நாடகக் காவலர் ஆர். எஸ். மனோகர் நூற்றாண்டு விழா ! சென்னையில் கோலாகல கொண்டாட்டம்!

நாடகக் காவலர் ஆர் எஸ் மனோகர் நூற்றாண்டு விழா ! சென்னையில் கோலாகல கொண்டாட்டம்! கல்கி உள்ளிட்ட பத்திரிகைகளுக்கு விருதளித்து கௌரவம்!
R S Manohar Centenary Celebration
புகைப்படங்கள்; கல்கி கேலரி
Published on

ராளமான திரைப்படங்களில் கதாநாயகன், வில்லன் மற்றும் குணச்சித்திர வேடங்களில் நடித்துப் புகழ் பெற்றிருந்த போதிலும், தனது முத்திரை பதித்த புராண, இதிகாச நாடகங்கள் மூலம் தமிழ் நாடக உலகில் சரித்திரம் படைத்தவர் நாடகக் காவலர் ஆர். எஸ். மனோகர். அவரது நூற்றாண்டு விழா அண்மையில் கோலாகலமாகக் கொண்டாடப்பட்டது. சென்னை மைலாப்பூர் ரசிக ரஞ்சனி சபா அரங்கில் நடைபெற்ற விழாவிற்கு பத்மபூஷன் விருது பெற்ற நல்லி குப்புசாமி தலைமை வகித்தார்.

டாக்டர் பத்மா சுப்ரமணியம், மெடிமிக்ஸ் குழுமத்தின் நிர்வாக இயக்குனர் டாக்டர் ஏ.வி அனூப் ஆகியோருடன் குமாரி சச்சு, நடிகர்கள் நாசர், கார்த்தி ஆகிய திரைப் பிரபலங்களும் கலந்துகொண்டு சிறப்பித்தார்கள். ரசிக ரஞ்சனி சபாவும், டாக்டர் சிவ பிரசாத்தின் நாடகக் காவலர்-செம்மல் அடுத்த தலைமுறை நாடகக் குழுவும், எஸ். சுருதியின் நாட்டிய, நாத, நாடக சங்கமம் அமைப்பும் இணைந்து இந்த விழாவுக்கு ஏற்பாடு செய்திருந்தார்கள்.

ஆர்.எஸ்.மனோகருக்கு ஆறு நாடகங்கள் எழுதிய நாடக ஆசிரியர் கே.பி.அறிவானந்தம் நிகழ்ச்சியில் பங்கேற்று மனோகரது சாதனைகளை எடுத்துரைத்தார். ஆர்.ஆர்.சபாவின் இயக்குனர் ஆர். நாகராஜன், மனோகரின் நாடக, சினிமா வாழ்க்கையில் இருந்து பல அரிய தகவல்களையும், அனுபவங்களையும் நினைவு கூர்ந்தார்.

ஆர்.எஸ். மனோகரின் இயற்பெயர் லட்சுமி நாராயணன். அவருக்கு படிக்கும் காலத்திலேயே நடிப்பார்வம் இருந்தது. அதனால் பள்ளி, கல்லூரி நாட்களிலேயே தமிழ், சமஸ்கிருதம் மற்றும் ஆங்கில நாடகங்களில் நடித்து பலரது பாராட்டையும் பெற்றார்.

எம்.ஜி.ஆர். உடன் மனோகர்
எம்.ஜி.ஆர். உடன் மனோகர்

முழு நேர நடிகராவதற்கு முன்பாக ராணுவத்திலும், தபால் துறையிலும் சிறிது காலம் பணியாற்றினார். மேடையில் ஆரம்ப நாட்களில் சமூக நாடகங்கள் போட்டாலும், பின்னர் புராண, இதிகாச, வரலாற்று நாடகங்கள் மூலமாக நாடக உலகத்தில் முத்திரை பதித்தார். இவர் நடித்த ராஜாம்பாள் என்ற நாடகம்தான் இவருக்கு சினிமா வாய்ப்பினைப் பெற்றுத்தந்தது.

