சிறுகதை - மொய் சிலிர்ப்பு!

ஓவியம்; மருது
ஓவியம்; மருது

-அகிலா கார்த்திகேயன்

 ழுமலை என் மேஜையை நோக்கி வரும்போதே எனக்கு பகீரென்றது. ஏழுமலை ஊழியர் சங்கத் தலைவன். ஆனால் இதில் வேடிக்கை என்னவென்றால் வாடிக்கையாக சங்கத் தலைவர்கள் கோரிக்கைகளைக் கொண்டு வந்துதான் மிரட்டுவது வழக்கம். ஏழுமலையோ ஏதாவதொரு அழைப்பிதழோடு அவ்வப்போது வந்து அவஸ்தைப்படுத்துபவன்.

பயந்தது போலவே அழைப்பிதழையும் கடிதத்தையும் பவ்யமாக நீட்டினான்.

''ஹி... ஹி... என்ன ஏழுமலை?" வழிந்தேன்.

"அதான் ஐயா...நம்ப வாட்ச்மேன் சுந்தரத்தோட பையனுக்கு அடுத்த வாரம் கல்யாணம்... ஐயாவுக்கு அந்த பேமானிய பத்திரிகை வைக்கச் சொல்லியிருந்தேன்... வைக்கலையா?"

மெய்யாலுமே எனக்கு அந்த வாட்ச்மேன் யார் என்றும் தெரியாது... அப்படி ஒரு பத்திரிகையும் பார்க்கவில்லை. இருந்தாலும் மொய்யாக எதையாவது போட்டே தீர வேண்டும். சங்கத் தலைவனைப் பகைத்துக் கொள்ளவா முடியும்.

''ஹி... ஹி... அதனால என்ன ஏழுமலை... கொண்டா அதை!" என்று வாங்கிப் படித்தேன். வழக்கம் போல அதே வார்த்தைகள்.

அன்புடையீர்... நம் தோழர் சுந்தரத்தின் மகனுடைய திருமணத்திற்குத் தங்களுடைய அன்பளிப்பை வழங்க வேண்டுகிறோம்."

மனோகரனின் அச்சுப் போன்ற கையெழுத்து. அடியில் வெற்றிடம், இன்னும் நிரப்பப்படாமலிருந்தது. நான்தான் ஆரம்பிக்க வேண்டும்.

"எவ்வளவு போடலாம் ஏழுமலை?"

'"ஐயா நீங்கெல்லாம் ஐம்பதாவது போட்டாத்தான்,  மத்த கெய்தெங்ககிட்ட ஐந்தோ பத்தோ வாங்க முடியும்."

ஏழுமலையின் குரல் மிரட்டலாக வந்தது. வசூல் செய்வதில் எமகாதகன்.

"ஒரு முப்பது போடறேன் ஏழுமலை. இந்த மாசமே இத்தோட நாலு ஐந்து வந்தாச்சி..." என்று பேரம் பேசினேன், அல்லது கெஞ்சினேன்.

அன்பை அளிப்பதில் அவ்வளவு ஓர் அவலமான நிலை இந்த ஆபீஸில்.

'"சரி... ஐயா இஷ்டம்" என்று கஷ்டமாக ஏழுமலை கூறியதைக் கண்டுகொள்ளாமல் என் பெயருக்கு நேராக முப்பது என்று எழுதி அனுப்பினேன்.

ஏனோ என் மனைவி என் மனக்கண்முன் கட்-அவுட்டாய் விஸ்வ ரூபமெடுத்து மிரட்டுவது போலிருந்தது. ஜானவாசத்திலிருந்து கட்டு சாதம் வரை அழுத்தம் திருத்தமாக, குடும்ப சகிதம் சாப்பிட்டது மல்லாமல் ரவிக்கை, எவர்சில்வர் கிண்ணமென்று வசூல் வேறு செய்துகொண்டு வரும் உறவுக்காரர்களின் கல்யாணங்களுக்கே, '"ஆனாலும் அவ்வளவு ரூபா ஓதியிட்டிருக்க வேண்டாம்" என்று பிசாத்து இருபது ரூபாய்க்கே என்னைப் பிய்த்தெடுக்கும் ரகம் அவள். இந்த மாதமே ஆபீஸில் 'அன்புடையீர்' தொல்லையால் நூறுக்கு மேலே பறந்திருப்பது அவளுக்குத் தெரிந்தால், விவகாரம் விவாகரத்துக்கே போய் விடும்.

