பெரியார் பாராட்டிய இலங்கேஸ்வரன்!

கல்கி தீபாவளி மலர் 2005 ல் வெளியானது இக்கட்டுரை. நாடகக் காவலர் ஆர்.எஸ்.மனோகர் அவர்களின் நூற்றாண்டையொட்டி தற்போது இக்கட்டுரை கல்கி ஆன்லைனில் உங்களுக்காக...
kalki deepavali malar article
R.S. Manohar in Drama
Published on
Kalki Strip
Kalki Strip

‘திரையுலக வில்லன்; தமிழ் நாடக உலகின் ஹீரோ - வில்லன்!’ நாடகக் காவலர் ஆர்.எஸ்.மனோகர். 80 வயதைக் கடந்திருக்கிறார். இதிகாச, புராண கதாபாத்திரங்களை, புதிய கோணத்தில், மேடை ஏற்றி பல தரப்பினரது பாராட்டுகளையும் பெற்றவர். நாடகங்களில் இவர் அமைத்த தந்திரக் காட்சிகள், பார்வையாளர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தும். தமது நாடக, திரையுலக அனுபவங்களில் சிலவற்றை நம்முடன் பகிர்ந்துகொள்கிறார்:

ஆர்.எஸ். மனோகரின் நாடகமா? மிகச் சரியாக மாலை ஆறு மணிக்கு மணி அடித்துவிடுவார்கள். நாடகம் ஆரம்பித்துவிடும். இப்படி சபாக்கள் வட்டாரத்தில் எனக்குத் தனி மரியாதை உண்டு. அதற்கு முக்கியமான காரணம், நான் படித்த ராமகிருஷ்ணா மிஷன் பள்ளிக்கூடத்தில் எனக்குக் கற்றுக் கொடுக்கப்பட்ட ஒழுக்கம், பக்தி, கட்டுப்பாடு, நேரம் தவறாமை, பெரியவர்களை மதிக்கும் பண்பாடு போன்ற நற்பண்புகள்தான். என் வாழ்க்கையில் இன்றுவரை நான் அவற்றை எல்லாம் தீவிரமாகக் கடைபிடித்து வருகிறேன்.

manohar images
ஆர்.எஸ்.மனோகர் - மனைவியுடன்...

பள்ளிக்கூட நாட்களிலேயே எனக்கு நாடகங்கள் பார்க்கும் ஆர்வம் இருந்தது. நிறைய நாடகங்களை என் பெற்றோருடன் கூடப் போய் நான் பார்த்தது உண்டு. ஆனால், சினிமா பார்க்க நான் ஆர்வம் காட்டியதில்லை. சிறு வயது முதலே எனக்கு நல்ல குரல் வளம் இருந்தது. பள்ளிக்கூட நிகழ்ச்சிகளில் பாடுவேன். நாடகங்களிலும் நிறைய நடித்திருக்கிறேன்.

என் அப்பாவுக்குத் தபால் துறையில் வேலை. பள்ளிக்கூடத்தில் படித்துக்கொண்டிருந்தபோது இடையில் ஒரு வருட காலம், அப்பாவுக்கு பெல்லாரிக்குப் பணி மாற்றம் வந்தது. அங்கே இருந்த சமயம் தெலுங்கு, கன்னட நாடகங்கள் நிறைய பார்ப்பதற்கு வாய்ப்பு கிடைத்தது. அங்கே ராகவாச்சாரி என்பவர் ஷேக்ஸ்பியரின் நாடகங்களை அரங்கேற்றுவார். அவரது நடிப்பையும், வசன உச்சரிப்பையும் பார்த்து நான் வியந்து போவேன்.

பெயர் பிறந்த கதை!

பள்ளிப்படிப்பை முடித்துவிட்டு, பச்சையப்பன் கல்லூரியில் சேர்ந்தேன். பி.ஏ. சமஸ்கிருதம் படித்தேன். 'மிருசி கடிகா' என்ற சமஸ்கிருத நாடகத்தில் நடிக்க எனக்கு வாய்ப்பு கிடைத்தது. அதில் கதாநாயகனாக நடிக்க வேண்டிய மாணவனுக்குத் திடீரென்று அம்மை போட்டிடவே, அவனால் நடிக்க முடியாமல் போனது. நாடகத்தை எப்படி நடத்துவது? என்று ஏற்பாடு செய்தவர்கள் கையைப் பிசைந்துகொண்டு நின்றபோது, "நான் அந்த மாணவனுக்குப் பதிலாக அந்த வேடத்தில் நடிக்கிறேன்” என்றேன். அதன்படி நடித்து, பாராட்டுப் பெற்றேன். நாடகத்தில் எனது கதாபாத்திரத்தின் பெயர் மனோகரன். பின் காலத்தில் திரை உலகில் நுழைந்தபோது, என்னுடைய இயற்பெயர் லட்சுமி நாராயணன் என்பதை மாற்றி, சினிமாவுக்காக 'மனோகர்' என்று வைத்துக்கொண்டேன்.

