சிறுகதை: கட்டில்!

Short Story in Tamil
ஓவியம்; மருது
Published on

-கிருஷ்ணா

'டமால்' என்ற வெடிச் சப்தம் கேட்டு நடுங்கிப் போனது உடம்பு.

'பய புள்ளைங்க இப்படி திடும், திடும்னு வெடியைப் போடறாங்களே! காசுக்குப் புடிச்ச கேடு.'

பெரியசாமி முணுமுணுப்பாய்த் திட்டினார்.

இரண்டு பக்கமும் சீரியல் லாம்ப் தோரணங்கள். பத்தடி இடைவெளியில் டியூப் லைட்டுகளின் அணிவகுப்பு. நடுநடுவே வெடிச் சப்தம். லவுட் ஸ்பீக்கரில் சினிமாப் பாட்டு அலறல்.

"இவுனுகளுக்கு அள்ளி, அள்ளிக் கொடுக்கிற மாதிரிதான் துள்ளவானுக பயலுக. பேசிப் பேசியே கொள்ளையடிக்கிறான் அரசியல்வாதிங்க. இவுனுக கைக்காசும், உழைப்பும்தான் விரயமாகுது, த்தூ" பொருமியபடி எச்சிலைத் துப்பினார்.

"என்ன மாமூ, தூங்கலியா? எப்பவும் ஒன்பது மணிக்கெல்லாம் கட்டையைக் கிடத்திடுவீரு.''

'கட்டையிலே போற மருதுப் பயலுக்கு வாய் ஜாஸ்திதான்.'

மனசுக்குள் திட்டினார். எதைப் பார்த்தாலும் எரிச்சல் வந்தது.

கண் அங்கங்கு வேடிக்கை பார்த்தாலும், முடிவில் அந்தக் கட்டிலில் போய்த்தான் நிலைத்தது.

"பெரிசு, கொஞ்சம் உதவி பண்ணு. உன் மரக்கட்டிலை எடுத்துக்கறோம்!''

மளிகைக்கடை பையன் வேலு, கூட நாலு ஆட்களுடன் வந்து கெஞ்சினான் ஏழு மணிக்கு.

"எதுக்குலே என் கட்டிலு?"

"தலைவர் ஏறி நின்னு பேசத்தான்!"

"போங்கடா, போக்கத்த பசங்களா!"

"மனசு வையி பெரிசு. உனக்கு ரெண்டு சுருட்டு வேணா வாங்கித் தரோம். ஏற்பாடு செஞ்சிருந்த ரெண்டு பெஞ்சிலேயும் காலு ஆடுது. ஆறேழு பேர் ஏறி நிப்பாங்க. தாங்குமோ, தாங்காதோ? டேய் கைபிடிங்கடா!''

சட்டென கட்டிலைப் பிடித்துத் தூக்கிக்கொண்டு போய்விட்டனர்.

பெரியசாமிக்கு மறுக்க முடியவில்லை. மறுத்தும் பயனில்லை என்று புரிந்து போனது.

கட்டிலில் படுத்தால்தான் தூக்கமே வரும் அவருக்கு. கிட்டத்தட்ட பத்து வருஷமாய் பழக்கமாகிவிட்டது. வாசலில் கட்டிலைப் போட்டு நட்சத்திரங்களைப் பார்த்தபடியே தூங்கிப் போவது வழக்கம். வேறு எங்கு படுத்தாலும் சரியாய் தூக்கம் வராது.

இதையும் படியுங்கள்:
இந்தியாவின் 31 முதல்வர்களின் மொத்த சொத்து மதிப்பு எத்தனை கோடி? பணக்கார மற்றும் ஏழை முதல்-மந்திரி யார்?
Short Story in Tamil

றுபடியும் 'டமால்' சப்தம். நாலைந்து முறை வெடித்து ஓய்ந்தது.

அந்த இடம் முழுவதும் புகை மண்டலம். தெருப் பையன்கள் அரை டிராயரை இழுத்துப் பிடித்தபடி 'ஹோ' என்ற கத்தலுடன் ஓடினர்.

இப்போது லவுட் ஸ்பீக்கரில் தலைவரின் பேச்சைப் போட்டிருந்தார்கள். டேப் செய்யப்பட்ட பழசு.

"என்ன சாமி, வேடிக்கை பாக்குறீகளா?"

பெட்டிக்கடை சண்முகம் பீடியைப் பற்ற வைத்தபடி அருகில் வந்தார். தீக்குச்சியின் கந்தக நாற்றம், பீடிப்புகையுடன் சேர்ந்தடித்தது.

"வேறு என்ன செய்யறது? என் கட்டிலைப் பிடுங்கிக்கிட்டுப் போயிட்டானுக. அதுல படுத்தாத்தானே தூக்கம் வரும்? மணி வேற பத்தாச்சு.''