இதையும் படியுங்கள்:
தேசிய மருத்துவர்கள் தினம் - மருத்துவர்களின் நலனுக்காக பிரார்த்திப்போம்!
R S Manohar Centenary Celebration

நவாப் ராஜமாணிக்கம் போன்ற ஜாம்பவான்களது புராண, சரித்திர நாடகங்களுக்கு மக்கள் மத்தியில் இருந்த மகத்தான வரவேற்பு, அமெச்சூர் நாடகக் குழுக்களின் சமூக, நகைச்சுவை நாடகங்களின் வரவால் பாதிக்கப்பட்ட கால கட்டத்தில் மீண்டும் புராண, இதிகாச, வரலாற்று நாடகங்களை மேடையேற்றி, மக்களின் கவனத்தை ஈர்த்தவர் மனோகர். இவரது நாடகங்களில் இடம்பெற்ற தந்திரக் காட்சிகள் மக்களை பெரிதும் வியக்கவைத்தன.

இவரது இலங்கேஸ்வரன் என்ற ராவணன் குறித்த நாடகத்தில், சீதை ராவணனின் மகள் என்பதுபோல கதை அமைந்திருந்ததால் அதற்கு எதிர்ப்பு உருவானது. ஆர்.எஸ்.மனோகர் பரமாச்சாரியாரை சந்தித்து இந்த விஷயம் குறித்து ஆலோசனை செய்தார். அப்போது பரமாச்சாரியார், "இந்தியாவின் பல பகுதிகளிலும் பல்வேறு வகையான ராமாயணங்கள் உண்டு. அப்படி ஒரு ராமாயணத்தில் சீதை, ராவணனின் மகள் என்பதாக வருகிறது” என்று சொல்லி, மனோகரை ஆசிர்வதிக்க, அதன் பின் அந்த நாடகம் சக்கை போடு போட்டது.

சிறப்பு நினைவு பரிசு
புகைப்படங்கள்; ஸ்ரீஹரி

மேடையில் சாதனைகள் பல புரிந்தாலும், மனோகர் பல சோதனைகளையும் கடந்து வந்தவர். ஒரு முறை சிங்கப்பூரில் நாடகம் போடுவதற்கு அழைப்பு வந்தது. இவரும் சிங்கப்பூருக்கு தனது பெரிய குழு மற்றும் பிரம்மாண்டமான செட்களோடு போய் இறங்கினார். இவரது நாடகங்களுக்கு மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பு.

ஆனால், அங்கே நாடகம் போட ஏற்பாடு செய்தவர் பணம் கொடுக்காமல் ஏமாற்றிவிட்டார். அது மட்டுமில்லாமல், மனோகர் எவ்வளவோ சொல்லியும் கேட்காமல், அவரது ஆறு லாரி அளவு நாடக செட்களை கப்பலில் ஏற்றி சென்னைக்கு அனுப்பிவிட்டார். மனோகர் ஏழு லட்சம் ரூபாய் கடன் வாங்கி, கட்டணம் செலுத்தி அந்த செட்களை டெலிவரி எடுத்துக் கொள்ளும்படி ஆகிவிட்டது. இது மனோகருக்கு கடுமையான நிதி நெருக்கடியை ஏற்படுத்தியது.

இதையும் படியுங்கள்:
Interview: "நல்லா உழைக்கணும்; தொழிலை நேசிக்கணும்" - வெற்றிக்குப் பின்னால் இருப்பவர்கள் யார்? சந்திப்போமா...
R S Manohar Centenary Celebration

மனோகர் நூற்றாண்டினைக் கொண்டாடும் விதமாக அவரது பல்வேறு நாடகங்களின் காட்சிகளை திரையிலும், நேரிடையாக நடித்தும் காட்டினார் சிவபிரசாத். அவரது மகள் சுருதியின் நாடகக் காட்சிகளும் இடம்பெற்றன.

மனோகரது நாடகங்களுக்கு ஆதரவளித்து, ஊக்கமூட்டிய கல்கி உள்ளிட்ட பல்வேறு பத்திரிகைகளுக்கும் நூற்றாண்டு விழா சிறப்பு நினைவு பரிசு வழங்கி கௌரவித்தார்கள் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com