சிறப்பு சிறுகதை - முத்துவும் வள்ளியும்

"இக்கதை மானுடவியல் சார்ந்த யுக்தியை பாவித்து எழுதப்பட்டுள்ளது. இதை ஆங்கிலத்தில் Anthropomorphism என அழைப்பார்கள்" - தேவகி கருணாகரன், சிட்னி, அவுஸ்திரேலியா
Moon
Moon Credits: christie Nallaratnam
Published on

முத்துவும் வள்ளியும்

- தேவகி கருணாகரன், சிட்னி, அவுஸ்திரேலியா - (மூத்த தமிழ் எழுத்தாளர்)

ஓவியம் - கிறிஸ்டி நல்லரெத்தினம்

முத்துவும் வள்ளியும் வேறு வழியில்லாமல், தங்கள் தங்கள் வீட்டில் உள்ளோருக்குச் சொல்லாமல் அன்று இரவு வீட்டை விட்டு ஒன்றாய் சேர்ந்து வெளியேறிவிட்டார்கள். வெளியேறி விட்டார்கள் தான், ஆனாலும் இப்போது எங்கே போவது என்று தெரியாமல் கால் போன போக்கிலே நடந்தார்கள். யாழ்ப்பாணத்தில் உள்ள நல்லூர் தான் அவர்கள் ஊர்.

எத்தனை முறை முத்து இந்தத் தெருக்களில் ஓட்டமாக ஓடியிருக்கிறான். அப்போது முத்துவுக்கு பதின்ம வயது, கவலை ஏதும் இல்லாத வயது. இப்பொழுது முத்துவுக்கு பொறுப்பு வந்துவிட்டது. அவனை நம்பித் தானே வள்ளி அவனோடு ஓடி வந்துவிட்டாள். வள்ளிக்கும் அவள் வயிற்றில் வளரும் கருவுக்கும் அவன் தானே பொறுப்பு.

இருவரும் நல்லூரின் நாவலர் தெருவில் பக்கத்து பக்கத்து வீடுகளில் வாழ்ந்து வந்தனர். நினைவு தெரிந்த நாளிலிருந்து ஒருவரை ஒருவர் தெரியும். இரு வீட்டார்களும் ஒன்றாய் கூடிப் பல கேளிக்கைகளுக்கு ஒன்றாகச் சேர்ந்து போய் வருவார்கள். சிறு வயது முதல் இரண்டு குடும்பங்களும் சேர்ந்தே பக்கத்திலிருந்த திறந்தவெளி பார்க்குக்குப் போய் ஓடி ஆடி விளையாடுவார்கள். இரு குடும்பதாரும், அருகிலிருந்த குளத்திற்குப் போய் ஆசைதீர குளத்து நீரில் மொங்கி மொங்கி குளிப்பார்கள். அப்போது எல்லாம் வள்ளி முத்துவின் துணையுடன் அவனைக் கெட்டியாகப் பிடித்துக் கொண்டு மூழ்கி எழுவாள். அது ஒரு நிலா காலம், இனி அப்படி ஒரு காலம் வருமா?

இப்போது வள்ளி குமரியாகிப் பல பேரின் கண்பட்டு விடும் அளவுக்குப் பூத்திருந்தாள். அவளின் வெள்ளை நிற முகத்தில் அந்தக் கண்களில் உண்மையான ஒரு மயக்கும் மந்திரம் ஒளித்திருந்து. அந்தக் கண்கள் பெரிய, ஆழமான, நிலவு நீர் குளங்கள் போல மின்னின. மேலும் அந்தக் கண்களில் ஒரு அமைதியான ஞானமும் நிலவியது, அவளின் நீண்ட, படபடக்கும் கண் இமைகள் கண்களுக்கு ஒரு மென்மையான, அப்பாவி தோற்றத்தையும் கொடுத்தன.

ஆனால் சமீபத்திலே இரண்டு வீட்டாருக்கு மிடையில் இருந்த அந்நியோனியம் ஏதோ காரணத்தால் தெறித்து விட்டிருந்தது. ஆனால் முத்தும் வள்ளியும் இதற்காக தங்கள் காதலை விட்டுக்கொடுக்கத் தயாராக இருக்கவில்லை.

