சிறுகதை – ஊனம்!

ஓவியம்; உமாபதி
ஓவியம்; உமாபதி

-அரவிந்தன்

 "அம்மா ஆசீர்வாதம் பண்ணினாள்!”

''இந்த இன்டர்வியூவிலேயாவது உனக்கு வேலை கிடைக்கட்டும்!” என்றாள்.

டிபன் சாப்பிடும்போது வழக்கம்போல், "பேசாம உன் மாமா வேலை செய்யற அந்தக் கம்பெனிக்கே போகலாம். கொஞ்ச நாள் வேலை கத்துகிட்டா, மாமா, பொண்ணையும் கொடுத்து, சொந்தமாக் கம்பெனியும் வைச்சுக்குடுப்பார். இப்படி வேலை வேலைன்னு அலைய வேண்டாம்!" - என்றாள்.

மாமா கம்பெனிக்குப் போவதானால் காக்கி யூனிஃபாரம் போட்டுக் கொள்ள வேண்டும். பையில் பந்தாக ‘காட்டன் வேஸ்ட்'டுடன் மிஷின் மிஷினாகப் போய் எண்ணெய் போட்டு, அதன் சுழற்சி வேகம் பார்த்து - வியர்வை வழிய - அந்த இயந்திரங்களின் இரைச்சலுக்கு நடுவே இருந்து .... கொடுமை!

நான் அதற்காகப் பிறக்கவில்லை -

நீட்டாக டிரஸ் பண்ணிக்கொண்டு பவுடர் வாசனை மணக்க, ஸ்கூட்டரில், முடிந்தால் காரில் ஆபீஸ் போய் மெலிதான 'ஏஸி' குளிரில் கம்ப்யூட்டர்
கீ போர்ட் பட்டன்களை நாசூக்காகத் தொட்டு மானிட்டரில் தெரியும் எண்களோடு விளையாடி...

என் குடும்பச் சூழல் என் கர்வம். உடனடியாக வேலை தேடியாக வேண்டிய நிர்ப்பந்தமில்லை எனக்கு. அப்பா நல்ல வேலையில் இருந்து நிறைய சம்பாதித்து வைத்திருந்தார். வீட்டில் அம்மாவும் நானும்தான்.

அப்பா இரண்டு வருஷங்களுக்கு முன் காலமாகி விட்டார். அப்பா சேர்த்து வைத்த சொத்து, சுகம், வீடு, பேங்க் பேலன்ஸ் எல்லாம் இருக்கிறது. வேலை எனக்கு ஒரு ஆபரணம் போல சுகமாய் சுலபமாய் இருக்கவே ஆசை.

அம்மாவுக்கு நான் வேலைக்குப் போவதில் இஷ்டமில்லை. "எவ்வளவு சம்பாதித்தாலும் ஒருத்தன்கிட்டே கை கட்டி நிக்கிற பொழப்புத்தானேடா!" என்பாள்.

"நீயே தொழில் கத்துக்கோ. சொந்தமா தொழில் துவங்கு.

"கஷ்டப்படற வயசுதான் உனக்கு! கஷ்டப்படு. பின்னாலே நீ ஒரு முதலாளி ஆகலாம். பத்துப் பேருக்கு வேலை கொடுக்கலாம். உன்னை விட அதிகம் படிச்சவன் உன்கிட்டே வேலை செய்வான். உன்கிட்ட கை நீட்டிச் சம்பளம் வாங்குவான். சம்பளம் வாங்கிப் பழக்கப்படறவன் வாழ்நாள் முழுதும் கோழை. கடிகாரத்தைப் பார்த்து நாளை ஒட்டி, காலண்டர் பார்த்துச் சம்பளம் வாங்கறதைத் தவிர அவன் வாழ்நாளில் உருப்படியாக எதையும் சாதிக்க முடியாது. உனக்கு வேலை வேண்டாம். தொழில் தொடங்கு' என்பாள்.

