சிறுகதை – சலனம்!

ஓவியம்: லலிதா
ஓவியம்: லலிதா

-தமயந்தி

பீஸ் விட பத்து நிமிஷமிருக்கும். அக்கவுண்ட் செக்ஷன் பாலாமணி கூப்பிட்டாள்.

"காயத்ரி... ரகோத்தமன் வந்திருக்கார்."

ரகுவா... எதற்கு?  இன்னும் நிச்சயதார்த்தத்துக்கு நாலே நாள் இருக்கும் நிலையில்... ஏதும் தகராறு செய்வானா? உடல் ஒருமுறை நடுங்கியது.

"ஏதும் சொன்னாரா பாலா?"

"உன்னைப் பார்க்கணுமாம்."

எழுந்து வெளியே வந்தாள். காரிடரில் இருந்த பெஞ்சில் ரகோத்தமன் உட்கார்ந்திருந்தது தூரத்திலிருந்தே தெரிந்தது. பளிங்கு மாதிரியொரு முகம். அவன் பெண் பார்க்க வரும்போது அந்த முகம்தான் மனசில் படர்ந்தது. அவன் மனசு அவ்வளவு பளிங்கில்லை என்று கல்யாணமான நாலாம்நாளே புரிந்து போனது. மிட்டி பிறந்தபிறகு சின்ன விஷயங்களுக்கெல்லாம் சச்சரவு முளைத்தது. சின்ன விஷயத்துக்கும்... அவன் ஷர்ட்டில் பட்டன் பிய்ந்து போனதற்கும்...

"என்னடி பண்றே. ஷாட்ல பட்டன் பிஞ்சிருக்கு பாத்தியா?"

அவன் குரலை ஓங்கின விதம் இவளையும் ஓங்க வைத்தது.

''ஏன் ஒருநாள் தச்சு போட்டுக்கிட்டாதான் என்ன? ஒழிஞ்சா போயிரும்?"

"ஆமா. ஒழிஞ்சிரும். உன்னோட எல்லாம் ஒழிஞ்சிது.''

சட்டையைத் தூக்கி எறிந்தான். மிட்டி கலங்கலாய்ப் பார்த்தது. அவளைப் புறப்பட வைத்து,  க்ரெஷில் விடவேண்டும். விடும்போது கழுத்தைக் கட்டிக்கொண்டு "ம்மா..." என்பாள். கண்ணில் நீர் நிறைந்திருக்கும். அந்தக்கணம், அந்த வேலையை விட்டுவிடலாமா என்று தோன்றும். ரகோத்தமன் விடமாட்டான். உயிரே போனாலும் அவனுக்கு முதல் தேதி சம்பளம் முக்கியம்.

இத்தனைக்கும் மேல் ரகோத்தமனிடம் சில நல்ல விஷயங்களும் இருந்தன. பெண் குழந்தை என்றவுடனே முகம் தூக்கும் மனுஷரிடையே பெண் சிசு வேண்டும் என்று வேண்டிக்கொள்ளும் மனசிருந்தது. மிட்டி பிறந்ததும் ஒரு மாசம் லீவ் போட்டு ஊருக்கு வந்தான். வாரி வாரி விளையாட்டுப் பொருட்கள் வாங்கினான்.

"என்ன சீதனமே சேத்துருவே போல?" ரகுவின் அம்மா கிண்டலடிப்பாள்.

"சேத்தா என்ன? என் பிள்ளைம்மா."

மிட்டியும் அவனிடம் ஒட்டிக்கொண்டதில் ஆச்சர்யமில்லை. அந்த ஒட்டுதலினால்தான் அவனிடமிருந்து பிரிந்தபோது பாதிப்பு இருந்தது.

கோத்தமனிடமிருந்து ஒரு வருடம் பிரிந்திருந்தால்தான் விவாகரத்து கிடைக்கும் என்றவுடன் காயத்ரி அம்மா வீட்டுக்கு வந்தாள். தாம்பரத்திலிருந்து தினமும் சென்னைக்குப் போனாள். மௌண்ட்ரோடில் பாங்க். வேலை முடிந்து வீடு வர ஏழரை, எட்டாகி விடும்.

