சிறுகதை : வீடு மனைவி மல்யுத்தம்!

ஓவியம்; ஜெ...
ஓவியம்; ஜெ...

-பா.ராகவன்

ரு சடன் பிரேக். ஒரு வீரியக் குலுக்கல். சட்டென்று ஆட்டோ நிற்க, பிரசன்னமானாள் கௌஸல்யா. தோளில் ஒரு பை. கையில் ஒரு பை. இடுப்பில் ஒரு பை. அநேகமாகத் திருட்டு ரேஷன் அரிசி.

"வாடி, குயின் ஆஃப் இங்லண்டுக்குக் குறுக்கப் பிறந்தவளே. அறுவடையெல்லாம் ஆச்சா?''

''உக்கும். ஒன் அவர் லேட்டானா,   உரசிப் பார்க்கத் தோணறதாக்கும். அநாவசிய வம்பு வேணாம், சொல்லிட்டேன். ரேஷன்ல க்யூ ஜாஸ்தி."

"ஆஹா தெரியுமே. அந்த சுந்தரிபாய் சுலோசனா, ஆயிரம் அழகுக் குறிப்புகள் சொல்லியிருப்பா. வாயப் பிளந்து கேட்டு நின்னிருப்பே. வாய் பார்த்த வீட்டை நாய் பார்க்கும் தெரிஞ்சுக்கோ."

"நடுரோடுல ரவுசு வேணாம். சொல்லிட்டேன். உள்ள போய் ஆரம்பிக்கலாம்."

"விட்டேன்னா தெரியுமா? புருஷன் ஆபீஸ் விட்டு, ரெண்டு மணி நேரமா ரோட்ல நிக்கறான். கதவைப் பூட்டிண்டு,  அம்மா உலா கிளம்பியாச்சு.''

"அரிசி கிலோ ரெண்டரை ரூபா. அம்மா மாஞ்சி மாஞ்சி எழுதியிருந்தா, என்னமோ பஞ்சத்துல நாதியத்து நிக்கறா மாதிரி... சரிதான், கிழம் கேக்குதேன்னு கைகாரியம் விட்டுப் போனா, இதுவும் பேசுவீங்க. இன்னமும் பேசுவீங்க."

"எங்கம்மாவா? உங்கம்மாவா?"

''உங்க மாமியாரோட சம்மந்தி. போதுமா? வழி விடுங்க."

கிருஷ்ணன் சட்டென்று ஒதுங்கி வழிவிட்டான். கௌஸல்யா மூட்டைகளை அவன் கையில் திணித்து, விசுக்கென்று உள்ளே போனாள்.

''சனிக்கிழமை அரை நாள்தானே ஆபீஸ்? அப்படியே ஸ்கூலுக்குப் போய் மீனாவைக் கூட்டி வரது? தோ, லொங்கு லொங்குன்னு அதுக்கும் நான் ஓடணும். ஆம்பளையாம் ஆம்பளை!"

"இதா, கௌஸல்யா, வம்பு வேணாம். பயங்கரத் தலைவலி. காப்பி போடு."

"உப்பு இல்லை."

கிருஷ்ணன் ஒரு காரியம் செய்தான். எழுந்து வந்து பளார் என்று ஒரு அறை.

''கிண்டலாடி உனக்கு? ஆபீஸ்ல நூத்தியெட்டு தலைவலி. இங்க வந்தா உன்னோட மல்யுத்தம். என்ன நினைச்சுட்டிருக்கே நீ?"

''ஓஹோ, கை நீளற அளவுக்கு வந்தாச்சா? உங்களோட குடித்தனம் பண்ண இனி என்னால் ஆகாது. நான் போறேன்."

இதையும் படியுங்கள்:
கீரைகளை அவசியம் சமையலில் சேர்க்க வேண்டும். ஏன் தெரியுமா?
ஓவியம்; ஜெ...

"ஒழி."

"எங்கன்னு தெரிஞ்சுக்கக்கூட விருப்பமில்லையாக்கும்?"