இதையும் படியுங்கள்:
இரும்பு பாத்திரங்களில் சமைக்கலாமா? என்னென்ன சமைக்கலாம்? எப்படி சமைக்கலாம்?
ஓவியம்; உமாபதி

என் எண்ணம் வேறாக இருப்பது தெரிந்தும் அவள் சொல்வதை விடவில்லை. ஒவ்வொரு முறையும் சொல்கிறாள். இன்னும் சொல்லிக்கொண்டே இருப்பாள்.

கூடாது - இனிமேல் அவள் சொல்லக்கூடாது. எப்படியும் இந்த இன்டர்வியூவில் எனக்கு நிச்சயம் வேலை கிடைத்துவிட வேண்டும். கிடைத்துவிடும் என்ற நம்பிக்கை இருக்கறது. படித்திருக்கிறேன். பி.ஈ., எம்.பி.ஏ. பண்ணி இருக்கிறேன். எடுத்த எடுப்பிலேயே 'சீனியர் எக்ஸிகியூடிவ்' ஆகப் போகிற தகுதி இருக்கிறது. இரண்டு முறை 'கோல்ட் மெடல்' வாங்கி இருக்கிறேன்.

உலகப் படத்தில் கண்ணை மூடிக்கொண்டு எந்த இடத்தைத் தொட்டாலும் அது எந்த நாடு. அந்த நாட்டு ஜனத்தொகை என்ன,  தலைவர் யார்,
தலை நகர் எது? என்று எல்லாம் சொல்வேன்.

பூகோளம் – அரசியல் - பொருளாதாரம் எல்லாம் விரல் நுனியில் இருக்கிறது.

இந்த இன்டர்வியூவில் வேலை நிச்சயம் கிடைக்கும் என்ற நம்பிக்கை. நிறைந்த மனத்துடன் கிளம்பினேன்.

ஆட்டோவில் போகலாம். போக வேண்டிய இடம் பத்து கிலோவுக்கும் மேல் இருந்தது. ஆட்டோ சார்ஜ் தலையைத் தின்றுவிடும்.

பேசாமல் சிட்டி பஸ்ஸிலேயே போவதென்று முடிவு செய்தேன்.

ஃபைலை எடுத்துக்கொண்டு, கிளம்பினேன்.

அம்மா வாசலில் வந்து நின்றுகொண்டாள்.

"பார்த்துப் போ" என்றாள்.

ஓட்டமும் நடையுமாக பஸ்ஸ்டாப் வந்தபோது முதல் பஸ் போயிருந்தது.

இரண்டாவது பஸ் வருவதற்குள் உடம்பின் ரத்தம் அத்தனையும் மூளைக்கு வந்துவிட்டது- அவ்வளவு டென்ஷன்!

ஸ்ஸில் நிறைய கூட்டம். முதல் சீட்டில் உட்கார்ந்திருந்த சீனு "ஹலோ" சொன்னான். காலேஜ் மேட். எங்கேயோ வேலைக்குப் போகிறான். அடுத்த ஸ்டாப்பிங் போவதற்குள் அவன் பக்கத்தில் இருந்த ஆள் இறங்க - சீனு கைப்பையை வைத்து இடம்பிடிக்க - அவ்வளவு கூட்டத்துக்கு இடையிலும் சுலபமாய் உட்கார்ந்துவிட்டேன்.

"என்ன பண்றே?" என்றான் சீனு.

வேலைக்குத்தான் ட்ரை பண்ணிக்கிட்டு இருக்கேன். இன்னிக்குக்கூட ஒரு இன்டர்வியூவுக்குத்தான் போயிட்டிருக்கேன்!"

"ஏண்டா வேலை வேலைன்னு அலையறே. உங்கிட்டே இருக்கிற வசதிக்கும் உன் படிப்புக்கும் ஏதாவது நல்ல கம்பெனியா ஆரம்பிச்சிட வேண்டியதுதானே?"

சீனுவும் அம்மாவைப் போலவே பேசுவது ஆச்சரியம் தந்தது.