"மிட்டி சாப்பிடவே இல்ல காயத்ரி."

உற்சாகமற்று மூலையில் ஒண்டியிருப்பாள். காயத்ரி பக்கத்தில் போய் தலையில் கை வைத்ததும் சுருண்டுகொள்வாள்.

"ஏன்டா சாப்டலை?"

"அப்பா வேணும்மா."

"வருவார். சாப்பிடு, வருவார்."

''பொய். நீ இனிமே அப்பாட்ட கூட்டிட்டுப் போகமாட்டே. நீ பிரிஞ்சிட்டே."

"அதுக்காக சாப்பிடாமலேயே இருக்கப் போறியா?''

"பசிக்கலை."

மிட்டியை தூங்க வைத்த பின் அப்பா அறைக்கு வந்தார்.

"காயத்ரி... சொல்றேன்னு தப்பா நினைக்காதே. மிட்டி ரகுவைத் தேடுறாம்மா."

இதையும் படியுங்கள்:
வெற்றிக்கு இத்தனை அளவுகோல்களா?
ஓவியம்: லலிதா

"தெரியுதுப்பா. அவளை நல்லா வச்சிருப்பாரில்லையா?"

'அவளுக்காகவாவது நீ உன் முடிவை மாத்திக்கலாம் இல்லியா?"

"தினமும் சண்டை, கோபம், சச்சரவு... இப்படியொரு சூழல்ல அவ வாழ்வதைவிட சாப்டாத வாழறது நல்லதுப்பா."

''உன் இஷ்டம் காயத்ரி."

"உங்களுக்குப் புரியலை யாப்பா?"

அப்பாவுக்குத் தெரியும். நடுநிசியில் வீட்டைவிட்டு கோபத்தில் ரகோத்தமன் தள்ளினது. பெரியவர்கள் பேசியும் அவன் மசியவில்லை. காயத்ரியை மன்னிப்பு கேட்கச் சொன்னான். காயத்ரி பிடிவாதமாய் மறுத்து, லாயர் நோட்டீஸ் அனுப்பினாள். அதற்கப்புறம் பதிலுக்கு அவன் நோட்டீஸ் அனுப்பட கோர்ட் வாசலில் பிரிந்தார்கள்.

தற்குப் பிறகு அவனைப் பார்க்கவில்லை. பார்க்கும் சந்தர்ப்பத்தை தந்து விடாதே என்று தினமும் வேண்டினாள். மிட்டிக்கு மட்டும் தகப்பனின் உறவு அழுத்தினது துல்லியமாகத் தெரிந்தது.

“ம்மா... ப்ராக்ரஸ் கார்டில் எல்லாருக்கும் அப்பா கையெழுத்து போடுறாம்மா."

“ம்..."

“வாட்ஸ் யுவர் ஃபாதர்ங்கிறா மிஸ். என்ன சொல்றது?" அம்மா மெளனமாக அழுவாள். அப்பா யோசித்தார்.

"காயத்ரி... நீ ஏதாவது செய்யணும். உனக்கும் எங்க காலத்துக்கப்புறம் ஒரு துணை வேணும். கடைசி காலத்துல ஒரு தலைவலினா தைலம் வாங்கவாவது ஆள் வேணும். எல்லாத்துக்கும் மேலா, மிட்டிக்கு ஒரு தகப்பன்..."

"என்ன சொல்றீங்கப்பா?"

"மேட்ரிமோன்யல்ல கொடுக்கட்டா?"

"உங்க இஷ்டம்!"

எழுதிப் போட்டார். பதிலுக்கு ஏழு வரன்கள் வந்தன. 'எனக்கு இரண்டு குழந்தைகள். வயது நாற்பத்தியொன்று. ஜி.ஹெச்.சில் பார்மசிஸ்ட் வேலை..." என்று வந்த ஜாதகம் அப்பாவைக் கவர்ந்தது.

"என்னம்மா சொல்றே?"

"குழப்பமா இருக்குப்பா."

"தீர்மானிச்சப் பிறகு குழம்பக் கூடாது காயத்ரி."

"உங்க இஷ்டம்ப்பா."