'"கழுதை கெட்டா குட்டிச்சுவர். என்னமோ உங்கப்பன் நூறு மூட்டை சீர்  வெச்சுண்டு காத்திருக்கா மாதிரி.''

"பாருங்க, எங்கப்பா பத்தி ஒண்ணும் பேச வேண்டாம். ஒரு நாளும் இப்படி அவர் எங்கம்மாவைக் கைநீட்டி அடிச்சதில்லை. நாலாயிரம் சம்பாதிக்கிற திமிர். ஒருநாள் வீட்ல இருந்து காரியம் பார்த்தா கஷ்டம் புரியும் ஐயாவுக்கு. பெரிய பேங்க் உத்தியோகம். எப்பப்பார் அந்த பக்கத்து சீட் பாலாமணியோட அரட்டை. புடைவை பார்த்தா வழிசல்."

''அடிப்பாவி! யார் சொன்னா இதெல்லாம் உனக்கு? அத்தனையும் அபாண்டம்!"

"தெரியுமே, போன மாசம் ஆபீஸ் டூர்னு ஒகனெகல் போனபோது அவகிட்ட அடல்ட்ஸ் ஒன்லி ஜோக்கெல்லாம் அடிச்சீங்களாம்? வீட்ல ஒரு பெண்டாட்டி,  குழந்தையை வெச்சுண்டு - வெக்கமாயில்லை?"

"யாருடி சொன்னா? அன்னிக்கு ஃபைல் வாங்கி வர அனுப்பினேனே, ப்யூன் தண்டபாணி,  அவனா?  ராஸ்கல். பொளந்துடறேன்."

"தப்பு செய்யறது நீங்க. அடுத்தவங்களை எதுக்குக் காயணும்?"

"கண்டதெல்லாம் பேசாத கௌஸல்யா. அவங்க கல்யாணமானவங்க. வெறும் பிரெண்ட்ஷிப்தான்."

"எக்கேடு கெட்டுப்போங்க. நான் போறேன் எங்கம்மா வீட்டுக்கு."

''த பார்! நீ வம்பு பண்ணணும்னு முடிவோட இருக்கேன்னு நினைக்கறேன். காப்பி உண்டா? இல்லையா? அதைச் சொல் முதலில்."

"கைநீட்டி அடிக்க மட்டும் தெரியற மாதிரி காப்பி போடவும் தெரிஞ்சிக்கறது! நான் போறேன், மீனாவைக் கூட்டிட்டு. எப்பவாச்சும் பொண்டாட்டி வேணும்னு தோணினா 70ஜே பஸ் பிடிச்சி, வடபழனி வந்து பாருங்க.''

கௌஸல்யா சட்டென்று உள்ளே திரும்பி இரண்டு புடைவை, இரண்டு ரவிக்கை, இரண்டு உள்பாவாடை, ஒரு குமுதம், ஒரு கல்கி எடுத்து பெட்டியில் அடைத்து மூடி, விசுக்கென்று வெளியே வந்தாள்.

"சொல்றதைக் கேளு. சும்மா சும்மா உங்க அம்மா வீட்டுக்குப் போகாதே. ஊர்ல நாலு பேர் என்னைப் பத்தி என்ன நினைப்பான்?"

"என்னவும் நினைச்சுக்கட்டும். ஆபீஸ்ல ஒரு தொடுப்பு இருக்குன்னு நினைச்சுக்கட்டும்."

"செருப்பு பிஞ்சுடும் கௌஸல்யா. மரியாதையாப் பேசு!''

"இதுல ஒண்ணும் குறைச்சல் இல்லை. நாக்கு நாலடி. கை எட்டடி வேற ஒரு உபயோகம் உண்டா? எலக்ட்ரிக் பில் கட்டச் சொல்லி எத்தனை நாளாச்சு? எம்.ஈ.எஸ்.காரன் காலைல வந்து ஃப்யூஸ் பிடுங்கிட்டுப் போகட்டுமான்னு கேக்கறான். நாக்கைப் பிடுங்கிட்டு சாகலாம்."