இதையும் படியுங்கள்:
எண்ணும் பூச்சிகள், பறவைகள் விலங்குகள்... கணக்கு போடும் குதிரைகள்!
kalki deepavali malar article

முதலில் ஹீரோ...!

சுகுண விலாச சபாவில், தோட்டக்காரன் என்ற நாடகத்தை நடத்தினார் விஸ்வனாதன் என்பவர். அதில் எனக்கு நடிக்க வாய்ப்பு கிடைத்தது. அன்றைக்கு நாடகம் பார்க்க வந்திருந்த மிக முக்கிய பிரமுகர் ஒருவர், மேடையில் எனது நடிப்பை மிகவும் பாராட்டினார். அவரது கால்களில் விழுந்து வணங்கி அவரது ஆசியைப் பெற்றேன். அவர்தான் 'நாடகத் தந்தை' என்று மரியாதையுடன் அழைக்கப்படுகிற பம்மல் சம்பந்த முதலியார்.

படிப்பை முடித்துவிட்டு, என் அப்பாவைப் போலவே, நானும் தபால் துறையில் வேலைக்குச் சேர்ந்தேன்.

'கானல் நீர்' என்ற படத்தில், நடிக்கக் கூப்பிட்டார்கள். 'படித்த இளைஞர். கோட்டு சூட்டு அணிந்து நடிக்க பர்சனாலிடியானவர் தேவை என்று சொன்னார்கள். நான் ஹீரோவாக நடித்தேன். நான் அப்போது தபால் துறையில் பணியாற்றிக்கொண்டிருந்ததால், நடிப்பதற்காக சம்பளம் வாங்குவது பிரச்னை ஏற்படுத்துமோ என்று நினைத்தேன். என் கருத்தை ஏற்றுக்கொண்ட தயாரிப்பாளர், எனக்குச் சம்பளத்துக்குப் பதிலாக ஒரு கார் வாங்கிக் கொடுத்துவிட்டார்.

அடுத்து 'தாய் உள்ளம்' என்ற படத்தில் நடிக்க வேண்டும் என்றார்கள், அன்றைய பிரபலமான நாராயணன் அண்டு கம்பெனி நிறுவனத்தினர். மேலும் பலரும் நடிக்கக் கூப்பிடவே, தபால் துறை வேலையை நான் ராஜினாமா செய்துவிட்டேன். தொடர்ந்து மொத்தம் பதிமூன்று படங்களில் ஹீரோவாகத்தான் நடித்தேன்.

நாடக மோகம்!

அப்போதெல்லாம் டி.கே.எஸ். சகோதரர்கள், நிறைய நாடகங்கள் போடுவார்கள். அவர்களது நாடகங்களின் போது, காட்சிக்குக் காட்சி. மக்கள் ரசித்துக் கைத்தட்டிப் பாராட்டுவதைப் பார்த்தபோது, நாமும் மேடை நாடகங்களில் நடித்து, இதுபோலக் கைத்தட்டல் வாங்க வேண்டும் என்று நினைப்பேன். நாமே ஒரு நாடகக் கம்பெனி ஆரம்பித்தால் என்ன என்று தோன்ற ஆரம்பித்தது.

tks brothers
டி.கே.எஸ். சகோதரர்கள்

1954ஆம் ஆண்டு நவம்பர் பதினான்காம் தேதி குழந்தைகள் தினத்தன்று 'நேஷனல் 'தியேட்டர்' என்ற சொந்த நாடகக் கம்பெனியை ஆரம்பித்தேன். முதலில் போட்டது 'இன்ப நாள்' என்ற சமூக நாடகம்தான். பாவமன்னிப்பு பாணியில் அண்ணன் - தங்கை பாசத்தை மையமாய்க் கொண்ட கதை. ஓரளவுக்கு நல்ல பெயரைப் பெற்றுத் தந்தது.

