சிறுகதை; வனவிலங்கு!

Short Story in Tamil
ஓவியம்; மகேஸ்
Published on

-ஜெரா

"உங்களை சூப்ரண்டென்ட் வரச் சொல்றாரு.''

அட்டெண்டர் காதருகே கிசுகிசுத்து விட்டு நகர்ந்ததும், பியூரெட்டில் சிரத்தையாக திரவம் நிரப்பிக்கொண்டிருந்த நான் சட்டென்று கலைந்து போனேன். காட்டன் வேஸ்டில் கையைத் துடைத்துக்கொண்டு லேப் சூப்ரண்டென்டின் அறையை அணுகி எட்டிப் பார்த்தேன்.

"குருமூர்த்தி, ரொம்ப அர்ஜண்ட்! இந்த காஸ்டிக் சாம்பிளைப் பாத்துக் குடேன்."

சூப்ரண்டென்ட், டேபிளின் மீது இருந்த பழுப்பு நிறப் பாட்டிலைச் சுட்டிக்காட்டினார். நான் தயக்கத்தோடு மென்று விழுங்கினேன்.

''காஸ்டிக் எல்லாம் முருகவேல்தான்..."

நான் முடிக்கும் முன்பாக பெருமூச்சுவிட்ட அவர் ஜன்னல் வழியே பார்வையை ஓட்டினார். என் கண்கள் தொடர்ந்தன... சற்று தூரத்தில் கட்டுமானப் பணியிலிருந்த புது ப்ளாண்டின் அருகே கலவை சுமக்கும் பெண் ஒருத்தியிடம் சுவாரஸ்யமாகப் பேசிக் கொண்டிருந்தான் முருகவேல்.

"அபிஷியலா உன்னைக் கேட்கல குருமூர்த்தி, அர்ஜண்ட், அதனாலதான்" அவர் குரல் கெஞ்சுவதைப்போல ஒலிக்கவும், அதற்கு மேல் தாமதிக்க என்னால் முடியவில்லை. பாட்டிலைச் சுமந்துகொண்டு இடம் பெயர்ந்தேன். இது என் இயல்பு. கறாராக மறுத்துப் பேசுவதோ, கோடு இழுத்தாற்போல் கொள்கை காப்பதோ என்னால் ஆகாத ஒன்று!

முருகவேல் அப்படியல்ல! சரியான முன்கோபக்காரன் - ஆறடி ஆகிருதிக்கு கரணை கரணையான உடல் கட்டோடு பார்ப்பவரின் வயிற்றைக் கலக்குபவன். முறுக்கு மீசையும், லேசாகச் சிவப்பேறிய கண்களுமாக

கவனத்தை சிதற அடிப்பவன். சட்டென்று சத்தம் போட்டு எதையும் சாதித்துக்கொள்பவன். இல்லையென்றால் ஷிப்டுக்கு வந்து முழுசாக இரண்டு மணி நேரம் கூட ஆகவில்லை, இப்படி எங்கோ மூலையில் சுற்றிக்கொண்டிருப்பானா!

நான் மௌனமாக டேபிளுக்குத் திரும்பி மேற்கொண்டு வேலையில் இலயிக்கும் முன்பாக முதுகில் பளிரென்று அடி விழுந்தது. நிமிர்ந்தேன். முருகவேல்!

"என்ன மாப்ளே இன்னிக்கும் என் வேலையை உன் தலையில கட்டிட்டானா?"

எகத்தாளமாக முருகவேல் சிரிக்கவும் எனக்கு எரிச்சலாக இருந்தது.

"நீ செய்யறது உனக்கே நல்லா இருக்கா - வேலையப் பாக்காம வெட்டி அரட்டை எதுக்கு?"

பயத்தில் குரல் கம்ம, எப்படியோ கேட்டுவிட்டேன் என் இதயம் தடக்தடக் என்று அடித்துக்கொள்ள, முருகவேல் கலீரென்று நகைத்தான்.

"அதான் ஏமாந்த சோணகிரி நீ இருக்கப்ப எனக்கு என்ன கவலை - 'தில்' இருந்தா சூப்ரண்டென்ட் என்கிட்டே இல்ல சொல்லி இருக்கணும் - நானும் வேலைக்குத்தானே வந்திருக்கேன் மாட்டேன்னா சொல்லப் போறேன். என்னை 'யூஸ்' பண்ணிக்கத் தெரியாததும், முடியாததும் அவங்க முட்டாள்தனம்."

இதையும் படியுங்கள்:
சிறுகதை: கோடை மழை!
Short Story in Tamil

முருகவேல் பட்டு கத்திரித்தாற்போல் நச்சென்று பதில் சொல்லவும் எனக்கே யோசனையாகத்தான் இருந்தது. ஒருவேளை என்னைப் போன்றவர்கள் எல்லாம் ஏமாந்த சோணகிரிகள்தானா! மிரட்டவும், சத்தம் போடவும் தெரிந்திருந்தால் தனி மரியாதை கிடைக்குமோ...

