செப்டம்பர் 8: தேசியக் கண் கொடை நாள் - கண் கொடை என்றால் என்ன? என்ன செய்ய வேண்டும்? நிபந்தனைகள் என்ன?

National Eye Donation Day
National Eye Donation Day
Published on

இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் 8 ஆம் நாளன்று தேசியக் கண் கொடை நாள் (National Eye Donation Day) கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. 

1970 ஆம் ஆண்டு முதல் 1980 ஆம் ஆண்டு வரையிலான காலத்தில், மக்களிடையேக் கண் கொடை குறித்த விழிப்புணர்வு மிகக் குறைவாக இருந்ததால், கருவிழிப் பாதிப்பால் பலரும் பார்வையற்றவர்களாக இருக்க நேரிட்டது. இந்நிலையில், கருவிழி மாற்று அறுவை சிகிச்சை செய்யப் பலருக்கும் கருவிழி கிடைக்காமல் இருப்பதை உணர்ந்த இந்திய அரசு, 1985 ஆம் ஆண்டு முதல் தேசியக் கண் கொடை இரு வார விழாவைக் கொண்டாடத் தொடங்கியது.

ஒவ்வொரு ஆண்டும் தேசியக் கண் கொடை இரு வார விழா, ஆகஸ்ட் 25 அன்று தொடங்கி செப்டம்பர் 8 அன்று நிறைவடைகிறது. இக்காலத்தில் கண் கொடை சிறப்புகள் பற்றிய பரப்புரைகள், பொதுக்கூட்டம், கருத்தரங்குகள், முகாம்கள் நடத்துவதுடன் பொதுமக்களுக்குக் கண் கொடை பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையிலும், ஊக்கம் தரும் வகையிலும், இந்திய அரசு மற்றும் மாநில அரசுகளின் சார்பில் பல்வேறு கலை நிகழ்ச்சிகளும் நடத்தப்பட்டு வருகின்றன.

வளர்ந்து வரும் நாடுகளில் பார்வையிழப்பு என்பது ஒரு பெரும் உடல் நலப் பிரச்னையாக இருந்து வருகிறது. உலக உடல் நல அமைப்பின் புள்ளிவிவரப்படி, கண்புரை, கண்ணழுத்த நோய்களுக்கு அடுத்தபடியாக, கண்ணின் முன்பகுதித் திசுக்கள் சேதமடைவதால் ஏற்படும் கருவிழிப்படல நோய்களே (Corneal Blindness) கண் பார்வையிழப்புக்கு முக்கியக் காரணமாக இருக்கிறது. இந்தப் பிரச்னையானது குழந்தைகளுக்கு வைட்டமின் ஏ குறைபாடு, தொற்றுகள், பிறப்புக் குறைபாடு மற்றும் பல்வேறு காரணங்களால் கண்ணில் ஏற்படும் காயங்களாலும் ஏற்படுகிறது. பெரியவர்களுக்கு தொற்றுகள், காயங்கள் மற்றும் கண்புரை அறுவை சிகிச்சைக்குப் பின்னர் ஏற்படும் பார்வையிழப்பு போன்றவற்றால் ஏற்படுகிறது. 

உலகம் முழுவதும் 3 கோடியே 70 லட்சம் மக்கள் பார்வையற்றோர்களாக இருப்பதாகக் கண்டறியப்பட்டுள்ளது. அதில் ஒரு கோடியே 50 லட்சம் பேர் இந்தியாவில் உள்ளனர். இதில், 26 விழுக்காடு குழந்தைகள் என்பது இங்கு கவனிக்கத்தக்கது. இதில் 75 சதவீதம் பார்வை இழப்பைத் தடுக்கக்கூடியது எனினும், தேவையான கண் கொடை செய்வோர்கள் இல்லாமையால் இதைக் குறைக்க முடியவில்லை என ஒரு ஆய்வறிக்கை கூறுகிறது.

கண் கொடை என்றால் என்ன?

உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைகளில் 95 சதவிகிதம் வெற்றிகரமாக நடைபெறுவது கண் அறுவை சிகிச்சைகள் என்றும் ஒரு புள்ளிவிவரம் குறிப்பிடுகிறது. ஒரு நபர் உயிருடன் இருக்கையில் தன் கண்களைக் கொடையாக வழங்குவது சட்டப்படி இயலாத ஒன்று. எனவே, ஒருவருடைய மரணத்திற்குப் பின் கண்களைக் கொடையாக வழங்குவதேக் கண் கொடை எனப்படுகிறது.

கண் கொடை வழங்க என்ன செய்வது?

கண் கொடை வழங்குவதற்கென்று சில விதிமுறைகள் உள்ளன. ஒரு நபர் இறந்த பிறகு மட்டுமே கண் கொடை செய்ய முடியும். அந்த நபர் உயிருடன் இருக்கும் போதே, அருகிலுள்ள ஒரு கண் வங்கி அல்லது கண் மருத்துவமனையில் கண் கொடை வழங்குவதற்கான உறுதிமொழிப் படிவத்தைப் பெற்று, அதனை முழுமையாக நிரப்பிக் கொடுத்துப் பதிவு செய்து கொள்ள வேண்டும். பதிவு செய்த நபர் இறந்த பிறகு, குடும்ப உறுப்பினர்கள் அல்லது நண்பர்கள் உடனடியாக அந்தக் கண் வங்கி அல்லது கண் மருத்துவமனைக்குத் தகவல் தெரிவிக்க வேண்டும். கண் வங்கி அல்லது கண் மருத்துவமனையிலிருந்து வரும் மருத்துவப் பணியாளர்கள், இறந்தவர் உடலிலிருந்து கண்ணைப் பாதுகாப்பாக அகற்றி, அதனைக் கொடையாகப் பெற்றுக் கொள்வர். கண் கொடையாக வழங்க ஏற்கெனவே உறுதிமொழி கொடுக்காவிடினும், இறந்த நபரின் உறவினர்கள் விரும்பினால் கண் வங்கி அல்லது கண் மருத்துவமனையினைத் தொடர்பு கொண்டு, அதற்கான விதிமுறைகளின்படி கண் கொடை வழங்க முடியும். 