அடுத்ததாக, உலகம் சிரிக்கிறது என்ற சமூக நாடகம். மூன்றாவதாக மேடை ஏற்றிய நாடகம்தான் இலங்கேஸ்வரன். வால்மீகி ராமாயணம், பௌத்த ராமாயணம், துளசிதாசரின் ராமாயணம், ஆனந்த ராமாயணம் என்று பல்வேறு ராமாயணக் கதைகளை ஆராய்ச்சி செய்து, எழுதப்பட்டது அந்த நாடகம். கதாநாயகன் ராவணன்! ராமாயணத்தில் அரக்கனாகச் சித்தரிக்கப்படும் ராவணனை நல்லவனாகக் காட்டியதும், சீதை, ராவணனின் மகள் என்று சொன்னதும் மக்களுக்கு அதிர்ச்சியைத் தந்தன. பெரும் முதலீடு செய்து போட்ட சரித்திர நாடகம். நஷ்டத்தை ஏற்படுத்தியது. சபாக்காரர்கள் நாடகத்துக்குக் கொடுத்த தேதிகளை ரத்து செய்து விட்டார்கள். நான் மனம் நொந்து போனேன்.

நலிந்த மனம்!

காஞ்சிபுரம் சென்று பரமாச்சாரியாரை தரிசித்து விஷயத்தைச் சொன்னேன். "தப்பாக ஒண்ணும் சொல்லிடலையே நீ!" என்று சொல்லி ஆசிர்வதித்தார். ஆனால். சீக்கிரமே என் மனக்கவலை தீர்ந்தது. ஸ்ரீலங்காவில் ஒரே அரங்கத்தில் (கொழும்பு நகரில்) இருபத்தியோரு நாட்கள் தொடர்ந்து இலங்கேஸ்வரன் நாடகத்தை நடத்த அழைப்பு வந்தது. நாடகத்துக்கு ஓகோ என்று பாராட்டு. அங்கேதான் எனக்கு 'இலங்கேஸ்வரன்' என்ற பட்டமும் கொடுத்தார்கள். எனது நாடகங்களிலேயே மிக அதிக தடவை மேடை ஏறியது இந்த நாடகம்தான். இதுவரை 1800 தடவைகளுக்குமேல் நடந்திருக்கிறது.

சி. சுப்ரமணியம், ஆர். வெங்கட்ராமன் போன்றவர்கள் மட்டுமின்றி தந்தை பெரியார்கூட இலங்கேஸ்வரன் நாடகத்தை ரசித்துப் பார்த்துவிட்டு என்னைப் பாராட்டியது என்னால் மறக்கவே முடியாது.

தொடர்ந்த வெற்றிகள்!

அடுத்தபடியாக நான் புத்தபிட்சுவாக நடித்த 'உபகுப்தன்' என்ற நாடகத்தை மேடை ஏற்றினேன். கம்பீரமான காஸ்ட்யூமில் ராவணனாக வந்தபின், காவி உடை புத்த பிட்சுவாக வந்ததை மக்கள், சட்டென்று ஏற்றுக் கொள்ளவில்லை. ஆனால், 'சாணக்கிய சபதம்' நாடகத்தை மேடை ஏற்றியபோது, அது பிரமாதமாக வெற்றி பெற்றது. இதுவரை 725 தடவைகளுக்கும் மேல் மேடையேறி விட்டது சாணக்கிய சபதம்.

துரோணர் நாடகமும் ஒரு வெற்றி நாடகமே! அதில், துரோணர் ஏகலைவனின் கட்டைவிரலை குருதட்சணையாகப் பெற்றதுபோல் காட்டாமல், ஏகலைவனிடம், "உனக்கு மிகவும் பிடித்ததை, நீ குருதட்சணையாகக் கொடு" என்று கேட்க, தனக்கு வில் வித்தை கற்றுத் தந்த குருவுக்கு, அவன் தானாக முன் வந்து தன் கட்டை விரலைக் காணிக்கையாக்குவதுபோல காட்சியை அமைத்திருந்தேன்.

இந்திரஜித், மாலிகாபூர், சூரபத்மன், சிசுபாலன், விஸ்வாமித்திரர், துரியோதனன், பரசுராமர், ஒட்டக்கூத்தர், மாவீரன் கம்சன், கும்பகர்ணன், நரகாசுரன், துர்வாசர், திருநாவுக்கரசர், சுக்ராச்சாரியார் (2 பாகங்கள்) இவை அனைத்தும் நான் ஏற்று நடித்த கதாபாத்திரங்கள்; மேடை ஏற்றிய நாடகங்கள். எல்லாமே பிரம்மாண்டமான தயாரிப்புகள்.

ஐம்பது ஒத்திகைகள்!

என் நாடகங்களில் இடம் பெற்ற தந்திரக் காட்சிகளுக்கு என்றைக்குமே மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பும் பாராட்டும் கிடைக்கும். நொடிப்பொழுதில் நிகழ்ந்தாலும், அந்தத் தந்திரக் காட்சிகள் மக்கள் மனத்தில் ஏற்படுத்தும் ஆச்சரியம் பலகாலம் தங்கி இருக்கும்.