தொடர்ந்து விவாதம் செய்ய விருப்பம் இல்லாமல் பேச்சை வேறுபக்கம் மாற்றினேன்.

பஸ் நாலைந்து ஸ்டாப்பிங்குகளைக் கடந்துவிட்டது.

இதையும் படியுங்கள்:
படுத்தவுடன் தூக்கம் வர சில எளிய பயிற்சிகள்!
ஓவியம்; உமாபதி

நிறைய பேர் ஏறி - நிறைய இறங்க -

நாங்கள் எங்கள் சுற்றுப்புறத்தைப் பற்றிய சிந்தனையே இல்லாமல் எங்கள் காலேஜ் வாழ்க்கை பற்றி சினிமா அரசியல், கிரிக்கெட் எல்லாம் சுவாரசியமாகப் பேசிக்கொண்டே வந்தோம்.

திடீரென்று கன்டக்டரின் குரல் –

"ஸார் - அந்த முன் சீட்டிலே இருக்கிறவங்க கொஞ்சம் எழுந்து இடம் குடுங்க."

நான் அதைப் பொருட்படுத்தாமல் பேசிக்கொண்டே இருந்தேன் -

"ஸார் உங்களைத்தானே. இது ஊனமுற்றோர் உட்கார்ற சீட். மேலே எழுதி இருக்கு பார்த்தீங்களா? இங்க பாருங்க, இந்த ஆளு ஒரு கால் இல்லாம கட்டையை வைச்சுக்கிட்டு ஒத்தைக் கால்லே நிக்க எவ்வளவு கஷ்டப்படறார் பாருங்க. நீங்களே மனிதாபிமானத்தோடு எழுந்து இடம் குடுக்கணும். நான் நடு வண்டியிலேர்ந்து கரடியாக் கத்தறேன். காதிலேயே விழாம பேசிக்கிட்டே இருக்கீங்களே. எந்திரிங்க ஸார்!"

கண்டக்டர் ஆத்திரத்தோடு கத்த -

நான் வேண்டா வெறுப்பாய் எழுந்தேன்.

அந்த இளைஞன் 'பரவாயில்லை" என்றான்.

''யோவ் - உட்காருய்யா!" - என்றார் கண்டக்டர்.

எனக்கு அந்த ஆள், கண்டக்டர் இரண்டு பேர் மீதும் கோபம் கோபமாக வந்தது.

அந்த ஊனமுற்றவன் இளைஞனாக இருந்தான். கையில் ஃபைல். அவனும் நான் போக வேண்டிய கம்பெனி பெயரையே சொல்லி டிக்கட் கேட்டபொழுது, எனக்கு அவன் மீது முதல்முறையாக வெறுப்பு வந்தது. இவனும் அங்கே இன்டர்வியூவுக்குத்தான் வருகிறானோ என்ற கேள்வி எழுந்தது.

அவன் உடையையும் கையில் இருந்த ஃபைலையும் அவன் தோற்றத்தையும் பார்த்தால் அப்படித்தான் தெரிந்தது.

எங்கே போனாலும் இந்தப் பெண்கள்தான் எங்களுக்குப் போட்டியாக வந்து கழுத்தை அறுப்பார்கள்.

அதுகள் குலுக்கலும் - தளுக்கலும் சிரிப்பும் நினைக்கவே மனம் பற்றிக்கொண்டு எரியும்.

எங்கேயும் எதிலேயும் எல்லா இடத்திலும் அவர்கள் போட்டிதான் பெரும் பிரச்னையாக வரும். இன்றைக்கு இந்த ஊனமுற்ற ஆளா? - மனம் பொருமியது. அந்த இளைஞனைப் பார்க்க இன்னும் கோபம் வந்தது.