இதையும் படியுங்கள்:
இரத்தக் குழாய்களின் அடைப்பைப் போக்கும் ஐந்து காய்கறிகள் தெரியுமா?
ஓவியம்; மருது

நாலு செக்ஷன்கள் அடங்கிய இந்தத் தலைமை அலுவலகத்தில் சுமார் இருநூறு ஊழியர்கள். இடறி விழுந்தால் கல்யாணம், காது குத்தல் என்று, ஆபீஸில் ஃபைல்களை போடுகிறார்களோ இல்லையோ பத்திரிகையைப் போட்டுக்கொண்டே இருப்பார்கள். தரித்திர பட்சம் ஆளுக்கு ஐந்தோ பத்தோ போட்டாலும் இருநூறு பேருக்கு ஒரு கணிசமான தொகை சேர்ந்து விடுவதென்னமோ உண்மை. ஆனால் மாதா மாதம் மஞ்சள் பத்திரிகை மானாவாரியாக வருவதில் ‘அன்புடையீர்'களுக்கு மஞ்சள் கடுதாசி கொடுக்கும் நிலைமை ஏற்பட்டுவிடும் போலிருக்கிறது.

சிலருக்கு போட்ட முதலை எடுக்க ஆத்திரம். அதனால் வீட்டோடு நடத்த வேண்டிய விசேஷங்களுக்கெல்லாம் ஆபீஸ் ஆட்களைக் கூப்பிடத் தொடங்கிவிட்டார்கள். மஞ்சள் நீராட்டு விழா,  கேபிள் டீ.வி. காட்டு விழா என்று இல்லாத பொல்லாதவைகளுக்கெல்லாம் அழைப்பிதழ் நீட்டி ஆபத்தை உருவாக்கி விட்டார்கள்.

ஆபத்து முதலில் பிச்சை முத்து வடிவில்தான் வந்தது. தன் பேரனுக்கு மொட்டையடித்துக் காது குத்துவதாக போஸ்ட் கார்டில் கைப்பட எழுதிய பத்திரிகையை விநியோகித்து, ஏழுமலை மூலம் வசூலும் செய்துகொண்டான். விழுப்புரத்துக்குப் பக்கத்தில் எங்கோ நடந்த விசேஷம் ஆதலால் அதைப் பற்றி யாரும் கவலைப்படவில்லை. ஒரு மாதம் கழித்து ஒரு நாள் பிச்சைமுத்துவின் பேரனே தன் தாத்தாவை எதற்கோ தேடி வர, பிச்சைக்கு இருப்பது ஒரே பேரன் என்றும் அவனும் ஒன்பதாம் வகுப்பு படித்துக்கொண்டு ஃபங்க் கட்டிங்கும் தலையுமாகத் திரிபவன் என்றும் தெரியவந்தது. இது பற்றிப் பிச்சையிடம் மிரட்டி விசாரிக்க, அவனும் தனக்குப் பணமுடையாய் இருந்ததால், இப்படி போலியாக பத்திரிகை தந்து எங்களை மொட்டையடித்துக் காது குத்தியதாக ஒப்புக்கொண்டு புலம்பவே போனால் போகிறதென்று விட வேண்டியதாயிற்று.