அருகிலுள்ள கண் வங்கியை அணுகுவதற்கு உதவியாக, இருபத்து நான்கு மணி நேரமும் செயல்பட்டு வரும் இந்தியா முழுவதற்குமான தொலைபேசி உதவி எண்ணான 1919 எனும் எண்ணில் அழைக்கலாம்.

கண் கொடைக்கான உறுதிமொழியை எந்த வயதிலும் அளிக்க முடியும். ஒரு வயது நிரம்பிய குழந்தை முதல் எவ்வளவு வயதானவராக இருந்தாலும் கண் கொடை வழங்கலாம். கண் கொடை அளிப்பவர் மற்றும் பெறுபவரின் அடையாளம் ரகசியமாக வைக்கப்படும்.

கொடையாக அளிக்கப்பட்டக் கண்களை வாங்கவோ விற்கவோ முடியாது என்பதையும் நினைவில் கொள்ள வேண்டும்.

இதையும் படியுங்கள்:
50 வயதுக்கு மேல் கண் பிரச்சனையா? இதோ சில டிப்ஸ்! 
National Eye Donation Day

கண்கொடையாளர் இறந்தவுடன் என்ன செய்ய வேண்டும்?

கண்கொடையாளர் இறந்தவுடன் கண் வங்கி அல்லது கண் மருத்துவமனைக்குத் தகவல் கொடுத்தப் பின்னர், மருத்துவக் குழுவினர் வந்து அவரது உடலிலிருந்து கண்களை எடுக்கும் வரை அவற்றைப் பாதுகாப்பது மிகவும் அவசியம். இறந்தவரின் கண் இமைகளை முதலில் மூடி வைக்க வேண்டும். இறந்தவர் உடலை வைத்திருக்கும் அறையிலுள்ள மின் விசிறியை நிறுத்த வேண்டும். அதற்குப் பதிலாக குளிர்பதன சாதனத்தைப் பயன்படுத்தலாம். இறந்தவரின் தலையை ஒரு தலையணையில் வைத்துச் சற்று உயர்த்தி வைக்க வேண்டும். அருகிலிருக்கும் கண் வங்கி அல்லது கண் மருத்துவமனையைத் தொலைபேசியில் தொடர்பு கொண்டு தெரிவித்தால் போதும். கண் வங்கிக் குழுவினர் கண் கொடையாளரின் வீட்டுக்கு அல்லது மரணம் நிகழ்ந்த மருத்துவமனைக்கு வந்து, அவருடைய கருவிழிப் படலத்தினை எடுத்துக் கொள்வார்கள். இதற்கு 15 முதல் 20 நிமிடங்கள் மட்டுமே எடுத்துக் கொள்ளப்படுகிறது. 

இதையும் படியுங்கள்:
'க்ளூகோமா' என்ற கொடிய கண் நோய்! கண்களை 'பார்த்து'கொள்ளுங்கள் ப்ளீஸ்!
National Eye Donation Day

கண் கொடை வழங்குவதற்கான நிபந்தனைகள்

கண் கொடை வழங்கும் நற்செயலை வயது, பாலினம், ரத்த வகை அல்லது சாதி, சமய வேறுபாடுகளைக் கடந்து அனைவரும் செய்ய முடியும். கிட்டப்பார்வை  அல்லது தூரப் பார்வைகளுக்காகக் கண்ணாடி அல்லது ஒட்டுவில்லை (Contact lens) அணிந்திருப்பவர்களும், கண் அறுவை சிகிச்சை செய்து கொண்டவர்களும் கூட கண் கொடை வழங்க முடியும். நீரிழிவு நோயாளி, ரத்த அழுத்தம் மற்றும் ஆஸ்துமா நோயாளிகளும் கூட கண் கொடை வழங்கலாம். கண்புரை உள்ளவர்களும் கண் கொடை வழங்கலாம்.

ஆனால், தொற்று நோயுள்ளவர்கள் கண் கொடை செய்ய இயலாது. எய்ட்ஸ், கல்லீரல் அழற்சி, ஹெப்படைட்டிஸ் பி & சி, வெறிநாய்க்கடி, பாம்புக்கடி, நரம்பியல் பிரச்னைகள், மலேரியா, டெங்கு போன்ற தொற்று நோயால் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் ஒரு நபர் இறந்ததற்கான சரியான காரணம் அறிய முடியாத நிலையில் இருப்பவர்களும் கண் கொடை வழங்க முடியாது.

இதையும் படியுங்கள்:
ஸ்மார்ட் போனால் ஏற்படும் கண் எரிச்சலைப் போக்க 7 எளிய வழிமுறைகள்!
National Eye Donation Day

கண் கொடை என்பது நம்மைப் போன்ற பிற மனிதர்களுக்கு நாம் வழங்கக்கூடிய விலை மதிப்பற்ற பரிசு. நமது கண்களைக் கொடையாக வழங்கி பார்வையிழப்புகளைத் தடுக்க நாம் ஒவ்வொருவரும் இந்நாளில் உறுதியெடுத்துக் கொள்ளலாம்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com