"அடடா, மறந்துட்டேன்.'"

''Gas-க்கு எழுதி வெக்கச் சொல்லி மூணு நாளாச்சு. இன்னிக்கோ நாளைக்கோ தீர்ந்துடும்."

"சே, ஞாபகம் இல்லை."

"எப்படியும் போங்க. எனக்கென்ன?"

கௌஸல்யா பெட்டியுடன் வெளியே வந்தாள். வழியே போகிற ஆட்டோவைக் கைதட்டி நிறுத்தினாள். ஏறி, போயே விட்டாள்.

இதையும் படியுங்கள்:
வெளி நாடுகளுக்கு சுற்றுலா செல்லும்போது கவனிக்க வேண்டியவை!
ஓவியம்; ஜெ...

'சே!' என்றான் கிருஷ்ணன்.

தலைவலி கிண்கிண்ணென்று தாக்கிற்று. இன்று ஒரு ரூபாய் நோட்டு கவுண்டிங். உயிர் போகிற சமாசாரம். பத்து ரூபாய், நூறு ரூபாய்போல் அத்தனை சுலபமல்ல. பேச்சுத் துணைக்கு பாலாமணியும் இல்லை. கேஷுவல் லீவ். வயிற்று வலி, மூட்டு வலி என்று ஏதோ சாக்கில் - இன்று சனி, நாளை ஞாயிறு - இரண்டு நாள் சந்தோஷம். இங்கே ஒரு காப்பிக்கு சிங்கி அடித்துக்கொண்டு கிருஷ்ணன்...

தலையெழுத்தே என்று சமையலறைக்குப் போனான். ஸிங்க்கில் கழுவாத பாத்திரங்கள். அலம்பாத தட்டு. சிதறிய சாம்பார்ப் பொடி. காய்ச்சாத பால். கரி படிந்த குக்கர். பிரிக்காத மளிகை சாமான். மொய்க்கும் ஈ.

சட்டென்று வெளியே வந்தான். சட்டையை மாட்டி, கதவைப் பூட்டி, சர்ரென்று கணபதி விலாஸுக்கு விட்டான் சவாரி.

இரண்டு ரூபாய் காப்பி. ஒண்ணே கால் ரூபாய் வில்ஸ் ஃபில்டர். வீட்டுக்குப் போய் ஆகிற காரியம் ஏதுமில்லை. பஸ் பிடித்து காஸினோ . தி ஸைலன்ஸர். துப்பாக்கிகள் மற்றும் முத்தங்கள் நிறைந்த உன்னத குடும்பச் சித்திரம்.

போரடிக்க, இண்டர்வெலில் எழுந்து வெளியே வந்து - பஸ் கிடைக்கவில்லை - ஆட்டோ பிடித்து, நாற்பத்தெட்டு ரூபாய் தண்டம் அழுது,வீடு சேர்ந்து, பொத்தென்று படுக்கையில் விழுந்தான்.

'பெண்ணுக்குக் கல்யாணம் ஆன கையோடு பெற்றோர், வீட்டை காலி பண்ணி காசி, ராமேஸ்வரம் போய்விட வேண்டும் என்று அரசியல் சட்டத் திருத்தம் கொண்டு வந்தால் தேவலை' என்று என்னமோ அபத்த யோசனைக்கு நடுவே அகஸ்மாத்தாகத் தூங்கி விட்டான்.

ந்ததே ஞாயிறு. பொலபொலவெனப் பொழுது விடிந்து, கலகலவென பறவை சிரித்து, தளதளவெனக் காய்கறிக்காரி கூவிப் போய், பளபளவென அன்றைய தினம் ஒளிச் சட்டை போட்டுக்கொண்டது என்று எழுதினால் அடிக்க வருவீர்கள்.

கிருஷ்ணன், அன்றைய தினத்துக்கான பணிகளை வகுத்துக்கொண்டான். பெண்டாட்டி வீட்டில் இல்லை. ஸோ, நோ சமையல் பிஸினஸ். குளித்து முழுகி, நேரே ராமபத்திரனைப் பார்க்கப் போனான். பான்பராக் ராமபத்திரன்.