கல்யாண வயது வந்திருந்த வள்ளிக்கு, அவள் வீட்டார் ஒரு தரகர் மூலம் ஏற்ற சோடியைத் தேடினார்கள். இரண்டு நாளில் மாப்பிள்ளையும் மாப்பிள்ளை வீட்டாரும் வள்ளியைப் பார்க்க வருகிறார்கள் என, தரகர் வீட்டிற்கு வந்து கூறியதை வள்ளி கேட்டு விட்டாள். வழக்கம் போல வேலிப் பொட்டுக்குள்ளால், இந்த விசயத்தை முத்துவிடம் சொல்லி அழுதாள் “இவர்கள் கண்ணுக்குப் படாத இடத்துகு என்னை உன்னோடு கூட்டிக்கொண்டு போயிடு, முத்து,” என அழுதழுது சொன்னாள்.

இதையும் படியுங்கள்:
சிறுகதை; டீக்கடை ஞானம்!
Moon

”இன்றே இரவோடு இரவாக நாம் இரண்டு பேரும் வீட்டை விட்டு ஓடிப் போய்விடுவோம். நம்மைத் தேடிப் பிடிக்கமுடியாத இடத்திற்குப் போய் சந்தோசமாக இருவரும் வாழ்வோம்,” என முத்து வள்ளிக்கு ஆறுதல் சொன்னான்.

அன்று இரவே இரண்டு வீட்டாரும் உறங்கிய பின் இருவரும் தங்கள், தங்கள் வீட்டுப் படலையைத் திறந்து கொண்டு வெளியேறி விட்டார்கள். வள்ளி வீட்டிலிருந்தால் தானே வேறு ஒருவனுக்கு வள்ளியைக் கட்டிக் கொடுக்க முடியும். ஆகையால் முக்கியமாக இந்த பெண்பார்க்கும் படலத்திலிருந்தும், திருமணத்திலிருந்தும் தப்புவதற்காக இருவரும் வெளியேறி விட்டார்கள்.

அவர்கள், இருவரது வீடுகளும் இருந்த நாவலர் வீதியிலிருந்து புறப்பட்டுப் பொடி நடையாகச் செட்டித் தெருவுக்கு வந்து, பின்பு கச்சேரி நல்லூர் வீதிக்கு வந்து அங்கிருந்து வலது பக்கமாகத் திரும்பி மூத்த விநாயகர் வீதிக்கு இருவரும் வந்ததும், 'அப்பாடா!' எனக் காதலர் இருவரும் பெருமூச்செறிந்தனர். இருவரும், வானத்தின் அழகைப்பார்த்து இரசித்தனர்.

வானத்தில் இரவு பரந்து விரிந்திருந்தது. நிலவின் ஒளி இரவு உலகை ஒரு வெள்ளிப் பளபளப்பில், மென்மையானதாக மாற்றியது, நள்ளிரவு வானத்தின் பரந்த விரிவாக்கத்தில் ஒரு பெரிய ஒளிரும் முத்தாக, நிலவு தன் மென்மையான பிரகாசத்தை பூமியில் செலுத்துகிறது. வானத்தின் வெல்வெட் போன்ற கறுப்பு நிறத்தின் முடிவில்லாத விரிவு பூமியை அதன் அமைதியான அரவணைப்பில் வைத்திருப்பது போல் இருந்தது. ஆயிரமாயிரம் சிறிய வைரங்கள் போல வானத்தில் சிதறிய நட்சத்திரங்கள், அழகுடன் மின்னின.

விண்மீன்கள் வியக்கத்தக்க தெளிவுடன் தனித்து நின்றன, அவற்றின் கதைகள் ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக இருந்ததைப் போலவே வானத்தில் பொறிக்கப்பட்டிருந்தன. பிரபஞ்சம் மிகப் பெரியதாகத் தோன்றினாலும் மிக நெருக்கமானதாக அவர்கள் இருவருக்கும் தோன்றியது, மேலும் அவர்கள் இருவருக்கும் நட்சத்திரங்கள் பழங்கால இரகசியங்களை கிசுகிசுப்பது போலிருந்தது.

