

ஐம்பதுகளைத் தாண்டும்போதே நம்மை அறியாமல் எட்டிப்பார்க்கும் நீரிழிவு நோயை அலட்சியப்படுத்தினால் என்ன விலைகொடுக்க நேரிடும்? மருத்துவ எச்சரிக்கைகளைக் காற்றில் பறக்கவிட்டு, நண்பர்களின் தவறான ஆலோசனைகளால் தன் வாழ்க்கையையே மாற்றிக்கொண்ட ஒருவரின் யதார்த்தமான அனுபவப் பகிர்வு இது. முழுமையாகப் படித்துத் தெரிந்து கொள்ளுங்கள்!
நாற்பதுகளைத் தாண்டி ஐம்பதில் நாலடி கூட வைத்திருக்கமாட்டேன். என்னை அடி மேல் அடி ஓசைபடாமல் வைத்து பின் தொடர ஆரம்பித்துவிட்டது நீரிழிவு என்னும் நோய் இழவு. அப்போது அந்த நோயைப் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை.
எனது டாக்டர் ஒரு பழமைவாதி. எதையும் புட்டு புட்டு உடைப்பவர். ஆரம்பத்தில் அவர் என்னை பலமுறை எச்சரித்தார். நச்சரித்தார் என்றுகூடச் சொல்லலாம். ‘அதைச் சாப்பிடு; இதைச் சாப்பிடு; அதைச் சாப்பிடாதே; இதைச் சாப்பிடாதே... சர்க்கரை அளவை ஒரு வாட்ச் டாக் போல கண்காணிக்க வேண்டும். இனிப்பை மனதாலும் சுவைக்கக் கூடாது. கனவில் மைசூர் பாக்கு வந்தாலே ஓட்டமெடுக்க வேண்டும். பூரி, பஜ்ஜி, போண்டா, ஆமை வடை, கீரி வடை எல்லாவற்றிற்கும் போட்டுடு முழுக்கு. இனி ஒத்துவராது, அவையெல்லாம் உனக்கு’ என்ற பாட்டுதான் நான் அவரை சந்திக்கும் போதெல்லாம்.
முதலில் கொஞ்ச நாட்களுக்கு ஜாக்கிரதையாகத்தான் இருந்தேன். பிறகு சோர்ந்துவிட்டேன். விழிப்புணர்வு போய்விட்டது. இதற்கிடையில் நண்பர்கள் வேறு இடையில் புகுந்து விளையாடி விட்டார்கள்.
விட்டொழி ஆங்கில மருந்து... இன்னையிலிருந்து ஆயுர்வேதம் இருக்க ஆங்கில மருந்து எதற்கு? பன்னாட்டு மருந்து தயாரிக்கும் காலிகளை நம்பாதே. மூலிகைகளை நம்பு என்று சொல்லி சொல்லி என் ஜோலியை முடித்துவிட்டார்கள்.
பட்டினியில் 110ம் தீனிக்குப் பிறகு 180ம் இருந்த என் ரத்த சர்க்கரை அளவு 200ம் 300ம் ஆக எகிறிப் போனது. ஒருநாள் காலையில் எழுந்ததும் கண்களுக்குள் கொசு பறப்பதுபோல இருந்தது. காதுக்குள் கொசு போகும் கண்களுக்குள் எப்படி? வெயில் காலமாய் இருந்தும் வெளியே பனி மூட்டமாக தெரிந்தது.
அலோபதி அனந்தபத்மநாபனிடம் ஓடினேன். அவரைப் பார்க்க நிறைய பேஷண்டுகள் காத்திருந்தும் என்னை அரை மணி நேரம் ‘வைது’ தள்ளிவிட்டார்.
“அறிவிருக்கிறதா உங்களுக்கு? படித்தவரா நீங்கள்? எந்த ஒரு கொடிய வியாதியிடம் விளையாடி வரீங்க? எத்தனை குலோப் ஜானை உள்ளே தள்ளினீர்கள்? எத்தனை ஜகாங்கீர்களை சாரி ஜாங்கிரிகளை கடித்துக் குதறினீர்கள்? டயபடீஸ் உங்களைக் குருடாக்கி விடும்.
உங்கள் இதயத்தை பழுதாக்கி விடும். கிட்னிகளையும் விட்டு வைக்காது. முதல் நாளே கிளிப்பிள்ளைக்கு சொல்வதுபோல சொன்னேன். கேட்டீரா?”
ஒரு கண் மருத்துவருக்கும் ஒரு இதய நோய் நிபுணருக்கும் ஒரு நரம்பியல் மருத்துவருக்கும் கடிதங்கள் கொடுத்து என்னை அனுப்பினார்.
கண் மருத்துவர் கண்களை ஸ்கேன் செய்து சொன்னார்... “சார் உங்களுக்கு வந்துள்ளது ரெட்டினோபதி.”
அடுத்து போனேன் ஒரு நரம்பியல் நிபுணர் அவர் சொன்னார் “உங்களுக்கு வந்துள்ளது நியூரோபதி.”
‘அதோகதி காப்பாத்து லக்ஷ்மிபதி’ என்று வேண்டி போனேன் கார்டியாலஜிஸ்ட்டிடம். அதையும் இதையும் வைத்து என் இதயம் பரிசோதிக்கப்பட்டது. பிறகு ஓட்டம் வேறு டிரெட் மில்லில். ஓட்டத்தில் தோற்றுவிட்டேன்.
இதயத்தில் அடைப்புகள் இருக்கலாம்... டாக்டரின் முடிவு. பின்பு எல்லாம் மட மடவென்று நடந்துவிட்டது. நான்கு ஒட்டு போடப்பட்டு கிடக்க வேண்டியதாகிவிட்டது கிழிந்த நாராய்.
'காற்று வாங்கப் போனேன்' என்று அன்றுபோல இப்போ பாடி வெளியே போக முடியாது. அப்படிப் போனால் மூச்சு வாங்கித்தான் வரவேண்டும்.
இந்த என் அனுபவத்தை உங்களோடு நான் ஏன் பகிர்ந்து கொள்கிறேன் என்றால் நீரிழிவு நோயிடம் மரியாதையாக எச்சரிக்கையாக நடக்க வேண்டும்.
காலம் கடந்தால் ‘இதயம் போகுதே; கிட்னிகள் சாகுதே; கண்களில் பனி தூவுதே...’ என்று பாடி நடக்க வேண்டியதுதான்.
நடுத்தர வயது ஒரு படுத்துற வயது.
இந்த அனுபவத்தின் மூலம் நீரிழிவு நோயை ஆரம்ப நிலையிலேயே முறையாகக் கண்காணித்து, பிற்காலத்தில் வரக்கூடிய கடுமையான இதய நோய்கள் மற்றும் உடல்நலப் பாதிப்புகளில் இருந்து உங்களைப் பாதுகாத்துக் கொள்ள தேவையான விழிப்புணர்வைப் பெறலாம்.