சொல்லி வைத்தாற்போல நான் இன்டர்வியூ போக வேண்டிய கம்பெனியிலேயே அவனும் இறங்கினான். எங்களுடனே நடந்து வந்தான். நாங்கள் ரிஸப்ஷனில் இருந்தவனிடம் விசாரித்தபோது அவன் நேராக வந்து விசிட்டர் ஹாலில் உட்கார்ந்துகொண்டான். அவன் வந்ததும், உட்கார்ந்ததும் எல்லாம் பார்க்க, ஊனம் தவிர வேறு நல்ல சிபாரிசும் இருக்கும் என்று எண்ண வைத்தது.

வழியில் போன பியூனை அழைத்து, விசிட்டிங் கார்டையும் ஒரு கவரையும் கொடுத்தான். பார்த்தபோது, அவன் நிறைய முன்னேற்பாடுகளுடன் வந்திருப்பது புரிந்தது.

என் மனத்தில் நிறைந்திருந்த நம்பிக்கைகள் லேசாக ஆட்டம் காணத் தொடங்கி இருந்தன.

வேலை கிடைக்காவிட்டால் கேவலம் என்று தோன்றியது.

வேலை கிடைப்பதற்குப் பெரிய இடைஞ்சலாக அந்த ஆள்தான் இருக்கப் போகிறான் என்று தோன்றியது.

நான் இவ்வளவு பரபரப்புடன் இருக்க, அவன் கொஞ்சம்கூட பதற்றமோ, பரபரப்போ இல்லாமல் நிம்மதியாய் இருந்தான்.

அவன் ஊனம் அவனுக்கு ஒரு முக்கியத்துவத்தைக் கொடுக்கப் போகிறது. இன்டர்வியூ சுமாராகச் செய்தாலும்போதும். அவனுக்குப் பெரிய சிபாரிசும் இருக்கும்போலத் தெரிகிறது - நிம்மதியாய் இருக்க என்ன தடை!" என் மனம் புலம்பியது.

இன்டர்வியூ ஹாலைப் பார்த்தேன். என்னைப் போலவே பத்துப் பன்னிரெண்டு பேர் வந்திருந்தார்கள்.

அவன் மட்டும் தனியாக அமர்ந்திருக்க, நான் மற்றவர்களோடு அமர்ந்துகொண்டேன். பக்கத்தில் இருந்தவனை அறிமுகம் செய்துகொண்டேன்.

எப்படியாவது அந்த ஊனமுற்றவனைக் கேலி செய்து என் மனத்தின் ஆத்திரங்களை ஆற்றிக்கொள்ள ஆவேசம் வந்தது.

இதையும் படியுங்கள்:
சத்தான சிறுதானிய ஸ்பெஷல் ரெசிபிஸ்!
ஓவியம்; உமாபதி

"நல்லவேளை! இன்டர்வியூவுக்கு பொம்பளைங்க இல்லையேன்னு நினைச்சேன். எப்படியோ இங்கேயும் ஒரு "பேக் டோர் என்ட்ரன்ஸ்" இருக்கும் போலிருக்கு!' என்றேன். அவன் காதிலும் விழட்டும் என்று சப்தமாகவே சொன்னேன்.

பக்கத்தில் இருந்தவன் ஏறக்குறைய என்னைப் போலவே எண்ணங்களில் இருந்திருக்க வேண்டும்.

"ஆமாம் ஸார். இந்த காலத்திலே வேலை கிடைக்க ஒண்ணு பொம்பளையாப் பொறந்திருக்கணும். இல்லே - கை கால் இல்லாம பொறக்கணும். எல்லாம் ஒழுங்கா இருக்கிற ஆம்பிள்ளைக்கு இந்த ஜென்மத்திலே வேலை கிடைக்காது” என்றான்.

அவன் ஆத்திரம் எனக்கும் சந்தோஷமாக இருந்தது.

நாங்கள் பேசியது அந்த இளைஞன் காதிலும் நன்றாக விழுந்திருக்கும்.

விழட்டும். நன்றாக விழட்டும். எனக்கென்ன பயமா?

நான் தலை நிமிர்ந்து இருந்தேன்.

கம்பெனி பெரிய கம்பெனியாக இருந்தது.