வாஸ்தவந்தான்! முருகவேலை அணுகிச் சொல்வதை கூட அவஸ்தையாய் உணர்பவர்கள், 'ஆமாம் சாமி' போடும் ஒரே காரணத்துக்காக, கொஞ்சமும் அனுசரணை இல்லாமல் அடுக்கடுக்காக வேலைகளை என் தலையில் ஏற்றி அழகு பார்க்கிறார்களே! இதை என்னவென்று சொல்வது!

"இதை வுடு மாப்ளே! புதன்கிழமை பொழுதோட பொட்டநேரி போறோம்! எனக்குப் பொண்ணு பாக்க! அப்புறம் ஓ.டி. அது இதுன்னு ஒப்பாரி வைக்காதே! ஆமா.'"

முருகவேல் தீர்மானமாகச் சொல்லிவிட்டு சூப்ரண்டென்டின் அறையை நோக்கிப் போனான். முருகவேல் எனக்கு நண்பன் என்பதோடு, ஒரு வகையில் தூரத்து சொந்தம் கூட. கடந்த இரண்டு வருடமாகப் பெண் தேடியும் இன்னும் அவனுக்கு செட்டாகவில்லை! பெண் பார்க்கப் போகும்போதெல்லாம், என்னையும் தவறாமல் இழுத்துப் போய் விடுவான்! பின்னே, இவனுடைய வீரப்பிரதாத்தை எல்லாம் யார் அவிழ்த்து விடுவதாம்?

வெட்டி 'பந்தா'வோடு நோகாமல் நோன்பு கும்பிடும் முருகவேலுக்கு என்னைப் போன்ற இணக்கமான, யாரையும் எளிதில் கவர்ந்துவிடும் 'எடுபிடி' தேவைப்பட்டதில் ஆச்சர்யமில்லை! முடியாது என்று சொன்னால் எங்கே என்னிடமும் முறைத்துக்கொள்வானோ என்ற பயம் உள்ளூர எனக்கு இருந்ததால் நானும் அவன் பின்னால் 'நாய்க்குட்டி'யானேன். வரும் புதன்கிழமை எப்படியோ!

நான் 'சாம்பிள் ரிப்போர்ட்டை' பவ்யமாக சூப்ரண்டென்டிடம் நீட்டியபோதுகூட முருகவேல் அவருக்கு எதிரே அமர்ந்து அரட்டை அடித்துக்கொண்டுதான் இருந்தான் - ரிப்போர்ட் கொஞ்சம் தாமதமாகி விட்டதற்காக அவர் என்னை செல்லமாகக் கடிந்துகொள்ளும்போது, முருகவேல் என்னைப் பார்த்து நமுட்டுச் சிரிப்பு சிரித்தான். எனக்கு இந்த முரண்பாடு முகத்தில் அறையாமல் இல்லை! என்ன செய்வது?

புதன்கிழமை. சொல்லிவைத்தாற்போல் முருகவேல் 'புல்லட்'டோடு வந்து விட்டான்! தழையத் தழைய பட்டு வேட்டியும், பளபளப்பாக முழுக்கை சட்டையும், மார்பில் செயினுமாக அவன் வண்டியில் உட்கார்ந்திருக்கும் கம்பீரத்தைப் பார்த்து நான் வாய் பிளந்துவிட்டேன் - பின் ஸீட்டில் நான் தொத்திக்கொண்டது நிச்சயமாக திருஷ்டி பரிகாரமாகத்தான் தெரிந்திருக்கும்!

பொட்டநேரி கடை வீதியை ஒட்டிய மேல் பாதையில் வண்டியைத் திருப்பும் முன்பு இளநீர்க் கடையில் இருந்த கூட்டம் முருகவேலைக் கவர்ந்தது. கூட்டம், தகராறு என்றால் முருகவேலுக்கு 'குல்பி' சாப்பிடுவது போல. வழக்கம்போல வண்டியில் இருந்தவாறே என்னை விரட்டி விசாரிக்கச் சொன்னான் - நான் விவரம் சேகரித்துச் சொன்னதும், ஸ்டைலாக வண்டியை 'ஸ்டாண்ட்' செய்துவிட்டு கூட்டத்தை அணுகினான். இளநீர் சாப்பிட்ட கணக்கில் குளறுபடி ஏற்பட்டு காசு கொடுப்பதில் கலாட்டா செய்துகொண்டிருந்தவனைப் பார்த்து, ''கூடவோ, கொறைச்சலோ காசைக் குடுத்துப் போய்யா. இதுக்காக கடைவீதியை நாறடிச்சுக்கிட்டு..." என்று நியாயம் பேசினான். மேற்படி ஆள் இவனைப் பொருட்படுத்தாமல் பேசிக்கொண்டே போக, முருகவேல் யோசிக்கவில்லை அவன் பின்னங்கழுத்தில் கைவைத்து நெட்டித் தள்ளினான். அவ்வளவுதான்! கூட்டம் நிசப்தமானது. எதிரும், புதிருமாக வந்து நின்ற வாகனங்களில் இருந்து சரிந்த ஜனங்கள் வேடிக்கைப் பார்க்க, நான் என் வாடிக்கையான கெஞ்சல், கொஞ்சல், இவைகளைப் பயன்படுத்தி, நிலைமையைக் கட்டுக்குள் அடக்கி, முருகவேலை 'பந்தா' கலையாமல் கழட்டிக்கொண்டு வர அரைமணி நேரத்துக்கு மேலாகிவிட்டது.

