

இந்தியா சுதந்திரம் பெற்ற தினம் 1947 ஆகஸ்ட் 15ம் தேதி. அன்றைய தினத்தில் மூதறிஞர் ராஜாஜி மேற்கு வங்க கவர்னராக கல்கத்தாவில் பதவி ஏற்றார். (சுமார் ஒரு ஆண்டுக்குப் பிறகு ராஜாஜி 1948, செப்டம்பரில் இந்தியாவின் கவர்னர் ஜெனராலாகப் பதவி ஏற்று அந்தப் பதவியில் 1950 ஜனவரி 25ம் தேதிவரை இருந்தார்.)
மீண்டும் மேற்கு வங்கத்தில் ராஜாஜி கவர்னராக இருந்த காலகட்டத்திற்கு வருவோம்.
1947 செப்டம்பரில் கல்கி கிருஷ்ணமூர்த்தி அவர்களுக்கு, மேற்கு வங்க கவர்னர் ராஜாஜியிடமிருந்து ஒரு கடிதம் வந்தது. ராஜாஜி தனது கடிதத்தில் எழுதியிருந்தது:-
‘சமீபத்தில் இங்குள்ள விஸ்வ பாரதி பல்கலை கழகத்திற்குச் சென்று இருந்தேன். அப்போது அங்குள்ள பெரிய நூலகத்தைப் பார்வையிட்டேன். அங்கு பல இந்திய மொழிகளில் பெரிய அளவில் புத்தகங்கள் இருந்தன. ஆனால், தமிழில் ஒரு புத்தகம்கூட கிடையாது. இது எனக்கு ஏமாற்றமாக இருந்தது. அதன் விளைவுதான் உங்களுக்கு இந்தக் கடிதம்.
நீங்கள் தமிழில் பல சிறந்த ஆசிரியர்கள் எழுதிய பல இலக்கிய படைப்புகளையும் மற்றும் பல தொகுப்பு களையும் 100க்கும் குறையாமல் வாங்கி, அவற்றை ரசிகமணி டி.கே.சி. அவர்களுடன் இங்கே வந்து விஸ்வ பாரதி பல்கலை கழக நூலகத்திற்கு வழங்கவேண்டும்’ என்று எழுதியிருந்தார்.
கல்கி கிருஷ்ணமூர்த்தி உடனே திருக்குற்றாலத்தில் இருந்த டி.கே.சி. அவர்களுடன் தொடர்புகொண்டு அவரிடம் ராஜாஜியின் விருப்பத்தைத் தெரிவித்து, தமிழ் புத்தகங்களை வாங்க, தான் ஏற்பாடு செய்வதாகவும், அவற்றை எடுத்துக்கொண்டு கல்கத்தா செல்வதற்கான பிரயாணத்திற்கு டி.கே.சி.யின் செளகரியத்தைத் தெரிவிக்குமாறும் கேட்டு எழுதி இருந்தார்.
டி.கே.சி.யிடம் இருந்து உடனே பதில் வந்தது. தான் உடனே சென்னை புறப்பட்டு வருவதாகவும் அதற்கான ஏற்பாடுகளை செய்யுமாறும் எழுதியிருந்தார்.
இந்தப் பதில் வந்தஉடன் கல்கி கிருஷ்ணமூர்த்தி தமிழ் பண்ணை பதிப்பகத்தின் உரிமையாளரான சின்ன அண்ணாமலையுடன் தி.நகரில் உள்ள பல புத்தக பதிப்பங்களுக்குச் சென்று ரூபாய் 2000க்கும் அதிகமான மதிப்பில் (இன்றை ரூபாய் மதிப்பில் பல ஆயிரங்கள்) தமிழில் வெளிவந்த பல சிறந்த புத்தகங்களை 100க்கும் அதிகமா தன் பணத்தை செலவழித்து வாங்கினார்.
கல்கத்தா போவதற்கும் திரும்பி வருவதற்குமான ரயில் டிக்கெட்டுகளுக்கும், இரண்டு பேருக்கும் தன் செலவில் முன்பதிவு செய்து, குறிப்பிட்ட தேதியில் டி.கே.சி.யுடன் தான் வாங்கிய 100க்கும் அதிகமான புத்தகங்களை (தமிழ் நூல்கள்) எடுத்துக்கொண்டு கல்கத்தாவிற்குப் பிரயாணம் செய்தார். கல்கத்தாவில் இருவரும் ராஜாஜியின் விருந்தினர்கள். கல்கி கிருஷ்ணமூர்த்தி வாங்கிவந்த அனைத்து புத்தகங்களையும் ராஜாஜி ஆர்வமுடன் பார்வையிட்டு ‘a good selection’ என்று கல்கியிடம் தெரிவித்தார்.
அடுத்து வந்த 2 நாட்களுக்குள் விஸ்வ பாரதி பல்கலைக் கழகத்தின் நூலகத்திற்கு தமிழ் புத்தகங்களை வழங்கும் விழா. அந்த விழாவிற்குத் தலைமை தாங்கினார் ராஜாஜி. அன்று பேசிய பலரும் ராஜாஜியின் ஆலோசனைப்படி தமிழ் புத்தகங்களை தன் சொந்தச் செலவில் வாங்கி, அவற்றை விஸ்வ பாரதி பல்கலைக் கழகத்திற்கு அன்பளிப்பாக வழங்கிய கல்கி கிருஷ்ணமூர்த்தியை வெகுவாகப் பாராட்டினார்கள்.
விழாவிற்கு வந்திருந்த பலர் விழா முடிந்தவுடன், அந்தத் தமிழ் புத்தகங்களைத் தங்கள் கையில் வைத்துக் கொண்டு மிக ஆர்வமாக அதன் பக்கங்களைப் பார்வையிட்டனர். ராஜாஜி வெளிப்படையாக கல்கி கிருஷ்ணமூர்த்தியைப் பாராட்டினார்.
இப்போது என் மனதில் தொன்றுகிறது... ‘அது ஒரு மகத்தான காலம். இன்றைய காலகட்டத்தில் நடைபெறும் நிகழ்வுகளைப் பார்க்கும்போது எம்.எஸ். சுப்புலட்சுமி அவர்கள் ‘மீரா’வில் பாடிய பாட்டு ‘அந்த நாளும் வந்திடாதோ?’ ஞாபகத்திற்கு வருகிறது.