானொலியில் அதிகம் ஒளிபரப்பப்பட்ட பாடல் . மிகவும் கண்ணியமான இந்தப்பாடலில் ஒரு சின்ன நுட்பம், நுண்ணிய உணர்வு, கம்பீரம் ,சின்ன படபடப்பு எல்லாம் கலந்திருக்கும்.

"ஒரு கல்யாண பெண்ணாக உன்னை" என்ற இந்த பாடலின் பல்லவியை ஜெயச்சந்திரன் கையாண்ட விதம் அவ்வளவு அழகாக இருக்கும்.

மயக்கும் மாயக்குரலோன் இசைஞானியின் இசையில் பாடிய மனதை வருடும் ஒரு பாடல்,

' காற்றினிலே வரும் கீதம் 'திரைப்படத்தில் இடம்பெற்ற தையர தையா தையரத்தையா.. (ஹம்மிங் வேற லெவலில் இருக்கும்)

"சித்திர செவ்வானம்

சிரிக்க கண்டேன்

என் முத்தான முத்தம்மா

என் கண்ணான கண்ணம்மா..."

"போய் வரவா என்றாலே

ஏக்கத்துடன் பார்ப்பா ..

நான் திரும்பி வரும் வரைக்கும்

கரையினிலே நிற்பா.."ஜெயச்சந்திரனின் காந்த குரலில் தவழ்ந்த இந்தப்பாடல் இலங்கை வானொலியில் பல வாரங்கள் முதன்மை இடத்தை பிடித்த பாடல். ஜெயச்சந்திரனின் குரலினிமையில் பாடல் பட்டையக் கிளப்பியது. பாடலுக்கு ஏற்ப படத்தின் பெயர்..(சொல்லித் தெரிய வேண்டுமா என்ன?) பலாச்சுளையைத் தேனில் நனைத்தெடுத்து ஊட்டுவது போல் இருக்கும்.

ஜெயச்சந்திரனின் குரல் ஒரு நம்பக ஒழுங்கோடு பெருக்கெடுக்கக் கூடியது. பிசிறில்லாதது.

"மூன்று முடிச்சு "திரைப்படத்தில்,

' வசந்த கால நதிகளிலே

வைரமணி நீரலைகள் .. 'அந்தாதி வடிவில் அமைந்த பாடலை,(அந்தம் என்பது முடிவு ஆதி என்பது தொடக்கம் முடியும் சொல்லில் அடுத்த வரி தொடங்கும்) மிகவும் அற்புதமாக பாடியிருப்பார். வார்த்தை ஜாலம் விளையாடும் பாடலில். துரோகத்தின் கணநேரகுரூரத்தை எதிர்கொள்ள இயலாமல் திணறும் காலத் தவித்தலை பாடலினூடே அழகாய் கொடுத்திருப்பார்.

இதையும் படியுங்கள்:
Tamil Nadu Election 2026: முடிவை தீர்மானிப்பது நீங்களா? இவர்களா?

Jayachandran's songs

'நதியை தேடி வந்த கடல்'படத்தில்

(ஜெயலலிதாவின் கடைசி படம்)

"தவிக்குது தயங்குது ஒரு மனது

தினம் தினம் தூங்காமலே

ஒரு சுகம் காணாமலே

அது தொடர்ந்து

எனை படர்ந்து

ஏதோ சொல்கின்றது

மனம் எங்கோ செல்கின்றது..."சைலஜாவோடு இணைந்து பாடி இருப்பார் .மாமழைக்கு ஒப்பான பேரானுபவம் கிட்டும் இந்த பாடலைக் கேட்கும் போது. பட்டி தொட்டி எங்கும் ஹிட் அடித்த இந்தப் பாடலை கேட்க கேட்க இனிமை இனிமை இனிமை மட்டுமே !(இளமையான காலத்திற்கு அழைத்துச் செல்லும். காதலின் தனித்த உணர்வுகளை பாடல்களில் பிறப்பித்த வகையில் பி ஜெயச்சந்திரன் பல பாடல்கள் என்றும் மறக்க முடியாதவை.

காத்திருத்தலின் துயரை,

ஏக்கப் பெரூமூச்சை

ஊடலின் வலியினை

எதிர்பார்த்ததலை,

பிரார்த்தனையை... தன் பாடல்கள் எங்கும் மிக மென்மையாக பரப்பியவர்.

தனி பாடல்களில் பெரிய மன நிறைவும்,

டூயட் பாடல்களிலும் குழு பாடல்களிலும் தன்னோடு பாடுகிற குரலுக்கு ஏற்றார் போல் சற்றே சமரசம் செய்து கொண்டும் பாடுகிற ஆற்றல் இவருக்கு இயல்பாகவே அமைந்திருந்தது.

'ஒரு தலை ராகம்'படத்தில் இவர் பாடிய

"கடவுள் வாழும் கோவிலிலே கற்பூர தீபம்"... என்கிற பாடல் சொல்லாத சோகத்தை குரலில் பறைசாற்றும். மித மிஞ்சிய சோகத்தை பிழிந்து கொடுத்திருப்பார்.

"கிழக்கே போகும் ரயில் 'படத்தில்,

மாஞ்சோலை கிளிதானோ

மான் தானோ

வேப்பந்தோப்பு குயிலும்

நீதானோ என்கிற பாடல் எண்பதுகளின் முன்ஜெயச்சந்திரன் பாடிய புதுவித பாட்டு . முத்துலிங்கம் அவர்கள் பல்லவி முழுவதும்

'வினவுதல்' கொண்டே அமைத்திருப்பார்.

