

குடும்ப பாகப் பிரிவினை முதல் நாடுகள் வரை பரவும் பங்காளி சண்டையின் விளைவுகளை இந்தக் கட்டுரை சுட்டிக்காட்டுகிறது. அண்ணன்-தம்பி உறவில் அன்பு, பாசம் குறைந்து, சொத்துக்காக பெற்றோரைப் பட்டினி போடுகிற நிலை வருவது வருத்தமாகச் சொல்லப்படுகிறது. பிரித்து ஆளும் சூழ்ச்சியால் ஆங்கிலேயர்கள் இந்தியா-பாகிஸ்தான் பிரிவை உருவாக்கியதையும், இன்று அரசியலில் நடக்கும் பிரிவினை நாடகங்களையும் ஆசிரியர் விமர்சிக்கிறார்.
ஐந்து வயதில் அண்ணன்-தம்பியாக இருப்பவர்கள் 10 வயதில் பங்காளி ஆகி விடுகிறார்கள். பங்காளி என்று வந்து விட்டாலே சண்டையும் சச்சரவுந்தானே!
பங்காளி சண்டையால்தானே பாரதப்போர் உருவானது!உலகுக்குக் கீதை கிடைத்தது. குடும்பங்களுக்குள் உலவும் பங்காளி சண்டைகள் சில சமயங்களில் நாடுகள் அளவுக்கு உயர்ந்து விடுவதும் உண்டு.
பெரும்பாலான பாகப் பிரிவினைகளில் அசையும், அசையாச் சொத்துக்கள் முக்கிய இடம் பெற்றாலும், அபூர்வமாகச் சிலவற்றில், அன்பும், பாசமும் முதன்மை பெற்று, பாகப்பிரிவினை நிகழ்ச்சியையே வரலாற்றுச் சிறப்பு மிக்கதாக ஆக்கி விடுவதுண்டு.
பழைய சினிமா ஒன்றில், நன்றாகப் போய்க் கொண்டிருந்த அண்ணன்-தம்பி உறவில் பிளவு முளைக்க, அது பாகப் பிரிவினை வரை தொடர்ந்து விடும்.
ஊர்ப்பெரியவர்கள் அழைக்கப்பட்டு, அவர்கள் முன்னிலையில் பாகப் பிரிவினை நிகழ்ச்சி தொடங்கும். அசையும் சொத்துக்கள் ஒரு பக்கம் அடுக்கப்பட்டு, அசையாச் சொத்துக்களின் தஸ்தாவேஜுகளும் வைக்கப்படும் - அவையெல்லாம் இரண்டாகப் பிரிக்கப்படுவதற்காக! ஆனால் பாசமுள்ள அண்ணன் ஒரு நாற்காலியைப் போட்டு எதிராக உட்கார்ந்து கொள்வார். சொத்தைச் சமமாகப் பிரித்துக் கொடுக்க வந்தவர்களிடம் சொல்வார்: என் தம்பியைக் கூப்பிட்டு எந்தப் பங்கு வேண்டுமோ, அதனை எடுத்துக் கொள்ளச் சொல்லுங்கள்.
எனக்கு எந்த ஆட்சேபணையும் இல்லை என்பார். சொத்தைப் பிரிக்க வந்தவர்களும், ஏன்... ரசிகர்களாகிய நாமும் கூட சற்றே கன்ப்யூஸ் ஆகி விடுவோம். அப்புறந்தான் அனைவருக்கும் தெரிய வரும் அந்தப் பாசக்கார அண்ணனின் அன்புப் பிணைப்பு!அண்ணன் வேண்டுமா? அல்லது அனைத்து சொத்துக்கள் மட்டும்தான் வேண்டுமா? என்பதே அவரின் கேள்வி! அந்தப் பாசங்களெல்லாம் தற்போது குறைந்து வருவதுதான் மனதுக்கு வருத்தமளிப்பது.
சொத்தைக் கொடுத்த சொந்த அப்பா-அம்மாவையே பட்டினி போடும் பாசமும், இரக்கமுமற்ற உலகத்தைத்தானே இப்பொழுது நாம் கண்டு வருகிறோம்.
பெற்று வளர்த்த பெற்றோருக்குச் சோறு போடு என்று சொல்ல சட்டமும், மாவட்ட ஆட்சியரும் களத்தில் குதிக்க வேண்டிய கட்டாயம் இன்று உள்ளதே வேதனை!