"நீங்களாவது கட்டிலைத்தான் கொடுத்தீக. திரும்பி வந்துடும். என்னிடம் இருநூறு ரூபாய் காசைப் பிடுங்கிக் கிட்டானுக. உழைச்ச காசு, எப்படி வெட்டியாச் செலவாகுது பாத்தீகளா?"

ராக்கெட் வெடி சர்ரென்று மேலே சென்று வெடித்தது.

"ஐயா, கொஞ்சம் தள்ளிக்குங்க."

எலெக்ட்ரீஷியன் ஒருவன் சைக்கிளை ஸ்டாண்ட் போட்டு நிறுத்தி, பின் கேரியரில் ஏறி நின்றான். டெஸ்டரை வைத்து சீரியல் லாம்ப்பை டெஸ்ட் செய்தான். அவன் கைபட்டதும் எரியாமலிருந்த பல்ப் வரிசையாகப் பளிச்சிட்டது.

"அந்த டியூப் லைட்டையும் கவனி கண்ணே."

ஒருவன், கண் சிமிட்டிய லைட்டைக் கைகாண்பித்தான்.

"ஏன் இன்னும் தலைவரைக் காணோம்?" என்று கேட்டார் சண்முகம், அவனிடம்.

"வந்துடுவாரு. அங்கங்கே கொடி ஏத்தி,  அஞ்சு நிமிஷம் பேசிட்டுத்தானே வரணும். நரியன் தெரு தாண்டியாச்சு.''

மைக்கில் 'அலோ', 'அலோ' என்றான் ஒருவன்.

"இளம் புயல், புரட்சித்தங்கம் தலைவர் இன்னும் சிறிதுநேரத்தில் இங்கு வந்து நம் கட்சிக் கொடியை ஏற்றுவார்.”

"மாவீரன் நெப்போலியனைப் பார். நேதாஜியைப் பார்" என்று பார்க்க முடியாதவர்களை எல்லாம் பார்க்கச் சொன்னது தலைவரின் குரல் லவுட் ஸ்பீக்கரில்.

''இந்தக் கொசு சனியன் வேற!"

தோளில் கிடந்த துண்டால் இரண்டு  பக்கமும் முதுகில் விசிறினார் பெரியசாமி.

"சீக்கிரம் கூட்டத்தை முடிச்சு, கட்டிலைக் கொடுத்துட்டா படுத்துடலாம். காலு வேற வலிக்குது. வயசானாலே இந்தக் கஷ்டம்தான் மூட்டு வலி, அம்மா."

குனிந்து தடவிக் கொடுத்தார்.

சாத்தியிருந்த தம் வீட்டுக் கதவைப் பார்த்தார்.

"கடைசிப் பையனும், மருமகளும் மட்டும்தான் வீட்டிலே. மத்தவங்க ஊருக்குப் போயிருக்காங்க" என்றார் சண்முகத்திடம்.

''பேசாம, நீங்களும் உள்ளாற போய்ப் படுத்திடுங்கண்ணே!"

''சின்னஞ்சிறிசுக, தூங்கட்டும் பாவம். அதுகளாவது சந்தோஷமாய் இருக்கட்டும்" என்றார்.

இந்த அமளி, துமளியில், பையன் வெளி வந்து எட்டிப் பார்க்காதது குறையாய் இருந்தது.

"அப்பனைக் கூப்பிட்டு உள்ளே படுக்கச் சொல்லலாம்னு தோணலே பாருங்க. பொண்டாட்டி வந்துட்டாலே பெத்தவனை மறந்துடறாங்க, இந்தக் காலத்துப் பசங்க" - சண்முகம் வேறு உசுப்பேற்றினார்.

"தலைவர் வால்க! சிங்கத் தலைவர் வால்க! புரட்சித்தங்கம் வால்க! வால்க! வால்க! தலைவர் வந்துகொண்டிருக்கிறார். இன்னும் சில நிமிடங்களில் கொடி ஏற்றுவார்."

மைக்கில் ஒருவன் தொண்டை வறள கூறினான்.

சர்ரென்று இரண்டு கார்கள் வந்து நின்றதும் இடமே பரபரப்பானது...

டமால், டமால் என வெடிச் சப்தம், திடுமேன மேளச் சப்தம் வேறு கேட்க ஆரம்பித்தது. நையாண்டி மேள செட் அது. 'இவர்கள்

கூட்டம் வாய் பிளந்து பார்த்தது.

"ஊரான் காசுல ஷோக்குப் பண்ணுறாங்க. சீக்கிரம் முடிஞ்சிட்டா நல்லாயிருக்கும். தூக்கம் செருகுது." 

பெரியசாமி கட்டிலுக்காகத் தவமிருந்தார்.