"மின்னல் ஒளி என

கண்ணை பறித்திடும் அழகோ தேவதையோ

அங்கம் ஒரு தங்க குடம்

அழகினில் மங்கை

ஒரு கங்கை நதி

உலகினில் துள்ளும்

இதழ் தேன் தான்

அள்ளும்கரம் நான்தான் "கவியரங்க கவிதை ஒன்றின் தீர்க்கமும் வேகமும் கலந்து இந்த பாடலை மிக அழகாக பாடி இருப்பார்.

"வைதேகி காத்திருந்தாள்" படத்தில்

"ராசாத்தி உன்னை காணாத நெஞ்சு" பாடல்..

எங்கே திரும்பினாலும் அந்தத் தருணத்தில் ஒலித்த பாடல்

வாழ்வில் காதலின்றி கசந்து வழிகிற கையறு தன்மையை பறைசாற்றுகிற பாடல்.

தாலாட்டுப் பாடலின் அனுசரணையோடு ஒலிக்கும் "காத்திருந்து காத்திருந்து

காலங்கள் போகுதடி "பாடல் இரவுகளை ஆக்கிரமிக்கும். பாடலின் சரணம் முடிகிற இடத்தில்,"

நெஞ்சமும் புண்ணாகி

காரணம் கண்ணாச்சி".. என்பதை தனக்கே உரிய ஆழ்அமைதியோடு பாடியவிதம்... ஆஹா ஓஹோ...

இதையும் படியுங்கள்:
நடுக்கடலில் தத்தளித்த குடும்பம்... 4 கி.மீ கடலில் நீந்தி ஒற்றை ஆளாக மீட்ட 13 வயது சிறுவன்!

Jayachandran's songs

'இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே...' இந்த இரண்டு பாடல்களுக்கும் பொருந்தாத வேறு ஒன்றாய் அமைந்ததனால் இந்த பாடலும்மிகப்பெரிய ஹிட்.

"இணைந்த கைகள்" திரைப்படத்தில்

ஆபாவாணன் எழுதிய "

"அந்தி நேர தென்றல் காற்று

அள்ளித் தந்த தாலாட்டு ..."அழகான ரயிலின் தடதடக்கும் ஓசையில் தாலாட்டச் செய்யும்பாடல் . . இப்போது கேட்டாலும் புத்தம் புதியது போலவே இருக்கும்.

சொல்லத் துடிக்குது மனசு' படத்தில்

'எனது விழி வழி மேலே... என்கிற துள்ளல் இசை பாடலை மிக ஜாலியாக பாடியிருப்பார். குரலில் ஒரு குதூகலம் தெரியும். அது தன்னாலேயே நமக்கும் பரவும்.

"பிள்ளை நிலா" திரைப்படத்தில்

"ராஜா மகள்

ரோஜா மகள்

வானில் வரும் வெண்ணிலா

வாழும் இந்த கண்ணிலா

கொஞ்சி மொழிப்பாடிடும் சோலைக்குயில்..." ஜெயச்சந்திரன் ஸ்கோர் செய்த பாடல்களில் முக்கியமானது இந்தப்பாடல். தன்னை விட்டால் இந்தப் பாடலை இப்படி பாடுவதற்கு வேறு யாரும் இல்லை என்பதை மெய்ப்பித்த வண்ணம் இருக்கும். மனதின் அடியில் சில பாடல்கள் மட்டும் நிரந்தரமாக தங்கிவிடும் அப்படியானதொரு அழகிய பாடல் இது.

எஸ்.ஏ ராஜகுமாரின் முதல் படமான "சின்ன பூவே மெல்ல பேசு" இலங்கை வானொலி நிகழ்வுகளில் திரும்பத் திரும்ப நேயர் விருப்ப பாடலாக ஒலித்த டைட்டில் சாங்கைமிக அழகாய் பாடினார் ஏகாந்தத்தை வியந்து ரசிக்கும் பாடலாக அமைந்திருக்கும்.

ஜெயச்சந்திரனின் தனி பாடல்கள் பேழையில் முதல் வரிசையில் இன்றும் வீற்றிருக்கும் பாடல் என்றால் அது இதுதான்.

"பூவண்ணம்.. போலநெஞ்சம்

பூபாளம் பாடும் நேரம்

பொங்கி நிற்கும் தினம்

எங்கெங்கும் இன்ப ராகம்

என்னுள்ளம் போடும் தாளம்..."சலீல் சவுத்ரியின் மாறுபட்ட இசையில் உருவான.. எண்பதுகளின் இனிமை இந்தப் பாடல் .'

"தாலாட்டுதே வானம்

தள்ளாடுதே மேகம்

தாளாமல் மடி மீது

தார்மீக கல்யாணம்

இது கார்கால சங்கீதம்..."மனதை லேசாக்கும் பாடல்... "கடல் மீன்கள் "திரைப்படம்.ஜெயச்சந்திரனின் தாலாட்டில் வானமும் மேகமும் தள்ளாடிய நயம் இருக்கே .. இரவில் மொட்டை மாடியில் அமர்ந்து கொண்டு இந்த பாடலைக் கேட்க ஆனந்தமோ ஆனந்தம்.

இப்படி இதயத்தை இதமாக தாலாட்டும் இனிமையான எண்ணற்ற பாடல்களை கொடுத்த... பி. ஜெயச்சந்திரன் அவர்களை என்ன சொல்லி பாராட்டுவது!

என் மனதில் தோன்றும் உணர்வுகளை சொல்லவோ, எழுதவோ சரியான வார்த்தைகள் கிடைக்கவில்லை என்னால் முடிந்ததெல்லாம் நன்றி சொல்வது மட்டுமே...!

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com