பங்காளிகள் என்றாலே அடித்துக் கொள்வதும் பின்னர் அரவணைத்துக் கொள்வதும், மறுபடியும் பழி வாங்கத் துடிப்பதுமாக, ஒரு தொடர் கதையாகவே அது காலத்திற்கும் நகர்ந்து கொண்டிருக்கும்.
இது ஒரு புறமிருக்க,வேறு சில எதிரிகள், போட்டி மனப்பான்மை காரணமாக, நேரடியாக மோதாமல், பங்காளிகளைத் தூண்டி விட்டுக் குளிர் காய்வதுமுண்டு! என்ன செய்வது? இந்த உலகத்தில் சொல்லப்பட்ட நேர்மையான வழிகளை விட்டுவிட்டு குறுக்கு வழியில் அக்கிரமமாகச் செயல்படுவோருக்குத் தந்திரசாலிகள் என்ற ஒரு பெருமை மிக்க சொல்லையும் ஏற்படுத்தி வைத்து விட்டார்களே நம் முன்னோர்கள்!
நீதிக்கும், நேர்மைக்கும் தலைவணங்கி, நடைமுறைப் பழக்க வழக்கங்களுக்கு முரணாகாமல், அறிவு பூர்வமாகச் சிந்தித்து அவ்வழியில் பெறும் வெற்றியே நியாயமானது; நிலைத்திருக்கக் கூடியது. அதுவே ஏற்றுக் கொள்ளக் கூடியது.
நமது நாட்டின் வளம், நமது மக்கள் சேர்த்து வைத்த மதிப்பு மிக்க சொத்துக்கள் எல்லாமே வெளிநாட்டவரை ஈர்த்தன. ஆங்கிலேயர்களும், பிரெஞ்சுக்காரர்களும் உட்புகுந்தார்கள். மன்னர்களும், மக்களும் சேர்ந்து எதிர்ப்பதை அவர்களால் பொறுத்துக் கொள்ளமுடியவில்லை. ஆங்காங்கே பங்காளிச் சண்டைகளை மூட்டினார்கள்.
எளியவர்களைப் பயமுறுத்திப் பணிய வைத்தார்கள். நம்மைச் சுரண்டிச் சுகம் கண்டார்கள். அவர்களின் அடக்கு முறை அதிகரிக்க அதிகரிக்க, நம் விடுதலை வேட்கையும் கொழுந்து விட்டு எரிய ஆரம்பித்தது. சுதந்திரம் ஒன்றே பிறப்புரிமை என்று கொதித்தெழுந்தனர்.
பிரித்தாளும் சூழ்ச்சியே பல போர்களின் வெற்றிக்கு வழி வகுத்திருக்கிறது. ஆளுவோருக்கு அதுவே கை கொடுக்கிறது. பணத்தாசையும், பதவி மோகமும் தனி மனிதர்களின் மனசாட்சியைக் கொன்று விடுகின்றன. அவற்றை அடைய எந்த எல்லைக்கும் அவர்கள் போகத் தயாராகி விடுகிறார்கள். இப்பொழுது அரசியலில் நடக்கும் கூத்துக்களுக்கும் இதுவே காரணம். மனிதச் சமுதாயம் இதிலிருந்து விடுபடும் நாளே, உலக அமைதிக்கு வழி வகுக்கும் உயர்ந்த நாளாகும்.
நமக்கு விடுதலை வழங்க முன் வந்த ஆங்கிலேயர்கள், அதனை முழுதாக வழங்காமல், பாகிஸ்தான் - இந்தியா என்று பிரித்து வைத்தே சுதந்திரம் வழங்கினார்கள்.
அவர்கள் சென்ற பிறகு நாம் ஒன்று கூடியிருக்கலாம். நாம் பங்காளி சண்டையைத் தொடர்கிறோமேயொழிய அதனை நிறுத்தி விட்டு, ஒன்றிணைந்து முன்னேறத் திட்டமிடும் முக்கியத்தருணமிது. அப்படிச் செய்தால் போர்களின் காரணமாக அற்பாயுளில் இறப்போரின் எண்ணிக்கை குறையும்; பல குடும்பங்கள் சுபிட்சம் பெறும். போர்ச் செலவை முன்னேற்றத் திட்டங்களுக்குத் திருப்பி விட்டால், உலகில் நம் நாடுகள் உயரங்களைத் தொடும்!
இந்தியா-பாகிஸ்தான் பிரிவினைப் பத்திரம் இதோ உங்கள் பார்வைக்கு!