"போட்டோ பார்க்கவில்லை. யாரானால் என்ன? மிட்டிக்கு ஓர் அப்பா. அவ்வளவுதான். அவ்வளவுதானா? உனக்கு புருஷனில்லையா? ஏனோ மனசு நடுங்கிற்று. மிட்டியையும் தன் பிள்ளைபோல் உறவாடுவானா? ரகோத்தமன் மாதிரி... என்ன நினைப்பு இது? வேண்டாம் என்று விலகி வந்தவனைப் போல் இவனும் இருக்க வேண்டும் என்று நினைப்பதில் என்ன நியாயம்?

''நீ பேசணுமா காயத்ரி?"

"வேணாம்பா."

"பேசிக்கலையேன்னு வருத்தப்படக் கூடாதும்மா பிறகு?"

பேசினால் என்ன பேச... "மிட்டியை உன் குழந்தையைப் போல பார்த்துக்கொள்வாயா?"

அவன் நிச்சயம் சரி என்றுதான் தலையாட்டுவான். நீ என் குழந்தைகளுக்கு நல்ல தாயாய் இருப்பாயா என்று கேட்பான். சரி என்று தலையாட்ட வேண்டும். என்ன தலையாட்டினாலும் கல்யாணத்துக்குப் பிறகே விஸ்வரூபம் தெரியும்.

"அடுத்த வெள்ளி வர்றாங்களாம். சின்னதா நமக்குள்ளேயே நிச்சயம் பண்ணிக்க."

அம்மா ஆபீஸ் விட்டுப் போனதும் சொன்னாள்.

''மிட்டிகிட்ட சொல்லிட்டியா?"

"சொல்லணும். நாளைக்குள்ள சொல்லிர்றேன். சந்தோஷப்படுவாள்.''

படுவாளா? தெரியவில்லை. ஏன் எனக்கே எந்த உணர்ச்சியும் இல்லையே.

இந்த படபடப்புக்குள் ரகோத்தமன் ஏன் வர வேண்டும்? எதற்காக?

இதையும் படியுங்கள்:
அக்னி நட்சத்திர வெயிலுக்கு இயற்கையான சில அழகு டிப்ஸ்கள்!
ஓவியம்: லலிதா

"எப்படிருக்க... எப்படிருக்கீங்க?''

ரகோத்தமன் வார்த்தைகளைத் தேடித் திணறினான். இன்னும் அந்தப் பளிங்கு முகம் அப்படியே இருந்தது ஆச்சர்யமாய் இருந்தது. அவனுக்கென்ன? என்னைப் போல இன்னொருத்தியை கல்யாணம் பண்ணியிருப்பான். ஏதாவது சொத்தில் பிரச்னை இருக்கும். கையெழுத்து ஏதாவது தேவையாயிருக்கும். வந்திருப்பான்.

"மிட்டி எப்படிருக்கா?"

உன்னை அதிகம் தேடுகிறாள் என்று சொன்னால் எனக்குத் தோல்வி.

''நல்லாருக்கா."

"பர்ஸ்டா செகண்டா படிக்கிறா?"

"பர்ஸ்ட். என்ன விஷயம்?"

அப்படி படாரென்று கேட்டிருக்கக் கூடாதோ என்று தோன்றிற்று. வேறு வழியில்லை. அவன் பேசுவதைப் பார்த்தால் பாய வந்திருப்பதுபோல் தெரியவில்லை.

''வந்து... எப்படி ஆரம்பிக்கன்னு தெரியலை."

"சொல்லுங்க."

''உங்களுக்கு கல்யாணம்னு..."

"யார் சொன்னா?"

"கேசவமூர்த்தி. என் ப்ரெண்ட்தான். தற்செயலா ஃபோட்டோ காட்டினான்."

"ஓ!"

"கல்யாணம் ஒழுங்கானதில் சந்தோஷம். ஆனா.."

"என்ன?"

"மிட்டி.. அவளை கேசவமூர்த்தி..."

"நல்லா வச்சுப்பார்."

"இல்ல காயத்ரி. மாமா அத்தைட்ட விட்டுறணும் கொஞ்ச நாள்லனான். அதான் எங்கிட்டயே வளரட்டும்னு..."