இதையும் படியுங்கள்:
சிறுகதை; அட்ஜஸ்ட் பண்ணிக்கங்க!
Moon

காற்று மிருதுவாக வீசியது, அத்தோடு ஒரு அமைதியான நிம்மதி எங்கும் வியாபித்திருந்தது. மென்மையான காற்று மூலம் கிளறப்பட்ட இலைகளின் மங்கலான சலசலப்பால் மட்டுமே இரவின் நிசப்தம் உடைந்தது.

இந்த இரவின் அழகை இரசித்தபடி இருவரும் மூத்த விநாயகர் வீதியில் உள்ள முத்துவின் நண்பன், கறுப்பன் வீட்டுக்குப் போனார்கள். கறுப்பனின் வீடோ சிறியது, ஆனால் அவன் மனமோ தாராளமானது. முத்து விசயத்தைச் சொன்னதும், கறுப்பன் அவர்கள் இருவருக்கும் தன்னுடன் தங்க இடம் கொடுத்து உதவினான்.

பிரிந்திருந்த அந்த காதலர்கள் அன்று இரவு மீண்டும் ஒன்று சேர்ந்தார்கள்.

காலையில் வீட்டில் இருந்த மற்றவர்கள் எழு முன் முத்துவும் வள்ளியும் எழுந்துவிட்டார்கள். இவர்கள் எழுந்ததைப் பார்த்ததும் கறுப்பனும் எழுந்து விட்டான். நண்பன் கறுப்பனிடம் முத்துவும் வள்ளியும் எங்கள் விதி இப்படியிருக்கே எனச் சொல்லி மனம் வருந்தினார்கள்.

”கறுப்பன்! எங்களுக்கும் ஒரு மனம் இருக்கு, அதில் ஆசைகள், பாசங்கள், விருப்பு, வெறுப்பு இருக்கும் என்று, ஏன் அவர்கள் உணராமல் இருக்கிறார்கள். பெரியவர்கள் என்று சொல்லிக்கொண்டு திரியும் இவர்கள் எங்கள் மொழியைப் பேசாவிட்டாலும் நாங்கள் அவர்கள் மொழியைப் பேசாவிட்டாலும் ஒரு மனச்சாட்சியோடு நடக்க வேண்டாமா? எமது கன்னிகளை, அவர்கள் விருப்பு வெறுப்பு அறியாமல், கேட்காமல், முன் பின் அறிமுகமில்லாத ஒரு காளையோடு சேர்த்து விடுவார்களா? அடுத்த வருடம் வேறு ஒரு காளையோடு சேர விடுவார்களா?’’ எனக் கூறிக்கொண்டு போன முத்துவை இடை மறித்த வள்ளி,

"அண்ணே நாங்கள் அவர்களுக்கு அடிமை என்பதால், எங்கள் விருப்பங்கள் ஆசாபாசங்களைக் கேட்டு அறியாமல் இப்படிச் செய்கிறார்கள்? அவர்களுடைய சொந்தப் பிள்ளைகளென்றால், அவர்கள் விருப்பங்களுக்கு மதிப்பு கொடுத்துத்தானே கல்யாணம் செய்து வைக்கிறார்கள்?" என்றாள்.

இதையும் படியுங்கள்:
சிறுகதை; நன்னயம்...
Moon

"தம்பி அதேபோல் வள்ளியிடம் ஒரு வார்த்தை கேட்டிருந்தால் அவள் பக்கத்து வீட்டு முத்துதான், அதாவது என்னை பிடித்திருக்கு என்று சொல்லியிருப்பாள். அதை விட்டு வள்ளியை ஒரு வேறொரு காளையோடு ஒரு இரவு சேர்ந்து இருக்க முடிவெடுத்திருந்தார்கள். வள்ளிக்கு அவர்கள் கதைத்தது புரிந்து விட்டது. உடனே வேலிப் பொட்டுக்குள்ளால் என்னிடம் இந்த விசயத்தைச் சொல்லி "என்னை கூட்டிக் கொண்டு போயிடு" எனக் கெஞ்சினாள். அவள் நிலைமையைப் பார்த்து விட்டு அவளைக் கூட்டிக் கொண்டு இரவோடு இரவாக வீட்டை விட்டு ஓடி வந்துவிட்டேன்.” என்று முத்து மூச்சுவிடாமல் தன் ஆதங்கததைச் சொன்னான்.