இதையும் படியுங்கள்:
ஜோக்ஸ்; ஏன்யா, நான் வெளியே நடமாடிக்கிட்டு இருக்கிறது உனக்கு பிடிக்கலையா?
Short Story in Tamil

பெரியசாமிக்குத் திடீரென வயிற்றை கலக்க ஆரம்பித்தது. காலையிலிருந்தே கடாமுடா செய்துகொண்டிருந்தது.

வீட்டுக் கதவைத் தட்டலாமா என் யோசித்தார். மகன் இதுவரை கதவைத் திறந்து பார்க்காதது யோசிக்க வைத்தது. சின்ன வயசு. புதுக்கல்யாண ஜோடி. தொந்தரவு பண்ண வேண்டாம்.

தலைவர் கொடி ஏற்ற, கூட்டம் கைதட்டியது படபடவென.

"அஞ்சு நிமிஷ நடையிலேதான் வாய்க்கால் இருக்கு. அங்கேயே போயிடலாம்."

முணுமுணுத்தபடி நடக்க ஆரம்பித்தார். பெரியசாமி.

 'நாம வர்றதுக்குள்ள மீட்டிங் முடிஞ்சுடுமா? கட்டிலை எடுத்து, வேலு, வீட்டு முன்னாடி போட்டுடுவானா?'

மனசில் முளைத்த கேள்விகளுடன் விரைவாய் நடந்தார்.

திரும்பியபோது ஜனக்கூட்டம் காணாமல் போயிருந்தது.

டியூப் லைட்டுகள் மட்டும் விழித்திருந்தன.

"பெரிசு, உன் கட்டிலைத் தூக்கி வீட்டு முன்னே போட்டு்ட்டோம். எங்கே போயிட்டே?" வேலு சொல்லிக்கொண்டே நாலைந்து பேருடன் கூட்டத்தைச் சிலாகித்தபடி பேசிக்கொண்டு போனான்.

'அப்பாடி, நிம்மதியாய்த் தூங்கலாம், இனி.'

வீட்டு வாசலை நோக்கிக் காலை எட்டிப் போட்டார்.

"அட, யாரிது?"

சிறுவன் ஒருவன் கை, கால்களைப் பரத்தி, வாய் பிளந்து தூங்கிக் கொண்டிருந்தான் கட்டிலில்.

இதையும் படியுங்கள்:
2025 புத்தாண்டு முதல்... இப்படிச் செய்தால் என்ன?
Short Story in Tamil

"யாருடா அது?"

ம்ஹூம்! அவர் அதட்டலுக்குப் பலனில்லை.

தலையைத் திருப்பி விளக்கு வெளிச்சத்தில் பார்த்தார்.

'முருகையன்! மெக்கானிக் ஷாப்புல வேலைபாக்குற எடுபிடி.'

'தட்டி எழுப்பலாமா' என யோசித்தார்.

பாவம், சின்ன வயசுலேயே வயத்துப் பொழைப்புக்காகக் கடையிலே மாடா உழைக்கற பய இவன். மீட்டிங்கு, வாண வேடிக்கைகளைப் பார்த்துட்டு அலுப்புல கிடைச்ச காலியான இடத்துல இங்கே படுத்துத் தூங்கிட்டான் போலிருக்கு. இன்னிக்கு ஒரு நாளு படுத்துட்டுப் போறான் போ.'

சுற்றுமுற்றும் பார்த்தார். எதிர் வீட்டுக் கல் மேடை கண்ணில்பட்டது. ஓர் ஆள் கொஞ்சம் குறுக்கிப் படுக்கலாம்தான். கஷ்டம்தான். வேறு வழி? 'தூக்கம் வந்தாலும், வராவிட்டாலும் கட்டையைக் கீழே சாத்தித்தானே ஆகணும். சிவ ராத்திரியோ, என்னவோ இன்னிக்கு.'

முணுமுணுத்தபடியே, கல் மேடையில் போய் முடங்கிக்கொண்டார் பெரியசாமி.

பின்குறிப்பு:-

கல்கி 19 மே 1996 இதழில் வெளியானது இச்சிறுகதை. இங்கு கல்கி ஆன்லைன் களஞ்சியத்திலிருந்து மீண்டும் வெளியிடப்பட்டுள்ளது. சில விஷயங்கள் நமக்கு நன்கு அறிமுகமாகியிருந்தாலும், தெரிந்திருந்தாலும்... அவற்றை நாம் மீண்டும் மீண்டும் படித்து பயனடையக்கூடிய தகவல்களாக... எவர்க்ரீன் செய்திகளாக நினைவுபடுத்திக்கொள்வது நல்லதுதானே!

- ஆசிரியர், கல்கி ஆன்லைன்

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com