அடுத்து பாலகிருஷ்ணன் செய்தது படு அக்கிரமம். ஒடுக்கத்தூர் பக்கத்தில் புதுமனை புகுவிழா என்று அழைப்பிதழ் தந்து வசூல் பிழைப்பைச் செய்துவிட்டார். ஊருக்கு ஒதுக்குப்புறமான ஒடுக்கத்தூருக்கு யார் வரப் போகிறார்களென நினைத்திருப்பாரோ என்னவோ... தாங்கள் போட்ட அல்ப ஐந்து ரூபாய்க்கு விசேஷம் துபாயில் நடந்தால்கூட விடாமல் போய்ச்சாப்பிட்டு விட்டு வரும் சில விடாக்கொண்டர்கள், ஒடுக்கத்தூர் சென்று வீட்டைப் பார்த்ததும் நடுக்கமே வந்து விட்டதாம்! பாலகிருஷ்ணனுக்கல்ல, போனவர்களுக்கு! புதுமனை புகுவிழா என்று போட்டு விட்டு விழுமோ விழாதோ என ஊசலாடிக்கொண்டிருந்த உத்திரமும், ஓடு வேய்ந்த கூரையுமாக இருந்த அந்தப் பழைய வீட்டில் பாலகிருஷ்ணன் பால் காய்ச்ச அப்போதுதான் தயார் செய்துகொண்டிருந்தாராம். லிட்டருக்கு நாலு சொட்டு பால் கணக்கில் ஒரு தண்ணீர் பாலைக் காய்ச்சி, ஆளுக்குக் கால் தம்ளர் கொடுத்தபோது, 'இது என்ன கலாட்டா, பார்வையை எல்லோரும் வீச

''ஹி... ஹி... நீங்களெல்லாம் கிரஹப் பிரவேசம்னு தப்பாப் புரிஞ்சுப்பேங்கன்னு நான் நினைக்கலே. புது வீட்டுக்குக் குடி போறதும் புதுமனை புகுவிழாதான்னு உங்களுக்கு எப்படி தெரியாம போச்சு?" என்று எல்லோரையும் எரிச்சல் மூட்ட,  இவர்கள் அனைவரது சாபத்தினால் ஆடிக் கொண்டிருந்த உத்திரம் விழுந்து காலில் அடிபட்டு மொய்ப் பணம் அத்தனையும் ஆஸ்பத்திரிக்குச் செலவாயிற்று.

இப்படிச்சிலர் துஷ்பிரயோகம் செய்ய, மற்றும் பெண்ணைப் பெற்ற சில ஆசாமிகள் பெண் கல்யாணத்திலிருந்து ஆரம்பித்து அவள் சீமந்தம், பேரனுக்குப் பெயர் சூட்டு விழா, ஆண்டு நிறைவு என்று அடுத்தடுத்து ஆறு மாத பிராவிடெண்ட் ஃபண்ட் கடன் போல தொடர் வசூலைச் சாமர்த்தியமாக நடத்திக் கொண்டிருந்தனர்.

இப்படி ஏதடா சாக்கு என்று தாங்கள் அளித்த 'அன்பை' அப்படியே திருப்பிப் பெற ஆளாளுக்குப் பறந்து கொண்டிருந்தனர். செக்ஷன் அதிகாரியான எனக்கு மட்டும் இருக்காதா என்ன... இந்த ஆபீஸுக்கு வந்ததிலிருந்து நான் அளித்த அன்பளிப்பு இரண்டாயிரத்தைத் தாண்டி விட்டதென்றால் பார்த்துக்கொள்ளுங்களேன். இந்த அழகில் நாலைந்து மாதங்களில் எனக்கு மாற்றல் வேறு வர வாய்ப்பிருந்தது. இதற்கு மேல் விட்டு வைப்பது அவ்வளவு உசிதமல்லவென்று தோன்றினாலும் அதற்கான உபாயமும் எனக்குத் தெரியவில்லை. பையனுக்கோ, பெண்ணுக்கோ கல்யாணத்தைச் செய்யலாமென்றால் அதற்கும் வழியில்லாமல் அரசாங்கம் பால்ய விவாக தடைச் சட்டம் போட்டு விட்டது. அதிகாரி என்ற வகையில் அல்பமாக பர்த்- டே - பார்ட்டி, என்றெல்லாம் அழைப்பிதழ் வழங்குவதும் அழகல்ல எனப்பட்டது... பின் இந்த இரண்டாயிரத்துக்கு என்னதான் வழி?