விசிலடித்தபடி வண்டியை விரட்டிய முருகவேல், இதெல்லாம் என்னவோ அவனுடைய புருஷலட்சணம் என்பதுபோல புலம்பிக்கொண்டு வர, நான் அருவருப்பில் அமைதியானேன்.

"என்னடா மாப்ளே! மௌனமா வர்றே! என்ன கோவமா!"

"பின்ன... குளிர்ச்சியாக்கும் - இது தேவையா - யாரையும் பயப்படுத்தி பணிய வைக்கிறது பெரிய விஷயமில்லே!"

முருகவேல் என்ஜின் சத்தத்தை மீறி பெரிதாகச் சிரித்தான்

இதையும் படியுங்கள்:
சிறு வயதில் சிகரத்தை எட்டிய சிறுமி.. யார் இவர்?
Short Story in Tamil

"மாப்ளே - அடுத்தவங்களை நம்ம தோள் மேல கை போட அனுமதிச்சேன்னு வச்சுக்க! அங்குல அங்குலமா முன்னேறி கழுத்தை அமுக்கப் பார்ப்பான்! தோளை தட்டிக்கிட்டு நின்னு பாரு, துண்டை எடுத்து இடுப்பில கட்டிகிட்டு நமக்கு கும்புடு போடுவான்!"

முருகவேலின் வியாக்கியானம் என்னை வெகுவாகக் கவர்ந்ததது. "அட, ஆமாம்!" என்று அசைபோட வைத்தது. என் மௌனம் முருகவேலுக்கு நிறைய முனைப்பைக் கொடுத்துவிட்ட உற்சாகத்தில் இன்னும் ஒரு படி மேலே போய் வாசலில் காத்திருந்த பெண் வீட்டாரிடம் பெரிதும் அலட்டிக்கொள்ள ஆரம்பித்தான்.

கடைவீதியிலேயே காத்திருந்து யாரும் முறைப்படி வரவேற்று கௌரவப்படுத்தவில்லை என்று வெளிப்படையாகக் கத்தினான். நான் குறுக்கே புகுந்து அவனையும் ஆசுவாசப்படுத்தி, அடுத்தவர்களிடமும் அன்பாக விளக்கம் சொல்லி, இங்கும் நிலைமையை நிதானப்படுத்த வேண்டியதானது.

முருகவேல் என் காதருகே குனிந்து, "சபாஷ்டா மாப்ளே, இப்படி சப்பைக்கட்டு கட்ட உன்னைத் தவிர யாராலயும் ஆகாது" என்று முணுமுணுத்தபோது, இதற்காகப் பெருமைப்பட்டுக் கொள்வதா இல்லை சிறுமைப்பட்டுப் போவதா என்பதே எனக்குப் புரியவில்லை.

சம்பிரதாயப்படி பெண் பார்க்கும் படலம் தொடங்கியது காப்பி தம்ளரை நீட்டிய மணப்பெண்ணைப் பார்த்ததும் முருகவேல் திறந்தவாய் மூடவில்லை! அழகு என்றால் அப்படி ஒரு அழகு! நளினம்! முகத்தில் அறிவின் முதிர்ச்சி! சத்தியமாக இதைவிட நல்ல பெண் முருகவேலுக்கு அமையும் என்று எனக்குத் தோன்றவில்லை. பொறாமைகூட மனத்தின் ஓரத்தில் லேசாகக் கால் பதித்தது. பெண் மேச்சேரி ஹைஸ்கூலில் டீச்சராம் நிறைய கவி அரங்கங்களிலும், பட்டிமன்றங்களிலும் கூட பேசுமாம்! அதற்கென்று ஒரு தனி இமேஜ் இருப்பது தெரிந்தது. இதை எல்லாம் கூட நான்தான் மெனக்கெட்டு ஓடி ஓடி ஆர்வமாக விசாரித்தேனே தவிர, முருகவேல் 'மாப்பிள்ளை பந்தாவை' சிறிதும் மாற்றிக்கொள்ளவில்லை.