"வாடா, கிருஷ்ண பரமாத்மா. பெண்டாட்டியோட டூவா?''

"எப்படிக் கண்டுபிடிச்சே?'

"அது உன் மூஞ்சியைப் பார்த்தாலே தெரிந்துவிடும்."

"வேற என்னெல்லாம் தெரியுது?"

"சம்சாரம், ஆத்தாவூட்டுக்குப் போயிட்டா. ஐயா, டெம்ப்ரவரி பிரும்மச்சாரி. வீட்டுல தனியா இருக்க போரடிக்குது. உன்னதமான ஞாயிறு வீணாகிற சோகம் நெஞ்சைக் கசக்கிப் பிழிகிறது. ஸோ, ஆபத்பாந்தவன், அநாத ரட்சகனாகிய ராமபத்திரனிடம் சரண் புகுந்திருக்கிறாய்!"

"ராட்சசன்டா நீ!"

"கையில சொத்து எத்தனை வெச்சிருக்கே?'

"ஏழு ரூபா எழுபத்தஞ்சு காசு."

"வேந்தர் திறந்தவெளித் திரையரங்குல பக்த பிரகலாதா போட்டிருக்கான். போய்ப் பார்!"

"கை விட்றாத கண்ணா."

''ஸாரி வாத்யாரே! நம்ம ஹோம் மினிஸ்டரோட நைனாவுக்கு பைல்ஸ் ஆபரேஷன் . போயே ஆகணும்னு மகா அடம் என்னமோ நான்தான் ரிப்பன் கட் பண்ணப் போறா மாதிரி"

இதையும் படியுங்கள்:
இதயத்திற்கு இதம் தரும் தட்டைப்பயிறின் நன்மைகள்!
ஓவியம்; ஜெ...

தலையெழுத்தே என்று திரும்பி விட்டான் சவாரி.

நாள் முழுக்க அங்கே இங்கே அலைந்து, பிற்பகல் தேவநேயப் பாவாணர் லைப்ரரியில் 'குடும்பத்தில் குழப்பம் வந்தால் சமாளிப்பது எப்படி?' என்ற புத்தகத்தால் முகத்தை மறைத்துக்கொண்டு நிம்மதியாய் இரண்டு மணி தூங்கினான்.

மாலை வீடு வந்து, டீ.வி.யில் அபத்த தமிழ் சினிமா பார்த்து, சாப்பிடாமல் படுத்தான். அவனுக்குள் இருந்த கொஞ்சூண்டு மனுஷத் தன்மை கண்விழித்தது. சே, அடித்திருக்கக் கூடாது. என்ன ஒரு அழகான, அன்பான மனைவி. எதற்காகடா அடித்தாய் அறிவு கெட்ட ராஸ்கல்? உன் அம்மாவுக்கு அரிசி வாங்கத்தானே போயிருந்தாள்? அங்கே சுந்தரிபாய் சுலோசனாவிடம் அழகுக் குறிப்பு கேட்டுக் கொண்டால் என்ன தப்பு? உன் பெண்டாட்டி. நீதானே ரசிக்கப் போகிறாய். புத்தி கெட்ட ராஸ்கல். சுயபச்சாதாபத்துடன் தூங்கியே விட்டான்.

றுநாள். அரக்க பரக்க குளியல். அசிரத்தையாய் கணபதி விலாஸ் காய்ந்த தோசை. அதிவேகமாய் ஆபீஸ்.

"என்னங்க, கிருஷ்ணன், பயங்கர டல் அடிக்கிறீங்க? பார்லிமென்ட்டுல நம்பிக்கை யில்லாத் தீர்மானமா?"

பக்கத்து ஸீட் பாலாமணி. கிருஷ்ணன் பேசாமல் இருந்தான்.

"தெரியுமா விஷயம்? சனிக்கிழமை லீவு போட்டேனா. ரெண்டு நாள் ஹஸ்பெண்டோட ஹாயா குற்றாலம்."