இதையும் படியுங்கள்:
பதின் பருவ இளைஞிகளே! இது உங்களுத்தான்! சரும ஆரோக்கியத்திற்கான சில டிப்ஸ்!
ஓவியம்; மருது

ழி, அன்று மாலை விழி மேல் வழி வைத்து என் வரவை எதிர்பார்த்து நின்ற என் மனைவி நிர்மலாவிடம் இருந்தது. வந்ததும் வராததுமாக, "ஒரு ஹேப்பி நியூஸ்" என்றபடி காப்பியை நீட்டினாள். அவளுடைய 'சி.பி.எஸ்.ஸி' தம்பிக்கு ஸ்டேட் காலேஜ் அட்மிஷன் கிடைத்திருக்குமோ?

"என்ன அப்படி பார்க்கறீங்க என் தங்கை வித்யாவுக்குக் கல்யாணம் நிச்சயமாயுடுத்தாம். நீங்க ஆபீஸுக்குக் கிளம்பினதும் அப்பா வந்தார். திடீர்னு ஒரு பத்து நாள்ல எல்லாம் கூடி வந்து, அடுத்த மாசம் இருபதாம் தேதி கல்யாணத்தை நடத்திடலாம்னு பிள்ளை வீட்டுக்காரங்க அவசரப் படுத்திட்டாங்களாம்... பையனோட அப்பாவை உங்களுக்கும் தெரிஞ்சிருக்கலாம்னு அப்பா சொன்னார். பத்திரிகையெல்லாம்கூட அடிச்சிட்டு வந்துட்டார். 'மத்த கல்யாண வேலையெல்லாம் கவனிக்கணும், மாப்பிள்ளையைக் கோவிச்சுக்க வேணாம்னு சொல்லு. அப்புறம் அம்மா வோட வந்து அழைக்கறேன்'னு சொல்லிட்டு மத்தியானமே திருச்சிக்குத் திரும்பிப் போயிட்டார். ஒரு பத்துக் கல்யாண பத்திரிகையை உங்களுக்கு இருக்கட்டும்னு வைச்சிட்டுப் போயிருக்கார்."

காதினில் எனக்குத் தேன் வந்து பாய்ந்தது போலிருந்தது. மாநாட்டு பலூன் கணக்காய் என் மனம் குதூகலிக்க, மச்சினி கல்யாணத்தை வைத்து ஆபீஸில் மொய் மகசூல் செய்யத் தீர்மானித்தேன். என் முகத்தில் தெரிந்த பூரிப்பைத் தன் தங்கைக்குக் கல்யாணமென்றவுடன் நான் அடைந்ததாய்த் தவறாகப் புரிந்து கொண்ட நிர்மலா பூரித்தாள்.

அவசர அவசரமாகப் பத்திரிகையைப் படித்தேன். இரு வீட்டார் அழைப்பாயிருந்தாலும் என் மாமனார் மறக்காமல், 'தங்கள் வரவை விரும்பும்' என்று முதல் மாப்பிள்ளையான என் பெயரையும் போட்டிருந்தார். ஆபீஸில் கொடுக்கத் தோதாக இருக்கும். மேலும் கல்யாணம் திருச்சியில் என்பதால் ஆபீஸ் ஆட்கள் அண்டுவதற்கும் வாய்ப்பில்லை.

சரி, இவர் வைத்துவிட்டுப் போன பத்துப் பத்திரிகை பத்தாது என்ற காரணத்தால், அதே அச்சாக இருநூறு காப்பிகளை அடிக்கச் சொல்லி எனக்குத் தெரிந்த அச்சகத்தில் ஆர்டர் கொடுக்க, அவசர அவசரமாய் நான் கிளம்பியபோது,  நிர்மலா திக்குமுக்காடிப் போனாள்.

 டுத்த நாள், என் அவசரத்திற்குக் காய்ந்தும் காயாததுமாக அச்சடித்துக் கொடுத்த பத்திரிகைகளை வாங்கிக்கொண்டு ஆபீஸ் போனேன். இன்றே விநியோகம் செய்தால்தான், ஏழுமலை 'அன்புடையீர்' எழுதி சர்குலேஷனுக்கு விட்டு, ஒண்ணாம் தேதி வாக்கில் கட்டாய கலெக்ஷன் பண்ணிக் கல்யாணத்திற்குப் பத்து நாட்களுக்கு முன் மொய் கவரை கொடுக்க ஏதுவாயிருக்கும். அச்சடித்த செலவையும் சேர்த்துப் பார்த்தால் ஒரு இரண்டாயிரத்து ஐநூறு ஆகிறது. எப்படியும் தேறாமலா போய் விடும்... பலவிதமாக எண்ணியபடி பத்திரிகை தரத் தருணத்திற்குக் காத்திருந்தேன்.