மிக அதிகமான எண்ணிக்கையில் ஐம்பத்து இரண்டு தந்திரக் காட்சிகளை பரசுராமர் நாடகத்தில் இடம் பெறச் செய்தேன். காமதேனு பசு, ரத்த ஆறு, நீர்வீழ்ச்சி என்று பல சுவாரசியமான அம்சங்களை, பிரத்யேக லைட்டிங் எஃபக்ட் மூலம் செய்திருந்தேன், பரசுராமர் தன் தாயின் தலையை வெட்டுவதும், கீழே கிடக்கும் தலை இன்னொரு காட்சியில் மீண்டும் உடலுடன் ஒட்டிக்கொள்ளுவதும், உலகப் புகழ் பெற்ற மேஜிக் நிபுணர்களின் காட்சிகளுக்கு இணையானவை.

இதையும் படியுங்கள்:
ஏர் இந்தியா பயணம் – ஜஸ்ட் ஒரு அனுபவம்
kalki deepavali malar article

எங்கள் நாடகங்கள் அனைத்துக்குமே குறைந்தபட்சம் முப்பது நாட்கள் ஒத்திகை நடக்கும். இதில் பதினைந்து நாட்கள் சீன், செட்டுடனேயே ஒத்திகை இருக்கும். அந்த பதினைந்து நாட்களும் தினம் மூன்று தடவை ஒத்திகை நடக்கும். ஆக நாங்கள் நாடகத்தை அரங்கேற்றுகிறபோது, அந்த நாடகம் சுமார் ஐம்பது தடவைகள் எங்கள் குழுவினரால் (ஒத்திகையில்) நடிக்கப்பட்டிருக்கும். அதனால்தான் சிறிய பிசகுகூட இல்லாமல் பர்ஃபெக்டாக நடத்த முடிந்திருக்கிறது.

கோவையில், ஒரு திறந்தவெளி அரங்கில் எங்களது காடக முத்தரையன் நாடகம் நடந்து கொண்டிருந்தபோது, பாதி நாடகத்தில், திடீரென்று கடும் மழை. நாடகம் பார்த்துக்கொண்டிருந்தவர்கள் கலைந்து சென்று ஆங்காங்கே ஒதுங்கிக்கொண்டனர். ஒரு மணி நேரம் கழித்து, மழை நின்றபின் மறுபடி கூடி நாடகத்தைத் தொடரும்படி கேட்டார்கள். நாடகம் தொடர்ந்தது.

ஒத்துழைத்த திரையுலகம்

நான் சினிமாவில் பிஸியாக இருந்தாலும் நாடகத்துக்குக் குறித்த நேரத்துக்குப் போகத் தவறியதில்லை. எம்.ஜி.ஆர்., சிவாஜி உட்பட அன்றைய தினம் நான் நடித்த எல்லா பட ஹீரோக்களும், இயக்குனர்களும் என் நாடகங்களுக்கு எந்த இடைஞ்சலும் வராமல் இருக்க மிகவும் ஒத்துழைத்தார்கள்.

ஒரு தடவை, சேலத்தில் தொடர்ந்து ஏழு நாட்கள் நாடகம். சென்னையில் சினிமா ஷூட்டிங் இரண்டிலுமே நான் இருந்தாக வேண்டும். எப்படி சமாளித்தேன் தெரியுமா? தினமும் காலை ஏழு மணிக்குத் தொடங்கி, பகல் ஒரு மணி வரை சென்னையில் ஷூட்டிங். பன்னிரண்டு மணிக்கெல்லாம் பர்மிஷன் வாங்கிக்கொண்டு காரில் சேலம் புறப்படுவேன். மாலை சேலம் போய்ச் சேர்ந்து நாடகம். இரவு மறுபடி காரில் பயணம். காலையில் சென்னை - வெற்றிகரமாக சேலம் நாடகம் முடிந்தாலும் எனது உடல் நிலை ரொம்பவுமே பாதிக்கப்பட்டது.

cinema stills
திரைப்படங்களில்...

மொத்தம் இருநூறு படங்களில் நடித்திருக்கிறேன். இதில் 150க்குமேல் வில்லனாக நடித்தவை. மாடர்ன் தியேட்டர் டி.ஆர்.சுந்தரத்துக்கு என்னை ரொம்பப் பிடிக்கும். அவர் தயாரித்த பதினெட்டு படங்களில் நடித்திருக்கிறேன்.

இப்போது முதுமை காரணமாக உடம்புக்கு முடியவில்லை. சினிமாவில் நடிப்பதில்லை. அத்திபூத்தாற்போல மேடை ஏறிக்கொண்டிருக்கிறேன். மேடையில் நடிக்கிறபோது, கிடைக்கிற கைத்தட்டல் ஒலி காதில் விழுகிறபோது ஏற்படும் சந்தோஷமே அலாதிதான்!

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com