காயத்ரி அதிர்ந்தாள். நிஜமாகத்தான் சொல்கிறானா?

"நாம இரண்டு பேரும் இருந்தும் அவ அனாதையா ஆயிடக்கூடாது காயத்ரி. நீ கல்யாணம் பண்ணிக்க. எனக்கு ஆட்சேபணை இல்ல. ஆனா மிட்டி அனாதையாயிடக் கூடாது."

"நான் நம்பலை."

"நான் பொய் சொல்லலை காயத்ரி. நம்பணும். மிட்டிக்காக..."

"..."

''மிட்டிக்காக நாம் அப்பமே வீணா விளையாடின நாக்கை கடிவாளம் போட்டிருக்கலாம் காயத்ரி. தப்பு பண்ணிட்டோம்."

"யோசிக்கணும்."

"யோசிங்க. 7870021. எப்பனாலும் ஃபோன் பண்ணுங்க."

அவன் சடாரென்று திரும்பி நடந்தான். இவன் சொல்வதும் உண்மையாய் இருக்குமா? கல்யாணத்துக்குப் பிறகு மிட்டி உன் அம்மா அப்பாவிடமே இருக்கட்டும் என்று விட்டால்... திரும்பவும் விவாகரத்தா? விவாகரத்து என்ன விளையாட்டில் ஃபவுல் கேம் மாதிரியா?"

இதையும் படியுங்கள்:
கோடைக்கால அலர்ஜிகளுக்கு குட்பாய் சொல்லுங்கள்!
ஓவியம்: லலிதா

வீட்டுக்குப் போனபோது அம்மா அமைதியாய் கேசரியை நீட்டினாள்.

"மிட்டி எங்கம்மா?"

''விஷயம் சொன்னேன். அழுதா. ரூம்ல படுத்துருக்கா."

கேசரியைக் கீழே வைத்துவிட்டு படுக்கையறைக்குப் போனாள். எத்தனை போராட்டம் இவளுக்குள்?  ரகு சொன்னதுபோல் இவளுக்காகவாவது நாக்குக்கு கடிவாளம் போட்டிருக்கலாம்.

கதவைத் திறந்தாள். மிட்டி கையில் எதையோ மடக்கி வைத்து படுத்திருந்தாள்.

"மிட்டி"

"மிட்டி' கூப்பிட்டதும் சட்டென்று தலையணை உறைக்குள் அதை மறைத்தாள். சட்டென்று பற்றி அதை இழுக்க -

மிட்டியின் முதல் பிறந்த நாளில் ரகு,  காயத்ரி, மிட்டி நின்றபடி எடுத்த ஃபோட்டோ. எத்தனை சந்தோஷமான மிட்டியின் முகம்.

"ம்மா...”

மிட்டி கழுத்தைக் கட்டிக்கொண்டு அழுதாள். காயத்ரி ரகோத்தமனின் ஃபோன் நம்பரை நினைவு படுத்திக்கொண்டே சொன்னாள்.

"அழாத மிட்டி. அதுக்கென்ன? இதே மாதிரி ஒரு ஃபோட்டோவை நாளைக்கே எடுத்துறலாமா?"

மிட்டி சிரித்தபோது ரகுவின் நிழல் எங்கேயோ அவள் முகத்தில் படர்ந்தாற் போலிருந்தது.

பின்குறிப்பு:-

கல்கி 23  ஜூலை 1995 இதழில் வெளியானது இச்சிறுகதை. இங்கு கல்கி ஆன்லைன் களஞ்சியத்திலிருந்து மீண்டும் வெளியிடப்பட்டுள்ளது. சில விஷயங்கள் நமக்கு நன்கு அறிமுகமாகி யிருந்தாலும், தெரிந்திருந்தாலும்... அவற்றை நாம் மீண்டும் மீண்டும் படித்து பயனடையக்கூடிய தகவல்களாக... எவர்க்ரீன் செய்திகளாக நினைவுபடுத்திக் கொள்வது நல்லதுதானே !

- ஆசிரியர், கல்கி ஆன்லைன்

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com