வேலை கிடைத்தால் நன்றாக இருக்கும். நாமும் ஒரு தனியறையில் வாசலில் ஸ்டேனோ இருக்க உதவி மானேஜராக கௌரவமாக இருக்கலாம்.

விடமாட்டானே? - அதோ வில்லன்!

மனது திருதிரு வென்று எரிச்சல் எடுத்தது.

பியூன் வந்து அந்த இளைஞனைக் கூப்பிட, அவன் கைக்கட்டையுடன் நொண்டிக்கொண்டே உள்ளே போனான்.

"இன்டர்வியூவே இன்னும் ஆரம்பிக்கலை. அதுக்குள்ளே உள்ளே கூப்பிடறாங்க பாருங்க ஸார்!"

பக்கத்தில் இருந்த இளைஞன் கடுப்பேற்றினான்.

மனது இன்னும் பொரிந்தது.

என்ன செய்வது? வேறு வழி? பல்லைக் கடித்துக்கொண்டு உட்கார்ந்திருந்தேன்.

 

மானேஜரின் அறைக் கதவு திறந்து, அந்த இளைஞன் கட்டையை ஊன்றிக்கொண்டு வெளியே வந்தான். முகம் மலர்ந்து இருந்தது.

வேலை கிடைத்துவிட்டதா? ஆர்டரே வாங்கிவிட்டானோ?

மனம் துடித்தது.

வெளியே வந்தவன் நேரே என்னிடம் வந்தான்.

"நான் இங்கே இன்டர்வியூவுக்கு வரலே. நான் ஒரு சின்ன இன்டஸ்ட்ரி வைச்சிருக்கேன். இவங்களுக்கு நிறைய ஸ்பேர் சாமான்கள் தேவைப்படுது. ஆர்டர் கேட்டேன். நிச்சயம் தர்றதாச் சொன்னாங்க. இன்னும் நிறைய
கம்பெனியை பார்த்தா நிறைய ஆர்டர் கிடைக்கும். கம்பெனியைப் பெரிசு பண்ணிடுவேன். இந்த ஊனத்தோட அலைய முடியலே. இந்த இன்டர்வியூவிலே உங்களுக்கு வேலை கிடைக்கலைன்னா என்னை வந்து பாருங்க. நல்ல சம்பளம் தர்றேன்."

அவன் தன் கம்பெனி விசிட்டிங் கார்டை என்னிடம் கொடுத்தான்.

''விஷ் யூ குட் லக்!"

அவன் கிளம்பி விட்டான்.

ஒரு கணம்.

மனம் செருப்பால் அடிபட்டதுபோல உணர்ந்தேன்.

அம்மா சொல்வது நினைவுக்கு வந்தது.

ஒரு கணத்தில் அந்த அறையின் ஏ.ஸியும் அதன் குளிர்ச்சியும் காணாமல் போயிற்று.

மாமாவின் கம்பெனி மிஷின்களின் இரைச்சல் காதில் கேட்கிற மாதிரி இருந்தது. மாமா பெண் கோகிலாவும் நல்ல அழகிதான் என்று வாய் முணு முணுக்க, அந்த இன்டர்வியூ லெட்டரை அங்கேயே கிழித்தெறிந்துவிட்டு நடந்தேன், புதுமனிதனாக!

பின்குறிப்பு:-

கல்கி 11  ஏப்ரல் 1993 இதழில் வெளியானது இச்சிறுகதை. இங்கு கல்கி ஆன்லைன் களஞ்சியத்திலிருந்து மீண்டும் வெளியிடப்பட்டுள்ளது. சில விஷயங்கள் நமக்கு நன்கு அறிமுகமாகி யிருந்தாலும், தெரிந்திருந்தாலும்... அவற்றை நாம் மீண்டும் மீண்டும் படித்து பயனடையக்கூடிய தகவல்களாக... எவர்க்ரீன் செய்திகளாக நினைவுபடுத்திக் கொள்வது நல்லதுதானே !

- ஆசிரியர், கல்கி ஆன்லைன்

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com