அப்போதுதான் ராஜகோபால் வந்தார். பதினைந்து நாட்களாக விடுப்பில் இருந்து விட்டு என்னிடம் சார்ஜ் வாங்க வந்திருப்பார் போலும். என் ஆபீஸின் அடுத்த செக்ஷன் சக அதிகாரி. என்னை விடப் பல வயது மூத்தவர்.

"என்ன சார் திடீர்னு லீவிலே போயிட்டீங்க..." என்றபடி அவரை அமரச் சொன்னேன்.

இதையும் படியுங்கள்:
சரும ஆரோக்கியத்தில் வைட்டமின்களின் பங்கு!
ஓவியம்; மருது

"எல்லாம் நல்ல சமாசாரம்தான். என் பையனுக்குக் கல்யாணம் நிச்சயமாயிருக்கு" என்றார் முக மலர்ச்சியோடு... போச்சுடா! இவர் வேறு பத்திரிகை கொடுப்பார் போலும்... குறைந்தது நூறு ரூபாயாவது போட வேண்டியிருக்கும். அதனாலென்ன, நாமும்தான் பத்திரிகை கொடுத்து வசூல் செய்யப் போகிறோமே...

"அப்புறம் உங்களுக்கு ஒரு சர்ப்பரைஸ் நியூஸ்... பை திஸ் டைம் உங்க மாமனார் சொல்லியிருப்பார்னு நினைச்சேன்... உங்க மச்சினிதான் என்னோட வருங்கால மருமகள். நாம எப்படி நெருங்கிட்டோம் பார்த்தீர்களா..." என்றபடி கைப்பையைத் திறந்து கல்யாணப் பத்திரிகையை என்னிடம் நீட்டினார். எனக்குத் தலையைச் சுற்றியது... அதே இரு வீட்டார் அழைப்பு, அதே உங்கள் வரவை எதிர்பார்க்கும்... என் பெயர்...

அடப்பாவி ராஜகோபாலா... இப்படியா என் திட்டத்தில் மண்ணைப் போடுவீர். ஒரே ஆபீஸில் ஒரே கல்யாணத்திற்கு இரண்டு பேர் அழைக்கவா முடியும்... அப்படியே அழைத்தாலும் மச்சினி கல்யாணத்தைவிட மகன் கல்யாணத்திற்கல்லவா முதல் உரிமை...

இரண்டாயிரத்து ஐநூறு போனால் போகிறதென்று, விட்டால் போதுமென்று இந்த தலைமை ஆபீஸைவிட்டு அடுத்த இரண்டாவது மாதம் மாற்றல் வாங்கிக் கொண்டு சேலம் ஆபீஸ் போனேன். அங்கு போன அடுத்த நாளே பியூன் சின்னசாமி 'கிளிப்'பேடும் கையுமாகத் தலையைச் சொறிந்தபடி நின்றான்... அதே 'அன்புடையீர்..... ' என் முகம் அஷ்டகோணல் பிளஸ் கோரமாவதைப் பார்த்துப் பயந்து போன சின்னசாமி பத்து நாள் மெடிகல் லீவ் போட்டுவிட்டான் போங்கள்!

பின்குறிப்பு:-

கல்கி 19  ஜூலை 1992 இதழில் வெளியானது இச்சிறுகதை. இங்கு கல்கி ஆன்லைன் களஞ்சியத்திலிருந்து மீண்டும் வெளியிடப்பட்டுள்ளது. சில விஷயங்கள் நமக்கு நன்கு அறிமுகமாகி யிருந்தாலும், தெரிந்திருந்தாலும்... அவற்றை நாம் மீண்டும் மீண்டும் படித்து பயனடையக்கூடிய தகவல்களாக... எவர்க்ரீன் செய்திகளாக நினைவுபடுத்திக் கொள்வது நல்லதுதானே தோழிகளே!

- ஆசிரியர், கல்கி ஆன்லைன்

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com