இதையும் படியுங்கள்:
உழைப்பு என்பது இப்படியும் இருக்கலாம் தெரியுமா?
Short Story in Tamil

பெண் பிடித்து விட்ட விஷயத்தைக்கூட முருகவேல் சார்பாக நான்தான் சொல்ல வேண்டியதானது. நாங்கள் வெளியே காத்திருக்க, கொஞ்ச நேரம் கழித்து பெண்ணின் தந்தை மெதுவாக வந்தார் - கைகளைக் கூப்பினார்."அப்போ..." என்று இழுத்தார். முருகவேல் என்னைப் பார்த்தான். நான் நிமிஷ நேரம் விழித்து விட்டு, "முகூர்த்தம் என்னிக்குன்னு பார்க்க பெரியவங்களை அனுப்பலாமுங்களா?" என்று நாசூக்காக விஷயத்தைக் கிளறினேன். அவர் பிடிகொடுக்காமல் "சொல்லி அனுப்பறோம் தம்பி" என்றார். முருகவேலுக்கு பட்டென்று மூக்கு விடைத்தது.

''பளிச்னு சொல்லுங்க - அதுதான் எனக்குப் புடிக்கும்." - பெரியவர் தர்மசங்கடமாக முருகவேலை ஏறிட்டார்.

"தம்பி... வருத்தப்படாதீங்க. வெளிப்படையா கேட்கறதினாலே சொல்றேன். வித்தியாசமா நெனைக்கப்படாது. நீங்க வேற இடம் பாத்துக்கிடுங்க."

முருகவேல் முகத்தில் உமிழப்பட்டவனைப் போலத் தாக்குண்டான் - எனக்கே கூட தேகம் நடுங்கியது.

"என்னங்க நீங்க... இப்படிச் சொல்றீங்க... இது நியாய..."

"பதட்டப்படாதீங்க தம்பி. பொண்ணு இஷ்டத்துக்கு விரோதமா எதுவும் செய்யற பழக்கமில்லிங்க. விவரமான பொண்ணு. பஸ்ஸை விட்டு இறங்கும்போதே கடைவீதியிலே இளநி கடையில தம்பி பண்ண ஆர்ப்பாட்டத்தைப் பாத்துச்சாம். அதுக்கு இவரைப் புடிக்கல! என்ன பண்றது! ப்ராப்தம் இல்ல!"

"இது நல்லா இல்லீங்க. ஆம்பிளைக்கு அழகு தைரியம்தாங்க. எதையும் எதுத்து நின்னாத்தான் கௌரவமே கிடைக்கும்!" என்று தொடங்கி முருகவேலின் வியாக்கியானத்தை விலாவரியாக நான் சொல்லி முடிக்கவும். பொறுமையாக எல்லாவற்றையும் கேட்டு விட்டுப் பெரியவர் சிரித்தார்.

"எதிர்த்து நிக்கறது கெளரவம் இல்லேங்கல! ஆனா எல்லாத்தையும் எதிர்த்து நிக்கறது கேவலம். மணவாழ்க்கையில மட்டுமில்ல; மனுஷ வாழ்க்கையிலேயும் பற்றும் பாசமும்தான் தம்பி பெரிசு!"

என் தோளில் தட்டிய பெரியவர் கூடவே, "உன் ஜாதகத்தை வேணுமானா குடு, பார்ப்போம்" என்றார்.

ஏதோ பேசப் போன என்னைத் தோளில் பற்றி மௌனமாக்கினான் முருகவேல். அதற்குப் பின் வீடு திரும்பும் வரை அவன் பேசவில்லை. சில நாட்களாக வேலைக்கே வருவதில்லை! ஒருவேளை அவன் மனதிலிருந்த மிருகம் வேட்டையாடப்பட்டு விட்டதோ?

பின்குறிப்பு:-

கல்கி 21 ஏப்ரல் 1996 இதழில் வெளியானது இச்சிறுகதை. இங்கு கல்கி ஆன்லைன் களஞ்சியத்திலிருந்து மீண்டும் வெளியிடப்பட்டுள்ளது. சில விஷயங்கள் நமக்கு நன்கு அறிமுகமாகியிருந்தாலும், தெரிந்திருந்தாலும்... அவற்றை நாம் மீண்டும் மீண்டும் படித்து பயனடையக்கூடிய தகவல்களாக... எவர்க்ரீன் செய்திகளாக நினைவுபடுத்திக் கொள்வது நல்லதுதானே!

- ஆசிரியர், கல்கி ஆன்லைன்

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com