"வெறுப்பேத்தாதீங்க மேடம். இவ்விடம் நிலைமை சரியில்லை."

"அதென்ன!"

"ஒய்ஃபோட சின்ன சண்டை."

"கிழிஞ்சுது."

"அம்மா வீட்டுக்குப் போயிட்டா."

"எத்தனை நாள் முகாம்?"

''கிருஷ்ணா போன்" - யாரோ அலற பாய்ந்து போய், "ஹலோ!"

"நான்தான் கௌஸல்யா. வந்துட்டேன். ஸாரி. நேத்து என்ன செய்தீங்க? சாப்ட்டீங்களா?"

 நெகிழ்ந்து போனான் கிருஷ்ணன். ஹுர்ரே.

''நானும் ஸாரி. என்ன இருந்தாலும் அடிச்சிருக்கக் கூடாது. முட்டாள் நான்."

"பரவாயில்லை. சீக்கிரம் வந்துடுங்க."

"தோ கிளம்பிட்டேன்!" "ஐயோ அதுக்குள்ளயா? ஆபீஸ் முடிய இன்னும் நாலு மணி நேரம் இருக்கு?'' ''ஹ! பெரிய ஆபீஸ் ஹெட் ஆபீஸ் போகணும், ஒரு ஸ்டேட்மென்ட் குடுக்க. அப்படியே கம்பி நீட்டிற மாட்டேன்!"

சிரித்தாள். வைத்து விட்டாள்.

கிருஷ்ணன் உற்சாகமாய் சீட்டுக்கு வந்தான். அசுரவேகத்தில் பணிகளை முடித்தான். "பாலாமணி, டாட்டா. பெண்டாட்டி பேச்சு பழம் விட்டாச்சு!'

"லஞ்ச் முடிச்சுட்டுக் கிளம்பறதானே?"

''யாருக்கு வேணும் ஓட்டல் பொட்டலம்? அங்க என் பெண்டாட்டி வகை வகையா சமைச்சி வெச்சிருப்பா. வரட்டா? ஜுட்!''

அதிக சந்தோஷத்தில் ஆட்டோ பிடித்து ஹெட் ஆபீஸ் போய், அப்படியே வீடு திரும்பி - பூட்டி இருந்தது. பக்கத்து வீட்டு மாமி, பால்கார்டு புதுப்பிக்கப் போயிருப்பதாகச் சொன்னாள்.

''சே' என்று படியில் உட்கார்ந்தான். பசி, தலைவலி. எரிச்சல்.

மணி ஒன்று.

மணி இரண்டு.

மணி மூன்று. ஒரு சடன் பிரேக். ஒரு வீரியக் குலுக்கல். சட்டென்று ஆட்டோ நிற்க, பிரசன்னமானாள் கௌஸல்யா.

"வாடி,  குயின் ஆஃப் இங்லண்டுக்குக் குறுக்கப் பிறந்தவளே! புருஷன் ஆபீஸ் விட்டு ரெண்டு மணி நேரமா ரோட்ல நிக்கறான், அம்மா உலா கிளம்பியாச்சு!''

கிருஷ்ணன் உக்கிரமாக எழுந்து நின்றான்.

பின்குறிப்பு:-

கல்கி 21  ஆகஸ்ட் 1994 இதழில் வெளியானது இச்சிறுகதை. இங்கு கல்கி ஆன்லைன் களஞ்சியத்திலிருந்து மீண்டும் வெளியிடப்பட்டுள்ளது. சில விஷயங்கள் நமக்கு நன்கு அறிமுகமாகி யிருந்தாலும், தெரிந்திருந்தாலும்... அவற்றை நாம் மீண்டும் மீண்டும் படித்து பயனடையக்கூடிய தகவல்களாக... எவர்க்ரீன் செய்திகளாக நினைவுபடுத்திக் கொள்வது நல்லதுதானே !

- ஆசிரியர், கல்கி ஆன்லைன்

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com