”அண்ணே எங்களுக்கும் ஆசாபாசங்கள் இருக்கும் என, ஏன் இவங்களுக்குப் புரிவதில்லை. என் முத்துவோடு நான் சேர்ந்து, வயிற்றிலே அவன் வாரிசை சுமக்கும் நான், வேற்றான் சுண்டு விரல் என் மேல் பட விடுவேனா? அது என்னை கற்பழிக்கிறதற்குச் சமம் தானே?” என்றாள் வள்ளி விம்மலுக்கிடையே.

"அண்ணே! அண்ணி! நீங்கள் சரியான முடிவு தான் எடுத்திருக்கிறீர்கள். இந்த விசயம் உங்களுக்குத் தெரியுமோ அண்ணே! இப்போது இந்த நவீன உலகத்திலே தங்கள் பிள்ளைகளை அவர்கள் விரும்பிய பெண்ணோடு அல்லது ஆணோடு, கல்யாண விழா எதுவுமில்லாமல் சேர்ந்து வாழ விடுகிறார்கள். இருவருக்கும் அவர்கள் உறவு அலுத்துப்போனதும், அல்லது இருவருக்கும் ஒத்துப்போகாவிட்டால் பிரிந்து வேறு ஒரு துணையைத் தேடிக் கொள்கிறார்கள்,” என்றான் கறுப்பன்.

”அப்படியா? எனக்குத் தெரிந்த மட்டிலே, மேன்மக்கள் தங்கள் பிள்ளைகளுக்கு கலியாணம் பேசி, சீதனமும் பேசி, ஊர் அறிய கல்யாணம் செய்து வைத்தார்கள். அவர்கள் ஆறறிவு உள்ள மேன்மக்கள் என நினைத்தோம். இப்போது ஐந்தறிவு ஜன்மங்கள் போல அல்லவா வாழ்கிறார்கள். இதைக் கேட்டு என் மனம் மிகவும் சங்கடப்படுகிறது,” என்றாள் வள்ளி.

”நாங்கள் அவர்களால் காசு குடுத்து வாங்கப்பட்டிருக்கும் அடிமைககளா இருக்கலாம். ஆனால் அடிமைகளுக்கும், ஆசாபாசங்கள் இருக்கும் என்று ஏன் இந்த மேன் மக்களுக்கு புரிவதில்லை. எங்களுக்கும் ஒரு மனம் இருக்கு, அதில் ஆசை விருப்பு, வெறுப்பு, முக்கியமாக காதல் இருக்கும், என்று ஏன் அவர்கள் உணராமலிருக்கிறார்கள்? நாங்கள் எங்கள் வீடுகளுக்குத் திரும்பிப் போகமாட்டோம்,” என ஆத்திரத்துடன் கூறிய முத்து, வள்ளியை அணைத்து அழைத்துக்கொண்டு சென்றான்.

காதலர்கள் இருவரும் பக்கத்திலிருந்த குளத்துக்குள் பாய்ந்து, நீந்திவிட்டு குளக்கரை சேற்று மண்ணில் புரண்டு, நண்பன் கறுப்பனிடம் விடை பெற்றுக்கொண்டு நம்பிக்கையோடு புதிய வாழ்க்கையைத் தேடிச் சென்றனர்.

ஐந்தறிவு ஜீவன்களுக்கும் காதல் பொருந்தும்தானே! கடவுள் இந்த மனமொத்த காதலர்களுக்கு ஒரு வழி காட்டாமல் போவாரா என்ன?

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com